Tags

, ,

கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .

 

கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .

 

வெண்மதி வெண்மதி – மின்னலே

ஒன்ற இரண்டா – காக்க காக்க

பார்த்த முதல் நாளே – வேட்டையாடு விளையாடு (இந்தப் பாடல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது .. இருந்தாலும் இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பது தனி கதை.. அது இன்னொரு சமயம் )

காதல் கொஞ்சம் – பச்சை கிளி முத்துச் சரம்

 

சத்யம் ஊத்திக்கொண்ட பாடல்களால் (நெஜமாகவே நீங்க தானா ஹாரிஸ் ) ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலே பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் . கேட்ட முதல் பாடல் அஞ்சலை கானா பாட்டு . கடுப்பாகிவிட்டது . போச்சுடா இதுவும் ஊத்தலா என சலிப்புடன் தான்  மற்ற பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் .

 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை —

                            சரி அப்பறம்

நீருக்குள் மூழ்கிடும் தாமரை —

                           யாருகிட்ட ஓட்டறீங்க .. தாமரை எப்டியா தண்ணிக்குள்ள மூழ்கும் .. ரைமிங் கு என்ன வேணும் னா எழுதுவீங்களா

 

சட்டென்று மாறுது வானிலை

 

        அடுத்த வரி தான் எழுந்து உட்கார வைத்தது .

பெண்ணே உன் மேல் பிழை .

 

           அழகான ஒரு குறுங்கவிதை . பாடல் முழுக்க . திருவள்ளுவராவது காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ன்னு தான்  சொன்னாரு . தாமரை கொஞ்சம் மேல போய் தாமரை (பார்ரா மறுபடியும் தாமரை !!)  நீருக்குள்ளே   மூழ்கிடுச்சுன்னு சொல்றாங்க . அது என்டோட பிழை இல்ல .. உன்னோடது பெண்ணே ..

 

அஞ்சலை , ஏத்தி ஏத்தி எல்லாத்தையும் தூக்கி போட்டு நெஞ்சுக்குள் பெய்திடும் , நீயின்றி நான் இல்லை , அனல் மேல பனி துளி , எல்லாமே அழகான குட்டி குட்டி கவிதைகளோட தொகுப்பு . கண்டிப்பா கவிதைக்காக ஹாரிஸ் நெறைய காம்ப்ரமைஸ் பண்ணிருக்காரு .(கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகமில்லா  )    .

 

அருமையான குரலில் , தெளிவான உச்சரிப்புடன் ஹரிஹரன் .. உடன் தேவன் .. அழகான கவிதை வரிகள் .. அதை சிதைக்காத மெல்லிய ஆனால் உயிர் தொடும் இசை   , ஹம்மிங் . கோரஸ் என எல்லாமே ஒரு perfect team .  

 

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் (உண்மையில் எல்லாமே )      

 

என்னோடு வா வீடு வரைக்கும்

என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

 

                எவ்வளவு ரசனையான வரிகள் . அந்த வீடு எப்டி இருக்கும் ன்னு பார்க்க காத்து தான் இருக்கேன் . கௌதமும் அவரோட பங்கை சரியா செஞ்சிருந்தார்னா பாடல் அதிகமுறை எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடும் .

 

அடுத்த வரிகள்

 

காதல் என்னைக் கேட்க வில்லை

கேட்டால் அது காதல் இல்லை

 

            விளக்கம் எதுவும் வேணுமா என்ன ?? 😉

 

ரெண்டு நாளா ஒரே பாட்ட ஓட விட்டு ஏன்டா கொல்ற என்ற அறை நண்பர்களின் குமுறல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு (ரசனை இல்லாத பாய்ஸ்)  காதில் head phones மாட்டிக் கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேன் .நேற்று மதியம் ஆரம்பித்தது . எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை . ஒவ்வொரு முறையும் எதாவரு ஒரு வரியில் , ஏதாவது ஒரு ஒலியில் நின்று விட்டிருந்தேன் . பாடல் மட்டும் என்னைக் கடந்து போயிருந்தது . அது ஒரு விதமான விளக்க முடியாத உணர்வு .

 

உங்களுக்கு மிகவும் பிடித்தமான பெண்ணுடன் , மாலை மங்கிய நேரத்தில் நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் , நீங்களே எதிர் பாராமல் உங்கள் கைகளை எடுத்து அவள் கோர்த்துக் கொண்டால் ,

 

இல்லை மாடியில் காயும் உடைகளை எடுக்கச் செல்கையில் மழை வந்து ஒரு நொடியில் நனைந்து போனால் ,

 

இல்லை தெருவில் விளையாடும் குழந்தைகள் , வழியில் செல்லும் உங்களை , அங்கிள் விளையாட வர்றீங்களா எனக்கேட்டால் ..

 

 இந்த உணர்வுகளை எல்லாம் விவாரிக்க முடியாதல்லவா ? ஒன்றுக் கொன்று ஒப்புமை தானே சொல்ல முடியும் .

 

பாடலை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே வருகையிலும் பாடல் மட்டும் கூடவே வந்துகொண்டிருந்து . எப்பொழுதும் பார்க்கும் அதே நிலா , எப்பொழுதும் தொடும் அதே காற்று (உன்னைத் தாண்டி போகும் போது வீசும் காற்றின் வீச்சு வேறு ).. ஆனால் நேற்று புது அனுபவமாக இருந்தது.

 

 

வீட்டின் முன்னிருந்த பிள்ளையார் கூட  அழகாய் தெரிந்தார் . அவர் செம்பருத்தியை எடுத்து அவருக்கே கொடுத்தேன் . எல்லாவற்றையும்  தாண்டி கவிதைகளில் தாமரை நிற்கிறார் . அந்தாதி போல அங்கங்கே ஒரு வரியையே உள்ளுக்குள்  வைத்திருக்கும் வார்த்தைகள் . நாமெழுதியிருக்க வேண்டுமே என பொறாமைப்பட வைத்தது .

 

கேட்டுப்  பாருங்கள்.

 

 

இந்த வாரக் குட்டு (சும்மா லுலுவாய்க்கு)

 

      பதிவர் bee’morgan க்கு ..  ஹரிஹரன் குரல் கேட்டுக் கொண்டிருந்த போது , ஏகன் பாடல் கேட்டியா என உசுப்பேத்தி விட்டு , அதை கேட்க வைத்துக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 🙂