Tags

 

சர்வம் 1

சர்வம் 1

அபூர்வாவை ஒருமுறை பார்த்தவர்களால் நிச்சயமாய் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது . சாதாரணமாக வெறும் அழகென்று மட்டும் அதைச் சொல்லி விட முடியாது .நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன் . ஆனால் இவள் கொஞ்சம் அபூர்வமானவள் பெயரைப் போலவே .இவ்வளவு நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணமில்லாமல் இல்லை . அவள் வீணையைக் கையிலெடுத்த பொழுது தரகர் சத்தமாக காபியை உறிந்தது வரை நியாபகமிருக்கிறது . “எங்கயும் ஓடிட மாட்டா .. இப்போவே பார்த்து தீர்த்திடாத .. கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசனை வந்திடும் ” என்று பெரியம்மா என் விலாவில் இடிக்கும் வரை அவளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை .எல்லாரும் சிரித்தார்கள் என்றாலும் அபூர்வாவின் மௌனப் புன்னகை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது என் கண்களில் .

காபி தம்ளரை வாங்குகையில் வேண்டுமென்றே அவள் விரல் தொட்ட ஸ்பரிசம் தான் என்னுள் எழுகிறது ஒவ்வொருமுறை அவளைத் தொடும் போதும் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகிறாள் .

எவ்வளவு மெல்லமாக நடந்தாலும் என்னிடம் காட்டிக் கொடுத்து விடும் அந்தக் கொலுசொலி .. என் கைகளால் உடைந்து சாகத் தயாராக இருக்கும் அந்த வளையல்கள் , நெற்றி பூத்திருக்கும் அந்த வியர்வைத் துளிகள் , அந்த உப்பின் சுவை , கண்கள் தாண்டி கன்னத்தில் இழுகி இருக்கும் அந்தக் கண்மை ,அந்த மௌனப் புன்னகை , அந்த அருகாமை கத கதப்பு , மொத்தமாக அவள் , எனக்கு ,எனக்கே சொந்தம் என்கிற நினைப்பே கர்வம் தாண்டிய ஒன்றாக இருக்கிறது .

இந்த ஒருமாதம் எப்படி ஓடிப் போனதென்றே தெரியவில்லை . பெண் பார்த்து விட்டு வந்த நாளில் இருந்தே எனக்கே தெரியாமல் அவளுக்கேற்றவனாக என்னை நானே மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டேன் . அவளுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ , அந்த பிடித்தவைகளாக நான் மாற விரும்பினேன் . அவளுக்கு கவிதை பிடிக்கும் எனத் தெரிந்த அந்நாளில் இரவு முழுவதும் கடல் நிலா நீலம் என எழுதித் தள்ளி …… ஆனால் அவள் அப்படியே தான் இருக்கிறாள் . மாறாத அதே புன்னகையோடு . இப்பொழுதும் கூட என்னருகில் அதே கலையாத புன்னகையோடு தூங்கிக் கொண்டு .

தினமும் இப்படி இவள் எழும் முன்னமே எழுந்து நான் பார்ப்பது அவளுக்குத் தெரியுமா இல்லை தெரியாதா என்று எனக்குத் தெரியாது . ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து காபியுடன் , நான் எழுவதற்காக அருகிலேயே உட்கார்ந்து காத்திருக்கப் போகிறாள் . விழித்திருந்தும் , தூங்குவதாய் பாவனை செய்து , அவள் திரும்பும் தருணங்களில் அரைக்கண் திறந்து நான் பார்த்திருக்கப் போகிறேன் . அவளுக்கும் தெரிந்து தானிருக்க வேண்டும் . சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது வாழ்கையின் சுவாரசியமே .

ஜன்னல் தாண்டி வீசிக் கொண்டிருக்கும் காற்று அவள் நெற்றியில் நெளியும் முடியை ஊதிக் கொண்டிருக்கிறது . சரி செய்து விடலாமா அதை .. வேண்டாம் , பின் நெற்றியோடு நிற்காது என கைகள் . என மனதில் நினைப்பதை அறிந்து தான் புன்னகைக்கிறாளோ .. புன்னகை .. மௌனப் புன்னகை .. அது தான் என்னை ஏதோ செய்கிறது . நிச்சயமாக இவளைக் கொல்லத் தான் வேண்டுமா ???

– தொடரும்