Tags

 

சர்வம்-4

சர்வம்-4

“அப்பூர்வாஆஆஆ “

 

 

 

“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .

தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….

நினைவு திரும்பிய பொழுது யாரோ என்னைப் படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள் . அருகே பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது . விட்டு விட்டு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தது . கண்களை முழுவதும் திறக்க கொஞ்சம் சிரமப் படவேண்டியிருந்தது .

“என்னங்க உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே .. நான் பயந்தே போயிட்டேன் ” அருகே வந்தமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டாள் . உதடுகள் பிரித்தேன் . தாகமாக இருந்தது . பேச முடியவில்லை . மெதுவாக அவள் இடது கையைத் திருப்பிப் பார்த்தேன் . கீறல் விழுந்ததற்கான அறிகுறிகளே இல்லை .

“என்ன பாக்கறீங்க “

“வளையல் உடைஞ்சு .. ரத்தம் ..” அடுத்த வார்த்தை பேச முடியவில்லை . உதட்டை ஈரப் படுத்திக் கொண்டேன் .

“ரத்தமா .. ஐயோ என்னங்க ஆச்சு உங்களுக்கு .. டாக்டர் ……”

அப்பொழுது தான் அவனைப் பார்த்தேன் . குறுந்தாடி வைத்திருந்தான் . முன் வழுக்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தான் .பிரேம் இல்லாக் கண்ணாடி . டாக்டருக்குரிய அத்தனை லட்சணங்களும் அப்படியே ..

“ஹலோ ஆனந்த் .. ஐ அம் ராஜீவ் .. ராஜீவ் ரொசாரியோ .. ஹவ் டூ யூ பீல் நவ் ?”

“பைன் டாக்டர் .. எனக்கு ஒண்ணும் இல்ல .. ஐ அம் ஆல் ரைட்.. அபூர்வாவுக்கு தான் கைல காயம் ” பேச முடிந்தது .

“இஸ் இட் .. என்கிட்டே சொல்லவேயில்லையே அபூர்வா நீங்க .. ஷோ மீ யுவர் ஹாண்ட்ஸ் “

“வளையல் ஒடஞ்சு சின்னதா கீரிடுச்சு .. டெட்டால் போட்ருக்கேன் . நீங்களே பாருங்க ” கைகளைக் காட்டினாள் . சின்னச் சின்னதாக சிகப்புத் தீற்றல்கள் தெரிந்தன .

“அவங்களுக்கு ஒண்ணும் இல்ல ஆனந்த் .. நீங்க தான் தேவை இல்லாம பயந்திருக்கீங்க..சிலருக்கு கொஞ்சமா ரத்தம் பார்த்தாலே தலை சுத்திடும் . மெடிக்கல் சைன்சில ஹீமோபோபியானு சொல்லுவோம் நாங்க அதை . ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க ..சின்னதா ஒரு டோஸ் ப்ரோமீத்தாசின் தரேன் .. நல்லா தூக்கம் வரும் ..” என் பதிலை எதிர்பார்க்காமலேயே சிரிஞ்சை ஏற்றினான் . கண்களைச் சுற்றிக் கொண்டு வந்தது .

தூரத்தில் அபூர்வாவும் டாக்டரும் பேசிக் கொள்வது கேட்டது .

“எதாவதுன்னா கால் பண்ணு அபி “அபியா ?

“சரி ராஜீவ் .. சாப்ட்டு போன்னு சொன்னா கேக்க மாட்டேங்கற “

“பரவா இல்ல அபி .” மீண்டும் ஒருமை .

“அடிக்கடி வா .. அங்கிள் ஆன்டிய கேட்டதா சொல்லு

“கண்டிப்பா, நீ சொல்லவே தேவை இல்ல ..” என்ன நடக்கிறது இங்கே .முன்பே தெரிந்தவர்களா இவர்கள் இருவரும் .

யோசிக்கும் முன்பே நினைவு நழுவத் துவங்கியது .

பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தேன் . பயங்கரக் காற்று . நா வறண்டு போயிருந்தது . நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் அபூர்வா . நான் கை நீட்டிக் கொண்டே இருந்தேன் . அபூர்வா தண்ணீருடன் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தாள் . ராஜீவ் அதைத் தட்டி விட்டு ப்ரோமீத்தாசின் என்றான் . இரண்டு கைகளிலும் ஊசி போட்டான் . தூங்கு என்றான் . அபூர்வாவும் டாக்டரும் சேர்ந்து சிரித்தார்கள் . அபூர்வா கத்தியை எடுத்து கைகளைக் கிழித்துக் கொண்டாள் . வெள்ளையாக ரத்தம் ஓடியது . ராஜீவ் தலையில் ஆண்டெனா முளைத்தது . அபூர்வா கத்தியை இருகைகளாலும் உயர்த்தி என் நெஞ்சுக்கு நேரே குறி வைத்து … கீழே .. கீழே ..வேகமாக.. இன்னும் வேகமாக .. சத் .

ஹக் . மூச்சு வாங்கியது . என்னைச் சுற்றிலும் ஒருவரும் இல்லை .ஜன்னலில் திரைச்சீலைகள் படபடத்தன . அபூர்வாவைக் காணோம் . வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது . மணி பார்க்க வேண்டும் . பக்கத்து மேஜையின் மேல் துழாவினேன் . கைகடிகாரம் தட்டுப் பட்டது . உயர்த்தி மணி பார்த்தேன் . ஆறு முப்பது ஆக இன்னும் வினாடிகள் இருக்கிறது என்றது . எதேச்சையாக அதில் தேதி பார்த்தேன் . நவம்பர் 7 என்றது . தூக்கி வாரிப் போட்டது . நான் மயங்கி விழுந்தது நவம்பர் 5 . இரண்டு நாட்களாகவா மயக்கத்தில் கிடந்திருக்கிறேன் . கிடத்தப்பட்டிருக்கிறேன் . புரண்டதில் வலது புறத்தில் ஊசி குத்திய இடம் வலித்தது . இல்லை ….. நிச்சயம் இல்லை . ராஜீவ் எனக்கு ஊசி குத்தியது இடது புறத்தில் . வலது கை புஜத்தை தடவிப் பார்த்தேன் .அங்கேயும் ஊசி குத்தப்பட்டிருந்தது .

எழுந்து விட்டாள் . கண்களை இருக்க மூடிக் கொண்டேன் தூங்குபவன் போல் .என் தலையைக் கோதிவிட்டு சென்றுவிட்டாள் . அபூர்வா . அழகிய என் அபூர்வா . அதிகபட்சம் இன்னும் அரைமணி நேரம் தான் உன் ஆயுள் .கதை சொல்ல இனி நேரமில்லை . அவளைக் கொன்று விட்டு வந்து மீதிக் கதையைச் சொல்கிறேன் .

பாத்ரூமில் தண்ணீர் திறந்துவிடப்படும் சத்தம் கேட்டது . இன்னும் பத்து நிமிடங்கள் ஆகட்டும் . என்னை மயக்க நிலையில் கிடத்தி விட்டு அபூர்வாவும் அந்த திருட்டு டாக்டரும் …. முதலில் அபூர்வா . பின் அந்த டாக்டர் .

அவள் பாடிக்கொண்டே குளிப்பது தெளிவாகக் கேட்டது . ஓசைப் படாமல் நடந்தேன் . எதாவது ஆயுதம் தேடவேண்டும் . கிச்சனில் நுழைந்தேன் . ஸ்டாண்டில் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது . வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தான் மூச்சு முட்ட முட்ட அபூர்வாவை .. இல்லை .. இப்போது அந்த எண்ணங்களுக்கு நான் இடம் கொடுக்கக் கூடாது . கத்தியை எடுத்துக் கொண்டேன் . குளியலறை நோக்கி நடந்தேன் .கதவு திறந்தே இருந்தது . மிக மெதுவாகத் திறந்து நுழைந்தேன் . மெல்லிய திரைச்சீலைக்குப் பின்னே அபூர்வா குளிப்பது தெரிந்தது .. நிச்சயமாக என் வருகையை அவள் உணர்ந்திருக்கவில்லை .

நெருங்கினேன் .

“கடைசி வரைக்கும் என்மேல இதே அன்போடவும் , காதலோடவும் இருப்பீங்களா? “

தலையை ஆட்டிக் கொண்டேன் .மன்னித்துக் கொள் அபூர்வா . இன்னும் நான் உன்னைக் காதலிக்கிறேன் . நிறைய . ஆனால் வேறு வழியில்லை . அடுத்த ஜென்மத்திலாவது ….. கத்தியை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன் . வியர்த்தது . திரைச்சீலையை விலக்கினேன் .

திரும்பி நின்று கொண்டிருந்தாள் . ஷவர் நீர் மெல்ல தலையிலிருந்து வழிந்து உடல் முழுவதும் தழுவியபடி ஓடிக் கொண்டிருந்தது .இதே வேறு ஒரு தருணமாக இருந்திருந்தால் … கத்தியை இன்னும் இறுக்கிப் பிடித்தேன் . கடைசியாக அவளை ஒருமுறை முழுதாகப் பார்த்தேன் .

அவள் முடிகளில் இருந்து நீர் ஒரு அருவி போல் கழுத்தில் சுற்றி சண்டையிட்டு , கொஞ்சம் முன்னேயும் பின்னேயும் வழிந்தது .கழுத்திலிருந்து மெல்ல இறங்கி , நடு முதுகில் வெட்டி வைத்த நீர் வீழ்ச்சியில் ஓடுவது போல் ஓடி , முட்டி , மேலேறி …என்ன அது ?, அவள் நடு முதுகில் பார்வை நின்றது . கொஞ்சம் மேடாக தழும்பு போல் ஏதோ இருந்தது . அதை ஒட்டிக் கீழே பிறை வடிவில் சிறு முடிகள் , கிட்டத்தட்ட மூடியிருக்கும் ஒரு கண்ணைப் போல . சட்டென்று அது திறந்து என்னைப் பார்த்தது .ஹக் …அதிர்ச்சியில் கால் வழுக்கிக் கீழே விழுந்தேன் .பிடித்து எழ எதுவும் இல்லாமல் கைகளை தரையில் ஊன்றி எழ முயன்றேன் .வழுக்கியது .

தண்ணீர் சொட்டச் சொட்டத் திரும்பினான் அபூர்வா .

“என்னங்க தாகமா இருக்கா ? தண்ணி வேணுமா …நான் வேணும்னா எடுத்துத் தரட்டா “