Tags

வெகு காலத்திற்கு முன்பு

காலமும் நானும் கூட

கணக்கு வைக்க மறந்துபோன

ஏதேதோ நாட்களில் தொலைந்து போன

என்னிழல்கள்

கூடியிருந்தன ஒன்றாய் …

அத்தனை நிழல்களும் ஆடையில்லாமல்

உண்மையின் நிர்வாணத்துடன்

இன்று மட்டும் உண்மை மட்டும்

உறுதியாய் இருந்தன அத்தனையும் …

இதுகாறும்

மௌனங்கள் மட்டுமே மந்திரமாய்

முணுமுணுத்துக் கொண்டிருந்த

அவைகளின் உதடுகள்

இத்தனை நாட்களுக்கும் சேர்த்து

தொலைந்த கதை பேசத்துவங்கின ..

மௌன தவம் அடைந்திருந்தது

முக்தி நிலையை …

மூச்சுக்காற்றின் சத்தம் மட்டுமே

காற்றில் எரித்துக் கொண்டிருந்த உஷ்ணத்தை

கலைத்து வைத்து

வார்த்தை விறகுகளை வார்த்தது

முதன் முதல் யாருமில்லா நிலவொளியில்

பார்த்து நான் பயந்த

ஒரு குட்டி நிழல் …

அப்பொழுதெல்லாம்

புன்னகைக்கு மட்டுமே பிறப்பிடம்

என் உதடுகள்

கண்ணீர் என்பது

என் பசியின் மொழிபெயர்ப்பு மட்டும் …

இன்னும் என்மேல்

மழைவாசத்தைத் தோற்கடிக்கும்

பால் வாசனை …

பொம்மைகள் வைத்து

விளையாடத் தெரியும் ..

ஏதோ ஒருநாளில்

அழுதால் அம்மா ஏதும் செய்வாள்

என்ற உண்மையோடு விளையாடத் துவங்கியபோது

பல் முளைத்து காணாமல் போனேன்

பொம்மைகளோடு …

உண்மையாகவே அழுதுகொண்டு .

நடை பழகிய பொழுது

காயங்கள் சேர்த்துப் பழகிய நிழல்

முட்டியைத் தடவிக் கொண்டே

முன் வந்தது அடுத்ததாக …

எத்தனையோ முறை விழுந்தும்

வலி காணாத அதற்கு

தொலைந்து போனது

மறந்து போனதுதான்

வலிப்பதாகச் சொன்னது ..

அழுகிற கண்ணுக்கும்

ஒழுகிய மூக்கிற்குமாய் சேர்த்து

கைக்குட்டை குத்திக் கொண்ட

நீல நிற கால் சராய் அணிந்த

வெள்ளை சட்டை நிழல்

எழுந்து நின்று

அகர முதலவென்றது …

அடுத்த வரி மறந்து போக

அமைதியாய் அமர்ந்தது

தேர்வில் அதற்கு பத்திற்கு பத்து போட்ட

கௌசல்யா டீச்சரை நினைத்துக் கொண்டு …

ஏன் எதற்கென்று கேட்டுக்கொண்டே

எழுந்ததென் அறிவியற் நிழல் ..

இழப்பு மீட்டல் என்றால் என்ன

விடை காண

வெட்டப்பட்ட பல்லி வாலோடு

என்னை விட்டு

ஐன்ஸ்டீனின் அடியாளாகப்

போனதாய்ச் சொன்னது .

என் அல்ஜீப்ரா நிழல்

அந்தோ பரிதாபம்

மூன்று இலைகள் கூட அல்ல

முளைக்கவே இல்லை

பிரம்பு பார்த்து பயந்து

என் காலடிக்குள்ளேயே பதுங்கிக்கொண்டது .

சூத்திரங்கள் மனனம் செய்வது

கம்ப சூத்திரமல்ல

என் கற்பனைப் புள்ளி வைக்க

நான்காவது கோணம் தேடியே

தொலைந்து போனேன் என்றது .

என் உயர்நிலைப் பள்ளி நிழல்களில் சில

இன்னும் உருப்போட்டு வைத்த

பிதாகரஸ் தியரம்

பேசி அமர்ந்தன .

மேனிலைப்பள்ளி நிழல்களோ

பௌதிக அண்டங்களிலும்

ப்ரௌனியன் இயக்கத்திலும்

இன்னும் சுற்றிச் சுழன்று

கொண்டேயிருக்கின்றன .

காதல் வண்ணம் பூசி

முதன் முதலில் கண்ணாடி பார்த்த

கல்லூரி வாழ் கானற் நிழல்

உடைந்த கதை சொல்லி – இந்த

அழகிய சந்திப்பை

அழுகின்ற சந்திப்பாக

மாற்ற விருப்பமில்லை

கீறலில் கசிந்து அமர்ந்தது.

படித்த அத்தனையும் வீணாக

அலுவலகத்தில்

இயந்திரத்தோடு பேசிக் கிடக்கையில்

என் கனவுகளோடு தொலைந்து போனதாகச்

சொன்னது அடுத்த நிழல் .

சில கிராம் தங்கத்தோடு

ஹோமப் புகையில்

இன்னும் கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பதால்

வர இயலவில்லை என

செய்தி சொல்லி அனுப்பியிருந்தது

பெயர் மறந்து போனதொரு நிழல்

கண்டுபிடிக்க கடவுச் சொல்லாய்

மெட்டி என்ற பின்குறிப்புடன்.

சில நிழல்கள்

பேச விருப்பமின்றி

அவை நடப்பு செய்தன ..

இன்னும் சில நிழல்களின்

ரகசிய வாக்குமூலங்கள்

அவசியமாய் அவசரமாய்

அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன ..

என்னுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தால்

அவை செல்ல முடியாத

முதுகு வளைந்த

இப்போதைய என்னிழல்

பெருமூச்செறிந்து முணுமுணுத்தது

குனிந்து கொண்டே ..

ஹீம்ம்ம் ..

அது ஒரு நிழற்காலம் ..