Tags

இருள் மேவிய 

நேற்றைய நீள் இரவின்

கடிகாரம் காண முடியா

ஒரு தருணத்தில்

திறந்து வைத்த சாரளத்தின் வழி

தப்பியோடிக் கொண்டிருந்தன  

என் கவிதைகள்

 

முதல் முடிவற்ற

தொடர்சியில்லா கனவின்

ஏதோ ஒரு பிரதேசத்தில்

கண்டு கொண்ட

குறிப்புகளற்ற காட்சியொன்றை

கவிதையாக்கச் சொல்லிவிட்டு

ஓடிப் போனதென் உறக்கம்

 

பரிச்சயமற்ற இருட்டைத்

துளாவித் துளாவி பார்த்துவிட்டு

மேலெங்கும் சிதறி நனைக்க நீரருந்தி

புறங்கையில் வியர்வை துடைத்து

ஓடிப்போன உறக்கத்தினை

மீட்டு வர ஆயத்தமாகையில் ..

 

தப்பியோடும்  கவிதைகளின் வரிசையில்

கடைசியில் நின்று கொண்டது

பிறகு எழுதிக் கொள்ளலாம்

என நினைத்து மறந்து போன

என் சமீபத்திய கவிதையும் …

                                                            – நேற்றைய இரவில்  ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு