Tags

கூடுகட்ட மரங்களற்று

குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்

டிஷ் ஆண்டெனாக்கள் தேடி

நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன

காகங்கள்

 

கதை சொல்ல யாருமின்றி

உருக்குலைந்து திண்ணைகளோரம்

மூப்பேறிய குறு உரல்களில்

பாக்குடன் சேர்த்து

பழசையும் இடித்தபடி

வானம் பார்த்துக் கிடக்கின்றனர்

கதை சொல்லிப் பாட்டிகள்

பண்டிகைகள் மொத்தமும்

பெட்டிகளுக்குள் அடைக்கப் பட்டுவிட

காத்திருக்கிறார் அய்யனாரும்

மண் குதிரை பறப்பதற்காய்

 

உறைகளிலிட்டுப் பால் விற்க

பண்ணைக்குச் சென்று விட்ட

மாடுகளின் பின்னே

சமையல் எரிவாயுவாய்

வாசல் தாண்டி

வீடு புகுந்து விட்டிருக்கின்றன

சாணக் கோலங்கள்

 

வெகுகாலமாய் புற்கள் மட்டுமே

பார்த்துக் கிடந்த புன்செய்கள்

பெருமூச்சோடு சம்மதிக்கின்றன

தலையாட்டி

வீட்டு மனையென்று 

பெயர் மாற்றிக் கொள்ள  

 

எல்லாம் வெளியேறிவிட்ட பின்னும்

ஏறி விளையாடிய மரங்கள் உதிர்ந்தும் கூட

 

கிராமங்களின் தெருக்களில்

தீராத இச்சையோடு

அலைந்து கொண்டிருக்கின்றது

வெயில் மட்டும் – தன்

தீநாக்குகளைச் சப்புக் கொட்டிச்  

சுழற்றிய படி…