Tags

வலுக்கட்டாயமாக

என் துயில் உறியப்படும்

சாமங்களின் மீதங்கள்

இமைகள் மூடாமலேயே

கரிய இருளின் பின்னே கழிகின்றன

ஒரு குருடனின்

நீண்ட நண்பகலைப்  போல

அறையின் குருட்டு அமைதி

வெளி முழுதும்

விரவிக் கிடக்கின்றன

பேசிய

பேசப்பட்ட வார்த்தைகள்

உன் நினைவுகள் கோர்க்கச்

சேர்க்க முயல்கிறேன்  

அவற்றின் கோடிட்ட இடங்களின்

நிரப்பிகளை

விரும்பித் தற்கொலை செய்து கொள்ளும்

சில பூக்களைப் போல 

மொழிபெயர்ந்து

அறிவித்துக் கொள்கின்றன

மௌனங்களென்று

தங்களைத் தாங்களே

குருடன் நானும்

வருடி வருடி

கேள்வி மறந்த வேதாளமாய்

வார்த்தைகள் மயங்க

உறங்கச் செல்கிறேன்

விடியல்களில் …