Tags

, , ,

 

 

நரகாசுரன் வேறு வேலையில்லாமல்

செத்துத் தொலைத்து விட்டான்

எத்தனை வெத்து வேலைகள்

நமக்கிங்கே …

 

தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக

ஒரு வாரமாய்

வீடு வராமல் உழைத்துக் கொண்டிருக்கும்

அலுவலகக் கணவன்கள் …

 

ஊரே உறங்கிய பின்

ஒவ்வொருவராய் கம்பளி போர்த்திக் கொண்டு

தான் போட்ட கோலத்தை

தெருவோடு ஒப்பிட்டுப் பார்த்து

பெருமூச்செறியும்

வீட்டு மனைவிகள் …

 

நாளை வெடிக்கப்போகும்

பட்டாசையும்

உடுத்தப்போகும் புத்தாடையையும்

பார்த்துக்கொண்டே விடியக் காத்திருக்கும்

அவர்களின் பிள்ளைகள் …

 

விடிந்ததும் முதல்வெடி

போடப்போவது நான் தான்

தலையணை அடியில்

அனிச்சையாய் தொட்டுப்பார்க்கின்றனர்

சில நமத்துப்போன

குச்சிகளை கர்ப்பம் தரித்த

தீப்பெட்டியை …

 

“காசிக்கு சென்று

தொலைய வேண்டிய வயதில்

கங்கா ஸ்நானம் எதற்கு ??”

 

காலியான குவளையோடு

கையளவு எண்ணெய்காக

மருமகளிடம் திட்டு வங்கிக் கொண்டிருக்கும்

நேற்றைய புது கணவன் ..

 

“கம்பி மத்தாப்பு வாங்கித் தருவியா ?”

கெஞ்சிக் கொண்டே

இன்னொருமுறை

‘ரைம்ஸ்’ சொல்லத் தயாராகும்

தமிழ்க் குழந்தை …

 

பட்டாசு பங்கு பிரிப்பில்

தம்பிக்குத் தெரியாமல்

இரண்டு சரவெடிகள்

திருடிய தித்திப்பில்

நண்பர்களிடம் பீற்றிக் கொண்டிருக்கும்

அண்ணன் …

 

காது கேட்காவிட்டாலும்

திரிகிள்ளும் போதே

காது பொத்திக் கொண்டு

சில வட்டார வார்த்தைகளால்

சிறு பையாங்களைத் திட்டி தீர்க்கும்

திண்ணைவாசப் பாட்டிகள்…

 

சத்தம் கேட்டதும்

சந்தேகமாய் ‘சைக்கிள் டியூப்’

குனிந்து பார்க்கும்

மிதிவண்டிக்காரர்கள் ..

 

வாலைக் காப்பாற்றிக் கொள்ள

கால் தரையில் படாமல்

தலை தெறிக்க

மாநகராட்சி வண்டி தேடி ஓடும்

தெருவோர நாய்கள் …

 

எதிர் வீட்டுப் பெண்ணை

எட்டிப் பார்க்கச் செய்ய

கையில் பட்டாசு வைத்து

பற்றவைக்கும் முன்னே

வெடித்து விடுமோ என் பயந்து

தூக்கி எரியும் விடலைகள் …

 

அடக்கி வைத்தது

பொறி பட்டதும்

பொங்கி வெடிக்கும்

வாழ்வியல் தத்துவங்களைச்

சொல்லிக் கொண்டே

வரிசையை கருகிச் சாகின்றன

காகிதமாய் சரிகின்றன

பட்டாசுகள்…

 

“ஹை ! தோசையா இன்னிக்கு “

இரவெல்லாம் பட்டாசுத் தொழிற்சாலையில்

வேலை பார்த்துவிட்டு

ஊரெல்லாம் வெடித்து மகிழ

உற்பத்தி செய்து விட்டு

வெறும் வெறுமையை மட்டும்

வீடு வாங்கி வரும்

சிவகாசிக் குழந்தைகள் …

 

சரியாகச் சொல்லுங்கள் …!

 

இவர்களில் யாருக்கெல்லாம்

தீபாவளி பிடிக்கதென்று ???!!!