Tags
அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …
அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .
நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .
நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .
நான் தான் அபூர்வா இப்பொழுது .
இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம் உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை
நிறுத்த வேண்டும் .
“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்
அவளையும் கேட்பது .
நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .
“குற்றத்தை ஒப்புக் கொண்டால் உங்களுக்கு தூக்கு கூட கிடைக்கலாம் “
“நியாமில்லை “
“ஒரு பெண்ணை கொன்ற குற்றத்திற்கு பெண்ணாகவே இருந்தாலும் இதே தண்டனை தான் “
“எந்த பெண்ணைக் கொன்றேன் ” அடிப்பாவி . என்ன விளையாட்டு இது . நீதிபதியிடமும் போலீசிடமும் நூறு முறை கூறியிருக்கிறேன் சாதனாவைப் பற்றி .. அவரும் பெண் என்கிறார் .. இவளும் எந்தப் பெண் என்கிறாள் .
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆனந்த் ” பைத்தியக்காரன் என்னையே கேட்கிறான் .
ஒரு நிமிடம் இந்தப் பக்கம் வந்து விடுகிறேன் . இப்பொழுது நான் ஆனந்த்
“எத்தனை தடவை தான் சொல்வது ? “
“நீதிபதி கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும் .. அதிகம் உணர்ச்சிவசப் படுவது நல்லதல்ல ” அரசு தரப்பு நீதிபதி . கோர்ட் முடிந்ததும் இவனை தனியே கூட்டிப் போய் அடித்திருக்க வேண்டும் . என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் எப்பொழுதும் . எனக்கு ஏற்பாடு செய்திருந்தவன் தூங்கிக் கொண்டிருந்தான் வழக்கு முழுவதும் .
“சாதனா .. என்னைப் பார்த்துக் கொள்ள வந்திருந்த நர்ஸ் .. இவள் .. இதோ இவள் தான் கொன்று விட்டாள் .. இவளும் அந்த டாக்டரும் .. நிலவறையில் வைத்து “
ச்சே .. ஏன் தான் எனக்கு கோர்வையாகவே பேச வருவதில்லையோ . தன்னம்பிக்கை இல்லாதவன் .
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் .. கொன்றது யார் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் … சரி இப்பொழுது சாதனாவின் உடல் எங்கே .. நீங்கள் சொன்ன நிலவறையில் எதுவுமில்லை … சிலந்தி வலைகளைத் தவிர “ அழைக்கப் பட்ட அந்த உதவாக்கரை போலீசும் அதையே சொல்லிப் போனான் . ஒழுங்காகத் தேடினால் தானே .. கொன்றவர்கள் பிணத்தை அங்கேயேவா வைத்திருப்பார்கள் .
“திரு ஆனந்த் .. சாதனா உங்களைப் பார்த்துக்கொள்ள வந்ததாகத் தானே சொன்னீர்கள் “
ஆமாய்யா … “ஆம் “
“எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா ..??”
“எனக்கு உடம்பு சரி இல்லாமல் இருந்தது “
“என்ன உங்கள் உடம்பிற்கு “
இப்படித்தான் .. இப்படித்தான் வழக்கு முழுவதும் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான் அந்த வக்கீல் . நீங்களே சொல்லுங்கள் அவனை அடிக்கலாமா வேண்டாமா …
“அதை நீங்கள் டாக்டரிடம் தான் கேட்க வேண்டும் “
“மிக்க நல்லது .. நீதிபதி அவர்களே மருத்துவர் ராஜீவ் அவர்களை விசாரிக்க அனுமதி கோருகிறேன் “
ஆனந்த் .. அபூர்வா .நீதிபதி , வக்கீல் , தவாலி ….இப்பொழுது ராஜீவும் நான் தான் .. கொஞ்சம் தள்ளி நின்று கொள்கிறேன் . இந்த மாடியில் இடமே போதவில்லை நடித்துக் காட்ட .. முடியை முன்னால் இழுத்து விட்டுக்
கொள்ள வேண்டும் . அவனைப் போல் வாத்து மாதிரி நடக்க எல்லாம் எனக்கு வராது . வெள்ளைக் கோட்டு வேண்டுமே .. ஆ .. இந்த துண்டு போதும் . ஸ்டெத் .. அவனே கொண்டு வரவில்லை .. இன்னும் ஏதோ குறைகிறதே .. ஆங் .. குறுந்தாடி வைத்திருந்தான் … ஒரு நிமிடம் சவரம் செய்து விட்டு வந்து விடுகிறேன் …
வந்தாயிற்று .
“தங்கள் பெயர் ..”
“ராஜீவ் “
“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் “
“மருத்துவர் “
“குற்றம் சாட்டப் பட்ட அபூர்வாவையும் .. குற்றம் சாட்டிய ஆனந்தையும் தங்களுக்குத் தெரியுமா ??”
“தெரியும் “
“எத்தனை நாட்களாக .. ?எப்படி என்று சொல்ல முடியுமா? “
“அபூர்வாவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் .. பக்கத்துப் பக்கத்து வீடு .. நான் கல்லூரியில் படிக்கச் சென்று விட்ட பிறகு , பெற்றோர்களோடு அவள் வேறு இடத்திற்கு சென்று விட்டதாகச் சொன்னார்கள் . பிறகு அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை .. படிப்பை முடித்து விட்டு கடந்த மாதம் தான் குன்னூரில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு மருத்துவராகப் பொறுப்பேற்று வந்தேன் .ஒரு நாள் தன் கணவருக்கு உடல் நிலை சரியில்லை என ஒரு பெண்ணிடம் இருந்த அழைப்பு வந்தது .. அப்படித் தான் நான் அபூர்வாவை மீண்டும்
சந்த்திதேன் ”
எத்தனை அழகான பொய்கள் . நீதிபதி மட்டும் அந்த வீடியோவைப் பார்த்தால்
சுத்தியலலேயே இவன் தலையில் தட்டுவார் .
“ஆனந்த் உடல் நலத்திற்கு என்ன என்று சொல்ல முடியுமா ??” இனிமேல் தான் முக்கிய கட்டமே இருக்கிறது .எத்தனை பொய்கள் . இருவரும் மாறி மாறி ..
“உடல் அளவில் எதுவும் இல்லை .. மருத்துவ ரீதியாகச் சொல்லப் போனால் அவர் ஒரு மன நோயாளி ” . நினைத்துப் பாருங்கள் . எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் எனக்கு . அதுவும் எனக்கு சிறுவயதில் இருந்தே மன நோயாம் .
“கொஞ்சம் புரியும் படி சொல்ல முடியுமா ” எத்தனை முறை சொன்னாலும் புரியாது
இவர்களுக்கு .. இங்கே வழக்கு நடப்பது என்னைப் பற்றி அல்ல . இறந்து போன சாதனாவைப் பற்றியது .
“நான் அன்று வீட்டிற்கு சென்ற போது ,அபூர்வா கைவளையல்கள் உடைந்து தரையெல்லாம் ரத்தம் சிதறி அதைப் பார்த்து மயங்கி விழுந்ததாகச் சொன்னார் .. ஆனால் உண்மையில் நடந்தது வேறு . வளையல் உடைந்தது வரை தான் உண்மை .. மேடையில் இருந்த பால் கை பட்டு கீழே விழுந்து அது தான் தரையெல்லாம் சிதறியிருக்கிறது .. இது பின்னால் அபூர்வாவே என்னிடம் சொன்னது .. அதிலிருந்தே எனக்கு ஆனந்தின் மன நிலையின் மேல் சந்தேகம்
இருந்தது .. அபூவாவின் அனுமதியுடன் ஆனந்தின் மனநிலையை ஆராயத் தொடங்கினேன் ”
பாலாம் பால் . வெள்ளை ரத்தம் . எப்படி கதை சொல்கிறான் . என் முறை வரட்டும் .
“இரண்டு நாட்களிலேயே புரிந்து போனது … ஆனந்திற்கு இருப்பது ஒரு விதமான அதீத கற்பனை செய்து கொள்ளும் வியாதி .. அதாவது நடக்காததெல்லாம் நடந்தது போல் இவர் கண்முன்னே விரியும் .. இவர் படித்தது , பார்த்த திரைப்படங்கள் எல்லாமே நேரில் நடப்பது போல் தோன்றும் . அதீத தனிமை முக்கிய காரணம் ..அது தரும் சுதந்திரத்தில் என்னென்னமோ செய்து பார்க்கத் தோன்றும் ” தோன்றும் தோன்றும் . இதற்கு அந்த வக்கீல் என்ன சொன்னான் தெரியுமா … “மிகவும் சுவாரசியத்திற்குரியது “ த்தூ …
“அபூர்வா நீங்கள் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா .. மௌனமாக இருப்பது உங்களை மட்டும் அல்ல உங்கள் கணவரையும் பாதிக்கலாம் “
இனி அபூர்வாவின் பொய்கள் . சேலை கட்டிக் கொண்டு நடித்தால் இன்னும் நளினமாக இருக்கும் . பரவாயில்லை . மீண்டும் துண்டு தான் .
“திருமணமாகி ஒரு மாதம் வரை எந்த வித்யாசமும் தெரியவில்லை . என் மேல் மிகவும் அன்பாக இருந்தார் .. அது தான் பிரச்சனையே ” ஏன் சொல்லமாட்டாய் . உன் மேல் உயிரையே வைத்தது தான் உன் பிரச்சனையா ?
“என்னைத் தனியாக விடுவதே இல்லை . தூங்கும் போது கூட என்னைப் பார்த்துக்
கொண்டேயிருப்பது . என் கையோடு அவர் கையையும் சேர்த்துக் கட்டிக் கொள்வது . குளியலரைக்கும் பின்னாலேயே வருவது இது போல பல விஷயங்கள் .. நானும் என் மேலுள்ள அன்பு என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .. ஆனால் ” வெட்கம் கெட்டவள் . எல்லார் முன்னாலும் அந்தரங்கங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாள் . ஆனாலாம் .. அதன்
பிறகு என்ன சொன்னாள் தெரியுமா ??
“எனக்கும் ராஜீவிற்கும் தொடர்பு என்று சந்தேகப்பட்ட பொழுது தான் அவர் நடவடிக்கைகளில் இருந்த மாற்றம் புரிந்தது .”
சந்தேகமா .. உண்மைதானே அது . அதான் எல்லாவற்றையும் பார்த்தேனே .
“கிட்டத் தட்ட என்னைப் பூட்டி வைத்திருந்தார் .. ஒரு நிமிடம் கூட என்னைத் தனியாக விடவில்லை .. ஒருவேளை ராஜீவ் கூறியது போல் மன நோயாக இருக்குமோ என பயந்து தான் அவரை சோதனை செய்ய ஒத்துக் கொண்டேன் . ஆனால் அதன் பின்பு தான் விளைவுகள் இன்னும் மோசமாகிவிட்டன .” கேடு கேட்டவள் அழுகிறாள் . அழுகின்ற பெண்ணை எல்லா ஆண்களும் நம்புகிறார்கள் . பெண்களும் அழுதுகொண்டே இருக்கிறார்கள் .
“குளியலறையில் தாழ்பாளைக் கழற்றி வைத்துவிட்டார் . ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும் போது கத்தியோடு பின்னால் வந்து நிற்கிறார் . நான் திரும்பியதும் அதை நீட்டி பழம் சாப்பிட வேண்டும் . இப்பொழுதே கழுவித்தா என்றார் . கழுவிக் கொண்டிருக்கும் போதே தண்ணீர் வேண்டும் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார் . வீடு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க
முடியவில்லை . எந்த தொலைபேசியும் வேலை செய்யவில்லை . எல்லா கதவுகளும்
ஜன்னல்களும் கூட அடைத்து விக்கப்பட்டிருந்தன . நான் மிகவும் பயந்து போய் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தேன் . நிலவறை மட்டும் உள்ளிருந்து பூட்டப் பட்டிருந்தது . கொஞ்ச நேரம் தட்டிப் பார்த்தேன் . உள்ளே தான் இருந்திருக்கிறார் . கதவைத் திறந்தவர் என்னைப் பார்த்து பயங்கரமாகக் கூச்சலிட்டவர் சாதானா .. சாதனா .. கொலை கொலை என்று சொல்லி விட்டு மயங்கிவிட்டார் . மீண்டும் இரண்டு நாட்கள் சிகிச்சையிலிருந்த
போது தப்பி ஓடிவந்து விட்டார் .அதன் பின் ”
இந்த கதை இன்னும் நன்றாக இருக்கிறதல்லவா ..
நான் சிரித்தே விட்டேன் . ஆனால் நீதிபதியிலிருந்து எல்லாரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் . நீதிமன்றம் .. முட்டாள்களின் கூடம் .
என்பக்கம் திரும்பினார் . இதற்காகத் தானே காத்திருந்தேன் .
“இப்பொழுது நான் பேசலாமா .. “
“தாராளமாக “
இப்பொழுது நான் ஆனந்த் . உங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லையே . இதுவரை புரியும்படி தானே நடித்துக் கொண்டிருக்கிறேன் ?
“எனக்கு இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் … “
“தாராளமாக …”
“கேள்வி ஒன்று .. ராஜீவ் அபூர்வாவிற்கு எழுதிய கவிதைகள் அடங்கிய நாட்குறிப்பை சமர்பித்துள்ளேன் . அதற்கு என்ன கதை சொல்லப்போகிறாள் .. இரண்டு .. இப்பொழுது சாதனா எங்கே ?”
“நீங்கள் தந்த குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் ஆனந்த் என்ற உங்கள் பெயர் அடிக்கப் பட்டு ராஜீவ் என்று எழுதப்பட்டிருக்கிறது ..” அடப்பாவிகளா . புதிதாக என் பெயரைச் சேர்த்து அடித்தும் வைத்திருக்கிறார்கள் .
“அதை அவர்களே செய்திருக்கலாம் அல்லவா ..”
“இருக்கலாம் .. அந்தக் குறிப்பேடு இப்பொழுது கையெழுத்து பரிசோதனைக்காக
அனுப்பப்பட்டிருக்கிறது .. நாளை தெரிந்து விடும் யார் கிறுக்கியது அது என்று ” நாளை தெரியும் போது முதல் அறை அவனுக்குத் தான் .
“சாதனாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் ??”
“நான் சொல்கிறேன் ” இப்பொழுது அந்த குறுந்தாடி வாத்து மடையன் . மாற்றி மாற்றி நடித்து நான் களைத்து விட்டேன் . பரவா இல்லை . இன்னும் கொஞ்ச நேரம் தானே .
“சாதனாவின் உடல் கிடைக்கப் போவதேயில்லை .. ஏனெனில் சாதனா என்று ஒரு பெண் உண்மையில் இல்லவே இல்லை . சாதனா என்பது ஆனந்தின் முழு கற்பனை . அவர் மனதில் இருந்த ஒரு கனவுப் பெண்ணுக்கு அவர் இட்ட பெயர் தான் சாதனா “
கேட்டீர்களா ? சாதனா என்று ஒரு பெண்ணே இல்லையாம் .. இப்பொழுது இல்லை தானே … மேலும் கேளுங்கள் .
“சாதனாவைப் பற்றிச் சொல்வதற்கு முன் ஆனந்திற்கு நான் செய்த பரிசோதனையைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன் “
“அனுமதி அளிக்கப்படுகிறது “
“நன்றி மதிப்பிற்குரியவரே … ஆனந்தை தனியறையில் வைத்துக் கதவைப் பூட்டி அவர் செய்வதை காமிரா வைத்து கண்காணித்து வந்தோம் . தூக்கம் தெளிந்து எழுந்தவர் அபூர்வா காப்பி என்றார் . இரண்டொரு முறை கூப்பிட்டுப் பார்த்து விட்டு கதவைத் தட்டினார் . கதவு பூட்டி இருப்பதைப் பார்த்து கத்துவார் என்று எதிர் பார்த்தோம் . நாங்களே கதவைத் திறக்கலாம் என முடிவு
செய்து எத்தனித்த பொழுது , ஆனந்த் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பேசத் துவங்கினார் . அவர்கள் யாரும் இல்லை .. சாதனா நீ வா என்றார் . பின் அவரே ஒரு புடவையை கட்டிக் கொண்டு , நான் அபூர்வா உங்களைப் பார்த்துக் கொள்ள
வந்திருக்கிற நர்ஸ் என்றார் .. இப்படியே ஏதேதோ பேசிக் கொண்டு இறுதியில் நாளை அபூர்வாவைக் கொல்லப் போகிறேன்
என்று சொல்லி விட்டு மயங்கிவிட்டார் … ” காமிரா வைத்து படம் பிடித்தார்களாம் . எங்கே காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் ..
“துரதிஷ்டவசமாக அந்த ஒளிநாடாவை ஆனந்த் எரித்துவிட்டார் ” ஆ .. அதானே . நானே எரித்தும் விட்டேனாம் . இவர்கள் பார்த்துக் கொண்டே பூப்பறித்துக் கொண்டிருந்தார்களாம் .
“ஆனால் ஆனந்தை ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தி மனோவசியப் படித்தியிருந்த பொழுது பதிவு செய்யப் பட்ட ஒலிநாடா இருக்கிறது . நீதிபதி அதைக் கேட்க வேண்டும் .” இது புதிதாக ஒளியும் ஒலியும் .. ஆனால் ஒருகணம் நானே அசந்து போய்விட்டேன் அதைக் கேட்ட பொழுது .. அப்படியே நான் பேசியது போலிருந்தது . நீங்களும் கேட்கிறீர்களா . இருங்கள் நான் ரீவைண்டு செய்து
கொள்கிறேன் .
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி …..
“ஆனந்த் ”
“ஹ்ம்ம் “
“நான் சொல்வது கேட்கிறதா “
“ஹ்ம்ம் “
“நான் கேட்பதற்கு பொய் சொல்லாமல் உள்மனத்தின் உண்மை சொல்வீர்களா “
“ஹ்ம்ம் “
“சாதனா யார் ?”
“என் தேவதை .. நான் காதலிக்கும் பெண் “
“எப்பொழுதிலிருந்து காதலிக்கிறீர்கள் ??”
“நான் காதலிக்கத் துவங்கியதிலிருந்தே “
“அவரைக் காட்ட முடியுமா …”
“நிச்சயமாக “
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. கொஞ்ச நேரம் காற்றின் சப்தம் மட்டும் தான் கேட்டது . அழிந்துவிட்டது என்று நினைத்தேன் . ஆனால் அதற்கும் ஒரு கதை சொன்னான் ராஜீவ் . நான் புடவைக் கட்டிக் கொண்டு நான் தான் சாதனா என்று சொல்லிக்
கொண்டிருந்தேனாம் அந்த நேரத்தில் .
அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை . தனி அறையில் நானே பேசி நடித்து .. இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்கள் . கதை சொல்லிக் ண்டிருக்கிறேன் .நடித்துக் காட்டுகிறேன் . தனி அறையில் தனியாக பேச நான் என்ன மன நிலை சரி
இல்லாதவனா ? ..
“ஆனந்தை முழுவதுமாக மன நலம் இல்லாதவன் என்று சொல்வதற்கில்லை .. சில சமயங்களில் மட்டும் .. குறிப்பாக அவர் தனியாக இருக்கிறேன் என்று உணரும் போது … ஆனந்தின் குடும்ப பின்னணி குறித்து விசாரித்த பொழுது தெரிந்து கொண்டவைகள் இவைகள் . அம்மா இறந்த பிறகு முழுமையாக தனித்து விடப்பட்ட நிலையில் தான் தன்னைச் சுற்றிலும் இது போன்ற கதாப்பாத்திரங்களை சிருஷ்டித்து அதனுடனேயே பழகி வந்துள்ளார் .. அந்த கதாப் பாத்திரங்களை தான் படித்த புத்தகங்கள் , பார்த்த திரைப்படங்களில் இருந்து கற்பனை செய்துள்ளார் . பருவ வயதில் எல்லா ஆண்களுக்குமே தன் கனவு தேவதைகள் பற்றிய கனவு உருவம் இருக்கும் . இவர் அந்த உருவத்திற்கு சாதனா என்று ஒரு பெயரும் கொடுத்துள்ளார் .. அவ்வளவே ”
இந்த இடத்தில் நீதிபதி கண்ணிமைக்கவே இல்லை என்பது எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது .இவன் மருத்துவ படிப்பை திரைப்படக் கல்லூரியிலா படித்தான் .
சரி குறிப்பேட்டில் இருந்த கவிதை விசயத்திற்கு வருவோம் .
“பரிசோதனையின் இறுதியில் தன் காதலிக்கு , அதாவது சாதனாவிற்கு ஆனந்த் எழுதிய கவிதைகளே அவர் சமர்பித்தது .. பின்னொரு நாள் அதில் அவர் பெயரை அடித்து விட்டு என் பெயரை எழுதி அபூர்வாவுடன் சண்டையிட காரணாமாய் பயன்படுத்திக் கொண்டார் “
நான் என் அபூர்வாவுடன் சண்டையிடப் போகிறேன் . அவளை நான் எவ்வளவு காதலித்தேன் என்று உங்களுக்குத் தெரியாதா .
“காரணம் .. இது என் பரிசோதனைகளின் அனுமானம் தான் . தன் கனவு தேவதை போலவே இருந்த அபூர்வாவை ஆனந்திற்கு மிகவும் பிடித்து போய்விட்டது . காதலித்து திருமணமும் செய்து கொண்டு ஒரு மாதம் மகிழ்ச்சியாகவே இருந்து வந்திருக்கின்றனர் .அது ஆனந்த் வெகு நாளாகவே காதலித்து வந்திருந்த அவருடைய கற்பனைக் காதலி சாதனாவிற்கு பிடிக்காமல் போகவே
அபூர்வாவைக் கொல்லுமாறு ஆனந்தின் மனதை சலவை செய்துள்ளார் .. தெளிவாக சொல்லப் போனால் சாதனா போல் எல்லா கதாப் பாத்திரங்களும் ஆனந்தின் மன அழுத்தத்தினால் உருவானவைகளே “
அதன் பிறகு இரண்டு காவலாளிகள் ஆனந்தை அடிக்கப் போனதற்காக என்னைப் பிடித்து வைத்துக் கொண்டனர் . நான் சொன்னதைக் காதிலே கேட்கவில்லை . என் கையெழுத்து பிரதி வாங்கிக் கொண்டார்கள் . பேசச் சொல்லி பதிவு செய்தார்கள் . அடுத்து நடந்தது தான் கொடுமையே அபூர்வாவையும் ஆனந்தையும் நாளை வரச் சொல்லி வழக்கை ஒத்தி வைத்து விட்டார்கள் . என்னையும்
அனுப்பி வைத்து விட்டார்கள் .முட்டாள்கள் .. எல்லாரும் .. பைத்தியங்கள் .
ஆ.. இன்னொன்றை விட்டுவிட்டேன் . அந்த வேற்று கிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியை நான் எவ்வளவு கத்தியும் யாரும் மதிக்கவே இல்லை . நான் ஏதோ ஒரு படம் பார்த்து அந்த காட்சியைத் தான் சொன்னேனாம் . அந்த படத்தின் பெயர் கூட ஏதோ சொன்னானே .. ஆமாம் அது தான் அவசியம் இப்பொழுது .. நாளைக்காவது நான் சொல்வதை அவர்கள் நம்ப வேண்டும் .அவர்களை விடுங்கள் நீங்கள் என்னை நம்புகிறீர்கள் தானே …
என்ன சத்தத்தையே காணோம் . நம்புகிறீர் .. இல்லை .. எனக்குத் தெரியும் . அழகான பெண்களை எல்லாரும் நம்புகிறார்கள் . அவர்களை யாரும் வெறுப்பதில்லை . ஆரம்பத்திலேயே இது தெரிந்தும் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறேனே .. நான் பைத்தியம் தான் .
எல்லாமே சூன்யம் தான் . என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து கிடக்கும் அந்த ஆகாயத்தைப் போல … ..அதில் நீந்திக் கொண்டிருக்கும் பறவைக்கு இருக்கும் ஆனந்தமும் , சுதந்திரமும் கூட எனக்கில்லை ..
“ஆனந்த் “
“என்ன பறவையே ??”
“வருகிறாயா என்னுடன் ??”
“எனக்குத் தான் பறக்கத் தெரியாதே “
“நான் கற்றுத் தருகிறேன் .. நம்பிக்கையோடு ஆகாயத்தில் கால் வைக்கும் எல்லாருக்கும் சிறகுகள் முளைக்கும் நிச்சயமாக “
“எனக்கும் சிறகுகள் முளைக்குமா ?”
“பறக்க விருப்பம் தானே ..”
“நெடு நாளாக “
“பின் ஜன்னல் விளிம்பின் மேல் கால் வை .. அப்படித்தான் .. இரண்டு கைகளையும் நீட்டிக் கொள் என்போலே … மிகச் சரி .. இப்பொழுது என்னைப் பிடி பார்போம் …
இப்பொழுதும் உன்னை மிகவும் நேசிக்கிறேன் அபூர்வா .
– முற்றும்
————————————————————————————————————
இனி கதையைத் தொடரும் நிலையில் ஆனந்த் இல்லாததால் ஆனந்த் மாடி அறையின் ஜன்னலிலிருந்து குதித்த பின் நடந்ததை நானே சொல்கிறேன் . காரியம் முடிந்து எல்லாரும் அபூர்வாவிற்கு ஆறுதல் சொல்லி விட்டு சென்று விட்டனர் . அபூர்வா , ஆனந்தின் அப்பா , ராஜீவ் மற்றும் கனத்த நிசப்த்தம் மட்டும் அறையில் .
காவல் துறையின் விசாரணைக் காகிதங்கள் அவர்கள் முன் நிறைந்திருந்தன . நாட்குறிப்பில் இருந்த அத்தனைக் கையெழுத்தும் ஒலிநாடாவில் இருந்த குரலும் ஆனந்தினுடையதே என்று உறுதி செய்யப் பட்டிருந்தது . மேலும் ஆனந்த் மாடியில் இருந்து குதிக்கும் முன் அறையில் நடந்ததை பதிவு செய்திருந்த ஒளிநாடாவும் இருந்தது . தனிமையில் ஆனந்த் என்ன செய்கிறான் என்று நிரூபிக்கவே அவனை மாடி அறையில் வைத்துப் பூட்டினோம் . ஜன்னல் வழியாக குதிப்பான என்று எதி பார்க்கவே இல்லை என்று ராஜீவ் மீண்டும் மீண்டும் அரற்றிக் கொண்டிருந்தான் . அபூர்வாவிடம் கண்ணீர் தீர்ந்து போயிருந்தது . அபூர்வா எவ்வளவோ
மறுத்தும் ஆனந்தின் தந்தை , அபூர்வாவின் பெயரில் ஆனந்த் எழுதி வைத்திருந்த சொத்தின் உயிலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டு , அது அபூர்வாவின் மறுவாழ்விற்கு பயன்படட்டும், இதுவே என் கடைசி இந்தியப் பயணம் என்று சொல்லிச் சென்று விட்டார் .
மேல்மாடியில் காற்று மட்டும் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது . அபூர்வா மாடியின் விளிம்பருகே நின்று கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு அந்தி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் . சில பறவைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன .
“அபூர்வா ” திரும்பினாள் . ராஜீவ் நின்று கொண்டிருந்தான் . அவளுக்குப் பக்கவாட்டில் வந்து நின்று கொண்டான் .அபூர்வா எதுவுமே பேசவில்லை . கண்கள் சிவந்திருந்தன .
“ஒரு வகையில ஆனந்த் சாக நானும் காரணமாயிட்டேன் .. எனக்கு மன்னிப்பே கிடையாது .. ஒரு நல்ல நண்பனா அவர நான் எப்படியும் காப்பாத்தியிருக்கணும் . எனக்கு மன்னிப்பே கிடையாது “
அபூர்வா சின்னதாக சிரித்தாள் . “நீ என்ன பண்ணுவ .. நான் வாழ்க்கையில ரெண்டு தடவை தப்பான முடிவு எடுத்துட்டேன் .. ஒண்ணும் உன் நட்பை விட்டுட்டு வந்தது .. ரெண்டாவது இந்தக் கல்யாணம் .. “
ஒரு சின்ன மௌன இடைவெளி தொடர்ந்தது .
“அப்போ நீயும் கிளம்புறியா “
“இல்ல அபூர்வா .. உன் கூடவே இருக்கேன் . நீ விரும்பினா கடைசி வரைக்கும் “ ராஜீவ் அபூர்வாவின் முகத்தையே பார்த்தான் . அபூர்வா ஒரு முறை ராஜீவைப் பார்த்து விட்டு பின் நேராகப் பார்த்துப் புன்னகைத்தாள் .
“எல்லாரும் போய்ட்டாங்களா ?”
“இப்ப தான் உன் மாமாவ அனுப்பிட்டு வரேன் “
கண்களைத் துடைத்துக் கொண்டாள் . வாயைக் குவித்து உஸ்ஸ்ஸ்ஸ் என்றாள். இதுவரை கழற்றி வைத்திருந்த புன்னகோயை எடுத்து அணிந்து கொண்டாள் .
“அப்பறம் ஏன் தேவை இல்லாம பேசிட்டு இருக்க “
ராஜீவ் சட்டென்று அவளை இழுத்தனைத்தான் .இரண்டு கைகளும் இணைய ,
உள்ளங்கைகளில் புதிதாக முளைத்த உதடுகள் முத்தமிட்டுக் கொண்டன.
– சர்வம் சூன்யம்
ரெஜோ,
நன்றி என்னை பின் பற்றுவதற்கு. கவிதைகள் ஒகே .
கதை நல்ல இருக்கு .சயின்ஸ் பிக்க்ஷன் எழுத கட்டாயமாக ஒரு திறமை வேண்டும்.
அதுவும் இது மாதிரி தலை சுத்தும் கதையில் . ஒரு வேண்டுகோள் சுருக்கமாக
எழுத முடியுமா?
LikeLike
வருகைக்கு நன்றி ரவி ஷங்கர் 🙂
எழுதுவதில் கொஞ்சம் வித்யாசமான பரிசோதனைகள் செய்து பார்ப்பதில் ,சின்ன ஆர்வம் . அப்படி எழுதியதுதான் சர்வம் சூன்யம் . அது தொடர் கதை என்பதால் கொஞ்சம் பெரியதாக வந்துவிட்டது . நிச்சயம் முயற்சி செய்கிறேன் .
கருத்துகளுக்கு நன்றி 🙂
LikeLike
பாத்தியா சீனி.. சர்வம் சூன்யத்திற்கு comment வரல comment வரல னு pheel பண்ணினியே.. பாத்தியா.. 😉
LikeLike
அடடடடா பின்னிட்டியே தம்பி! அருமையான கதை. அங்கங்கே Consistency மட்டும் கொஞ்சம் miss ஆகுது. பெயர்களில் சின்னக் குழப்பம் இருக்கிறது. மீண்டும் படித்துப் பார்.
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
நன்றி அண்ணா 🙂 நடுவே கொஞ்சம் இடைவெளி விழுந்ததால் தான் அந்த Consistency missing .. பெயர் குழப்பம் பார்க்கிறேன் அண்ணா …
LikeLike
Hi da..
A very good science fiction da.. Congrats and keep it up..
LikeLike
thanks da 🙂 keep reading
LikeLike