Tags
அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .
“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”
கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”
“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”
“சொல்ல மாட்டேன் . காட்றேன் “
உள்ளே இருந்து எடுத்து வந்த லேப் டாப் ஐத் திறந்தாள் . பெயரில் ராஜீவ் ஆர் என்று அடித்து விட்டு கடவுச் சொல்லுக்கு சில நட்சத்திரங்களைத் தந்தாள் .வேறு நேரமாக இருந்திருந்தால் கணிப்பொறியின் வரவேற்பை ரசித்திருப்பேன் .
எதிலுமே இச்சை இல்லாதவன் போல் உட்கார்ந்திருந்தேன் . எதையும் தெரிந்து கொள்ள வேண்டாம் .இந்த நிமிடம் எனக்கு யார் எதிரி … அபூர்வா ?? நினைக்கவே முடியவில்லை . நிச்சயம் இருக்க முடியாது . இவள் பொய் தான் சொல்லுகிறாள் .
முதலில் அந்த தடி பயல் ராஜீவையும் இந்த மேனா மினுக்கியையும் அடித்துத் துரத்த வேண்டும் . பின் என் எல்லா வசந்தங்களும் மீண்டும் கை வந்து சேரும் . அவள் தூங்கும் அழகை நடு இரவில் ரசிக்கலாம் .மடியில் படுத்துக் கொண்டு பால்யத்தின் கதை பேசலாம் . தலை வருடி முத்தம் தருவாள் .. நினைக்க நினைக்க இதழோரத்தில் குறுநகை ஓடிற்று .கையில் ராஜீவின் கவிதைக் குறிப்புகள் கைகளில் கனத்தது .
ஒரு நொடியில் புன்னகை தொலைந்து போனது .
“இது ஒரு மாதம் முன்பு நடந்த MOH ரகசிய சந்திப்பு .. ராஜீவும் , உங்க அபூர்வாவும் தான் இந்த சந்திப்பில் நாயகர்கள் ” அந்த உங்கள் அபூர்வா ஏதோ செய்தது . ஒரு குறும் படம் போல் ஒன்று ஓடத் துவங்கியது . சுத்தமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான் ராஜீவ் . அவன் முன்னால் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சிலரும் , நடுத்தர வயதில் சிலரும் ஆண்களும் பெண்களுமாக கேட்டுக் கொண்டிருந்தனர் . அவர்கள் எல்லோர் முகத்திலும் ஒரு விசித்திர தன்மை
உறைந்ததது .
“நல்ல கண்டுபிடிப்பு ராஜீவ் .. இது மட்டும் சாத்தியமானால் கடவுள் இல்லை என்று இதுவரை சொல்லி வந்த அறிவியல் , கடவுள் நான் தான் என்று சொல்லத் துவங்கலாம் .. ஆனால் நம்பும் படியாக இல்லையே “
“நம்புவதற்கு கடினமான விஷயங்கள் அறிவியலில் மட்டுமே சாத்தியம் மேன்மை தாங்கியவரே.. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமென்றால் , நினைத்த இடத்தில் நினைத்த உறுப்புகளை விதைப்பது எப்படி சாத்தியமில்லாமல் போகும் “
“ஒரு நுரையீரல் இருக்க வேண்டிய இடத்தில் மீண்டும் அதே போன்ற இன்னொரு
நுரையீரலை வைத்துத் தைப்பது பெரியவிசயமில்லை . ஆனால் அந்த இடத்தில் சிறுநீரகத்தை விதைப்பது எப்படி சாத்தியமாகும் என் பிரிய குழந்தாய் ??”
“என் இயலாது மதிப்பிற்குரியவரே “
“ஏனென்றால் மூச்சுக் குழல் மூலம் சிறுநீர் கழிக்க முடியாது .. சிறுநீர் வெளியை சுவாசிப்பதற்காக காற்றோட்டமாக வெளியில் திறந்து வைக்க முடியாது” பெரிய வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தார். அந்த இடமே முன் பின் சிரிக்காதவர்கள் இடம் போல் சிரித்து அடங்கியது . சிரிப்பு அடங்கியதும் மெல்ல தொண்டையை செருமிக் கொண்டான் ராஜீவ் .
“நல்ல நகைச்சுவை . நான் சொல்லப் போவது புரிந்த பின் சிரித்ததற்காக நீங்கள் மன்னிப்பை இறைஞ்ச நேரலாம் . கொஞ்ச நேரம் பொறுமை காக்க வேண்டுகிறேன் கனவான்களே ” கூட்டத்தில் அமைதி நிலவி மேற்கொண்டு ராஜீவ் தொடர அனுமதி அளித்தது .
” மனித உடம்பில் நினைத்த இடத்தில் உறுப்புகளை விதிக்க முடியாததற்கு காரணம் செல் கட்டமைப்பும் , மீட்சித் தன்மை இல்லாததுமே காரணம் .உறுப்புகள் ஒன்றுக் கொன்று தொர்பில் ஒரு வரிசையில் கட்டமைக்கப் பட்டிருப்பதுதான் .
உதாரணத்திற்கு நம் உணவு மண்டலம் வாய் , உணவுக் குழல் , இரைப்பை , சிறு பெருங் குடல்கள் ,மலக் குடல் பின் ஆசன துவாரத்தில் முடிகிறது . இதே போல் ஒவ்வொரு மண்டலங்களும் நாளங்களால் பிணைக்கப் பட்ட தொடர்புடைய
உறுப்புகள் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கின்றன ” சிறு இடைவெளி விட்டு எல்லோரையும் பார்த்தான் .
பின் மீண்டும் தொடர்ந்தான் .
“ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நாளங்களுக்குள் குறுக்கீடு நிகழ்வதால் மொத்த அமைப்பும் பாதிக்கப்படும் என்பதால் தான் உறுப்புகளை நினைத்த இடத்தில் விதைப்பதென்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது ..இதற்கு மேலும் குழப்ப விரும்பவில்லை ..சரி விசயத்திற்கு வருகிறேன் . உள்ளிடற்ற ஒரு உடல் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம் . ஒன்றுமில்லாத வெளியில் உறுப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் வரும் வேறுபட்ட காந்த அலைகளின் எதிர்ப்பு மற்றும் ஈர்ப்பு சக்திகளின் மூலம் அங்கங்கு அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம் . நாளங்களோ நரம்புகளோ இன்றி , தொடர்புடைய உறுப்புகள் காந்த சக்தி மூலம் மட்டுமே பிணைந்திருக்கின்றன . காற்று அதே கந்த விசை மூலம் சுவாச மண்டலப் பாதையில் பயணிக்கிறது . நீரும் உணவும் உணவுக் குழலின் பாதையில் எதையும் தொல்லை செய்யாமல் செல்லும் “
“அதாவது பால் வீதியில் ஒன்றுக் கொன்று தொல்லையில்லாமல் தங்கள் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களைப் போல ..”
“மிகச் சரியாக மேன்மை தாங்கியவரே .. மிக்க நன்றி . பின்பு நினைத்த இடத்தில் நினைத்த உறுப்புகளை விதைப்பதில் எந்த சிக்கலும் இல்லையே . உறுப்புகள் விதைக்கப் பட்ட இடத்தை நோக்கி அதன் ஈர்ப்பு சக்தி மூலம் தொடர்புடையவைகள் சென்று சேரப் போகின்றன , ஒன்றுக் கொன்று குறுக்கீடில்லாமல் .. மதிப்பிற் குரியவரே உங்கள் உறுப்பை பின்பு நீங்கள் எங்கு
வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் . காற்றோட்டத்தைப் பற்றிய கவலை தங்களுடையது . “
மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள் .
“என் பிரியத்திற்குரிய குழந்தையே , நல்ல விவாதம் . தர்கத்திற்கு வேண்டுமானால்
நீ சொல்வது சாத்தியமாகும் . ஆனால் நடைமுறைக்கு ..”
“சாத்தியமாக்கியிருக்கிறேன் கனவானே ” விநோதமாகச் சிரித்தான் . செல்பேசியை எடுத்து எங்களை அழுத்தி “சரியான தருணம் . உள்ளே வா ” என்றான் .. எல்லாரும் கதவு புறம் நோக்கினார்கள் . மந்தகாசப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள் அபூர்வா .
“வரவேண்டும் பிரியத்திற்குரிய அபூர்வாவே ” வாசல் சென்று அவள் புறங்கையில் முத்தமிட்டு அழைத்து வந்தான் . எல்லோரும் “வர வேண்டும் “என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள் .
“அபூர்வா இந்த ஆப்பிளை கைகளால் உண்டு காட்டுவாள் ”
“நான் வேண்டுமானால் ஊட்டிவிடட்டுமா .. பையா மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாய் நீ ” அவர் பேசி முடிக்கும் முன்பே அபூர்வா கைகளால் உண்ணத் தொடங்கியிருந்தாள் … உள்ளங்கைகளால் .
புதிதாக அதில் முளைத்திருந்த உதடுகளால் . கண்கட்டு வித்தை போல படம் பார்த்துக் கொண்டிருந்தேன் .
அந்த பெரியவர் ஓடிச் சென்று ராஜீவைக் கட்டிப் பிடித்துக் கொண்டார் .
“சாதித்து விட்டாய் மகனே .. நீ சாதித்து விட்டாய் . ” இன்னொரு கைகளால் அபூர்வாவையும் கட்டிக் கொண்டார் . பின்பு கிளர்ச்சி குறைந்தவராய் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார் .
“விளக்க முடியுமா ராஜீவ் ??”
“நிச்சயமாக மேன்மை தாங்கியவரே .. வேற்று கிரகவாசிகளைப் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கையில் , குன்னூர் மலைப் பகுதியில் சுமார் 90 வருடங்களுக்கு முன் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாக அந்த நிலத்தின் உரிமையாளர் அளித்திருந்த குறிப்பு இருந்தது . அவர்கள் இவர் வீட்டில் தங்கியதாகவும் , அதில் ஒருவர் இறந்து போக மலை உச்சியில் அவரை அடக்கம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது . எல்லாராலும் ஏதோ ஒரு பைத்தியக் காரனின் உளறல்கள் என்று ஒதுக்கப்பட்டு விட்டதாக அது முடிந்திருந்தது . என் தனிப்பட்ட ஆர்வத்தில் அங்கே சென்று ஆராய்ந்ததில் எனக்கு ஒரு பாடம்
செய்யப்பட்ட உடல் கிடைத்தது . “ யாரிடமும் எந்தவித சலனமும் இல்லை .
“அது மனித உடல் போல் இல்லை . வேற்றுகிரக வாசியினுடையது என்பதற்கான உத்தரவாதம் என்னிடமில்லை . ஆனால் அந்த உடல் அமைப்பு வேறுபட்ட ஒன்று . உள்ளே நரம்புகளோ இணைப்புகளோ எதுவுமின்றி உறுப்புகள் சிதறி இருந்தன . அதன் சில செல்கள் அப்பொழுதும் உயிரோடிருந்தன . அதன் ஜீன் அமைப்பை ஆராய்ந்து அதை மனித ஜீன் அமைப்போடு பொருத்தி மாற்றம்
செய்து பார்த்தேன் …. “
எல்லாரும் தங்களை மறந்து கை தட்டினார்கள் . “இரண்டு வித ஆராய்ச்சியில் நானும் அபூர்வாவும் ஈடுபட்டிருக்கிறோம் . ஒன்று மனித ஜீன்களின் கட்டமைப்பை மாற்றி உறுப்புகளை நினைத்த இடத்தில் விதைப்பது . இன்னொன்று அப்படி மாற்றப்பட்ட ஜீனுடைய ஒருவளுக்கும் , சாதாரண மனித ஜீனுடைய ஒருவனுக்கும் பிறக்கப்போகும் அடுத்த தலைமுறையைப் பற்றியது .
முதல் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தது ..”
“மன்னிக்க வேண்டுகிறேன் குழந்தையே .. ஒரே ஒரு சோதனை மட்டும் வைத்து வெற்றி பெற்று விட்டதாகக் கூற முடியாது . அறிவியலில் தொடர் வெற்றிகள் மட்டுமே உண்மையென உறுதி செய்யும் “
“உண்மை தான் மேன்மை தாங்கியவரே . இந்த ஆய்வை அபூர்வா மேல் அல்லாமல் வேறொரு பெண் மேலும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம் . புற்று நோய் செல்களை விட வேகமாக பரவக் கூடிய செல்கள் இவை ..” வெறி கொண்டவன் போல் சிரித்தான் .
” நல்லது மகனே , இரண்டாவது ஆய்வைப் பற்றி சொல் .”
“அதற்கான நபர் தேர்வு செய்யப்பட்டாகிவிட்டது . அபூர்வா நாளை அவனைச் சந்திக்கப் போகிறாள் .”
“யாரவன் ??”
“அந்த குன்னூர் நில உரிமையாளரின் பேரன் . தனியன் . ஆய்வுக்கேற்றவன் . வேலை முடிந்ததும் அவன் உயிரும் அந்த பாதுகாப்பான இடமும் நம்வசம் “
கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது . ஒரு பெண் முன் அழுவதா என்ற ஆண் ஆதிக்கச் சிந்தனை அதை தொண்டையிலே நிறுத்திவைத்திருந்தது .
“ராஜீவ் மற்றும் அபூர்வாவுக்காக ..” கண்ணாடி குவளைகளில் திரவம் தளும்ப கூச்சலிட்டார்கள் . ராஜீவ் அபூர்வாவின் உள்ளங்கைகளில் முத்தமிட்டான் .
“என்ன ராஜீவ் , இத்தனை பேர் மத்தியில் பெண்ணுதட்டில் முத்தமிடுவது நாகரீகமா “
“மன்னிக்கவும் மேன்மை தாங்கியவரே .. நாங்கள் அருகிலுள்ள அறைக்குச் செல்கிறோம் “வெட்கமில்லாமல் அபூர்வாவும் சிரித்தாள் .
“அங்கு சென்று என்ன செய்யப் போகிறாய் ??” கிழத்திற்கும் அறிவில்லை . ராஜீவ் கண்ணடித்துக் கொண்டே சொன்னான் .”இதழ்கள் அல்லாது அவள் மார்பிலும் முதுகிலும் கண்கள் பதித்துள்ளேன் . அது ஒழுங்காக உள்ளதா என பார்க்கப் போகிறேன் ”
கையில் கிடைத்ததைக் லேப் டாப் மேல் எறிந்தேன் . கீழே விழுந்து உடைந்தது . நானும் … அழத் தொடங்கினேன் .
கொஞ்ச நேரம் அழுது தனியக் காத்திருந்தவள் என்னருகில் வந்தமர்ந்தாள் . தன் மேல் சாய்த்துக் கொண்டு தலையைத் தடவிக் கொடுத்தாள் . அந்த அணைப்பு எனக்குத் தேவையாக இருந்தது .
“உனக்கெப்படித் தெரியும் இவ்வளவும் ??”
“பரிசோதனை நடத்தப்பட்ட இரண்டாவது பெண் நான் தான் .. என் காதலும் ஏமாற்றப்பட்டுவிட்டது ..” அணைத்துக் கொண்டாள் .
“இங்கிருந்து எங்காவது போய் விடலாம்.. என்னைக் காப்பாத்துவீங்களா ?? “
“கண்டிப்பா சாதனா .. துரோகத்திற்கு மட்டும் மன்னிப்பே கிடையாது .. நம்மோட காதலுக்கு அவங்க ரெண்டு பேருக்குமே அருகதை கிடையாது ..நான் முடிவு பண்ணிட்டேன் “
“என்ன ??”
“நாளைக்கு அபூர்வாவைக் கொல்லப் போறேன் …”
இந்த மூன்று நாட்களில் என் வாழ்கையில் எவ்வளவையோ பார்த்துவிட்டேன் . இந்த அறையின் இருட்டு மட்டும் தான் எனக்கு சொந்தம் . தெளிவான துரோகம் .இந்த அறையில் இருந்து வெளியேறி முதலில் உன்னைக் கொல்வேன் அபூர்வா .
அந்த ஓவியத்தின் கீழே ஏதோ ஒருகைப்பிடி தென்பட்டது . தடவிப் பார்த்தேன் . இந்த அறை உள்ளிருந்து தான் பூட்டப்பட்டிருக்கிறதா .குழப்பம் மேலிடத் திறந்தேன் .
வாசலில் கைகளில் கத்தியுடன் …. அபூர்வா நின்றுகொண்டிருந்தாள் .
“வாங்க சீக்கிரம் இங்க இருந்து போய்டலாம் ”
“வாடி .. வா .. உனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் ..இதுக்கு மேலயும் நீ என்ன ஏமாத்தமுடியாது ”
“ஐயோ என்னங்க பேசறீங்க .. எனக்கு பயமா இருக்கு .. “
“கொஞ்ச நேரம் தான் .. பயப்படறதுக்கு நீ உயிரோட இருக்க மாட்ட ..” அவள் கைகளைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினேன் . ஆத்திரம் தீரும் வரை அடித்தேன் . அப்படியே அவளைத் தூக்கி சுவற்றை நோக்கி தள்ளிச் சென்றேன் . அதில் நீண்டிருந்த கம்பியை நோக்கி பலமாகத் தள்ளி விட்டேன் .. நேரே .. வெகு நேராய் அதில் போய் செருகி …….
எல்லாம் முடிந்தது . ஏதோ ஒரு திருப்தி . பரவசம் . இனி சாதனாவைத் தேட வேண்டும் . வாசல் புறம் நோக்கி ஓடத் திரும்பினேன் .
நிழலாடியது .
“என்னங்க .. என்ன விளையாட்டு இது .. தண்ணி கேட்டுட்டு இங்க வந்து ஒளிஞ்சிட்டு இருக்கீங்க .. நான் பயந்தே போயிட்டேன் ..”
வாசலில் நின்று கொண்டிருந்தாள் அபூர்வா .
தலையை குலுக்கி விட்டுத் திரும்பிப் பார்த்தேன் . கம்பியில் செருகி ரத்தம் வழிய ,தலை சாய்ந்து சுத்தமாகச் செத்து விட்டிருந்தாள் சாதனா .