வெண்ணிற இரவுகள் – ஜனவரி

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————- 

Continue reading

முகவரி தொலைத்த கடிதங்கள் # 14

புதிய முகவரி

Love letter 14

சில வருடங்களுக்கொருமுறை நடப்பது தான்.

பொருட்களை எல்லாம் கட்டிவைத்த காலி அறை முதல் நாளை நினைவுபடுத்துகிறது. புதிய இடமென்று அன்று வராத தூக்கம் இன்றும் என்னைத் தொல்லை செய்யாமல் தள்ளியே நிற்கிறது. வெகுகாலம் நடந்து முடிந்த போரொன்றில் திசைகள் தெரியாமல் தனித்து நிற்கும் களைத்துப் போன சாமுராய் ஒருவனின் கதை நினைவுக்கு வருகிறது.

நான்கு சுவர்களும் உதடுகள் பிதுக்கிப் பார்க்கின்றன. ஜன்னல்கள் ஓலமிடுகின்றன. என் ஞாபகங்கள் மொத்தமும் பாலையின் வாசனை.

இதுகாறும் என் அந்தரங்களை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்த இவ்வீட்டில் அடுத்து குடி வரப்போகிறவர்களுக்கு ஏதேனும் தடையங்களை விட்டு விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் அழுத்தியபடியே உள்ளது. உனக்காக எழுதிய கடிதங்களையும், கவிதைகளையும் இங்கேயே தவறவிட்டு விடுவேனோவென ஒவ்வொரு மூலைகளிலும் மீண்டும் மீண்டும் தேடித் திரிந்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன். 

இந்தமுறை அறையின் எந்தப்பக்கத்தையும் புகைப்படம் எடுக்கப் போவதில்லை.  இன்னமும் கொஞ்ச நாட்களில் புதிய இடத்திற்குப் பழகிப் போய் இந்த அறையையும் நாட்களையும் வாசனையும் நிச்சயம் மறந்து போவேன். இதுகூட ஒரு பொழுதில் எனக்குப் பிடிக்கவே பிடிக்கதெனக் கருதிய புதிய அறைதான். இடங்களை விடுத்துப்  பாதைகளையும் பயணங்களையும் விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடன் மேகம் மொத்தமும் உன் முகம் தேடிக் கிடந்த வீட்டின் முற்றத்தில் எப்பொழுதும் இனி இரவுகளின் நீலம் உதிர்ந்து கிடக்கட்டும். இலைகள் களைந்த மரங்களில் பனிப்பூக்கள் பூக்கட்டும். ஏனென்றே தெரியாமல் நள்ளிரவில் அலறும் வாகனங்களின் அபஸ்வரம் தொலைதூரத்தில் கேட்கும் இசையாகட்டும். எப்பொழுதாவது குளிர்கால உறக்கம் களைந்து என் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கும் அணில் எனைத் தேடாமல் இருக்கட்டும்.

சாளரத்தின் கீற்று இடைவெளிகளில் இரவு முழுவதும் எனைத் தீண்டிப் பார்க்கும் வெண்ணிலவே … என் ராத்திரி நேரத்து பயங்களே .. உறக்கம் களைவதற்குக் கொஞ்சம் முன்பு வரும் அழகிய கனவுகளே …போய் வருகிறேன்.

நிற்க.

இன்னொரு பைத்தியக்காரத்தனமான கடிதத்தை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை எனது கடிதங்களுக்கு நீ பதிலளிக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த முகவரியில் நான் இல்லை.

————————————————

முகவரி தொலைத்த கடிதங்கள் # 13

காற்றில் உதிரும் நிறங்கள்

பயணக் குறிப்புகளுடன் சேர்த்து என்னிடம் சில வினாக்களும் இருக்கின்றன. சமயங்களில் இருப்பினை உறுதி செய்யக் கேள்விகளாவது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ‘ம்’ என்ற பதில் கேட்க யாருக்குத்தான் ப்ரியம் இருக்காது.  நீ சொல்லப்போவது என்னவென்று தெரிந்த பின்பு, உன்னிடம் கேட்காமல் இருப்பதே பதிலினை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கான அமைதி பெரும் ஒரே வழி.  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதங்களை ? எனில், எனது முதல் கேள்வி இது தான், உனக்கும் எனக்குமான தொடர்பு இந்தக் கடிதங்கள் மட்டுமே என்றான பின்பு நான் வேறென்ன செய்ய ?

விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான பல இரவுகளின் போராட்டத்திற்குப் பிறகு  தூக்க மாத்திரைகளைப் போல அவ்வப்பொழுது இந்தக் கடிதங்களை எழுதுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இன்னும் ஒரேஒருமுறை உனைக் காண வேண்டும் போன்ற வழக்கமான பிதற்றல்களை இந்தக் கடிதத்தில் தவிர்க்க முயற்சிக்கிறேன். இந்தக் கடிதம் எனது பயணக்குறிப்புகள் பற்றிச் சொல்ல மட்டுமே என நிச்சயமாய் தெரியாத போதும்.

நிறங்களால் ஆன ஆஸ்பென் உனக்கு நிச்சயம் பிடிக்கும். என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்டதற்கு எல்லாமே என்றாய். கருப்பும் வெள்ளையும் கூட நிறங்கள் தான் என்பது தெரியுமா உனக்கு. என்னிடம் இருப்பது அந்நிற நினைவுகள் மட்டுமே. நீ எடுத்துச் சென்றுவிட்ட மீத நிறங்கள் எல்லாம் இங்கே காற்றில் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. உன்னோடு நடந்து சென்ற பாதைகளின் சாயல்களையே ஏன் என் தனியான பயணங்கள் எல்லாம் கொண்டிருக்கின்றன ? நீயும் இங்கே இருந்திருக்கலாம். நிறங்களால் ஆன ஆஸ்பென் எனக்கும் பிடித்திருக்கும்.

இலையுதிர்காலத்தில் ஆஸ்பென்  இன்னும் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள். ஓடி ஓடிச் சென்று புகைப்படங்களுக்குள் அடைக்கிறார்கள். அடுத்த நிழற்படத்திற்குப் புன்னகைக்கும் அவகாசம் கூட இன்றி காற்றினால் களவாடப்படும் இலைகளின் ஓலங்கள் மட்டுமே எனக்குக் கேட்கின்றன. உதிர்ந்து செல்லும் இலைகள் பற்றிப் பாட மரங்கள் எல்லாம் மௌனத்தைத் தேர்ந்தெடுத்துவிட்ட பின்பு வேறெந்த மொழி என்னிடம் மிஞ்சும். இலையுதிர்காலம் என்பது அழகிய கனவொன்றின் முடிவா இல்லை வசந்தகாலம் பற்றிய புதிய கனவொன்றை எதிர்பாத்துத் துவங்கும் குளிர்கால உறக்கமா?  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதத்தை ? எனில் இந்தக்கிளைகள் மீண்டும் பூக்குமெனச் சொல்லேன் என்னிடம். என் பாதைகள் மொத்தமும் வியாபித்திருக்கும் சருகுகளை மறந்துவிட்டு நானும் பயணித்திருப்பேன்.  

——————————————————————————

 

பிரம்மச்சாரி உலா

 

காலணிகளை அடுக்கிடத் தேவையில்லை

காலுறைகளை

தவ்வக் காத்திருக்கும் தவளைகள் போலச் சுருட்டி

எங்கு வேண்டுமாலும் எறிந்துவைக்கலாம்

ஆடைகள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்

உள்ளாடைகள் வவ்வால்கள் என

கதவிடுக்குகளில் காணக்கிடக்கலாம்

குளியலறையின் கால்வைக்கும் இடம் தவிர

மீதமெல்லாம் ஆனந்தமாய் அழுக்காக்கி வைக்கலாம்

நாற்காலிகள் காணாமல் போனவைகள் பற்றிய

அறிவிப்புகளில் இருக்கலாம்

சர்க்கரை உப்பு இன்ன பிற அவசியமற்ற சரக்குகளின்

கையிருப்பு பற்றிக் கவலை வேண்டாம்

முக்கியமாய் காப்பிப் பொடிக்கும் தேநீர்த் துகள்களுக்கும்

ஆறு வித்யாசங்கள் அறிந்து வைக்க அவசியமில்லை

பக்கம் கொள்ளாத அளவு இருக்கவே இருக்கிறது

பிரம்மச்சாரியின் அறையொன்றில் இருப்பதன் அனுகூலங்கள்  

அதன் அவஸ்தைகள் மட்டும் உறைப்பதேயில்லை

எதிர்பார்க்காத நாளொன்றில் அறையுடன்

பெண்பால் அறிமுகம் நடக்கும் வரை …

————————————————————–

 

பிளாஸ்டிக் வார்த்தைகள்

 

பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்  

சேர்ந்து கொண்டே இருக்கின்றன

வார்த்தைகள்

கொடும் நஞ்சைப் போல ..

 

நானொன்றும் சர்ப்பம் அல்ல

இருப்பினும்

யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ

என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …

 

கண்ணாடி பார்த்துப் பேசியோ

கவிதைகள் மட்டும் எழுதியோ

தீர்க்க முடியாது வார்த்தைகளை

ஒருபோதும்  …

Continue reading

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

 

புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..

 

திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …

 

என்றோ கற்றுக்கொண்டுவிட்டிருக்கும்

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …

 

யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த

கடைசி இருபத்தினான்கு மணி நேரங்களின்

பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …

  Continue reading

கவிதையும் அபத்தங்களும்

 

“அன்பே”

எனத் தொடங்கி

ஒரு காதல் கவிதை எழுதிட

வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.

 

அபத்தமாய் இருக்கிறது.

 

அந்த நாட்களைக் கடந்துவிட்டேனோ.

 

பத்திரிக்கையின்

ஏதாவதொரு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்

சிகப்பு இதயத்தினுள்  அம்பு துளைத்த படத்தையொட்டிய

கவிதையினி

புன்னகை தராதோ !

 

உன் பார்வை ஒன்றின் நினைவு

போதாதோ

என் விரல்களின் வழி

வார்த்தைகள் இறங்கி வர …
Continue reading

கல்லறை ரோஜாக்கள் …


 

மழை பெய்து கொண்டிருந்த

ஒரு மாலை நேரம்

நீ தனிமையில் இல்லை

நானிருக்கிறேன் உனக்கு

சத்தம் போட்டபடி

நடந்து கொண்டிருந்தது

கடிகார முள் …

 

கண்கள் மூடி மௌனமாய்

புன்னகைத்துக் கொண்டிருந்தார்

புத்தர்

எப்பொழுது இருட்டாகும் என

அதன் பின்னாலிருந்து

அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டுப்

போனது பல்லி …

 

சத்தம் பிடிப்பதில்லை எனக்கு

வெளிச்சதிற்குப் பிடிப்பதில்லை

என்னை …

 

வீட்டுவாசலில்

நாய் கூடக் கட்டப்படவில்லை

எனக்குப் பிடிக்காது என்பதற்காக அல்ல

நாயின் குறைப்பு

வருகிறவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக

மேலும்

எனக்குக் காவல் தேவையில்லை

திருடுவதற்கோ விற்பதற்கோ

எதுவுமில்லை என்னிடம்

என்னைத்தவிர …

Continue reading

என்னைச் சந்திக்க கனவில் வராதே …

 

மீண்டும் கனவுகள் ..

 

எறும்புகளைப் போலத்

தீராப்பசியுடன்

என் உணர்வுகளெங்கிலும்

ஊறித் திரிகிறாய்  ..

உறங்கியும் உறங்காத உன்மத்த நேரங்களில்

என்னைத் தின்கிறாய் .

எத்தனை முறை சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவில்

வராதே என்று.

 

எத்தனை முறை உன்னைத் துரத்துவது

இனியும் என்ன தான் செய்வது ..

இமைகளை மூடுகிறேன்

விழிகளுக்குள் இறங்கிடுகிறாய்

எங்கே ஒளிந்திருந்தாய் இத்தனை நேரமாய் ..

 

என்றோ பார்த்த புகைப்படத்தின் ஞாபத்திலா

தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலிலா

பேசிய வார்த்தைகளிலா

மௌனப் புன்னகையிலா

தலை மேல் சுற்றியழும் மின்விசிறியின் பின்னாலா

நாட்குறிப்பேடுகளின் மழுங்கிய பக்கங்களின்

மடங்கிய முனைகளிலா 

உன் நினைவுகளால் முழுவதும் துருவேறிப் போயிருக்கும்

என்னுள்ளா …

Continue reading

விழித்திருப்பவன் இரவொன்றிலிருந்து எல்லோருக்குமான பாடல் …

என்ன இருக்கிறது

இருபத்தேழு வயதிற்குப் பின் …

 

எதற்கெடுத்தாலும் எரிச்சல்

சீப்பில் உதிர்ந்தொட்டிக் கொள்ளும்

மயிர் பற்றிய கவலை

மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டாலும்

ஒளிந்துக் கொள்ளத் தெரியாத தொப்பை

இளமையாய் இருந்ததன் நினைவுகள்

நிறைய கழிவிரக்கம் 

போக்குவரத்து நெரிசலும் புகையும்

ஆறிப் போன உணவை விழுங்க

ஒதுக்கப்பட்ட இரண்டு நிமிடங்கள்

நிறைய வியர்வையும் மூச்சிரைப்பும்

 

திருமண அழைப்பிதல் பார்கையில்

வயிற்றைக் கவ்வுகிறது பயம்

எதிர் பார்க்காத தருணத்தில்

எதிர்பார்க்காத இடமொன்றிலிருந்து

வரப் போகும் அழைப்பிதழில்

எதிர்பார்க்காத பெயரொன்று

இருந்துவிடக் கூடும் என்ற அச்சத்திலேயே

கழிகின்றது நாள் மொத்தமும் …

Continue reading

« Older posts