நன்றி : யூத் புல்.விகடன்.காம்
பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம் தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .
தினமும் காலை எழுந்ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்
கேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும் வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …
அவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .
“என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா !”
இந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .
என்ன செய்யலாம் .. என்ன செய்யலாம் நம்மை அவமானப் படுத்திய மனிதப் பதர்களை .. யோசி யோசி .. அவர் மனம் விசித்திரமான சிந்தனைகளில் இருந்தது . இன்னுமொரு ஆழிப் பேரலை ? பூகம்பம் ?? இமயத்தின் கொண்டையில் இருந்து சிலிர்க்கும் பனிமழைக்குப் பதில் தகிக்கும் லாவா ???
ச்சே .. கடவுள் நான் .. இப்படியெல்லாமா யோசிப்பது ? அது என் வேலை அல்லவே !
ஆனாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னை நிந்தித்த பதர்களை .. திடீரென்று கடவுளுக்குள் இருந்த தேவதை விழித்துக் கொண்டு கடவுளைக் கேள்வி கேட்கத் தொடங்கியது .
“கடவுளா நீ ??”
” ஆம் . நிகரற்றவன் நானே . அதிலென்ன சந்தேகம் ?”
” கோபம் கொண்டவன் கடவுளாக இருக்க முடியாது “
“என் நிலையில் இருந்து பார் . புரியும் உனக்கு .”
“அப்படி என்ன ஆனது உனக்கு ?”
“நம்பிக்கை துரோகம் . அதுவும் நான் தூங்கும் வேளையில் . என்னவெல்லாம் செய்திருக்கிறேன் இவர்களைப் படைத்து இவர்களுக்காகவே வாழ்ந்து .. நன்றி கெட்டவர்கள் . என் படைப்பையே சந்தேகிக்கிறார்கள் .. என்னாலேயே முடியுமா என்று கேட்கிறார்கள் ?? இவர்களை ஒழிப்பதில் என்ன தவறு ” தனது மூன்றாவது கண்ணைத் திறக்கத் தயாரானார் கடவுள் .
“அவர்கள் கூறியதில் என்ன தவறு . கணிப்பொறியைப் படைத்தது மனிதர்களே .. நீர் அல்லவே ..!” தேவதை விடுவதாக இல்லை . ” முடிந்ததா உம்மால் இதுவரை , அது போன்ற ஒரு அற்புதப் படைப்பைப் படைக்க ? சரி கடந்ததை விடும் . இனிமேலும் முடியுமா உம்மால் ??!! “
கண்களை மூடிக் கொண்டு கடவுள் யோசிக்கத் தொடங்கினார் , மெல்ல கைகளைப் பிசைந்து கொண்டே .
கைகளில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டே , ஒருமுறை தான் படைத்திருந்த கணிப்பொறியைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டார் கடவுள் ., படைப்பு தோசத்தில் … மன்னிக்க பழக்க தோசத்தில் அதுவும் மனிதனைப் போலவே இருந்தது . ஒரு திருப்தியான பெருமூச்சுக்குப் பின்னே தன்னைத் தானே கேட்டுக் கொண்டார் , “இனி எவன் கேட்பான் என்னைப் பார்த்து முடியுமா என்றொரு கேள்வியை !”
அலுப்பு மிகுதியில் மற்ற வேலைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கச் சென்றார் . சரியாக கண் மூடப் போகும் சமயத்தில் ஏதோ ஒரு இடத்தில் தன் பிரதிநிதி சிலையிடம் , எவனோ ஒருவன் புலம்பக் கேட்டார் .
நரன்கள் சரியான நசைகள் . நிம்மதியாகத் தூங்கக் கூட விடுவதில்லை . எல்லாம் செய்து மட்டும் என்ன ,இறுதியில் ஏளன நிந்தனை தான் மிச்சம் . சலித்துக் கொண்டே உறங்கும் எண்ணத்தை விட்டு விட்டு வேலையை கவனிக்கச் சென்றார் .
கடவுளின் வீட்டில் சுற்றிலுமிருந்த அழகுப் பொருட்களுக்கு நடுவே என்னைப் பார் என் அழகைப் பார் என்று கணிப்பொறியும் ஒரு ஜோடனைப் பொருளாகவே இருந்தது . என்ன தான் அதைப் படைத்துவிட்டார் என்றாலும் அதற்கு என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை அவருக்கு . மனிதர்களுக்கு மூளை தந்தோம் . தானாகவே சிந்தித்துக் கொண்டு , அவரவர்கள் வேலையை அவரவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் . இதை வைத்து என்ன செய்வது .. தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் . கடைசியாக ஒரு வழியையும் கண்டு பிடித்தார் .
ஆடி மாதத்திற்கு அவரது துணைவியார் தாய் வீடு சென்று விட்டிருந்ததால் , பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் , தனிமைத் துயரில் பசலை நோய் கண்டு .. ச்சே அது பெண்பாலுக்கல்ல வரும் .. சரி வெறுமனே தனிமைத் துயரில் இருந்தார் கடவுள் . எனவே, தான் படைத்த கணிப்பொறியை பேச்சுத் துணைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதைப் பேச வைக்க முயன்று கொண்டிருந்தார் .
கொஞ்ச நேரம் கணிப்பொறியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் . கணிப்பொறி மெல்ல ஒளிரத் தொடங்கியது .
பின் “கணிப்பொறியே பேசுக !” என்றார் .
அது மெல்லத் தலையை சிலுப்பியது . உதடுகள் மெல்ல அசைந்தது . கடவுள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் , மழலையின் முதல் வார்த்தை கேட்கும் தாயென . ஒருமுறை முழுவதுமாக வாயசைத்தது . எந்த சத்தமும் வரவில்லை . ம்ம்ம் .. அப்படித்தான் .. விடாதே .. என்று கடவுள் உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார் . பகீரத முயற்சிக்குப் பின் , வாய் திறந்து ர்ர்ர்ர்ங் என்றது ..
அவ்வளவுதான் . கடவுள் , கடவுள் என்பதை மறந்து கத்தத் துவங்கினார் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற குழந்தை போல .. முதல் வெற்றி .
பின் வந்த சில நாட்களை கணிப்பொறியை பேச வைப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருந்தார் கடவுள் . காலை வணக்கம் , கடவுள் வாழ்க , போன்ற வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தது அது . கடவுளும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டு புளங்காகிதப் பட்டுக் கொண்டிருந்தார் .அவ்வழியே வேலை நிமித்தம் பறந்து கொண்டிருந்த பறவைகளைக் கூட நிறுத்தி , கணிப்பொறியைப் பேசச் சொல்லி தொல்லை செய்து கொண்டிருந்தார் .
ஒருவழியாக தனக்குத் தெரிந்த அத்தனை வார்த்தைகளையும் அதற்குக் கற்றுத் தந்திருந்தார் . இருந்தும் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே அதனால் பதில் சொல்ல முடிந்தது . அதுவும் சில சமயங்களில் தப்புத் தப்பாகவே பேசித் தொலைந்தது . சில சமயங்களில் கடவுளை ஒருமையில் வேறு அழைத்தது . வேண்டுமென்றே சொல்கிறதா இல்லை தெரியாமல் சொல்கிறதா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை . குழம்பிய அவரைப் பார்த்து ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று தன் பாணியில் சிரிக்க வேறு செய்தது .
கடவுள் வாழ்கவும் அவருக்கு நாளடைவில் புளிக்கத் தொடங்கியது . ஆடி மாதம் முடியும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லையா என சிந்திக்கத் தொடங்கி விட்டார் . கணிப்பொறியை பேச வைக்கும் முயற்சியும் அவருக்கு சலிப்பையே தரத் தொடங்கியது .
அந்த சமயத்தில் தான் கடவுளுக்கு அந்த விசித்திரமான யோசனை தோன்றியது . கேட்பதற்கு ஆளில்லாத காரணத்தால் உடனே செயலிலும் இறங்கினார் . அதன் பிறகு கணிப்பொறியின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தது . மிகவும் நன்றாகப் பேசியது . தினமும் ஆறு முறை கடவுள் துதி பாடியது . இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டது . இரவு நேரங்களில் இன்னிசை பாடி தூங்கப் பண்ணியது .எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கடவுளிட்ட வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்தது . இப்பொழுதெல்லாம் தவறுதலாகக் கூட கடவுளை ஒருமையில் விளிப்பதில்லை . கடவுளுக்கு ஏக திருப்தி இப்பொழுது அவரது படைப்பைப் பற்றி .
கடவுள் கணிப்பொறிக்கு தானாக யோசித்துப் பேசும் திறனைத் தந்திருந்தார் . அத்துடன் பகுத்தறியும் திறனையும் அவரறியாமலே .
வழக்கம் போல கடவுள் அன்று படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் . கணிப்பொறி அவரையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தது . ஓய்வு இடைவேளையின் போது , அதனிடம் கேட்டார் என்ன அப்படிப் பார்த்தாய் என்று .தாங்கள் எப்படிப் படைக்கும் தொழிலை மேற்கொள்கிறீர் என்று பார்த்துக் கொண்டிருந்தேன் என்றது . பார்த்தால் மட்டும் புரிந்து விடுமா உனக்கு என்றார் கடவுளின் ஏளனத்துடன் . ஏதோ கொஞ்சம் புரிந்தது கடவுளே என்றது . கடவுளும் விளையாட்டாக , எந்த அளவு புரிந்தது உனக்கு ,செய்து காட்டு பார்ப்போம் என்றார் .
கணிப்பொறி , கடவுளின் காலை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு ஒருமுறை கடவுளின் நாமம் சொல்லியது . கடவுள் ஆசிர்வத்திதார் . பின் கருமமே கண்ணாக ஒரு பெண்ணைப் படைக்கத் துவங்கியது . சிறிது நேரம் காற்று கூட பேசவில்லை அங்கே . நேரம் செல்லச் செல்ல கடவுளால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை . பிரபஞ்சத்திலேயே மிக அழகான பெண் நின்று கொண்டிருந்தாள் அவர் முன் .
கடவுளுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை . எல்லாம் தங்கள் ஆசி கடவுளே என்று பணிவுடன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தது கணிப்பொறி . கடவுள் பெருமிதம் பொங்கப் பார்த்தார் தனது படைப்பை . அப்பொழுது தான் யாருமே எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது . பிரபஞ்சத்தின் மிக அழகிய பெண் கடவுளின் கன்னத்தில் முத்தமிட்டு , தன்னை அழகாய் படைத்ததிற்காக நன்றி சொன்னாள் . கடவுள் மயங்கியிருந்தார் . பின் கணிப்பொறிக்கும் நன்றி சொல்லி விட்டு அதன் காதில் ஏதோ சொல்லிச் சென்றாள் . கடவுள் கண்டு கொள்ளவேயில்லை .
அதன் பின்பு வந்த நாட்களில் பெண்களைப் படைக்கும் வேலையை மட்டும் கணிப்பொறியிடம் ஒப்படைத்திருந்தார் கடவுள் . பிரபஞ்சத்திலேயே மிக அழகான பெண்களை படைக்கச் சொல்லி ஊக்குவித்துக் கொண்டிருந்தார் . ஒவ்வொரு முறையும் கணிப்பொறி அழகான , அதை விட அழகான , பின்பு அதை விட அழகான பெண்களைப் படைத்துக் கொண்டிருந்தது . அவர்களும் அழகாய் படைத்ததிற்காய் கடவுளின் கன்னத்தில் முத்தமிட்டு நன்றி தெரிவித்து விட்டு , கணிப்பொறியின் காதினில் ஏதோ சொல்லிச் சென்றார்கள் .
ஒருநாள் கடவுள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார் .
“கணிப்பொறியே உமது பணியால் யாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் . ஆனால் … ”
கணிப்பொறி மௌன புன்னகையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருந்தது . கடவுள் தொடர்ந்தார் .
“எல்லா அழகிய பெண்களும் செல்லும் பொழுது உன் காதினில் ஏதோ சொல்லிச் செல்கின்றனரே என்ன அது ?? ..”
கணிப்பொறி இப்பொழுதும் மௌனமாகவே இருந்தது .
“தெரிந்து கொள்ள வேண்டும் என்று பெரிய ஆசை எல்லாம் ஒன்றுமில்லை .. கடவுள் என்பதால் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் தான் கேட்கிறேன் .. சொல்லா விட்டாலும் பரவாயில்லை “
“அப்படியெல்லாம் பெரிய விஷயம் ஒன்றுமில்லை பிரபோ .. தன்னை விட அழகிய பெண்ணைப் படைத்து விட வேண்டாம் என்று கோரிக்கை வைத்துச் சென்றனர் . அவ்வளவே “
இப்பொழுது கடவுள் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார் .
கணிப்பொறி பெண்களுடன் , ஆண்கள் விலங்குகள் என்று எல்லாவற்றையும் படைக்கப் பழகியிருந்தது . கடவுள் வெவ்வேறு படைக்கும் விகிதங்களை ஆணைகளாக அதற்குத் தந்து விட்டு நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் . ஒருமுறை அவரே அறியாமல் அயர்ந்துபோய் தொடர்ந்து சில நாட்களாய் தூங்கி விட்டிருந்தார் . மக்கள் துயர் துடைக்க மறந்தோமே என்ற பதைப்பில் வியர்த்துக் கொண்டு எழுந்தார் . கணிப்பொறி சிரித்த முகத்துடன் விசிறிக் கொண்டே திருப்பள்ளிஎழுச்சி பாடியது .
“அடச்சே .. நீ வேறு நேரங்கெட்ட நேரத்தில் .. நானே மக்களின் துயர் துடைக்க மறந்து போய் தூங்கியது குறித்து வெட்கித்திருக்கிறேன் .. பாடுவதை நிறுத்து .. என் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ ! ” சலித்துக் கொண்டார் கடவுள் .
“கவலை கொள்ள வேண்டாம் கடவுளே ! மக்கள் எல்லோரும் நலமாக உள்ளனர் .. யாதொரு குறையும் இல்லை .. எல்லாம் தீர்க்கப் பட்டாகி விட்டது “
“எப்படி ?? நான் தான் தூங்கி விட்டேனே .. கனவில் கூட எதுவும் செய்ததாய் நினைவில்லையே “
“தங்களின் பெயரால் நான் தான் திருப்பணி செய்தேன் ” கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாகச் சொன்னது .
“என்னது நீ செய்தாயா ? எப்படி முடிந்தது ” கடுப்புடன் கேட்டார் கடவுள் .
“தாங்கள் செய்வதைப் பார்த்து நினைவில் நிறுத்தி , அதை மீண்டும் செய்யும் திறனைத் தாங்களே அளித்துள்ளீர்கள் கடவுளே .. நீர் வாழி ..! “
“இருக்கட்டும் .. இருக்கட்டும் .. எப்படி அத்தனை பேரின் பிரச்சனைகளையும் தீர்த்தாய் ??”
“எனக்கு உதவியாய் என்னைப் போலவே சில கணிப்பொறிகளை நானே படைத்துக் கொண்டேன் “
அவ்வளவுதான் கடவுளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது . என்ன தைரியம் ?? நம்மிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் .. இதை இப்படியே விடக் கூடாது .. கோபத்தில் கடவுள் கத்த யத்தனித்த போது ,
“வாழ்க கடவுள் ! எல்லா துயரினையும் நீக்கி இன்னலில்லா வாழ்வு தந்த அயன் வாழி !! அல்லும் பகலும் பிறருக்காகவே உழைக்கும் அரண் வாழி !! ” இன்னும் இன்ன பிற துதிகளும் பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது .
கடவுள் மீண்டும் தூங்கச் சென்றார் .
செய்வதற்கு எந்த வேலையுமே இல்லாததால் கடவுளுக்கு பொழுது போக வழி தெரியவில்லை . என்ன செய்யலாம் என்று கணிப்பொறியிடம் கேட்டார் . மக்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒருமுறை பார்த்து விட்டு வரலாமே என்றது .
கடைசியாக கலியுக ஆரம்பத்தில் பூலோகம் சென்றது . வரம் கேட்ட ஒருவன் தன் இடம் கேட்டதும் ஓடி வந்தவர் தான் . பின் அந்தப் பக்கம் தலை வைத்து கூடப் படுக்கவில்லை . இதைச் சொல்லவா முடியும் கணிப் பொறியிடம் .
“நான் சென்று விட்டால் இங்கே யார் பார்த்துக் கொள்வது ..?”
“தங்கள் வேலைகள் அனைத்தும் பார்த்துக் கொள்ள தங்கள் வேலையாள் நான் இருக்கிறேனே பிரபோ ! பின்பு என்ன தயக்கம் ..”
“இல்லை .. உங்களையும் இந்த இடத்தையும் பாதுகாப்பில்லாமல் விட்டுச் செல்வதற்குத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது ..”
“கடவுளே ! தாங்கள் விரும்பினால் ..” இழுத்தது கணிப்பொறி .
“ம்ம்ம் சொல் ” ஆணையிட்டார் .
“தங்களுக்குத் தெரியாததல்ல .. தாங்கள் ஆணையிட்டால் தங்களைத் தவிர யாரும் உட்புகமுடியாத பாதுகாப்பு அரணை நம்மிடம் சுற்றி அமைக்க சித்தமாயிருக்கிறேன் . கிட்டத் தட்ட எங்களை வீட்டில் போட்டு பத்திரமாக போட்டிவிட்டுச் செல்லப் போகிறீர்கள் .சாவி உங்களிடம் இருக்கும் . பின்பு திரும்பி வந்து திறந்து விடப்போகிறீர்கள் .. வேறு யாரும் உள்ள வர முடியாது .. எங்களையும் பாதுகாத்தது போல் ஆகிவிட்டது ..மக்களுக்கும் படி அளந்து போல ஆகும் “
கடவுள் திருப்தி அடைந்தவராய் புன்னகை செய்தார் . உடனே கணிப்பொறி தன் வேலையைத் துவங்கியிருந்தது . கடவுளின் இடம் முழுவதும் மாயையாய் ஒரு அரண் செய்தது . அதைத் திறப்பதற்கு அவருக்கு ஒரு பயனர் பெயரையும் , கடவுச் சொல்லையும் தந்தது .
கடவுள் ஒருமுறை கணிப்பொறியுடன் வெளியே சென்று கதவைப் பூட்டினார் . பின் கதவிடம் திற என்றார் . கதவு பயனர் பெயர் என்றது . கடவுள் என்றார் . பின் சங்கேத வார்த்தை என்றது . கடவுள் என்றார் . கதவு திறந்து கொண்டு வர வேண்டும் கடவுளே என்றது . கடவுளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை . இரண்டு மூன்று முறை அதே போல் விளையாடி விட்டு , பின் திருப்தியுடன் தன் படைப்புலகத்தைப் பூட்டிவிட்டு , பூமி உலா சென்றார் .
பூலோகத்தில் மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர் . கணிப்பொறி கடவுளின் இடத்தில் இருந்து எல்லார் குறைகளையும் செவ்வனே தீர்த்து வைத்துக் கொண்டிருந்தது . கடவுளால் அதை உணர முடிந்தது . தன்னை கேலி செய்த அந்த இரு பக்தர்களை தனியே சந்தித்து , தான் படைத்த கணிப்பொறி பற்றி பெருமை பேசினார் . ஆனால் அவர்கள் மிரண்டு ஓடியதைத் தான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை . எனினும் அந்த பூலோக பயணம் அவருக்கு மகிழ்ச்சியையே தந்தது . தன்னுலகம் திரும்பும் வழியில் கணிப்பொறிக்கு ஏதேனும் வரம் தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார் ,
மாயக் கதவின் முன் நின்று கொண்டு திற என்றார் .. கதவு பயனர் பெயர் என்றது . கடவுள் என்றார் . பின் சங்கேத வார்த்தை என்றது . கடவுள் என்றார் .
அது திறப்பதற்குப் பதில் , க்ரீசிட்டுக் கொண்டு சொன்னது .
பயனர் பெயரும் கடவுச் சொல்லும் பொருந்தவில்லை .ஒரே பயனர் பெயரில் இருவர் இருக்க முடியாது . கடவுள் உள்ளே இருக்கிறார் .மன்னிக்கவும் .
this one i liked a lot.. a different endeavour..
LikeLike
I dunno when god is gonna fight with me for copy rights ….;-)
LikeLike
டேய்.. இத நீ ஏற்கனவே multiply -ல போட்டிருந்தல்ல.. ‘என்னிடம் நானே சுட்டது’ அப்டினு ஒரு டிஸ்கி போடு..
கதை (பெருங்கதையோ!) அருமை.. ஒக்காந்து யோசிச்சயோ?!?
LikeLike
multiply எல்லாம் எப்படா படிச்ச ???
என்னது பெருங்கதையா ??? இதுவேவா ???
நம்ம எல்லாரும் ரூம் போட்டு தாண்டா யோசிப்போம் … ஹி ஹி 🙂
சரி நம்ம பால கேட்டுக் கொண்டதற்கிணங்க
டிஸ்கி :
இந்த கதை என்னிடம் நானே சுட்டது .
ஓகே வா ….
LikeLike