Tags

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன . இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த மாதம் சொர்க்கத்தில் தினமும் பல தாம்பூலங்கள் மாற்றப் பட்டிருக்க வேண்டும் . எத்தனை திருமணங்கள் . இருந்தும் எனக்கு ஏனோ இந்தத் திருமணத்தில் அதிக ஆர்வம் . காரணம் ?? உண்மையில் தெரியாது . இந்த கதை படித்து முடித்ததும் இதே எண்ணம் உங்களுக்கும் தோன்றக் கூடும் .ஆனால் உத்திரவாதம் ஏதும் தருவதற்கில்லை

மணமகன் மேடையில் வந்தமர்ந்து சரியாக மூன்று நிமிடங்கள் இருபத்தேழு வினாடிகள் ஆகின்றன . அவன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை அவன் நண்பன் துடைத்துக் கொண்டிருந்தான் தன் திருமணம் பற்றிய கனவுகளோடு . மஞ்சள் பூசப்பட்டிருந்த தேங்காயின் கொண்டையில் பூ வைக்கப் பட்டிருந்தது . அது அவிழ்ந்து விழும் வண்ணம் ப்ரோகிதர் தந்த கெமிக்கல் கலந்த மஞ்சள் பூசப்பட்டு அவசரமாக நிறமேறிய அரிசி தூவப்பட்டுக் கொண்டிருந்தது . மணப்பெண் கூரைப்பட்டு கட்டிக் கொண்டிருந்தாள் உள்ளே .அல்லது கூரைப்பட்டால் சுற்றப்பட்டுக் கொண்டிருந்தாள் . மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம் . அரைஞாண் கயிறு , மேலும் பாதுகாப்பிற்கு பெல்ட் அணிந்தும் அடிவயிற்றில் கனமாக இருப்பது அவன் அடிக்கடி தொட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தையிலேயே தெரிகிறது .

“பொண்ண அழைச்சிண்டு வாங்கோ ” காத்திருந்தது போல தோழிகள் சூழ தரையை ஆராய்ந்து கொண்டு புதிதாக வெட்கப்படக் கற்றுக் கொண்டவள் போல இதுவரை வாழ்ந்த அத்தனை நாட்களுக்குமாய் சேர்த்து கையிலிட்டிருந்த மருதாணியைக் காட்டிலும் சிவந்து போய் வந்து கொண்டிருந்தாள் .

சின்ன மேடையில் கொள்ளாத அளவு கூட்டம் . மாற்றி மாற்றி மாலையிட்டுக் கொண்டிருந்தார்கள் . போட்டு வைத்தார்கள் . காலில் விழுந்தார்கள் . எங்கிருந்தோ பிடுங்கி வந்திருந்த வாழைக் கன்றை கயிறு போட்டுக் கட்டினார்கள் . கையில் நீரிடார்கள் .நெருப்பில் நெய்யிட்டார்கள் . முன்னாலிருந்த தூண் பார்க்க விடமாட்டேன் என்றது .அருகில் வேறு ஒரே இரைச்சல் .

“மாப்பிள்ள வீட்ல வரதட்சனையே வேண்டம்னுட்டாங்கலாம்”

“இப்போ அப்பிடித்தான் சொல்வாங்க .. தலை தீபாவளிக்கு பார்க்கலாம் மாப்பிள்ளை வீட்டு யோக்யதையை .. பல்ல இழிக்கராங்களா இல்லையான்னு “

“பொண்ணு கட்டிருக்க பட்டுபொடவை மாதிரியே ரொம்ப நாள் தேடிட்டு இருக்கேன் .. அம்புடமாடேங்குதே..”

“ஆர் எம் கேவிக்கு கூட்டிட்டு போக சொல்லேன் உன் அத்தான . தெரியுமில்ல இது ஜோதிகா கல்யாணத்துக்கு கட்டிருந்த பொடவை

“தமிழ் நாட்டுல சமஸ்கிருததில மந்தரம் ஓதறான் .. இதுக்கு மட்டும் அர்த்தம் தெரிஞ்சதுன்னா பொண்ணும் மாபிள்ளையும் தொங்கிடுவா ..”

“கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கீங்களா .. எங்க போனாலும் அபசகுனமா பேசிகிட்டு “

“ஆனாலும் பொண்ணோட அப்பாவுக்கு தைரியம் ஜாஸ்த்தி .. பொண்ணு காதலிக்கறானு தெரிஞ்சதும் …..”

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை . எதற்காகத்தான் திருமணத்திற்கு வருகிறார்களோ கையில் இருந்த அட்சதையை என் சார்பாக என் சார்பாக பக்கத்திலிருப்பவரைப் போடச் சொல்லிவிட்டு வெளியே நடந்தேன் . ஒரு கும்பல் தாலி கட்டியதும் பந்தி செல்ல முந்தி இருந்தனர் . மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன் .

நுழைவாயிலில் அழகாக தெர்மோ கோலில் வெட்டி சில நட்சத்திர அட்சதை தூவி அடுக்கியிருந்தார்கள் .

கிருஷ்ணா வெட்ஸ் மதுமதி .

நீங்கள் இங்கே படிக்கப்போவது இவர்களின் முதல் சந்திப்பு பற்றியோ இல்லை காதல் எப்படி மலர்ந்தது என்பதைப் பற்றியோ என நினைத்தால் மன்னிக்க . இந்தக் கதை இவர்களைப் பற்றியது அல்ல .நியாயமாக சொல்வதெனில் இவர்களைப் பற்றியது மட்டும் அல்ல .

———————————————————————————————————————

மது ப்ரைவேட் லிமிடெட் .

தட தடக்கும் இதயத்துடன் எம் .டி அறை வாசலின் முன் உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா . முதலில் மது சொன்னதை நம்ப முடியவில்லை அவனால் .

“நெஜமாவே அப்பாகிட்ட சொல்லிட்டியா ….” எதையோ சாதித்து விட்ட கர்வத்துடன்

நின்று கொண்டிருந்தாள் மது அவள் எதிரே .

“மதுவ யாருன்னு நெனச்ச ..” இல்லாத மீசையை முறுக்கி விட்டுக் கொண்டாள் .

“எதுவுமே சொல்லலியா அதுக்கு அவர் ?”

“மொதல்ல கொஞ்சம் யோசிச்சார் ” .. அப்பறமா பையன வர சொல்லு பேசலாம்னுட்டார் .. எனக்காக எங்கப்பா என்ன வேணும்னாலும் செய்வார் ” கடவுளே இந்த புன்னகையை கடைசி வரை இவள் முகத்தில் பார்த்திருக்க வேண்டும் .

” நாளைக்கு காலைல உன்ன வர சொல்லிருக்கார் . இனிமே எல்லாம் உன் கைல தாண்டா இருக்கு கிருஷ் … சொதப்பிடாத .” கெஞ்சலாக முகத்தை வைத்துக் கொண்டாள் . கொஞ்சலாம் போலிருந்தது கிருஷ்ணாவிற்கு ..

“கல்யாணத்துக்கப்புறம் வாங்க போங்க ன்னு தான் கூப்பிடனும் .. இதுக்கு ஒத்துகிட்டா எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல ”

தன் பங்கிற்கு இன்னும் அவளை அழகாக்கினான் .

“இப்போ உன் நேரம் .. என்ன சொன்னாலும் கேக்கறேன்டா ” அவன் பொய்யாய் முறைத்ததும் ” கேக்கறேங்க சார் ..இனிமே எப்பவுமே வாங்க போங்கண்ணே கூப்பிடறேன் . எனக்கு இது பிடிச்சிருக்கு . ” சிரித்தாள்

யாரும் பார்க்காத வண்ணம் மெதுவாக சிரித்துக் கொண்டான் கிருஷ்ணா .

” இங்க கிருஷ்ணாங்கறது …” தலையை உயர்த்தினான் .

“சார் உள்ள கூப்பிடறார் ” .

எழுந்து கொண்டான் . மது வந்து போனால் மனதில் ஒருமுறை .

———————————————————————————————————————

மறையப்போகும் முன் கடைசியாக ஒரு முறை என்று கேட்டு சுட்டுக் கொண்டிருந்தது சூரியன் .அலைகள் சோம்பேறித்தனப்பட்டு கரைக்கு வராமல் கடலிலேயே தூங்கி விட்டிருந்தன . வெகு நேரம் முயன்று பார்த்து விட்டு காற்று கூட தன் முயற்சியைக் கைவிட்டிருந்தது . ஆனால் கிருஷ்ணாவின் மனதில் மட்டும் புயல் ஓய்ந்த பாடில்லை . மதுவின் தந்தை சொன்னது இன்னும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது .

“என் பொண்ணு ஆசைப்பட்டது எதையுமே நான் மறுத்ததில்லை ..ஆனா ” கையைக் கால்சட்டைப் பைகளுடன் ஒட்டி வைத்துக் கொண்டு பேசினார் . அவர் வயதுக்கு பப்பாளி அளவாவது தொப்பை இருந்திருக்க வேண்டும் .தலை கூட நரைகாமல் தான் இருந்தது .

“இதுல என் பொண்ணோட வாழ்கை மட்டும் இல்ல .. என் கவுரவமும் அடங்கியிருக்கு .. “எதிர்பார்த்தது தான் .

“என் பொண்ண எப்படி சமாளிக்கறதுன்னு எனக்குத் தெரியும் .. நேரா விசயத்துக்கு வரேன் …எவ்வளவு பணம் வே ….

சடார் என்ற சத்தத்தோடு பாறையில் மோதிய அலை ஒன்று முகத்தில் தெறித்தது .

மது எப்படித் தாங்கப் போகிறாளோ .

———————————————————————————————————————

சூரிய ஒளி மங்கிப்போன ஒரு சோர்வான மாலை நேரம் . உலக ஏகாந்தம் அனைத்தும் இங்குதான் இருக்கின்றன என்பது போல் பூங்கா . புதிய பூக்கள் எதுவுமே பூக்கவில்லை இன்று . இருக்கின்ற பூக்களும் உதிர்ந்து உயிர் விட ஆவலாய் இருந்தன . இரங்கல் நிமித்தமாக வானம் முழுவது கருப்பு மேகம் குத்தியிருந்தது மேனியெங்கும் . மௌனம் திரை விரித்திருந்தது மதுமதிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் ..

“சரி கடைசியா நீங்க என்னதான் சொல்றீங்க “ குரல் உடைந்து கொண்டிருந்தது மதுவிற்கு .

“என்னால உங்கப்பா சொல்றா மாதிரி எல்லாம் நடக்க முடியாது ”

“அப்பாவோட பேக்டரிக்கு மொதலாளியா ஆக்கறேனு தான சொல்றார் “

“வீட்டோட மாப்பிள்ளையா …அப்பா எங்கள விட்டு போன பின்னாடி அம்மா என்ன எவ்ளோ கஷ்டப்பட்டு ஆளாக்கினாங்க தெரியுமா .. அவங்கள விட்டு எப்படி…” பேச முடியாமல் நிறுத்தினான் .

“நிஜமா அது மட்டும் தான் காரணமா “

“வேறென்ன ..”

“பொய் … என்ன கல்யாணம் பண்ணிட்டு , பொறுப்பெடுத்த உடனே பேக்டரியை தொழிலார்கள் எல்லாத்துக்கும் பொதுவாக்கப் போறேன்னு நீங்க அப்பாகிட்ட சொல்லல “

……………………..

“சோவியத் யூனியன் அவ்ளோ பெரிய நாடு . அதுவே கம்யூனிசத்தால சிதறிடுச்சு.. நம்ம காதலும் அதே மாதிரி ஆகனுமா

அழகான பொய் . இவளும் நம்பி விட்டாள் .நானே கெட்டவனாக இருந்து விட்டுப் போகிறேன் . மதுவிற்காக . என் மதுவிற்காக .

“எங்கப்பா நாட்டுக்காக உயிரையே தியாகம் பண்ணார் .. அவர் பையன் நான் .. என் காதல் முக்கியம் தான் .. ஆனா சுயநலவாதியா இருக்க என்னால முடியாது “

“அப்போ எல்லாமே பொய்யா .. கடைசி வரைக்கும் பிடிச்ச என்னோட கைய்ய விட மாட்டேன் ..யார் எதித்தாலும் …. என்னென்னமோ சொன்னீங்க .. எல்லாமே பொய்யா

“எல்லாமே உண்மை . அதே மாதிரி இந்த கல்யாணம் நடக்காது . அதுவும் உண்மை “

பேசமுடியாதவளாய் உடைந்து மதுமதி அழத் தொடங்கினாள் . கூட சேர்ந்து கொண்டது வானமும் .

———————————————————————————————————————

நாளை தான் வேறோருவனுக்குச் சொந்தமானவள் நினைக்கும் போதே ஏதேதோ செய்தது மதுவிற்கு .எல்லாரும் சுற்றிலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் . பழங்கள் பூக்கள் , தாம்பூலங்கள் என அறை முழுவதும் நிறைந்திருந்தது . காதல் வேறு கல்யாணம் வேறா .. எனக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே . ஏன் எதுவும் பேச முடியாமல் ஊமையாக இருக்கிறேன் . அப்பாவிற்காகவா. இன்னும் என்னை ஏமாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை நான் .

முடிவு செய்தவளாய் கடிதம் எழுதத் தொடங்கினாள் .

“அன்புள்ள அப்பா …”

———————————————————————————————————————

உயிர் போகுமளவு அடி விழ இந்த மாடியின் உயரம் போதுமா . தெரியவில்லை . கொஞ்சம் பலத்த அடியாக இருந்தால் திருமணம் கண்டிப்பாக நின்று போகும் . நிரந்தரமாக என்றால் கூட நிம்மதி தான் . கடைசி வரை அப்பாவுடனேயே இருந்து விடலாம் . மெதுவாக கீழே ஒருமுறை எட்டிப் பார்த்தாள் . காற்றின் சத்தம் காதில் தெளிவாகக் கேட்டது . சிறு வயதில் இருந்தே உயரமென்றால் பயம் அவளுக்கு . அவள் முடிவு முன்பே தெரிந்து தானோ . அனர்த்தமாகச் சிரித்தாள் . வரவேற்ப்புப் பகுதியில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள் . என் மரணத்திற்கா . நிறைய சிரித்தாள் . பின் நிதானமாக வலது காலைத் தூக்கி மாடி விளிம்பின் மேல் …

“ஒரு நிமிஷம் மது ….” மதுவின் தந்தை நின்று கொண்டிருந்தார் கையில் கடிதத்துடன் . அருகில் கிருஷ்ணா .

———————————————————————————————————————

மணமகன் அறை .

“என்கிட்ட ஒரு வார்த்தையாவது முன்னாடியே சொல்லிருக்கலாம்ல டா ” கண்களில் நீர் கோர்த்திருந்தது கிருஷ்ணாவிற்கு .

“என்ன மன்னிச்சிடுங்கப்பா .. வேற வழி தெரியாமத்தான் ”

“அட்லீஸ்ட் நீ எங்கிட்ட யாவது சொல்லிருக்கலாம்ல ” கிருஷ்ணாவின் கையிலிருந்தது அந்த கடிதம் .

“சாரி கிருஷ்ணா .. நம்ம அம்மா அப்பாவோட ஆசை இது .. அவங்களுக்காக என் காதல மறைச்சிட்டு வாழ்ந்திடலாம் னு நெனச்சேன் .. முடியல “

“நல்ல பொண்ணும்மா நீ .. எதோ இப்பவாவது சொன்னியே ” கோபப்படுவதற்க்குப் பதிலாக அப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி .மெல்ல கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினாள் .

“நம்ம காதல் தான் ஜெயிக்கல .நம்ம பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் பட்டோம் . பரவா இல்ல . எங்கப்பா பண்ண தப்ப நீங்களும் பண்ணிடாதிங்க .”

” கிருஷ் நான் கெளம்பறேன் டா . நீ கூட இருந்து கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வா ”

“சரிங்கம்மா ..”

மதுமதியைப் பார்க்க கர்வமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு . கொஞ்சம் கூட மாறவில்லை இவள் குணம் . முடிவுக்கு வந்தவராய் கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டார் . “இப்போ சிவா எங்க இருப்பான் .. நாளைக்கு அதே முகூர்த்ததில உங்களுக்குக்

கல்யாணம் “

———————————————————————————————————————

கிருஷ்ணா வெட்ஸ் மதுமதி .

அப்புறப்படுத்த மறந்து விட்டிருந்தார்கள் . ஆனாலும் மிக அழகாக வெட்டி இருக்கிறார்கள் . அதிலும் ‘ஷ் ‘ .. விசாரிக்க வேண்டும் யாரென்று . ஆ .. என்ன சொல்ல வந்தேன் . இந்த திருமணத்தில் நான் ஏன் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்று . நான் இன்னும் என் பெயரையே சொல்லவில்லை பாருங்கள் உங்களிடம் . நான் கிருஷ்ணா .

என் அம்மாவும் மதுவின் அப்பாவும் நிறைய காதலித்தார்கள் .. காதல் கை கூடாத போதும் பிள்ளைகளுக்கு காதலித்தவர்களின் பெயர்களையே வைக்கும் அளவுக்கு . அந்த மது கிருஷ்ணா திருமணத்தை இந்த கிருஷ்ணா மது திருமணத்திலாவது பார்க்கலாம் என்னும் அளவிற்கு . ஆனால் காதலின் கணக்கை காதல் தானே அறியும் .

ஒருவேளை இது உண்மையாகி இருக்கக் கூடும் . மது சிவாவைக் காதலிக்கா விட்டிருந்தால் … ஒரு முறையாவது ,அவளை நான் காதலிப்பதை அம்மாவிடம் சொன்னது போல் அவளிடமும் சொல்லி இருந்தேனென்றால் …

———————————————————————————————————————