Tags

தற்சமயம் நகரவாசியாகிவிட்ட

கிராமத்துத் தந்தை தன்

பிறவி நகரக் குழந்தையுடன்

புதிதாய் வாங்கிய அடுக்கு மாடி வீட்டில்

புதுமானைப் புகுவிழா கொண்டாடிய

மூன்றாம் நாள் ..

 

இறக்குமதி  வாசனைத் திரவியம்

ஊரே மணக்கும்

கர்வமாய்ச் சொன்னார்

கிராமத்துத் தந்தை

 

ஜன்னல் திறந்து வைத்தால்

வருமா வண்ணத்துப் பூச்சிகள்

கேட்கிறது

நகரத்துக் குழந்தை .

 

 

பாடப் புத்தகத்தில் கிணறு பார்த்து

வேறெங்கு இருக்குமது இந்தப் புத்தகம் தவிர

கேட்கிறது

நகரத்துக் குழந்தை

 

கிணற்றின் மேலிருந்து

விட்டெறிந்த காலணா

ஆடி ஆடி தெளிந்த நீரின்

தரை தட்ட மூழ்க

பால்யத்திலிருந்து மீண்டெழும்

கிராமத்துத் தந்தை

வேறொரு புத்தகம் தந்து

இதிலு மிருக்கிறது

என்கிறார்

 

கூட்டுக் குடும்பம் என்றால் என்ன

எந்த கிரகத்தில் அடைபட்டிருக்கிறார்கள்   

தாத்தாக்களும் பாட்டிகளும்

அடுத்த கேள்வியை அனுப்பிப் பார்க்கிறது

புதிய புத்தகத்தில் இருந்து ..

 

எந்த ” என்றால் என்ன “  விற்கும்

விடை ஒழுங்காய்த் தராவிட்டாலும்

இது தான் நாகரீக மெனக்

கற்றுவிக்கப் பட்டிருந்த நகரத்துக் குழந்தை

“தேங்க் யூ டாடி ” என்கிறது .

 

நன்றி மறந்த கிராமத்துத் தந்தையும்

அண்டைக் கிழார்களிடம்

அதைச் சொல்லிப்

பெருமுவகை கொள்கிறார்.