கொஞ்ச நாட்களாய் ஏனோ
என் கன்னங்களில்
சிவப்பு பூசிக் கொண்டே தான் எழுகிறது
காலைப் பொழுதுகள் …
————————————————–
நாட்காட்டியில்
தினம் நூறுமுறை
யாரும் பார்த்திடாவண்ணம்
தேதி பார்த்திடும் போது
அச்சமும் கூச்சமும் பின்னிக் கொள்கின்றன
ஒரே அலைவரிசையில் என்னை …
————————————————–
நம் திருமண இரவன்று
உனக்குப் பரிசாகத் தருவதற்காக
வைத்திருக்கிறேன்
ஒரு கோடி ஆசைகள் ….
————————————————–
என் ஒவ்வொரு நொடிகளும்
உதடுகள் துடிப்பது
அதை உச்சரிக்கும் வேளை
எண்ணித்தான் ….
————————————————–
கேட்கிறாயா இப்பொழுதே …
————————————————–
நம் படுக்கை முழுவதும்
பொம்மைகள் வைத்து
விளையாடிட வேண்டும்
சில சமயம் நீ விளையாடிட
பொம்மையாகிட வேண்டும்
நானே ….
————————————————–
கிளி ஒன்று வளர்த்து
“சீய் போடா ” என மரியாதை இல்லாமல்
அழைக்கச் சொல்லித்தர வேண்டும்
நீ வேலைக்குச் சென்று விட்ட
வெறும் பகல் நேரத்தில் …
————————————————–
திடீர் அணைப்புகள்
தினம் தேவை
திருட்டு முத்தங்கள்
தினம் ஒரு முறையாவது …
————————————————–
வெட்கப்படுவது எப்படி என்று
கற்றுத்தந்திட வேண்டும்
நீ எனக்கு …
கவலைப்படாதே
நிச்சயம் உண்டு குருதட்சணை…
————————————————–
மின்சாரம் நமக்கெதற்கு
தொலைத்துவிட்டு
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
உன் முகம் பார்த்திட வேண்டும்
விடியும் வரை …
————————————————–
உன் ஆடை புகுந்து கொண்டு
பெரிதாகச் சட்டை தைத்த
தையல்காரனைத் திட்டவேண்டும் …
————————————————–
தினம் குளிக்கச் செல்லும் போது
மறந்து போகவேண்டும்
தூவாலை எடுத்துச் செல்ல நீ …
உன் தலை துவட்டவே
துவைத்து வைத்திருக்கிறேன்
என் சேலைகளை …
————————————————–
நீ கண்டுபிடித்துக் கட்டியணைக்கவே
கதவின் பின் ஒளிந்து
விளையாடியதில்லை
சிறு வயதில் …
————————————————–
என் சமையலை
ரசித்துன்னும் வேளையில்
மிளகாய் கடிக்க நேர்ந்தால்
தண்ணீர் வேண்டாம்
என்னிடம் முத்தங்கள் உண்டு …
————————————————–
நாமிடும் சண்டையில்
நானழ நேர்ந்தால்
கவலை கொள்ள வேண்டாம்
அது உன் ஆறுதலுக்கான
அழைப்பு தான் …
————————————————–
கடலலை பார்த்துக் கொண்டே
உன் கரங்களை
இறுகப் பற்றிக் கொண்டு
தோள் சாய்ந்து அழுக்காக்கிட வேண்டும்
உன் சட்டையை ….
————————————————–
நான் கவனித்துக் கொள்ளவே
உடல் நிலை சரியில்லாமல்
நடிக்க வேண்டும் …
————————————————–
அடிக்கடி தொலைபேசியில்
குரல்மற்றிப் பேசி என்னை
ஏமாற்றிட வேண்டும் …
————————————————–
உன் காதோரம் நான் கூறிடும்
ரகசியக் கோரிக்கைகளை
கேள்வியில்லாமல் நிறைவேற்றிடவேண்டும் …
————————————————–
தினமும் தாமதமாக
வந்ததற்கு
நீ கூறிடும் பொய்களை
கோபத்தோடு ரசிக்க வேண்டும் …
————————————————–
இரவினில் நீ பேசிய
வார்த்தைகள் கொண்டு
பகலினில் நூறு கவிதைகள்
எழுதிட வேண்டும்
நான் …
————————————————–
மழைகாலத்தில்
குடைதந்தனுப்பினால்
கோபம் கொள்ள வேண்டாம்
நீ வீடு திரும்பியதும்
சேர்ந்தே செல்வோம்
மழை வாங்கி வருவதற்கு …
————————————————–
என் சமையல் வேலைகளுக்கிடையே
நீ தொல்லைகள் செய்யும் போது
கோபம் கொண்டு ‘போ ‘ என்றால்
போய்விடாதே உடனே …
காய்கறிகள் பற்றிக் கவலை கிடையாது எனக்கு …
————————————————–
மீண்டுமொருமுறை
உன்னைக் குழந்தையாக்கி
வளர்த்திட வேண்டும் …
————————————————–
தெரிந்து கொஞ்சம்
தெரியாமல் கொஞ்சம்
திருடிக்கொள் முழுவதும்
உன்வசம் என்னை
————————————————–
குளிர்காலத்தில்
நீ எனக்குள்
நெருப்பாகிட வேண்டும்
வெயில் காலத்தில்
நான் உந்தன் மழையாகிட வேண்டும் …
————————————————–
அடம் பிடித்து மண்ணில்
புரள்வாயா கொஞ்சம்
என் மடியில் போட்டு
உன்னைக் கொஞ்சக் கொஞ்சம் …
————————————————–
என்றும் உன் மார்பில்
முகம் புதைத்துக் கொண்டு
பார்த்திட வேண்டும்
ஆயிரம் பௌர்ணமி இரவுகள் …
————————————————–
மீதமுள்ள என்னாசைகள்
உனக்கானவைகள்
அப்படியே தந்து விடு என்னிடம்
அதற்காகவே காத்திருக்கிறேன்
காலங்களோடு …
————————————————–
ஆள விடுங்க. அம்புட்டுக் காதலா! ஒரு பொதுக்கூட்டமே இருக்கு இந்தக் கவிதைகளுக்கு. ஸ்ரீமதி, சரவணகுமார், காந்தி, இனியவள் புனித, நாணல் என்று பெரிய்ய்ய்ய்ய பட்டியல்.
அனுஜன்யா
LikeLike
காதல் கவிதைகள் எப்பொழுதுமே என் சாய்ஸ் அல்ல . எப்பொழுதாவது சில அடையாளங்களையோ , நினைவுகளையோ சந்திக்க நேர்கையில் தானாக வந்து விடுவது ..
நீங்கள் சொன்ன பட்டியலை நிச்சயம் படித்துப் பார்க்கப் போகிறேன் . நானும் அவங்களோட சேர்ந்துட்டேன் ..:-)
LikeLike
மிகவும் அருமை.உங்கள் கவிதையில் இருந்து சில ஆசைகளை திருடியிருகிறேன் மன்னிக்கவும் 🙂
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக் 🙂 . எனது ஆசைகளே சில கனவுகளில் இருந்து திருடப்பட்டவைகள் தான் .
LikeLike
//மழைகாலத்தில்
குடைதந்தனுப்பினால்
கோபம் கொள்ள வேண்டாம்
நீ வீடு திரும்பியதும்
சேர்ந்தே செல்வோம்
மழை வாங்கி வருவதற்கு …//
இந்த வரிகளுக்காக சத்தமா ஒரு விசில் அடிக்கலாம் 🙂 சூப்பர் 🙂
LikeLike
விசில் அடிக்கற ஆளா நீ !!! 🙂
LikeLike
//விசில் அடிக்கற ஆளா நீ !!! //
இப்படியெல்லாம் insult பண்ணினா ,ஆயிரம் பௌர்ணமி இரவுகள் …உனக்கு எப்பவும் கனவுல தான்னு சாபம் விட்டுருவேன்… :-Z
LikeLike
சாபமா ???
கவிதைகளை இன்னும் கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால் அது ஒரு பெண்ணுடைய கனவுகள் என்பது தெரியும் . சபித்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை . பாவம் நான் கனவுகள் திருடிய அந்தப் பெண் தான் .
ஆனாலும் இவ்ளோ கொலைவெறி கூடாது. 😉
LikeLike