Tags

 

எல்லா நாட்களிலும்

வந்து போகத்

தவறுவதில்லை நிலவு

 

அரை வட்டமாய் தேய்ந்தோ 

உட்குழிந்து வளைந்து

வெள்ளை வானவில்லாகவோ

முனை மழுங்கியோ

எப்படியும் வந்துவிடுகிறது

 

அம்மாவாசை அன்று கூட

பார்க்கும் இடங்களிலெல்லாம்

வெறுமை வைத்து

தன் இருப்பை அறிவிக்கிறது

 

நிலவில் மாற்றம்

என்றுமில்லை என அறிந்தும்

காட்சியில் வியந்து

அடியில் மயங்கி நான் … 

  

என்னகத்தின்  பிம்பம்  

நிலவின்  முகத்தில்

பிரதிபலிப்பத்தெப்படி  

 

கண்டுபிடிக்கும் ஆர்வம் இல்லையெனினும்

கண்டு ரசிக்கிறேன் தினமும்

 

தேவதையின் சிறகென

அதன் முகத்தில் கரிய இருள்

படியும் வேளைகளில் எல்லாம்

என்னுள் தன்னுள் விழும்

அனைத்தையும் விழுங்கிக் கொண்டு

வளைந்து ஊர்ந்து செல்லும் நதியென

காதலின் நினைவுகள்

 

புற வெளியின்  சலசலப்பில் 

துளியும் இன்றி

மரணத்தின் இறுதி நொடிகளுக்கான

மௌனங்கள் அவைகளின் உதட்டில் …

 

ஒன்றன் மேல் ஒன்றென

பூக்கள் உதிர்ந்து

மூடி முள் மழுங்கிப் போன பின்னும்

தாங்கிய  காயம் தன்னை

இதழ்களில் ஈரத்தோடு வைத்திருக்கும்

பத்திரம் அவைகளில் .. 

 

வருடப் படும் ஒவ்வொரு முறைகளிலும்

வருவிக்கத்தவருவதில்லை

கண்ணீர்த் துளிகளை .. 

 

பல யுகங்களாய் பேச யாருமில்லா

இருள்வெளி

பறிக்க முயல்கிறது

என வார்த்தைகளையும்

அவற்றிகான மொழியையும்

 

வான் நிலவின் கழுத்தைத்

தொட்டு ஒட்டிக்

கட்டிக் கொண்டிருக்கும்

விண்மீன்களென

என்னைச் சுற்றிலும்

காதலின் சாயல்கள் 

மூச்சு முட்டும் நெருக்கத்தில்

 

திரும்பிய திசையெங்கும்

விரும்பிய  முகம்

நட்சத்திரக் கூட்டங்களின் சிதறல்களில்

நிச்சயமாய் காண முடிகிறது 

 

வேறேதேனும் இருக்கிறதா என

சலனமில்லாமல் மௌனிக்கின்ற

வானின் உடலுக்குள்

உள்ளே உள்ளே தேடித் தேடி

வெகுதூரம் ஊடுருவி

புதைந்துபோக முயலும் எனை வருடி

ஓவென ஓலமிட்டுச்  செல்கிறது

காற்று 

 

மீண்டும் ஒருமுறை

நிலவு  தெரியுமாவென

மேகம் கரையக் காத்திருக்கிறேன் ..