Tags

ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே

இருளின் நிழல் படிந்த

நகரின் முக்கியமில்லாத

ஏதோ ஒரு தெருவில்

சாலையின் எதிர்ப்புறத்தில்

அவளைச் சந்திக்க நேர்ந்தது

அல்லது அது அவளையொத்த

அடையாளங்களாகவும் இருக்கலாம்

கரைந்துக் கொண்டிருக்கும்

அந்நிழலைப் பார்த்திருந்த

அந்தப் பத்து வினாடிகளில்

காலத்தின் கொடிய கூர்

பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை

நசுக்கி முடித்திருந்தன

வலி தாங்க மாட்டாமல்

தலை குனிந்து மீண்ட சமயத்தில்

மறுபடியும் காணாமல் போயிருந்தாள்

விரும்பி ஏற்றுக்கொண்ட

வெறுமை அப்பிய என் முகம் பார்த்து

ஜன்னலோரப் பேருந்திலிருந்து

கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது

சீருடை யணிந்த ஒரு குழந்தை

பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்

நானும்

என்றேனும் ஒரு நாள்

நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்

மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்

அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை

என் நினைவுகளை விட்டு விலகி

இருப்பாயாக