மீட்சியுரா
கடந்த காலங்கள்
காயங்கள் மீறிய தழும்பென
நிலைத்து நினைவுறுத்துகின்றன
சம்பவங்களை ..
கம்பிகள் அறியாமல்
மீட்டும் விரல்கள் அறியாமல்
கேட்கும் செவிகள் அறியாமல்
இசையின் வழியே வந்திறங்கி
மீட்டுகின்றன புலன்களை …
சற்று முன் நடந்தது போல்
தோன்றி
கண்கள் கட்டிக் கொண்டு
காற்றில் கைகள் துழாவி
கண்ணாம்பூச்சி ஆடச் செய்கின்றன …
மழைநேரங்களில் புகைப்படங்கள் நோக்கும்
உருவங்களிடமிருந்து
மழைகளினூடே கலந்து கரையும்
பெருமூச்சுகளைக் கிளப்புகின்றன ..
பின்னிரவின் உறக்கத்தில்
காணும் கடந்த காலங்களின் கனவிற்கு
இதழ்கள் வருடும் புன்னகை
கண்விழித்த பிறகு
காணமல் கலைந்து போய்விடுகிறது
கனவுடனேயே ..
தினமும் பூக்கும்
புதிய பூக்கள்
ரசிக்கும் கண்களுக்கு
புலப்படுவதில்லை
நேற்றைய பூவிற்கான
செடியின் கண்ணீர் …
எல்லா வெள்ளிகளின் மரணங்களும்
ஞாயிறன்று உயிர்த்தெழுவதில்லை
அடுத்த வெள்ளிகள்
அதற்குள் வரிசையில் வந்தேகுகின்றன
புதிதாய் மரிப்பதற்கு ..
பெரும்பாலான கண்ணீர் சுரப்பிகள்
கை கடந்து போன
கடிகார நொடிகளுக்கெனவே
இறைத்து நொடிக்கின்றன ..
கடந்த நொடிகள்
மறந்தொழிய வேண்டும்
இல்லை இறந்த காலத்திற்குள்
இறங்க முடிந்திட வேண்டும்
எப்பொழுதும் வெறித்துப் பார்க்கப்படும் விட்டத்தில்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
நினைவுகளின் தூசிகள் படிந்த மின்விசிறிக்கு
அலுப்பு தட்டும் முன் …