Tags

 

உலகத்தின் நிழல் மறையும்

முற்றிலும் இருள் கவியும்

பின்னிரவுகளில்

விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே

மெதுவாக விழித்துப் பார்க்கின்றன

நட்பின் நினைவுகளும்

அதன் அழகான கவிதைகளும் …

 

தூக்கம் மறந்து

விழிகள் திறந்து

எரியும் கண்களில் விரியும்

கனவுகள் கலைந்த பின்

விட்டுச்சென்ற கால்சுவடுகளை

அலைகள் வந்து திருடிப் போகும் சுகம்

நெஞ்சின் அடுக்குகளில் இருந்து

நினைவுகள் வருடப் படுகையில் …

 

பறவை அறியாமல்

உதிரும் அதன் இறகு போல

நம்மை அறியாமல்

கனவிற்குள் உதிர்கின்றன

நட்பின் நினைவுகள் ..

 

என்ன எழுதுவது 

என யோசித்தால்

யோசிககாமல் எழுதும் சுதந்திரம்

வைப்பது நட்பில் மட்டும்

எழுத நினைத்து அமர்கையில்

வெற்றுக் காகிதமே கவிதையாக …

 

எல்லா சமயங்களிலும் கிடைப்பதில்லை

கவிதை எழுத முடிகிறதென்ற

கர்வம் …

 

நேரெதிர் பாதையில் பிரிந்திட்ட போதிலும்

நட்பின் உலகமும் உருண்டை

முட்டிக் கொள்ள நேரும்

தள்ளி நின்ற போதும் ..

 

எதிர்படும் எல்லாரிலும்

நட்பின் படிமங்கள்

தூர தேசம் சென்ற பின்னும்

தூறிக் கொண்டிருக்கும்  அதிர்வுகள் உள்ளே …

 

வைத்த புள்ளியையே சுற்றி

கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்

குழந்தையின் கோட்டோவியத்தைப் போல

நட்புக் காலத்தையே

நீள் வட்டப் பாதையில்

சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

 

 

வயிற்றில் வெற்றிடம் நிறைத்து

தொண்டைக் குழியில்

காற்றழுத்தம் குறைத்து

கண்கள் தாண்டி வரும் கண்ணீர்

வேறேங்கேனும் ரசிக்கப் படமுடியுமா

ஒரு விடுமுறை நாளின்

நண்பகல்  மழையைப் போல …

 

விட்டுக் கொடுப்பது அழகென்ற போதும்

வறட்டுப் பிடிவாதங்களும்

நட்பில் அழகு .

 

நட்பில் மட்டும் பிரிவுகளும்

இடைவெளிகளும்

சேமிப்பைப் போல

ஒரு பூவில் தேன் ஊரக் காத்திருக்கும்

காலம் போல

அன்பின் அடர்த்தி சேருங்காலம் ..

 

அருகில் இல்லையென்ற போதும்

அதிகம் உணர்வது இல்லை

 

நம்மைச் சுற்றிலும் ரகசியமாய்

மௌனிக்கின்ற எல்லாமும்

உரக்கப் பேசித் திரியும் 

நம் நட்புக்காலக் கதைகளை