Tags

 

 

கடந்து மறைகின்ற திருப்பங்களில் எல்லாம்

பிம்பங்களை உதிர்த்த வண்ணம்

என் விரல் பிடித்து வந்துகொண்டிருக்கின்றன

கனவுகள் 

 

 

கையிலிருக்கும் பொம்மைகளை எல்லாம்

தூக்கி  எறிந்து விட்டு

கடைவாயில் எச்சிலொழுக சிரிக்கும்

குழந்தை போல

ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கும்

பிம்பங்களை எல்லாம்

உதறி எறிந்து விட்டு சிரிக்கின்றன கனவுகள்

 

  

பின்

இறந்து போன இறகுகளை

உதிர்த்து விட்டு

சிலிர்த்துக் கொள்ளும்

சாம்பற் பறவைகளைப் போல்

செய்துபார்கின்றன

கண்ணாடி முன் நின்று

 

 

பிம்பங்கள் உதிர உதிர

பக்குவமடைகின்றன கனவுகள்

அல்லது

பக்குவமடைய உதிர்த்துவிடுகின்றன  

பிம்பங்களை .

 

 

கடைசி சந்திப்பில்

நீ பூசியிருந்த வண்ணங்கள்

நிழலின் நிறத்தில்

 

நிலையத்தின் தொலைதூர வளைவில்

புள்ளியாகத் தொலைந்து கொண்டிருக்கும்

புகை வண்டியின்

தலைமேல் பரவிக் கொண்டிருக்கும்

புகைக்குள் உன்னுருவம் 

 

சொற்கள் சிதறிப் போய்

மௌனமாய்

காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றது

உன் குரல்

  

 

அடிக்கொருமுறை

புகைப்படங்க ளெடுத்துப் பார்த்து

நினைவில் நிறுத்திக் கொள்கிறேன்

இப்படித்தான் நீ இருந்தாயென

 

எல்லாப் புகைப்படங்களும் சுழற்சியில்

தொலைந்துபோய்

உன்னை நினைவுறுத்த

எதுவுமே என்னிடம் இல்லாது போகும்

ஒருபொழுதில் உன்னை மறந்திருப்பேன்