Tags
நன்றி : யூத் புல்.விகடன்.காம்
எல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .
ஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..
“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”
” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .
” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”
வழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .
ஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .
நான் ஏறும் சமயங்களில் மட்டுமே சக்கரங்களுக்கு சனி பிடிக்கும் .போதாத குறைக்கு விழுப்புரத்திற்கு முன்னே லெவல் கிராசிங் வேறு .
ஒரு வழியாக எட்டு மணிக்கு “தாம்பரமெல்லாம் எறங்கிக்கோங்க , இதுக்கப்பறம் வண்டி சிட்டிகுள்ற போகாது .நேரா கோயம்பேடு தான் ” . வாயில் ஏதேதோ வந்தது .பல் விளக்காமல் நமநம வென்றது . இதற்கு மதுரயிலிருந்து எஸ்.ஈ.டி.சி யிலேயே போயிருக்கலாம் … போச்சு . இந்த வாரம் தலைகீழாக ஆரம்பித்திருக்கிறது போல .
இறங்கினேன் . தாம்பரத்திற்கு செல்லும் பிளை ஓவர் நீண்டு வளைந்து முடிந்தால் கடந்து பார் என நீட்டி முழங்கியது . எதற்குமே திராணியில்லாமல் ‘ஷிட்’ என்றேன் .வேறென்ன செய்ய முடியும் .
“இன்னா சார் ஆட்டோ வா ” பேசாமல் ஆட்டோவிலேயே போய்விடலாம் . அது தான் சரி
“வேளச்சேரி போகணும் , எவ்ளோப்பா??”
சிதம்பரம் கூட பட்ஜெட் போட அவ்வளவு யோசித்திருக்க மாட்டார். சில வினாடிகள் சிந்தனைக்குப் பிறகு “ஒரு ஏறநூத்து அம்பது ஆகும் ” என் நெற்றியை தடவிப் பார்த்து கொண்டேன் .
“என்னது ஏறநூத்து அம்பது ஆ .. ஊர்ல இருந்து இங்க வரதுக்கே அவ்ளோ தாம்பா டிக்கெட் “
“நான் இன்னா சார் பண்றது .. டீசலு வெலை ஏறிப்போச்சு , கிலோ மூணு ரூவா இருந்த தக்காளி இப்போ பதினெட்டு சொல்றான் கயவாளி , ஊட்ல அடுப்பெரிக்கனும்ல ” காரல்மார்க்சை விட பொருளாதாரம் பேசினான்.
ஆமாமாம் . உன் வீட்டு கத்திரிக்காய்க்கும் சேர்த்து தானே நான் சம்பாதிக்கிறேன் .
எதவும் சொல்லாமல் “தரேன் ஆனா சீக்கிரம் போகணும் என்றேன் ”
“நீ குந்து சார் .. ஜெட் மாறிப் போகும் நம்ம வண்டி ” மணி பார்த்துக் கொண்டேன் .
எட்டேகால் .தலைக்கு மேல் போயாச்சு . கடவுளே ஸ்டேடஸ் காலில் எந்த கிளைன்ட்டும் என்னைக் கேட்காமல் இருந்திருக்க வேண்டும் .
வண்டி பிளை ஓவர் தாண்டும் முன்பே நின்றது .”சார் , ஒரு அம்பது இருந்தா குடுகறியா .. கஷ்டப்பட்டு ஓட்டறது நாங்க .. இவனுங்க நோகாம எங்ககிட்ட நொங்க நோண்டுரானுவ , எங்க நைனா அப்பவே ஒடம்ப தேத்தி சொன்னாரு .. ஏட்டு வேலைக்காவது போயிருப்பேன் ” முனங்கிக் கொண்டே வண்டி பின்னே இறங்கி பேச்சு வார்த்தைக்குச் சென்றான் .
ஒரு பெண் குரல் கேட்டது . பின்னே திரும்பி சிறு துவாரத்தின் வழியே பார்த்தேன் .
என் அக்காவின் வயதிருக்கும் . ” நூத்தம்பதெல்லாம் கட்டுபடி ஆகாது .. உள்ள பெரிய பார்ட்டி .. ஏறநூத்து அம்பது பேசிருக்கேன் .. ஒரு ஏறநூராவது தா “இன்னொரு சவாரியை ஏற்றுவதற்கு பேசிகொண்டிருந்தான். கடைசியில் நூற்றி எழுபத்தைந்துக்கு பேரம் முடிந்திருந்தது . எவ்வளவு தாமதமாகப் போனாலும் இனி நான் கவலைப் படுவதாக இல்லை .
ஆட்டோவின் அருகே வந்தவர் என்னைப் பார்த்ததும் , உள்ளே ஏறாமல் வெளியேயே நின்றார் . என்னைப் பார்த்ததும் எப்படித் தெரிந்ததோ . “சும்மா உட்காரும்மா .. சார் கொஞ்சம் தள்ளி உட்கார்றியா”
நான் எனது பையை எடுத்து நடுவே வைத்த பின்னே தயங்கித் தயங்கி ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டார் . நரி முகத்தில் முழித்தது போல் சந்தோசமாக சீட்டி அடித்துக் கொண்டே வண்டியை எடுத்தான் . ஒரு நிமிடம் கூட வாயை மூடவே இல்லை அவன் . சென்னையில் வரப்போகும் பிளை ஓவர்களில் இருந்து , அடுத்த முதல்வர் யார் என்பது வரை விடாமல் பேசிக் கொண்டே வந்தான் . வேறு வழியில்லாமல் உம் கொட்டிக் கொண்டிருந்தேன் .
அந்தப் பெண் வெளியே பார்த்துக் கொண்டே வந்தாள் . கண்களில் ஏதோ சொல்ல முடியாத சோகம் . எனக்கு அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது . வேண்டாம் ஆட்டோவில் இருந்து குதித்தாலும் குதித்து விடுவார் . பள்ளிக்கரணை வந்ததும் நிறுத்தச் சொன்னாள்.செல்வம் நகர் .
அட இங்கே தானே இருக்கிறது ஸ்டெல்லா வின் வீடு .. என் புளோரில் தான் வேலை செய்கிறாள் ..ஒரு நாள் இரவு கேபில் வரும்போது குறித்து வைத்திருந்தேன் . ரொம்ப முக்கியம் இப்பொழுது அதை நினைப்பது . ஹிட்லர் கொல்லப் போகிறார் .
ஏதோ தோன்ற ஆட்டோவின் பின் துவாரத்தின் வழியே திரும்பிப் பார்த்தேன் .அந்தப் பெண் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார் . எனக்கு ஏதோ செய்தது .
“இன்னா சார் இந்த பொண்ணு .. சொம்மா சீன போட்டுகினு .. அங்கங்க ஷேர் ஆட்டோல கூச்சமே இல்லாம பொண்ணுங்க சகஜமா பசங்களோட வருதுங்க .. இதுங்க எல்லாம் திருந்தவே திருந்தாதுங்க ” எனக்கு கோபம் வந்தது .
அவர் கணவர் நிச்சயம் கொடுத்து வைத்தவர் .
ஒருவழியாக விஜயநகர் டிராபிக் தாண்டி வீடு சேரும் போது மணி ஒன்பதரை .
பெயருக்கு குளித்து “தம்பி குளிச்சிட்டு தலைய நல்ல தொவட்டிக்கோ .. தல வலி வந்திடும் .. முடிய வெட்டுனா கேக்கறியா ” ” சரிம்ம்ம்மா “, ஆடைக்குள் நுழைந்து , நாளைக்கு நிச்சயம் பாலிஷ் செய்து விடவேண்டும் என எப்பொழுதும் போல உறுதி எடுத்துக்கொண்டு ஷூ மாட்டிக் கொண்டு … கதவைப் பூட்டியதும் ஐடி கார்டை மறந்தது நினைவுக்கு வந்தது .. மீண்டும் திறந்து … ஷிட் .
டான்சி நகர் பேருந்து நிறுத்தத்தில் நிற்கையில் மணி பத்து .ஒரு ஷேர் ஆட்டோவையும் காணவில்லை . போகின்ற பேருந்துகளில் டாப் மட்டுமே காலியாக இருந்தது .. பேருந்து நிறுத்தத்தில் கூலி வேலைக்கு செல்லும் சிலர் நின்றிருந்தனர் . சிறு குழந்தைகள் கூட வேலைக்குச் செல்லும் தோற்றத்தில் . எனது அதிர்ஷ்டம் ஒரு எம் செவன் காலியாக வந்தது . சொகுசுப் பேருந்து அது ..கட்டணம் அதிகம் .எனக்கு முன்னே வண்டியில் ஏற ஓடிய அந்த சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டார் அவன் அப்பா .
மிகத்தெளிவாக என் காதில் விழுந்தது அவர் கூறியது . ” சாமி, இதெல்லாம் நாம போற வண்டி கெடையாது .. அய்யா மாதிரி தொரமாருங்க போறதுக்கு ” என்னைக் காட்டிக் கூறிக் கொண்டிருந்தார் . எனக்கு சுருக்கென்றது .
“ஒரு டைடல் பார்க் “
———————————————————————————————————————
கெட்ட நேரம் என் பி.எல் பக்கத்துக் கியுப் எனக்கு .. ராகு காலம் நான் செல்லும் நேரம் அவர் கியுபிலேயே இருந்தார் . எனக்காகவே காத்திருந்தது போல “வாட் இஸ் த டைம் நவ் ? திஸ் இஸ் நாட் பேர் . ஐ டோன்ட் என்கரேஜ் இர்ரேகுலாரிட்டி”
சந்தீப் கங்குலி . என் உயிரை வாங்க வெஸ்ட் பெங்காலில் இருந்து வந்து தொலைத்திருக்கிறார் .
“சாரி சந்தீப் , ஆக்சுவலி ஐ அம் கம்மிங் ப்ரம் ..”
“ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்ப்ளைநேஷன் , கால் அன்சைட் .. பிக்சி இஸ் வெய்டிங் “
சரிய்யா . பண்ணித் தொலைக்கிறேன் .” சுயர் சந்தீப் , அகைன் ஐம் சாரி “
பிக்சி . ஐம்பத்து வயது கிழவி . அர்த்த ராத்திரியில் அவளைக் கூப்பிட்டு இளிக்க வேண்டும் .
பைவ் .. ஸீரோ .. த்ரீ .. டூ .. போர் .. டூ …….. சனியன்
“ஹாய் பிக்சி .. சீனி ஹியர் .. சாரி டு டிஸ்டர்ப் அட் திஸ் ….”
“………………………………………”
“சுயர் .. டெபைநெட்லி ” வயிறு பசித்தது .
———————————————————————————————————————
மணி மூன்றைத் தாண்டி இருந்தது கடைசியாக நான் மணி பார்த்த பொழுது .காலையில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை . என்ன பிழைப்பிது ?பையில் இருக்கும் பணத்தையா எடுத்துத் தின்ன முடியும் ..
சாட்டில் நரேன் பிரேக் போகலாமா என்று கேட்டான் .என் பக்கத்து ப்ராஜெக்ட் . ஒரே ஊர் என்ற பழக்கத்தில் ஒட்டிக்கொண்டாகிவிட்டது . எனக்கும் ஒரு சிறு இடைவெளி வேண்டியிருந்ததால் சரி என்றேன் .
ப்ளானெட் யம்மி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் உணவகங்களின் தொகுப்பு கீழே இருந்தது . புதிதாக காப்பி குடிக்கப் பழகியிருந்தேன் . அதுவும் இருபது ரூபாய் கொடுத்து . எவ்வளவு விலை சொன்னாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறது இந்தக் கூட்டம் . வேறு வழியில்லை , கிடைக்கும் சிறிய இடைவெளியில் வெளியே எங்கும் போய் சாப்பிட முடியாது .
ஷேர் ஆட்டோகாரன் ஷூவைப் பார்த்ததுமே இரண்டு மடங்காக்கிவிடுகிறான் தொகையை . வீட்டுக் காரன் சாப்ட்வேர் என்றதுமே கூசாமல் ஒரு லட்சம் அட்வான்ஸ் குடுத்திடுங்க என்கிறான் . கொடுக்கிறோமே ஏதும் சொல்லாமல் .
நரேன் ஒரு மாதிரி இருந்தான் . “எச் டூ ரேட்டிங் போட்டான் . த்ரீ தான் போட்ருக்கான் பாஸ்……ட் . இவன் எல்லாம் என்ன பி.எல் .. யாரு வேலை செய்றான்னு கூடத் தெரியாம ” மீண்டும் அதே கெட்ட வார்த்தையில் திட்டினான் .
“கிலோ மூணு ரூவா இருந்த தக்காளி இப்போ பதினெட்டு சொல்றான் கயவாளி , ஊட்ல அடுப்பெரிக்கனும்ல …”
“சரி விடுங்க நரேன் “ என்றேன் என்ன சொல்வதென்று தெரியாமல் .
“ஆன் சைட்காகத்தான் வெயிட்டிங் .. எச் ஒன் வீசா மட்டும் கெடைக்கல ஜூன் ல பேப்பர் போட்டிடுவேன் ”
” சாமி, இதெல்லாம் நாம போற வண்டி கெடையாது .. அய்யா மாதிரி தொரமாருங்க போறதுக்கு ” காப்பி கசந்தது .
இன்னும் ஏதேதோ திட்டிக் கொண்டே போனான் . அந்தப் பெண் ஏன் அழுதாள்? எனக்கு தலையை வலித்தது .
ஒரு டார்ட் போட்டுக் கொள்ளவேண்டும் .
———————————————————————————————————————
ஐந்தரை மணிக்கு சந்தீப் கிளம்பி விட்டார் .. விட்டான் .என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது … . இன்றைக்கு பௌர்ணமி . பீச்சுக்கு போனால் தேவலை .இந்த நகரத்தில் எனக்குப் பிடித்த ஒரே இடம் . கால் கழுவும் அலைகளில் , கவலைகளையும் கழுவி விடலாம் . கடற்காற்று முகத்தில் மோதுகையில் எல்லாம் மறந்து போகலாம் .நரேனிடம் சொல்ல அவனும் வருவதாகச் சொன்னான் .
பெசன்ட் நகர் பீச் . அதிக கூட்டமும் இல்லாமல் , அதீத தனிமையும் இல்லாத ஒன்று . அருகே சில குழந்தைகள் ஸ்கேட்டிங் பழகிக் கொண்டிருந்தார்கள் . பொறி பறக்க மக்காச் சோளம் கருகிக் கொண்டிருந்தது .என்ன பிஸ்ஸா , பர்கர் ? பீச்சில் கிடைக்கும் சோளக் கருதுக்கு ஈடாகுமா .. பள்ளி நாட்களில் எனக்காகவே வாரம் ஒரு முறையாவது வாங்கி வைத்திருப்பாள் அம்மா . இனி எப்பொழுது அவள் கைய்யால் ஒரு கவளச் சோறு உன்னப் போகிறேனோ .
ஐ அம் பீயிங் பெய்டு பார் ஆல் ஸ்மால் ஹாப்பிநெஸ் , டிசைர்ஸ் அண்ட் ட்ரீம்ஸ் டூ .
“அண்ணே , ஒரு சோளம் .. நரேன் உங்களுக்கு ?? அண்ணே , ரெண்டா குடுத்திடுங்க ?? ……………………. எவ்ளோ ஆச்சு ??”
” இருபது சார் … “
“என்னது இருபதா .. எங்க ஊர்ல மூணு பத்து ரூபா இது ? என்னையா நெனச்சிட்டு இருக்கீங்க ? எங்களைப் பாத்தா எப்டி தெரியுது எல்லாத்துக்கும் ?” அவ்வளவு தான் . பி .எல் மேலிருந்த கோபத்தில் வெடித்துக் கத்தத் துவங்கினான் நரேன் .
” உங்க ஊர்லையே போய் வாங்கிக்க வேண்டியது தான அப்போ .. இங்க இன்னாத்துக்கு வந்த .. சாவுகிராக்கி .. எங்கிட்ட எகிறத பாரு .. போட்டேன்னா .” பதிலுக்கு அவன் சால்னா பாஷையில் கத்தத் துவங்கினான் .
நரேனை மீட்டுக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது . அவன் இன்னும் கத்திக் கொண்டிருந்தான் .
“ஏசில உட்காந்து லட்சம் லட்சமா சம்பாதிக்கிரானுவ , ஒரு பத்து ரூவாய்க்கு … தூத்தேறி .. எச்சக்கலைங்க .. வெயில்ல நின்னு பாருய்யா எங்கள மாறி .. தெரியும் சேதி .. “
———————————————————————————————————————
அடையார் ஒடிசி புத்தக நிலையத்தில் இருந்தோம் . ஜெயாஸ் தாமஸ் கென்லியின் ஸ்கிண்ட்லர்ஸ் ஆர்க் புத்தகம் கிடைத்தால் வாங்க வேண்டும் என்றிருந்தாள் . தேடிக் கொண்டிருந்தேன் .எனக்கும் கூட சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது .
நரேன் இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தான் . அவன் சொன்ன வார்த்தைகளை என்னாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை . சுதந்திரத்தை அடகுவைத்து விட்டு நாங்கள் பார்க்கும் வேலையை விட அவன் பார்க்கும் வேலை எவ்வளவோ உயர்ந்தது
என எப்படிப் புரியவைப்பது இவர்களுக்கு .
தேடிய புத்தகம் எதுவுமே கிடைக்கவில்லை . கையில் கிடைத்த பாரதியார் கவிதைகளின் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்தேன் .
கற்பதுவே ! கேட்பதுவே கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ ?
வானகமே , இளவெயிலே , மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
வாங்கிக் கொண்டேன் .கிளம்பினோம் .
ஏறிய ஆட்டோ பாதியிலேயே நின்று விட , திருவான்மியூர் பேருந்து நிலையம் வரை நடந்து செல்ல தீர்மானித்தோம் .அந்த பயணமும் அடர்ந்த மௌனமும் தேவையை இருந்தது இருவருக்கும் .
குறுக்கு வழி எனத் தெரியாமல் , ஏதோ ஒரு சந்தில் நுழைய ஆறு மாதங்கள் கழித்து சென்னையின் இன்னொரு முகத்தைச் சந்திப்பேன் என நினைக்கவே இல்லை .எல்லா ஆண்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் , இரண்டாம் சாமங்கள் கடந்த ஆளில்லா பேருந்து நிலையங்களிலோ அல்லது இது போல மாட்டிக் கொண்ட தெருக்களிலோ வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்கும் அனுபவம் . பயத்தின் காரணமாக மட்டுமே பல ஆண்கள் உத்தமர்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள் . அந்தத் தெரு மட்டும் இருட்டில்லை என்பது கொஞ்ச தூரத்திலேயே புரிந்தது .விரும்பி ஏற்றுக் கொண்ட இருட்டு .
‘” தொர , சூப்பர் ஐட்டம் இருக்குது . ரெண்டாயிரம் தான் .. ரெண்டு பேருன்னா மூவாயிரத்துக்கு முடிச்சிடலாம் … இன்னா “
சத்தம் மட்டுமே கேட்டது . உருவம் ஒரு மாதிரி மந்தமாகத் தெரிந்தது .
“பக்கத்திலேயே தான் வீடு .. போலீசெல்லாம் வராது .. ” எனக்கு லேசாக வேர்க்கத் தொடங்கியது .
இன்னா பாஸு யோசிக்கறீங்க . பயமா இருந்தா நான் போய் அத வாங்கிட்டு வந்திடறேன் . அனுபவத்தில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்தான் .நான் வெளியேற வேறு வழி இருக்கிறதா என சுற்றிப் பார்த்தேன் .
ஒரு அடி முன்னால் வெளிச்சத்திற்கு வந்தான் .என்னை விடச் சிறுவன் அவன் . ஓங்கி அறையலாம் போலிருந்தது . நரேன் அடித்தே விட்டான் அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து .
“ஐயோ , வேண்டாம்னா பேசாம போக வேண்டியது தான . எதுக்கு சின்னப் பைய்யனப் போட்டு அடிக்கறிங்க” அந்தப் பெண் இருட்டிலிருந்து வெளியே வந்தாள் .
அந்தக் குரல் … சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன் . அதீத ஒப்பனையுடன் , மொத்த மல்லிகைப் பூவின் வாசனையுடன் , ஆட்டோவின் விளிம்பில் உட்கார்ந்து தலையைக் கூட திரும்பிப் பார்க்காமல் காலையில் என்னுடன் பயணித்த அதே பெண் .
———————————————————————————————————————
வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்.. 🙂
LikeLike
நன்றி நண்பா 🙂
LikeLike
நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் crisp ஆ எழுதலாம் என்று தோன்றியது. அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
LikeLike
கதை முயற்சியைப் பொறுத்த வரைக்கும் நான் இன்னமுமே கத்துக் குட்டி தான் .
நிச்சயம் முயற்சி செய்கிறேன் அண்ணா 🙂
LikeLike