Tags

சர்வம்-3

சர்வம்-3

“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “

தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .

மூன்று நாட்களுக்கு முன்பு ,

மூவீசில் இன்வேஷன் ஆப் தி பாடி ஸ்னாச்செர்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தோம் .கொஞ்சம் மேகமூட்டமான நண்பகல் வேளை . ஆமாம் என்று தான் குன்னூரில் மேகமூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது . மலைச் சரிவில் ஆள் அரவமில்லா எஸ்டேட்டுக்குள் அழகான மர வீடு . என் தாத்தா ஒரு அழகுப் பிரியர் . வீடு முழுக்க ஓவியங்களும் , சிற்பங்களுமாகப் பண்ணியிருந்தார் .

” ஏன் தாத்தா இந்த பொம்மைங்கள்ள எதுவுமே முழுசுமா துணி போடல ” என்று சின்ன வயதில் கேட்டதற்கு மீசையை தடவிக் கொண்டே கெக்க பெக்கே என்று சிரித்து வைத்தார் . சாகும் வரை அந்த ரகசியத்தை மட்டும் சொல்லவே இல்லை அவர் .

வீட்டை எவ்வளவோ நவீனப் படுத்திவிட்டிருந்தாலும் இந்தப் பகுதிகளை மட்டும் அப்படியே விட்டுவைத்திருந்தோம் . என்னைத் தவிரயாரும் இங்கு வருவதும் கிடையாது . மங்கிய வெளிச்சத்தில் எரியும் மெழுகுவர்த்தியின் தனிமை எப்பொழுதுமே எனக்குப் பிடித்த ஒன்று ..இப்பொழுது எதுவும் பிடிப்பதில்லை , அபூர்வாவைத் தவிர .

சத்தியமாக படம் பார்ப்பதில் துளி கூட விருப்பமில்லை .இது போன்ற ஒரு தனிமையில் ,அதுவும் பக்கத்தில் அபூர்வாவை வைத்துக் கொண்டு .. அபூர்வா தான் அடம் பிடித்து இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் .அப்படி என்ன தான் இருக்கிறதோ . பறக்கும் தட்டு வருகிறதாம் . பச்சை உடம்பு , தவளைக் கண் , தலையில் ஆண்டெனா வைத்த வேற்றுகிரக வாசிகள் . ஒரு விதமான பூவை வைத்து மனிதர்களை மயக்கி அவர்களைப் பிரதிஎடுத்துப் பின் இயற்கையான உடலை அழிக்கிரார்களாம் . பின் அவர்கள் எல்லாரும் சேர்ந்து மற்ற மனிதர்களை .. அட்டர் ஸ்டுபிடிட்டி . எவ்வளவு தான் சரடு திணிப்பார்களோ.

“அபூர்வா .. “

———————————-

“ஏய் அபூர்வா … உன்னதான் “

கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை .படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவனின் தலையில் துளையிட்டுக் கொண்டிருந்தார்கள் . பார்க்கவே சகிக்கவில்லை .வைத்த கண் வாங்காமல் கார்டூன் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள் .மடியில் வைத்திருந்த தலையணையை அவள் மேல் தூக்கி எறிந்தேன் .

“என்னங்ங்ங்ங்க ” சிறுபிள்ளை போல் சிணுங்கினாள் .

“தாகமா இருக்கு தண்ணி வேணும் “

“படம் இன்ட்ரெஸ்டிங்கா போய்ட்டிருக்கு .. மாட்டேன் .. நீங்களே போய் எடுத்துக்கோங்க ” கை கால்களை அசைத்துக் கொண்டு அவள் கெஞ்சிய விதம் பிடித்திருந்தது . எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்தேன் . மடியில் வைத்திருந்த தலையணையை எடுத்தேன் .

“என்ன ?”

“நீங்களே எடுத்துகோங்கன்னு நீ தான சொன்ன “

“ஐயோ உங்களுக்கு வேற நெனப்பே இல்லியா .. பட்டப் பகல்ல .. ஐயோ விடுங்க .. நான் இன்னும் குளிக்க வேற இல்ல “ கைகளை விடுவித்துக் கொண்டு ஓடி சுவரோரமாக சாய்ந்து கொண்டாள் .

“அதான் நான் குளிச்சிட்டனே “

“ஆசை தான் . நான் குளிக்க போறேன் .. ஒழுங்கா படம் பார்த்து வைங்க . வந்ததும் கதை கேப்பேன் “

“நல்ல முடிவு . போறது போற .. அட்லீஸ்ட் அந்த தாழ்பாளையாவது போடாம இரேன் ” ரிமோட்டை என் மேல் எறிந்து விட்டு துண்டை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள் .

வேற்றுகிரக வாசிகள் இன்னும் மனிதர்களை விட்ட பாடில்லை . நாயகன் உலகத்தைக் காப்பற்ற கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தான் . அட போங்கடா .. வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . ஷவர் சத்தம் நின்றுவிட்டிருந்தது .

“என்னங்க காப்பி ….” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

“ஹ்ம்ம் .. சரி ” மெல்ல எழுந்தேன் . சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து கிச்சனை நோக்கி நடந்தேன் . சன்னமாக எதையோ பாடிய வண்ணம் அடுப்பில் பால் வைத்துக் கொண்டிருந்தாள் . போன அத்யாயத்தில் புதிதாக வாங்கி இருந்த நீல நிற புடவை அணிந்திருந்தாள் . தலையை இன்னும் துவட்டாமல் துண்டை வைத்துச் சுற்றியிருந்தாள் . இன்னும் மெதுவாக அவளை நோக்கி நடந்தேன் . கழுத்தின் அடியில் நீர் பூத்திருந்தது . கைகளை விரித்துக் கொண்டு பயமுறுத்தும் எண்ணத்துடன் நெருங்கினேன் .

“என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?” திரும்பாமலேயே கேட்டாள் . சட் . இந்த முறையும் கண்டுபிடித்து விட்டாள். முதுகில் எங்காவது கண் வைத்திருக்கிறாளா என்ன ..

“படம் முடிஞ்சிருச்சு .. கதை சொல்லலாமேன்னு ..”

“நெஜமாவே கதை சொல்ல தான் வந்தீங்களா ” இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பினாள் . உதட்டைச் சுளித்து புன்னகைத்தாள் . கண்களில் குறும்பு .

” நம்பமாட்டியா .. நீ போட்டுக் குளிச்சிட்டு வந்த சோப்பு மேல சத்தியமா ” இன்னும் ஒரு அடி முன்னேறினேன் .

“வேணாம் . நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி எடுத்துட்டு வரேன் ” ஒரு அடி பின்னால் சென்றாள் . சமையல் மேடை இடித்தது .

“ம்ம்ம்ம்… கதை சொல்லாம நான் போறதா இல்ல ” சமையல் மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி அவளைச் சிறை பிடித்தேன் .

“சொல்லட்டா.. “

“ஹ்ம்ம் ” சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .

“கடைசில யார் ஜெயிச்சா .. பூமி தப்பிசிருச்சா ..?”

“ஆமா .. ஆனா அபூர்வா மாட்டிக்கிட்டா “ மெதுவாக அவள் காதோரமாய் குனிந்தேன் .

“இன்னும் தாகமா இருக்கா “

“ஆமா “

“தண்ணி குடிக்கவே இல்லியா . நான் வேணும்னா எடுத்துத் தரட்டா “

“வேணாம் . நானே எடுத்துக்கறேன் ” எனக்கே சொந்தமான அபூர்வாவின் நறுமணம் . மூச்சுக் காற்று உதட்டைச் சுட்டது . கண்களை மூடிக் கொண்டாள் .

“எனக்கு காப்பி வேண்டாம் “

“டீ ?”

“நீ “

கைகளால் என் மார்பைப் பிடித்துத் தள்ளி விட்டு திமிறி ஓடினாள் .இடது கை மாட்டிக் கொண்டது என்னிடம் . நான் பிடித்த அவசரத்தில் கண்ணாடி வளையல்கள் எல்லாம் உடைந்து விழ கைகளைக் கீறி ரத்தம் வழியத் தொடங்கியது வெள்ளை நிறத்தில் .