Tags

  

 

 

யாமம் கூடிய சிறுபொழுதுகளிலும்

முன்பனி மூடிய பெரும்பொழுதுகளிலும்

ஆடித் திரியும் பறவைகளின் மேல்

கண்வைத்துக் கொண்டேயிருக்கிறது காலம் …

 

நூலிழை பிறழாமல் குறி தேடிச் சென்று

சிதைத்துச் சிதறடிக்கும்

வன்மம் கொண்ட தோட்டாக்கள் அதனிடம் ..

 

இளவெயிற் கதிர்களில் மிதக்கையிலோ

இணையுடன் கூடிச் சுகிக்கையிலோ 

நிழலினிற் பதுங்கிக் கிடக்கையிலோ

நித்திரைக் கனவினிற் தன்னை மறக்கையிலோ  

 

 

நினைவு பிறழ்ந்து தோட்டாவைத் தான்

பாய்சிடக் கூடுமென்று மிரட்டி

பேச்சுவார்த்தைக் கழைக்கிறது

பறவைகளை அது ..

 

தங்க இருக்கைகளைக் காட்டி

கழற்றித் தந்துவிடு இறகுகளை யெனக்

கேட்கிறதது ..

 

எதிர்த்துப் பேசும் பறவைகள்

வாயிலேயே சுடப்படுகின்றன

 

மீதமுள்ள பறவைகள்

இறகுகளைக் கழற்றித் தந்து விட்டு

இருக்கைகள் தந்த காலத்திற்கு

நன்றி சொல்லிக் கொண்டே ,

அமர்ந்தபடி

காலத்திற்கும் மென்றுகொண்டே யிருக்கின்றன

இறந்த பறவைகளின் சவங்களையும்

இணங்க மறுத்த மடத்தனங்களையும் .