Tags

சற்றேறக்குறைய

கண்விழித்த கடிகார முள்ளின்

நிமிட பின்னோட்டத்தில்

என் கனவிலிருந்திறங்கி

காணாமல் ஓடிப்போயிருந்ததவ்வுருவம் …

பகலின் நிர்வாண வெளிச்சத்திலும்

வறண்ட காற்றின் வெக்கையிலும்

தேடிக் கொண்டேயிருந்தன யென் கண்கள் ..

விவரணைக்குரிய யவ்வௌனம்

இல்லை யதனிடம் யெனினும்

என் கருவிழிப் படலத்தில்

கலந்து கலங்கியிருந்ததனுருவம் ..

யாதோயொரு ஆர்வம்

மழையின் குளிரில் நனைந்தூறிப்போன

சவத்தினை கூட்டத்தை யூடுருவி காண்பதொப்ப …

நெடுநாளாய் வான் காணா

வயோதிகளின் இறந்த செதில்களை

நினைவுறுத்தும் ஸ்பரிசம் அதனிடம் ..

உண்டுகளைத்த சர்ப்பத்தின்

முனங்கலென யதன் சத்தம் . .

எப்பொழுதும் எரிச்சலுற்று

காறிக் கொண்டிருக்கும் கண்களது ..

கோடிப் பறவைகளின்

சிறகுகள் கருகும் வாசம்

அதன் சுவாசத்தில் …

மரணத்தின் நிழல் அதற்கு ..

மாலை வந்ததும்

மாறிப்போன தென் மனமந்தி

தேடுவது விடுத்து

தேடும் பொருளென மாறி

இருள் கண்டு மிரண்டு

அரவமில்லா சாலைப்பயணங்களொதுக்கி

கூட்டத்தில் கலந்து

புகுந்து மீண்டு

வீடு வந்து

விரிசல்களனைத்தையும் தைத்து மூடி

பாதுக்காப்பாய் இருப்பதாய் யுணர்ந்து

சற்றேறக்குறைய

கண்மூடிய கடிகார முள்ளின்

நிமிட ஓட்டத்தின்பின்

என் கனவிலிறங்கியிருந்தது

காணாமல் ஓடிப்போயிருந்தவ்வுருவம் …