Tags

,


 

எழுப்ப மறந்து உனக்காகக்

காத்துக் கொண்டிருக்கிறது அலாரம் ..

நீ விழிக்கையில் கூடவே

நடிக்கிறது அதுவும் …

 

நீ தினசரி படிக்கையில் மட்டுமே

தினசரி ஆகிறது

தினசரி.

 

நீ குளித்து முடிப்பதற்குள்

மூன்றாம் உலகப்போரை முடித்திருக்கின்றன

உன் ஆடைகள் ..

வெற்றி பெற்ற ஆடை க்ரீடதிற்குப் பதில்

சூடிக் கொள்கிறது உன்னை ..

 

கண்களை மூடி நீ பிரார்த்தனை செய்கையில்

உனக்குத் தெரியாமல்

பிரார்த்தனையைத் தொடங்கியிருக்கிறார்

கடவுள்

கடவுளின் கடவுளிடம் …

 

நீ பேருந்தில் படிப்பதற்காகவே

பிறப்பெடுத்திருக்கிறார்கள்

அகதா கிறிஸ்டிகளும் , ஸிட்னி ஷெல்டன்களும் ..

சமயங்களின் பயணச் சீட்டின் பின்னே

கவிதை எழுதும் நடத்துனர்களும் …

 

நீ வரும் வழி எங்கும்

வேண்டுமென்றே உனைக் காக்க வைக்கின்றன

போக்குவரத்து விளக்குகள் ..

போக்குவரத்து நெரிசல் மொத்தமும்

உன்னைப் பாடிக் கொண்டிருக்கையில்

பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறாய்

அலைபேசி எப்.எம் – இல்…

எல்லா வாகனங்களும் அபஸ்வரத்தில் கத்திவிட்டு

பெருமூச்சுடன் கிளம்புகின்றன ..

 

வெயிலடிக்கிறதெனக் குடை பிடிக்கிறாய் ..

சுற்றியிருப்பவர்களைச் சுட்டெரிக்கிறது

சூரியன் ..

 

நீ அலுவலகம் நுழைந்ததும்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை முளைக்கிறது ..

பக்கத்து இருக்கைக்கு மட்டும்

சிறகு முளைக்கிறது .

 

மின்னஞ்சல் அனுப்புகையிலும்

‘கோட்’டிட்டு நிரப்புகையிலும்

பேஸ் புக் படிக்கையிலும்

அரட்டைகள் அடிக்கையிலும்

பார்த்துக் கொண்டே இருக்கிறது ..

அதென்ன கணிப்பொறியா இல்லை

கண்ணாடியா …!

 

மதிய உணவைக் குறைத்து விட்டு

செல்லத் தொப்பையைக் காரணம் சொல்கிறாய்

பூக்கள் கனத்தது எப்பொழுதென

கோபத்தில் மீதம்.

 

மாலைத் தேநீர் உன் கைகளுக்குள்

தீரப் போகும் ஏக்கம்

தேநீருக்கும் மாலைக்கும் …

 

நீ அலுவலகம் விட்டுக் கிளம்புகையில்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை வெடிக்கிறது  ..

பக்கத்து இருக்கைக்கோ

பைத்தியம் பிடிக்கிறது.

 

நீ வீடு திரும்புகையில் கூடவே

ஓடிவருகிறது நிலவு ..

கதவை மூடிக்கொண்டாலும்

காத்திருக்கத் தொடங்குகிறது உன் ஜன்னல் திறக்க ..

 

நீ எழுதி முடித்ததும்

வார்த்தைகளைக் கலைத்துப் போட்டு

கவிதைகளாக்கி விளையாடித் தீர்க்கிறது

உன் நாட்குறிப்பேடு …

 

நீ கண்கள் மூடிக் கொண்டதும்

இருண்டு போகிறது உலகம்

கனவுன்னைக் காணத் தொடங்குகிறது …

 

——————————————————————