Tags
“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”
உபன்யாசகர் தெலுங்கில் சொல்லிக் கொண்டிருப்பதை நன்றாகத் தமிழ் தெரிந்தவர்கள் , இன்னும் இதை விடத் தெளிவாக மொழிபெயர்க்கக் கூடும் .
இடம் : விசா பாலாஜி திருக்கோயில் .
ஒருமுறையாவது ஹைதராபாத் வந்தவர்கள் ‘விசா பாலாஜியைப் ‘பற்றிக் கேள்விப் படாமல் இருந்திருக்க முடியாது என நினைக்கிறேன் .அவருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது , அவருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் என்ன தொடர்பு என்பது அவருக்கே தெரிந்த தொழில் ரகசியம் .
சரியாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கி , இந்த ஊர் தெலுங்கு , இந்தி , உருது கலந்த பெயர் சொல்ல முடியாத ஹைப்ரிட் மொழி தெரியாதவர்கள் ,டாக்சி வாலாவிடம் அவன் சேட்டுக்குக் கட்ட வேண்டிய வட்டிக்கும் சேர்த்து முன்னூறு வரை அழுது ‘சிலுக்குரு’ போயும் பாலாஜியை தரிசிக்கலாம் . சரியான பஸ் நம்பர் கண்டுபிடித்துச் சென்றால் பத்து ரூபாய் கூட ஆகாது . ஷேர் ஆட்டோவில் சென்றால் அதிகபட்சம் இருபது ரூபாய் . நம்மூர் போல எல்லாம் சம்பல் பள்ளத்தாக்கில் இருந்து வந்தவர்கள் அல்ல இங்கே .
எங்களுக்கு அந்தக் கவலையே கிடையாது . எங்கள் நிறுவனத்திலேயே லோன் போட்டு , இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வண்டியும் , ஹெல்மேட்டும் வாங்கி வைத்திருந்தோம் நாங்கள் …… நானும் விஜயும் .இங்கு வந்து வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது . எங்களைப் பற்றி சொல்ல சுவாரசியமாக என்ன இருக்கிறது , சென்ற வாரம் தான் எல் போர்டை மாற்றினோம் என்பதைத் தவிர .விசா பாலாஜியப் பற்றிப் பார்ப்போம் கொஞ்சம் .
இது போன்ற ஒரு ஒதுக்குப் புறத்தில் தெலுங்கு பட ஷூட்டிங் எடுக்காமல் கோவில் கட்டியவரைப் பார்த்தால் தாராளமாகக் கை குடுக்கலாம் . ஆட்டு மந்தை அடைத்து வைக்க , பட்டை அடைத்து கொஞ்சம் சதுரம் போன்ற வடிவில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது போலிருந்தது அந்தப் பேருந்து நிலையம் .இறங்கியதுமே ஒரு சிறுமியின் தெலுங்கில் மாட்டிக் கொண்டோம் .
” ரண்டி , பாலாஜிகு தெக்காய தீசுகொண்ட” என நச்சரித்துக் கொண்டிருந்தாள் .
விஜய் முடிந்த அளவு ” ஒத்த … ஒத்த … ” என்று சொல்லிப் பார்த்தான் . அவள் நேராக கடைக்கு இழுத்துக் கொண்டு போன பின் தான் தான் விட்டாள் . தேங்காய் பழம் வாங்கியதற்கு இலவசமாக செருப்பு வைத்துப் போகச் சொன்னாள் .
பள்ளி போகிறவளாக இருந்திருந்தால் ஆறாம் வகுப்பில் பிரித்திவி , சம்யுக்தாவை எப்படி அலேக்காக குதிரையில் தூக்கிச் சென்றிருந்திருப்பார் என சரித்திர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருப்பாள் .பத்து ரூபாய் அதிகம் தந்தேன் . முப்பது ரூபைகே பாபு என பத்தை திருப்பித் தந்தாள் . நேர்மைக்கு என்றுமே ஏழ்மை தான் .
டிவோட்டீஸ் ஆர் பிளீஸ்டு நாட் டு கிவ் எனி தக்ஷிணா டு தி பரீஸ்ட் என நுழைவாசல் அருகிலேயே எழுதிவைத்திருந்தார்கள் . அதன் அருகே உள்ள தெலுங்கு வரிகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும் . அதான் எல்லாவற்றிற்கும் சேர்த்து திருப்பதியில் மொட்டை அடிக்கிறீர்களே .
ஒரு ஓரத்தில் தேங்காயை உடைத்து சரிபாதியை பாலாஜிக்கும் , மீதியை சட்னிக்கும் பாலித்தீன்களில் சுருட்டிக் கொண்டிருந்தார்கள் . குறுக்கெழுத்துப் பெட்டிகள் போல வளைந்து வளைந்து நீண்டிருந்த வரிசையை ஜருகண்டி ஜருகண்டியால் துரத்தப்பட்டு கடந்து உட்ப்ரகாரத்தை அடைந்தோம் .விக்ரமாதித்தனாகவே இருந்திருந்தாலும் அடச்சே நீயே பரவாயில்லை வேதாளமே என ஓடி இருந்திருப்பான் .
மிகச் சிறிய கருவறை . அதைச் சுற்றிலும் பக்த கோடிகள் பஜனை பாடிச் சுற்ற சற்றே பெரிய பிரகாரம் . கிட்டத் தட்ட எல்லோரும் அதில் ஓடிக் கொண்டிருந்தார்கள் . கையில் பால் கார்ட் போல இருந்த அட்டையில் சுற்றுகளை டிக்கடித்துக் கொண்டிருந்தார்கள் . அதான் கீழே ஸ்பான்சர்டு பை என ஏதோ ஜவுளிக் கடை பெயர் போடப்பட்டிருந்தது .கருவறைக்கு நேர் எதிரே இருந்த ஆஞ்சநேயரை செந்தூரம் தடவி இன்னமும் அழகாக்கிக் கொண்டிருந்தார்கள் .
ஆரம்பத்திலிருந்தே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது . விஜயின் நச்சரிப்பால் தான் வந்திருக்கிறேன் .எங்கள் நிறுவனத்தில் வெளிநாடு செல்ல பதினொரு முறை பாலாஜியை எல்லாம் சுற்றத் தேவை இல்லை . ஒழுங்காக வேலை பார்த்தாலே போதும் .ஏனெனில் “எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது ,போலியைக் கண்டு ஏமாறாதீர்கள் ” என பண்பலையில் பதற வேண்டியதில்லை . தடுக்கி விழுந்தால் அவ்வளவு கிளைகள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் . என்ன கொஞ்சம் கூஜாவும் தூக்க வேண்டும் .இன்னும் கொஞ்ச நாளில் சூரியன் மறையாத நிறுவனம் என கும்பினியார்கள் போல் மார்தட்டிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .ஆனால் விஜயிடம் கேட்டுப் பாருங்கள் . புதிதாகக் கற்றுக் கொண்ட அரைகுறைத் தெலுங்கில் “பேரு தா பெத்த பேரு , தாக டம்ளர் நீலு லேது ” என்பான் .
என்னைப் போல அதிர்ஷ்டம் வேறு இல்லையாம் அவனுக்கு . எந்த அளவுக்கு என்றால்
கல்யாணப் பந்தியில் சரியாக அவனுக்கு முன்பு இருக்கும் இலையோடு பாயசம் தீர்ந்து போகும் அளவிற்கு . எனக்கு கூடுதலாக இரண்டு முந்திரி கிடைத்திருக்கும் .
விஜய் ஒழுங்காக வேலை பார்த்தும் இவரை வந்து பார்க்காததால் தான் விசா கிடைக்கவில்லை என சாஸ்வதமாக நம்பிக் கொண்டிருந்தான் . எனக்கு தான் அந்தக் கவலையே கிடையாதே . அதிகபட்சம் வேலைக்கு பதில் கவிதைகள் தான் எழுதியிருப்பேன் .
“ஏண்டா உங்க பாலாஜி விசா மட்டும் தான் தருவாரா ? “
பக்திப் பரவசத்தில் இருந்த விஜய் என்னை முறைத்துப் பார்த்தான் .
“எனக்கு விசா மட்டும் போதும் ” மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் .
“எனக்கு விசா வேணாமேடா”
” வேறென்ன வேணும் ?”
“பொங்கல் , ஒரு செட் பூரி . இப்போதைக்கு இது போதும் .. ரொம்ப பசிக்குது டா .என்ன கோவில் இது .. புளியோதரை கூட கொடுக்க மாட்டேங்கறான் “
“கொஞ்சம் பேசாம சாமி கும்பிட விடறியா .. இன்னும் ஒரு மாசத்தில நான் யு.எஸ் ல இருந்தாகணும் “
இதற்கு மேல் பேசினால் புஷ்ஷிடம் புகார் செய்தாலும் செய்வான் .கோவிலை ஒருமுறை சுற்றிப் பார்த்தேன் .
பாலாஜியை தரிசிக்கும் கூட்டத்தை விட பிரகாரத்தைச் சுற்றி வருவோர் கூட்டம் தான் அதிகமாக இருந்தது .எத்தனை பேர் ? எத்தனை ஆசைகள் ? எத்தனை பிரார்த்தனைகள் ?
அந்த நெற்றி தெரியாமல் நாமமிட்டிருக்கும் பெரியவர்க்கு என்ன பிரார்த்தனை இருக்கும் ?
பெண்ணின் திருமணம் ? அந்த மஞ்சள் சட்டை போட்டவருக்கு ? பிரமோஷன் ? இதில் எத்தனை பேருக்கு விஜய் போல் விசா கனவு ?பாவம் பாலாஜி .
கஷ்டப்பட்டு நடந்து செல்லும் அந்தப் பாட்டிக்கு ? அவர் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அந்தப் பெண்மணிக்கு ??
அந்தப் பெண்மணி … நாற்பது ,நாற்பத்தைந்து வயது இருக்கும் .எங்கோ பார்த்த முகம் .
அந்தக் கண்கள் நிச்சயம் என்னால் மறக்க முடியாதவைகள் .. எங்கே ?எங்கே பார்த்திருக்கிறேன் ?? நினைவு படுத்த முடியவில்லை . விஜயிடம் கேட்கலாம் என்று திரும்பினேன் .
“வாடா சுத்திட்டு வரலாம் “
“எனக்கு தான் விசா வேண்டாமே “
“விசா மட்டும் இல்ல .. என்ன கேட்டாலும் தருவார் டா ” விடுவதாகத் தெரியவில்லை .
“படுத்தாத டா .. பதினொரு தடவை சுத்தனுமாம் .. பலிச்சிட்டா நூத்தி எட்டு தடவையாம் ..
போ போ .. சுத்திட்டு வா .. நான் ஓரமா உட்க்கந்து தேங்காய் சாப்ட்டு இருக்கேன் “
“தம்பி , அப்டி எல்லாம் சொல்லபிடாது .. ரொம்ப ஷக்தி படச்ச கடவுள் பா ”
அதே பெண்மணியும் அந்தப் பாட்டியும் .. அவரே தொடர்ந்தார் .
“நம்பிக்கை இல்லாமையா இவ்ளோ பேர் சுத்தி வரா .. என் மாமி இவங்க . இத்தனை வயசுக்கப்பறமும் சுத்தி வராள்ன்னா வேறென்ன காரணமா இருக்க முடியும் ??”
“நீங்களே நல்லா சொல்லுங்கம்மா ..” விஜயும் சேர்ந்து கொண்டான் .
“இல்லைங்கம்மா .. நான் “
“நீயும் எதையாவது மனசில நெனச்சிகோ.. கண்டிப்பா நடக்கும்பா .. ஏதோ நம்ம ஊரு பிள்ளைங்க ,அதான் சொல்றேன் .. போப்பா போ “
என்னால் தட்ட முடியவில்லை .அந்தக் கண்கள் . எங்கே ? எங்கே ?
“அவங்களை எங்கயோ பார்த்தா மாதிரி இல்ல ?” விஜயிடம் கேட்டேன் .
“இல்ல ” ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு சுற்றத் தொடங்கினான் .
சுற்றி முடித்து அவரிடமே கேட்டுவிடுவதென முடிவு செய்தேன் .
சுற்றத் தொடங்கினான் .
” கோவிந்தா பஜ கோவிந்தா வேங்கட ரமணா கோவிந்தா ” சிரிப்பாக வந்தது .
“வெங்கட்ட ரமணா !! ஸ்ரீ வெங்கடேசா !!”என குருக்கள் உச்ச ஸ்தானியில் கத்த, காத்திருந்தது போல் கோவிந்தா கோவிந்தா என்றார்கள் அனைவரும் . வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன் . விஜய் கொஞ்சம் முன்னால் போய் விட்டிருந்தான் .இரண்டாவது சுற்றில் என் மனம் தானாக அந்த இரண்டரை வருட ஆசையை நினைத்துக் கொண்டது . சுற்றி முடித்தது விஜய் அருகே சென்று அமர்ந்தேன் .
“நீ பதினொன்னுக்கு பதிலா பன்னெண்டு தடவை சுத்திட்ட “
“சரியாதாண்டா சுத்திருக்கேன் “
அந்த அம்மாவைத் தேடினேன் . காணவில்லை .ச்சே போய்விட்டார்கள் .
பசியும் போய்விட்டிருந்தது .பேருக்கு பக்கத்து ஹோட்டலில் (!) சாப்பிட்டு விட்டு
வண்டியைக் கிளப்பினோம் .
இந்த விஷயம் மட்டும் எப்படி என எனக்குப் புரிவதே இல்லை . எல்லா சந்திப்புகளும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டே நிகழ்கின்றன அல்லது நிகழ்த்தப் படுகின்றன .
———————————————————————————————————————
மேதிப்பட்டினம் தாண்டி சிக்னலில் மாட்டிக் கொண்டேன் .வண்டி தானாக நின்று விட்டது . விஜய் போய்விட்டான் . இரண்டு முறை உதைத்துப் பார்த்தேன் .உர்ர்ர் என்ற சத்தம் தான் வந்தது . வண்டியை ஓரம்கட்டி ஆராயத் துவங்கினேன் .எல்லா ஊர்களிலும் பெட்ரோல் திருட்டு நடக்கவே செய்கிறது .மனதிற்குள் பாலாஜியை சபித்தேன் . பெட்ரோல் பல்கிற்கு வழி கேட்டு ,டேங்க் முழுவதும் நிரப்பியாயிற்று .இரண்டு மூன்று தெருக்கள் மாறியதில் வந்த பாதை மறந்து போனேன் . ‘அத்தடு ‘ போஸ்டர் அடையாளமாக வைத்துவிட்டு வந்திருந்தேன் . ஏதோ மாடு சாப்ட்டிருக்க வேண்டும் . காணவில்லை . யாரிடம் வழி கேட்கலாம் என பார்த்துக் கொண்டிருந்த போது , தெரு ஓரமாய் கோவிலில் பார்த்த அம்மாவும் , பாட்டியும் தெரு விளக்கின் அடியில் நின்று கொண்டிருந்தார்கள் . அந்தப் பாட்டி தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் .
நடக்க முடியவில்லை போல . சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடிவிட்டிருந்தது .அருகில் சென்றேன் . அடையாளம் கண்டு கொண்டார்கள் என்னை .
“தரிசனம் எல்லாம் நல்லா படியா முடிஞ்சதுங்களா தம்பி ” அக்கறையாக விசாரித்தார் . முடிந்தது முடிந்தது . கடைசியில் கல்கண்டு தான் மிச்சம் .
“முடிஞ்சதுங்கம்மா . என்னாச்சு பாட்டிமாக்கு ?” நன்றாக வியர்த்து விட்டிருந்தது .
” மாமிக்கு நூத்தி எட்டு தடவை சுத்தினதில மூட்டு வலி வந்திடுச்சு . கார்த்தால இருந்து எதுவுமே சாப்பிடல .. சுகர் வேற .. அதான் தல சுத்திடுத்து .. இந்த நேரம் பார்த்து ஒரு ஆடோவையும் காணோம் ” குரலில் நிறைய வருத்தம் தெரிந்தது .
“என்ன பாட்டிம்மா நீங்க ?? கோவில் கொழம் இருக்க வேண்டியதுதான், ஒடம்பும் முக்கியமில்லையா .. நீங்க வண்டில ஏறுங்க .. நான் வீட்ல போய் டிராப் பண்ணிடறேன் ”
“இல்லைங்க தம்பி , உங்களுக்கு வீணா எதுக்கு ஸ்ரமம் …”
“நீங்க சும்மா இருங்கம்மா .. கோவில்ல ஒரே ஊருன்னு நீங்களா வந்து நல்லது சொன்னீங்கள்ல .. இப்போ என் டர்ன் இது .. ஒண்ணும் பேசக்கூடாது .. நீங்க ஏறுங்க பாட்டி ” எங்கிருந்து இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ளத் தோன்றியதெனக்கென்று தெரியவில்லை .
பாட்டி மிகவும் சங்கோஜப்பட்டு ஏறிக் கொண்டார் .”அம்மாடி துளசி , செத்த பத்திரமா இரு ” நல்லா அத்தை . நல்லா மருமகள் . போட்டோ கிடைத்தால் மியுசியத்தில் மாட்டி வைக்கலாம் .
“அம்மா , நீங்க இங்கயே இருங்க .. நான் பாட்டிய விட்டுட்டு வந்து உங்களையும் கூப்ட்டுக்கறேன் .”
“சரிப்பா .. மாமி பாத்து கெட்டியா பிடிச்சுக்கோங்கோ , தம்பி கொஞ்சம் மெதுவா போங்கோ “
“நீங்க கவலையே படாதீங்க .. பத்து நிமிசத்தில வந்திடறேன் ” வண்டியைக் கிளப்பினேன் .
————————————————————————————————-
தெருவில் நுழையும் போதே தமிழ் நாட்டு வாடை வீசியது .. அனேக வீடுகளில் வத்தக் குழம்பு .
” அந்த கருப்பு கலர் பெயிண்ட் அடிச்சா கேட் தான்பா ” கருப்பு . எனக்கு பிடித்த நிறமாக நான் மாற்றிக் கொண்ட ஒரு நிறம் . என் ஆசைகளின் பிரதிபலிப்பு .நிறுத்தினேன் .
நேற்று பெய்த மழையின் மீதம் சுவரோரமாய் கோலம் போட்டிருந்தது .தெரு வாண்டுகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் .
“டேய் , பந்து காம்பௌண்ட்குள்ள வந்தது அவ்வளவு தான் ” பாட்டி மிரட்டிக் கொண்டே கேட்டைத் திறந்தார் . சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் எல்லாத் தெருக்களிலும் ஏதாவதொரு காம்பௌண்ட் வைத்த வீட்டுக்குள் , உள்ளே வந்து விழும் பந்தை எடுத்து வைத்துக் கொள்ள ஒரு பாட்டி இருக்கிறாள் .நான் சிரித்து கொண்டே சிநேகமாக அவர்களைப் பார்த்தேன் . முறைத்தார்கள் .
“சரிங்க பாட்டி , நான் போய் அம்மாவைக் கூட்டிட்டு வரேன் ” சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோவில் வந்து இறங்கினார் துளசி அம்மா .
“நீங்க அப்போ தான் போயிருப்பீங்க , அதுக்குள்ள ஆட்டோ வந்திடுத்து .. மன்னிச்சுக்கோங்கோ தம்பி .. வீண் ஸ்ரமம் எங்களால ”
“பரவா இல்லீங்கம்மா .. திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கீங்க .. நான் கெளம்பறேன் “
“அதுக்குள்ளே கெளம்பறதாவது .. எவ்ளோ ஒத்தாச பண்ணிருக்கீங்க .. ஒரு வா காப்பியாவது சாப்டிண்டு தான் போகணும் ஆமா “
“பரவா இல்லீங்கம்மா , என் பிரெண்டு தேடிட்டு இருப்பான் .. இன்னொரு நாள் கண்டிப்பா வந்து சாப்டறேன் “
சொல்லி முடிக்கும் முன் சட்டை முழுவதும் சேறாகி இருந்தது .ஒரு வாண்டு அடித்த பந்து சேற்றில் சுற்றிக் கொண்டிருந்தது .அவர்கள் முறைத்ததன் அர்த்தம் அப்பொழுது தான் விளங்கியது .அடுத்த வினாடி அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடியதன் சுவடே தொலைந்து போயிருந்தது . நான் எட்டு படிக்கும் போது பந்தை அடித்து ஒரு மாதம் காது கேட்காமல் இருந்த சிங்கப்பூர் பாட்டி நினைவுக்கு வந்தார் . இவன் அவரது கொள்ளுப் பேரனாக இருப்பானோ .
“அச்சச்சோ , சட்டையெல்லாம் சேறாயிடுத்தே . நான் சொன்னப்போவே உள்ள வந்திருக்கலாம்ல .. உள்ள வந்து கழுவிட்டாவது போங்க ” பாட்டி பந்தை எடுத்து வைத்துக் கொண்டார் .
“நீங்க செட் பண்ண ஆளுங்க தானா .. பாவம் சின்னப் பசங்க தான .விடுங்க பாட்டி ” பந்தை வாங்கி கிரௌண்டில் (!) எறிந்தேன் .
மழை வேறு விட்ட வேலையைத் துவங்கியிருந்தது மீண்டும் .
” உள்ள வாங்க தம்பி , என் பொண்ணு உங்களைப் பார்த்தா சந்தோஷப் படுவா .. இப்போ வர்ற நாழி தான் “
எங்கே இந்த மழையில் வண்டியை ஓட்டுவது . கொஞ்சம் குறையும் வரை இங்கேயே இருக்க வேண்டியது தான் .
“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையையும் …….”
உள்ளே நுழைந்தேன் .மதில் சுவர் தாண்டி குரோட்டன் செடிகள் இருக்க வேண்டிய தொட்டியில் துளசி செடி வைக்கப்பட்டு சுற்றிலும் கோலமிடப் பட்டிருந்தது .வராண்டாவில் ஒரு சின்ன கட்டில் . அதைத் தாண்டி ஹால் . வெகு சுத்தமாக இருந்தது . அறை எங்கிலும் மனதைச் சாந்தப் படுத்தும் ஒரு தெய்வீக மணம் நிலவியது .
“இதான் தம்பி பாத்ரூம் ” ஒரு மூலையைக் காட்டினார்கள் .
கழுவிக் கொண்டிருக்கும் வெளியேபுதிதாக ஒரு பெண்ணின் குரல் கேட்டது . துளசி அம்மாவின் மகள் வந்து விட்டாள் போல . விஜய் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை . வேறென்ன செய்வான் . ஹேண்ட்ஸ் பிரீ மாட்டிக் கொண்டு அவன் பியான்சியுடன் பேசிக் கொண்டிருப்பான் . ஒரு முறை அப்ராட் போய் வந்ததும் திருமணம் . இரண்டு வீட்டிலும் முடிவு செய்திருந்தார்கள் . ஆனாலும் தெய்வீகக் காதல் . அவளுக்காக நான் வெஜ் சாப்பிடுவதையே விட்டிருந்தான் . நானும் கூடத் தான் …… வேண்டாம் .இப்பொழுது எதற்கது ?,தொடரும் போடப்பட்டு நானே எழுத மறந்து போன கதை .
அந்தக் குரல் மிகவும் பழக்கப் பட்ட ஒன்றாக இருந்தது . பழக்கப்பட்ட என்பதை விட என்னால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்றாக இருந்தது . என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் . என்னைச் சுற்றிலும் எதோ அடர்த்தி அதிகமாவது போல் இருந்தது , எதுவோ என்னை நெரிப்பது போல் . காரணமே இல்லாமல் இதயம் அடித்துக் கொண்டது வெகு நாட்கள் கழித்து .
முடிந்த அளவு கறையுடன் போராடி விட்டு வெளியே வந்தேன் . ஏனோ தயக்கமாக இருந்தது .ஹாலில் யாரும் இல்லை . பாட்டி வராண்டா கட்டிலில் படுத்திருந்தார்கள் .சமையலறையில் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது .
ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன் . முன்னால் இருந்த டீபாயில் ராபர்ட் லண்ட்லமும் , அகதா கிறிஸ்டியும் பலமுறை புரட்டப்பட்டு கறையேறிப் போயிருந்தார்கள் .மேலும் அவர்களை துன்புறுத்த மனமின்றி அருகிலிருந்த நாற்காலியை அசைத்துச் சத்தம் எழுப்பினேன் .
“வந்துட்டீங்களா தம்பி , அம்மாடி இந்தா காப்பி .. தம்பிக்கு கொண்டு போய் கொடு .. நான் தோ வந்திடறேன் ” உள்ளிருந்து குரல் மட்டும் வந்தது .
எனக்குப் மிகவும் பிடித்த அருகாமை இன்னும் நெருங்கி , நெருக்கி வருவது போலிருந்தது . கண்கள் அங்கும் இங்கும் அலைந்து சுவற்றில் ஆடிக்கொண்டிருந்த புகைப்படங்களில் நிலை குத்தி நின்றது .முதல் படத்தில் பெரியவர் ஒருவரின் நினைவுப்படம்
தோற்றம் மறைவுடன் புகைந்து கொண்டிருந்தது . துளசி அம்மாவின் நெற்றியில் விபூதி மட்டும் இருந்தது நினைவுக்கு வந்தது . அடுத்த புகைப்படத்தில் பழைய ஈஸ்ட்மன் நிறத்தில் அவர்களின் திருமணப் புகைப்படம் …
அடுத்தது ….!!!
என்ன இது ?? என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை .. கண்களைக் குலுக்கிவிட்டு நன்றாகப் பார்த்தேன் . சேலை கட்டிக் கொண்டு மாடிப்படியின் கைப்பிடி விளிம்புகளில் சாய்ந்து நிற்கும் அந்தப் பெண் …
“ரகு … ஹையோ என்னால நம்பவே முடியல .. நான் .. அது நீயா….”
நந்…தினி.!! என்னாலும் தான் நம்ப முடியவில்லை . புகைப்படத்தில் இருந்து கீழிறங்கி கையில் காபியுடன் நின்று கொண்டிருந்தாள். இவ்வளவு நேரமும் சேர்த்துத் துடித்ததற்காக சில நிமிடங்கள் ஓய்வில் உறைந்து போனது என் இதயம் .
வழக்கம் போல் இமைக்க மறந்து போயிருந்தேன் .
“உன்ன இங்க பாப்பேன்னு நெனச்சு கூடப் பாக்கல ..” எனக்குப் பிடித்த கண்களில் நிறைய சந்தோசத்தைப் பார்த்தேன் .
நானும் தான் . பாலாஜி நீ பெரிய ஆளு .இப்பவே நேரா வந்து நூத்தி எட்டு தடவை சுத்திட்டு தான் மறுவேலை .
எப்படி ?? எப்படி முடிந்தது ?
” …………….அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”
உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த பூகம்பத்தை ஒரு சிறிய புன்னகையில் மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன் .
” என்ன பேச்சையே காணோம் .. ஹலோ …. ” என் முன்னால் விரல்களை சொடுக்கி
கையை காற்றில் அசைத்தாள்.
பாதி துவட்டியிருந்த அவள் கூந்தலில் இருந்து மழை அவள் நெற்றியில் சிறிய அருவி உண்டாக்கியிருந்தது .
முழுவதுமாக நனைந்து போனேன்
“போச்சுடா .. இன்னைக்கென்ன மௌன விரதமா ” கலைத்துப் போட்டாள் . கலைத்தேன் .
“இல்ல .. நீங்க .. நீ சென்னைல இல்ல இருந்த ??” எப்போ தாண்டா நீ ஒளராம பேசப் போற .
“மூணு மாசம் முன்னாடி தான் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தோம் ” இன்னமும் காலர் வைத்த சுரிதார் தான் அணிகிறாள் .
“அப்பா போனதுக்கப்பரம் அங்க இருக்க பிடிக்கல .. அம்மாவுக்கும் ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு தான் “
“வெரி சாரி நந்தினி … ” கண்ணாடி இளைத்திருந்தது .
“காலேஜ்ல பேசிட்டே இருப்ப .. இப்ப என்ன ஆளே மாறிட்ட ” அவளும் தான் மாறி இருந்தாள் .
——————————————————————————————————————–
அம்மா பாட்டியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள் . சாப்பிட்டு விட்டு தான் போகவேண்டுமென மதிய உணவு தயாரிக்கச் சென்று விட்டனர் இருவரும் .
நாங்கள் மாடியிலிருந்தோம் .கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போங்கள் என மழை விட்டிருந்தது . ஆனால் மேகம் மூடியிருந்தது இன்னமும் . மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்கியிருந்தனர் .என்னைப் பார்த்து கை அசைத்தார்கள் இப்பொழுது .
” கடைசியா காலேஜ்ல பார்த்தது தான .. அப்பறம் காண்டாக்டே இல்லாம போச்சு இல்ல ” தான் சைபர் டவர்சில் வேலை பார்ப்பதில் இருந்து , நான் ஏன் மாதாபூரில் தாங்காமல் கச்சிபௌலியில் தங்கி இருக்கிறேன் என்பது வரை ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தாள் . எனக்கு தான் என்ன பேசுவதென்றே தெரியாமல் அவளையும் தரையையும்
மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன் . இப்பொழுதாவது சொல்லிவிடலாமா ??
கல்லூரியின் கடைசி நாள் கண்களில் விரிந்தது ,
“ஏன்டா பாலா அப்டிப் பண்ண ?? நான் சொன்னேனா ” கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது . நான் அவளுக்காக எழுதி வைத்திருந்த கடிதத்தை எனக்கே தெரியாமல் அவள் ஸ்லாம் புக்கில் வைத்துவிட்டு வந்திருந்தான் .
“ஏன்டா இப்டி பயந்து சாகற .. நீ எப்படியும் சொல்லப் போறதில்ல . அதான் நானே வச்சிட்டு வந்திட்டேன்”
” இதுக்கு பேரு பயம் இல்ல .. நான் அவள எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல . “
“சொல்லாம எப்படிடா அவளுக்குத் தெரியும் “
“தெரியணும் .. அதான் காதல் “
” நீ திருந்த மாட்ட “
” என்ன தான் இருந்தாலும் நீ பண்ணது தப்புதான் ”
அதற்கு மேலும் உரையாடலை வளர்க்க விரும்பாதவனாய் அவன் சென்று விட்டான் .. பின் ஒரு வழியாக அவளுக்குத் தெரியாமல் அந்தக் கடிதத்தை மீட்டுக் கொண்டு வருவதற்குள் ….
“இன்னும் நீ என்ன லவ் பண்றியா ?”
எதுவும் சொல்ல முடியாமல் , சொல்லத் தெரியாமல் குற்ற உணர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கத் திராணி இல்லாமல் இருந்தேன் . எப்படித்தெரிந்தது என ஆச்சர்யப் படப் போவதில்லை . இன்று நடக்கும் எதுவுமே நம்பும் படியாக இல்லை .
“நீ திருட்டுத் தனமா லெட்டர எடுத்துட்டு போறதுக்கு முன்னமே நான் படிச்சிட்டேன் “
“சாரி நந்தினி , நான் கெளம்பறேன் ” அதற்கு மேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை .
“இப்போ கூட சொல்ல மாட்டியா .. நான் உன்ன காதலிக்கறேனு .. என் கவிதை எல்லாம் உனக்கு தான்னு …ரெண்டு வருஷம் இல்ல எத்தன வருஷமானாலும் நீ சொல்றதுக்காக காத்திருப்பேன் ..”
இப்பொழுதும் என்னால் பேச முடியவில்லை . மௌனத்தை விட என் உணர்ச்சிகளை எது அழகாக மொழி பெயர்க்கக்கூடும் .
காத்திருத்தலை விடத் தாங்க முடியாத ஒன்று கடைசியில் அது கை சேரும் அன்று மகிழ்ச்சியில் இதயத்தில் ஏறும் கனம் .
பாலாவிடம் சொன்னால் சந்தோசப் படுவான் .நினைத்துக் கொண்டிருக்கும் போதே பேண்ட் பாக்கெட்டில் வைபரெட் ஆனது .
வண்டியை ஓரமாக நிறுத்தி செல்லை எடுத்தேன் . நூறு வயது . அவனே தான் .
“என்ன ரகு , ஆச்சர்யமா இருக்கு .. சனிக் கிழமை அதுவுமா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட ?? “
———————————————————————————————————————
பாதி கூட இல்ல முழு நேரம் இயற்கை சதி தான் செய்கிறது ……..
ஆனாலும் thans a ton for VISA Balaji intro…
LikeLike
@ Revathi , Ha ha 🙂 Neeyum vena try panni paaru .. He took almost 3.5 years for me and Vijay 😉
LikeLike
nice ending!!!
LikeLike
Thanks Girija .
LikeLike