Tags

,

“அபூ ….அபூ ..ர்ர்ர் … வ ..வா … வேணாம் .. கிட்ட வராத .. என்னை ஒன்னும் பண்ணிடாத … ” வாய் குழறியது . பின்னாலேயே நகர்ந்து  சென்றேன் .சுவர் இடித்தது ..   கீழே இறங்கினாள் . கொடியில் கிடந்த துண்டை எடுத்து  சுற்றிக் கொண்டாள் . நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன் .  கீழே கிடந்த கத்தியை எடுத்தாள் . நிதானமாக என்னை நோக்கி நடந்து வந்தாள் .

 

“ப்ளீஸ் .. வேணாம் .. என்ன விட்டிடு ” கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை .. இடது கையை ஊன்றி சுவற்றில் சாய்ந்து எழுந்தேன் . கை நரம்பு வலித்தது . மீண்டும் கீழே விழுந்தேன் .கத்தியை இரண்டு கைகளாலும் பிடித்து என்னை நோக்கி உயர்த்தினாள்.

 

“இப்போ என்ன … என்னை கத்தியால குத்தனுமா ? இந்தாங்க .. குத்துங்க ..” என்னை நோக்கி நீட்டினாள் .

 

“இல்ல .. வேணாம் .. தப்பு .. பண்ணிட்டே .. ன் ..”  வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது .

 

“சரி நானே குத்திக்கறேன் ” உயர்த்திய கைகளை தன் மார்பை நோக்கிச் செலுத்தினாள். வெள்ளை ரத்தம் பீச்சிட்டுக் கொண்டு என்  முகத்தின் மேல் அடித்தது . சிரித்தாள் .. மிக சப்தமாக . வாஷ் பேசின் குழாயைத் திறந்து பொறுமையாக கத்தியைக் கழுவத்  தொடங்கினாள்.   என் நரம்புகள் இழுத்துக் கொண்டன . மொத்தமாக நினைவிழப்பதற்கு முன் கடைசியாக உதடுகள்

 பிரிந்தன .

 

“சா .. சாதனா .. நீ எங்கே ???”

 

 

நிச்சயமாக எனது உள்ளுணர்வு சொல்லியது நான் இருப்பது எனது வீடு தான் என்று . ஆனால் எந்த அறை என்று தான்  தெரியவில்லை . உயரத்தில் எந்த ஓட்டையின் வழியாகவும்  எந்த வெளிச்சமும் வரவில்லை .ஒருவேளை தரைகடியில் இருக்கும் ரகசிய அறையாக இருக்கலாம் . தாத்தா நிறைய கதை சொல்லுவார் அந்த அறையைப் பற்றி . சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரர்களை அந்த அறையில் தான் பதுக்கி வைத்திருப்பாராம் . நான் இருப்பது அந்த அறை தானா என்பதில் எனக்கு நிச்சயமில்லை .

 

அறை முழுவதும்  ஒரு வித நெடி அடித்தது , வெகுநாட்களாய் யாரும் பயன்படுத்தியிராத அறையினுடையது  அது .இருட்டு கண்களுக்கு பழகியிருந்தது . சுவற்றில் தடவிக் கொண்டிருந்தேன் எதாவது சுவிட்ச் தென்படுகிறதா என்று . மரத்தால் ஆனா திருகு குமிழ் ஒன்று தட்டுப்பட்டது . அதன் நடுவில் குச்சி போல் இருந்த ஒன்றை மேலே தூக்கி விட்டேன் . அறையின் நடுவில் மஞ்சள் வெளிச்சம் தோன்றி அது அறை முழுவதும் பரவத் தொடங்கியது .

 

 

மொத்த அறையிலும் எதுவுமே இல்லை . நடுவே ஒரு மேஜை . இருபுறமும் நாற்காலிகள் . வேறு எதுவுமே இல்லை . வலது புற ஓரத்தில் கதவு இருந்தது .வேகமாக ஓடிச் சென்று பலம் கொண்ட மட்டும் இழுத்துப்

பார்த்தேன் . வெளியிலிருந்து பூட்டியிருந்தார்கள் . கத்திப் பார்த்தேன் . பலனில்லை . நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தேன் . தலை வலித்தது . சுவற்றில் மாட்டப் பட்டிருந்த ஓவியங்களைப் பார்க்கத் துவங்கினேன் .

ராஜ உடையில் தாத்தாவுடன் யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள் . ஒரு ஓவியத்தில் தாத்தா மலை உச்சியில் இருக்கும் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார் . அருகே சம வெளி .. அதன் அருகே எதோ ஒரு தட்டு போன்ற ஒரு வாகனம் . கிட்டத்தட்ட இல் பார்த்த ஒன்று . அருகே ஒரு ஆணும் பெண்ணும்

நின்றிருந்தார்கள் . அந்த பெண் அபூர்வாவைப் போலவே இருந்தால் என்பது என் மிகையான கற்பனையாக இருக்கலாம் . அபூர்வா …. எப்படியெல்லாம் காதலித்தோம் . எழுந்து அந்த புகைப்படத்தின் அருகில் சென்றேன் .

 

அவள் உடுத்தியிருந்த புடவை நீலமாகத் தெரிந்தது எனக்கு . என்னைப் பார்த்து சிரித்தாள் . அவள் முகத்தின்  மேல் கையை  வைத்தேன் .  நான் பார்த்துப் பார்த்து ரசித்த முகம் .கண்ணீர் என் பேச்சைக் கேட்காமல் கன்னங்களில் சூடாக வழிந்தோடியது …அவள் .. அந்த டாக்டர் ராஜீவ் .. இன்னும் எத்தனைப் பேர் இங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை … சாதனாவுக்குத் தெரிந்திருக்கலாம் .. சாதனாவுக்கு எல்லாம் தெரியும் . புத்திசாலிப் பெண் . என்னைக் காதலிக்கிறாளாம் .நிச்சயம் என்னை  காப்பற்ற வருவாள்  பாருங்களேன் .சாதனா .. எங்கிருக்கிறாய் . வந்தென்னைக்  காப்பாற்றேன் . முகத்தில் அறைந்து கொண்டு அழவேண்டும் போல் இருந்தது .

 

 

ஏன் எனக்கு ஊசி போட்டு இரண்டு நாங்கள் மயக்கத்தில் வைத்திருந்திருக்கிறார்கள் .இரண்டு கைகளும் வலித்தது . எனக்கு அந்த ராஜீவை சுத்தமாகப் பிடிக்கவில்லை .அப்புவாம் அப்பு . நானே கூப்பிட்டதில்லை . தலை வலித்தது .

 

“அபூர்வா காப்பி ….” பதிலையே காணோம் . யாராவது வீட்டில் இருக்கிறார்களா இல்லையா .  படுக்கையில் இருந்து எழுந்தேன் . கிச்சனில் யாருமில்லை . கண்ணாடியில் பார்த்தேன் . இரண்டு நாட்களில் இரண்டு வயது கூடி விட்டது போலிருந்தது . ஷேவ் பண்ணிக் கொள்ள வேண்டும் . எனது அறைக்குச் சென்றேன் .உள்ளே நடமாட்டம் இருந்தது . கதவிடுக்கு வழியாகப் பார்த்தேன் . அபூர்வா புடவை கட்டிக் கொண்டு இருந்தாள். இங்கு தான் இருக்கிறாயா . மாட்டினாய் வருகிறேன் இரு . சடாரென கதவைத் திறந்து ….

 

“சாரி .. ” திரும்பிக் கொண்டேன் . அது அபூர்வா இல்லை . வேறொரு பெண் .

வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு  நின்று கொண்டேன். ஒரு சில விநாடிகளுக்குப் பின் கதவு திறந்தது .

 

“மன்னிச்சிருங்க .. நான் அபூர்வானு நெனச்சு ..”

 

“நான் தான் மன்னிப்பு கேக்கணும் .. உங்க ரூம யூஸ் பண்ணதுக்கு .. பை தி வே .. ஐ அம் சாதனா .. உங்களைப் பாத்துகிறதுகாக வந்திருக்கற நர்ஸ் “

 

“என்னையா?? கிரேசி … எனக்கென்ன .. நல்லா தான இருக்கேன் .. ” யார் இவர்கள் .. என் அனுமதியில்லாமல் . அபூர்வா எங்கே ..

 

” அபூர்வா ..” வீடு முழுவதும் என் குரல் எதிரொலித்தது .

 

“அவங்க இல்ல .. வெளிய போயிருக்காங்க .. ராஜீவ் கூட ” கடைசி வாக்கியங்களை அழுத்திச் சொன்னாள்.

 

” ராஜீவ் . ராஜீவ் கூட … ஹேய் வெயிட் . நீ ராஜீவ் கிட்ட தான வேலை பாக்கற .. உனக்கு அவன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும் இல்ல …”

 

“நீங்க என்ன கேக்க வரீங்கன்னு புரியுது மிஸ்டர் ஆனந்த் .. ஆமா .. அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாலேயே பழக்கம் இருக்கு … காலேஜ் ல ஒன்ன படிச்சவங்க ..”

 

“வாட் .. அபூர்வா டாக்டரா ??”

 

“நூறு சதவீதம் “

 

“பொய் “

 

“இல்ல நிஜம் “

 

“நீ யாரு ??”

 

“சாதனா .. உங்களைப் பார்த்துக்க வந்திருக்கிற நர்ஸ் “

 

“என்ன எதுக்கு பார்த்துக்கணும் ??”

 

“ஏன்னா  உங்களுக்குப்  பைத்தியம் “

 

“டாம் இட் .. யார் சொன்னா ?? உன்ன யார் உள்ள விட்டது .. வெளிய போ ” வேலைக்கார்களை எல்லாம் பெரிய வீட்டிலேயே தங்கச் சொன்னது எவ்வளவு பெரிய தவறு . நான் எங்கே சொன்னேன் . அபூர்வா தான் தனிமை வேண்டும் என்று இந்த இடத்தை தேர்வு செய்திருந்தாள் . பைத்தியமாம் . பைத்தியங்கள் .

 

“உன்னை வெளியே போகச் சொன்னேன் “

 

“மன்னிக்கணும் .. உங்களை விட்டு போக எனக்கு அனுமதி இல்லை “

 

“சரி போகாத .. எனக்கு பைத்தியம் னு யார் சொன்னா .. சொல்லு .. சொல்லு பாப்போம் “

 

“உங்க அன்பு மனைவி அபூர்வா “

 

“நெனச்சேன் .. நீ இதான் சொல்வேனு .. சாட்சி இருக்கா ??”

 

உறையிலிருந்து எதோ காகிதத்தை  எடுத்து நீட்டினாள் . கிட்டத் தட்ட அதைப் பிடுங்கிப் படித்தேன் . திஸ் இஸ் செர்டிபய்டு தட் மிஸ்டர் ஆனந்த். எம் .எஸ் , ஏஜ் 28  இஸ் மெண்டலி ரிடார்டர்டு அண்டு … இத்யாதி இத்யாதி … செர்டிபய்டு பை கீழே ராஜீவ் கிறுக்கியிருந்தான் . அருகே இருந்த கட்டிலின் மேல்  அவசரமாக என்னைச் செலுத்தினேன் .

 

“இப்போவாவது நம்பறீங்களா ..”

 

“எனக்கு பைத்தியம் இல்ல .. ஐ அம் வெரி நார்மல் “  நெஞ்சை ஏதோ செய்தது .

 

“எனக்கு தெரியும் “

 

“பின்ன ஏன் ??”

 

“அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. அதுக்கு நீங்க பைத்தியமாகனும் ” என்னை நோக்கி நடந்து வந்தாள் . அதுவுமில்லாம ??

 

” வேறென்ன ??”

 

“அவங்களோட ஆராய்ச்சிக்கு உங்களை பயன்படுத்திட்டு இருக்காங்க .. உங்களை மாதிரி யாருமில்லாத ஒரு பணக்காரன் அவங்களுக்குத்  தேவை . அதான் அபூர்வா உங்களைத் தேர்வு செஞ்சாங்க “

 

“நான் நம்ப மாட்டேன் .. அபூர்வா வந்ததும் எல்லாம் தெரிஞ்சிடும் .. நீ பொய் சொல்ற .. அபூர்வா என்னை உண்மையா காதலிச்சா ”

 

“ரிலாக்ஸ் ஆனந்த் .. கல்யாணத்துக்கு சம்மதிக்கறதுக்கு முன்னாடி அபூர்வா போட்ட கண்டிஷன் நியாபகம் இருக்கா ?? அவங்களோட பாஸ்ட் பத்தி எதிவும் கேக்க கூடாதுன்னு .. ஏன்னு எப்போவாவது யோசிச்சிருக்கிங்களா?? “

 

“இது .. இதெப்படி உனக்குத் தெரியும் ?”

 

ஒரு மாத்திரையை எடுத்து தண்ணீரில் போட்டாள் . நுரைத்துப் பொங்கியது .

“எல்லாம் தெரியும் ஆனந்த் .. நீங்க படபடப்பா இருக்கிங்க .. இதைக் குடிங்க ” என் அனுமதி இல்லாமலேயே புகட்டினாள்

 .

உள்ளே இறங்க இறங்க ஒரு மாதிரியாக இருந்தது . உணவுக் குழல் எரிந்தது .

 

என் அருகே வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் . அவள் இரண்டு கைகளாலும் என் தலையைப் பிடித்து கண்களை நேரே பார்த்தாள் .என்னால் விலகிக் கொள்ள முடியவில்லை .

 

“ஆனந்த் என் கண்ணையே பாருங்க .. ” பார்த்தேன் . என் உடலை உதைத்து வெளியேறி விட்டு உயிர் சூன்யத்தில்  மிதந்தது .

 

“ஆனந்த் “

 

“ஹ்ம்ம் “

 

“நீங்கள் யார் ??”

 

“ஆனந்த் “

 

“நான் ??”

 

“சாதனா .. என்னைக் காக்க வந்த தேவதை “

சிரித்தாள் . சிரித்தேன் .

 

“நான் அழகாயிருக்கிறேனா ..??”

 

“நிறைய “

 

“அபூர்வாவை விட ?”

 

“யார் அபூர்வா ??” மெதுவாக என்னைப் படுக்கையில் சாய்த்து என் நெற்றியில் முத்தமிட்டாள் .

 

“நான் எது சொன்னாலும் செய்வீர்களா ??”

 

“உயிரையும் தருவேன் “

 

“தேவை இல்லை “

 

“வேறென்ன வேண்டும் ??”

 

“அபூர்வாவைக் கொல்ல வேண்டும் “

 

“அவள் கணவனையும் சேர்த்து வேண்டுமானாலும் கொலை செய்கிறேன் ” மீண்டும் ஒரு முறை முத்தமிட்டாள் .

 

“நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ?” என்னை நோக்கி இழுத்தேன் , எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க வில்லை .பெண்களுக்கென்று பிரத்யேக வாசனை உள்ளது . ஆனால் வாசனைக்கேன்றே பிரத்யேக பெண்களும் உள்ளார்கள் . என்றோ புத்தகத்தில் படித்தது நினைவிற்கு வந்தது . ஒவ்வொரு விதமான வாசனைகள் . சாதனா வேறு . அபூர்வா வேறு ..

 

அபூர்வா .. இல்லை . என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் .நான் செய்வது தவறு . யாரோ சொல்வதை நம்பி என் அபூர்வாவைப் போய் . சட்டென்று உதறினேன் . எழுந்து நின்று கொண்டேன் .

 

ஒருகளித்துப் படுத்தவாறே கேட்டாள் . “இன்னும் நீங்க என்ன நம்பலியா ??”

 

மௌனமாக நின்றேன் .

 

“சரி லெட்ஸ் பினிஷ் திஸ் நவ் ..”  உள்ளே எழுந்து சென்றாள் .கை நிறைய பைல்களையும் , பேப்பர் கட்டிங்குகளையும் முன்னே போட்டாள் .ஒரு டைரியை எடுத்தாள் .

 

“இது ராஜீவ் அபூர்வாவுக்காக எழுதினது ” இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை .முதல் முறையாக கோபத்திற்கு பதில் பொறாமை தோன்றியது ராஜீவின் மேல் .

 

“இது நவம்பர் 5 பேப்பர் கட்டிங் .. மொத்த குன்னூர்லையும் பகல் முழுசும் மின் வெட்டு னு போட்ருக்கு .. நீங்க எப்படி படம் பார்த்தீங்க ?? உங்க வீட்ல ஜெனேரேட்டார் இருக்கா ?”

 

“இருக்கு .. ஆனா அவுட் ஹவுஸ் கு இல்ல ..தட் மீன்ஸ் …”

 

“தட் மீன்ஸ் .. பர்பசா உங்களை படம் பார்க்க வச்சிருக்காங்க “

 

” எதுக்காக ? எனக்கு எதுவும் புரியல …”

 

“கொஞ்ச நேரத்தில புரிஞ்சிடும் .. UFO பத்தி கேள்விப் பட்டிருகீங்களா ??”

 

 

“கொஞ்சம் தெரியும் … unidifined flying object ..  பறக்கும் தட்டு , வேற்றுகிரகவாசிகள் னு , பணத்தை வீணடிச்சிட்டு இருக்கறவங்க ..” மெல்ல சிரித்தாள் .

 

“தப்பே இல்ல .. அவங்க உங்களைத் தேர்ந்தெடுத்ததுக்கு ..வேற்றுகிரக வாசிகள் னு யாரவது இருந்தா கண்டுபிடிச்சு மக்களைக் காப்பாத்த தான் அவங்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க .. இவங்க இல்லாம MOH னு ஒரு அமைப்பு இயங்கிட்டு இருக்கு .. மென் ஆப் ஹாலோஸ் .. தெரியுமா ?”

 

 

“———————————–“

 

“மனிதனோட அடுத்த பரிமாணத்தை உருவாக்க முயற்சி செய்யற வேலை பண்ற அறிவியல் மேதைகளோட அமைப்பு .. கிட்டத் தட்ட கடவுளோட வேலை .. எல்லாமே உள்ளிடற்ற வெளியில இருந்து தான் உருவாகுதுங்கறது தான் அவங்க தத்துவம் . எதுவுமே இல்லாத ஒன்னுல இருந்து உருவாகி எதுவுமே இல்லாம போகுறது .. சுருக்கமா சொன்னா சர்வம் சூன்யம் .”

 

கொஞ்சம் தண்ணீரை எடுத்து மிடறு விழுங்கினேன் . அவளே தொடர்ந்தாள் .

“அபூர்வாவும் ராஜீவும் அந்த அமைப்பைச் சேர்ந்தவங்க .. குறிப்பா அவங்க பண்ற ஆராய்ச்சி வேற்றுகிரக வாசிகளுக்கும் , மனிதர்களுக்கும் இடையில கலப்பினம் உருவாக்க முடியுமான்னு .. ஏன்னா அதுதான் உலகத்தோட அடுத்த தலைமுறையா

இருக்க முடியும் னு நம்பறாங்க .. அதுக்கு தான் உங்களையும் தேர்ந்தெடுத்திருக்காங்க …”

 

“என்னையா ? என்னால என்ன உபயோகம் அவங்களுக்கு ?? நான் சாதாரண மனுஷன் .. வேற்றுகிரகவாசி இல்லையே “

 

இந்த முறை அவள் புன்னகை என்னை கேலி செய்வதாக இருந்தது . “ஒத்துக்கறேன் .. நீங்க வேற்றுகிரகவாசி இல்ல .. சாதாரண மனுஷன் தான்  .. ஆனா அபூர்வா  ” கண் சிமிட்டினாள் .

 

 

                                                                                                                                     —— தொடரும்