இன்னும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள் எனக்கு . தூக்கம் கூட கலையாமல் , அழ அழ என்னையும் என் தம்பியையும் லாரியில் உள்ள பொருட்களோடு ஏற்றி ,ஐந்து வருடங்களாக அழகான என் பால்யத்தை கழித்த ஊரை விட்டு விட்டு , இன்னமும்
என் நெற்றியில் நிலைத்து நின்று விட்ட தழும்புகள் தந்த திண்ணையை விட்டு விட்டு , வீட்டு மாற்றி புது ஊருக்கு எங்களை அப்பா அழைத்துச் சென்ற நாள் . வாடகை வீட்டில் குடியிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த வலியும் , வேதனை உணர்வும் .வரும் வழி முழுதும் அழுது அடித்த வாடைக்காற்றில் அது காய்ந்தும் போய் வெறும் கேவலாக
நின்று விட்டிருந்தது .அன்று தான் நிகழ்ந்தது அவனுடனான என் .. எங்கள் முதல் சந்திப்பு .
அவனாகவே வந்து பொருட்களை இறக்கி வைக்க உதவி செய்தான் . எந்தப் பொருகளை எங்கே வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான் . ரைட் போலாம் போ போலாம் போ என லாரியை ரிவர்சில் போக உதவி செய்தான் . அப்பா பணம் தந்ததற்கு ,
இப்பொழுது வேண்டாம் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு , என் தம்பியின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டுச் சென்று விட்டான் .
அப்பொழுது எனக்கு பத்து வயது என்றாலும் , யாராவது வீட்டு முகவரி எழுதச் சொன்னால் , தெரு பெயரை எழுதி விட்டு ,வீட்டு எண்ணை யோசித்து திரு திருவென முழிக்கும் அளவிற்கு தான் நியாபக சக்தி எனக்கு . என் புதிய பள்ளியின் நேர்முகத் தேர்வில் கூட அப்பாவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னதற்கு யோசித்து யோசித்து கடைசியாக ரெங்காவுக்கு பதில் ரிங்கா என்று தான் எழுதியிருந்தேன் . ஆனாலும் ” பயல் இன்னமும் ரைம்சை மறக்கலை பாரேன்” என்று வெரி குட் சொல்லி சேர்த்துக் கொண்டார்கள் . இருந்தும் இன்னமும் அவன் முகம் மட்டும் தெளிவாக மனதில் இருக்கிறது அழியாமல் , ஒரு பிடித்த கனவைப் போல .
அப்பா சலூன் அழைத்துச் செல்லும் பொழுதெல்லாம் அவன் தலையை நினைத்துப் பார்த்து தான் அமைதி கொள்வேன் . யாரவது கரிச்சான் மண்டைக்கு விளம்பரம் செய்வதாக இருந்தால் அணுக வேண்டிய முகவரிக்கு தாராளமாக இவன் பெயரைத் தரலாம் . ஆனால் மழுங்கச் சிரைத்திருபான் .
பலசமயங்களில் அவனுக்கு முடியே வளராதோ என்று நாங்கள் யோசித்ததுண்டு . நல்ல நிறம் . ஒட்டிய வயிறு . அவன் சாப்பிட்டு எங்களில் யாருமே பார்த்தது கிடையாது .
தெருவிலேயே யாராவது தரும் உடையை அணிந்து கொள்வான் , அப்பா தன்னுடைய பழைய மிலிட்டரி உடையைத் தந்ததிலிருந்து வேறு எதையுமே அணிவதில்லை . அதை உடுத்திக் கொண்டு மிகவும் கம்பீரமாக வளைய வருவான் .
புதிய வீடு எனக்கு சுத்தமாகப் பிடிக்க வில்லை . முதல் காரணம் அது மாடி வீடு .விக்ரமாதித்தன் கதைகளில் வருவது போல் காற்றில் மறைந்து போகும் குளிகைகள் தயாரிக்க , விக்ஸ் குளோசப் மற்றும் அம்மாவின் மூட்டுவலித் தைலங்கள்
உருக்கி ஆராய்ச்சி செய்ய திண்ணை கிடையாது .இரண்டாவது காரணத்தை நான் தேடவில்லை .
ஆனால் வெகு விரைவில் அந்த வீடு மட்டும் அல்ல தெருவும் பிடித்துப் போனது .முதல் காரணம் என் ஆராய்ச்சியை பால்கனியில் வைத்துக் கொள்ள அம்மா அனுமதி தந்திருந்தாள் . இரண்டாவது காரணம் கிரிக்கெட் .
அந்தத் தெரு கவிழ்த்து வைக்கப்பட்ட ‘டி’ வடிவில் இருக்கும் . நேராக வரும் தெரு சங்கர் வீட்டில் முட்டி இடது புறம் என் வீடு வரையும் , வலது புறம் ராஜா வீடு வரையும் நீண்டிருக்கும் . நாங்கள் கிரிக்கெட் விளையாட அரசாங்கமே சங்கர் வீட்டின்
முன் போஸ்ட் மரம் ஒன்றை நட்டிருந்தது . பிட்சின் இடது புறம் எஞ்சினியர் பாட்டியின் காம்பௌண்ட் வைத்த வீடும் , வலது புறம் ‘உலக நாயகி எம் . பி . பி . எஸ் ‘ என்ற போர்டு தாங்கிய ஆளில்லா வீட்டின் வேலி போட்ட பின்புறமும் இருந்தது .
எந்த பேஷண்டையுமோ , இல்லை அந்த டாக்டரையோ , நாங்கள் அந்தத் தெருவை காலி செய்து போகும் வரை பார்த்ததே இல்லை . அந்த காலி இடத்தில் இருந்த கார் ஷெட்டில் தான் அவன் தன் உலகத்தை நிர்வகித்துக் கொண்டிருந்தான் .
மழை பெய்யா நாட்களில் பரவாயில்லை .பெய்யும் நாட்களில் அவன் எங்கே தங்குவான் என்று எங்களில் யாருக்குமே தோன்றியதில்லை .
சரியாக நாங்கள் கிரிக்கெட் விளையாடும் சமயங்களில் வந்து உட்கார்ந்து கொள்வான் . காம்பௌண்டுக்குள்ளோ இல்லை தீவிரவாதி போல் வேலி தாண்டிச் செல்லும் பந்தையோ ஓடிச் சென்று எடுத்து வந்து தருவான் . எங்களுக்கான திட்டை வாங்கிக் கொண்டு எங்கள் எதிரிகளிடமிருந்து பந்தை மீட்டுக் கொண்டு வர அவன் அவசியமாய் இருந்தான் .
அதிலும் குறிப்பாக எனக்கு . ஏனெனில் நான் அடிக்கும் பந்துகள் எல்லாமே நேராக ஜன்னலை நோக்கித்தான் செல்வேன் என்று அடம் பிடிப்பவைகள் . ஆனால் அதற்காக எங்களிடம் எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டான் சில நெல்லிக் கனிகளைத் தவிர .
அதிலும் முழுதாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டான் . நாங்கள் எச்சில் செய்த பாதியே போதும் என்பான் . அதுவும் என் தம்பி தரும் பொழுது அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே .நவரச பாவனைகளில் நாட்டியப் பேரொளி தோற்றுப் போவாள் . அவன் பேட்டிங் செய்யும் போது மட்டும் கை தட்டி பலமாக ஆர்பரிப்பான் . ஏனோ அவன் மேல் மட்டும் தனி பிரியம் .
——————————————————————————————————————
எனக்கு ராஜாவைப் பிடிக்காது . காரணம் பேட் அவனது என்பதால் கூடுதல் கிச்சா கேட்டு அடம்பிடிப்பான் .இல்லையென்றால் பேட்டைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவான் . அவன் அம்மாவை மிகவும் பிடிக்கும் . முதல் காரணம் , எப்பொழுது அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் தேங்காய் மிட்டாய் எடுத்துத் தருவார்கள் . இரண்டாவது தெருவே அம்மாவை பாபும்மா என்று தம்பியின் பெயர் வைத்து அழைக்கையில் இவர் மட்டும் பீபும்மா என்று என் பெயர் வைத்து அழைப்பார் . இந்தத் தெருவிலேயே அவனிடம் அதிகமாக வேலை வாங்குவது அவர் தான் . ‘மாஞ்சா’ என்று அவர் அழைக்கும் தோரணையிலேயே அதிகாரம் தூள் பறக்கும் . இவனும் அடுத்த நொடி ஓடிச் சென்று முன்னே நிற்பான் .
‘கோண்டு மாஞ்சா ‘ என்ற அவனது பெயர் காரணத்தை தோண்ட முயன்று தோல்வியில் தான் முடிந்தது . கடைசியாக அவன் கையில் எப்பொழுதும் வைத்திருக்கும் ‘மஞ்சப் பை ‘ காரணமாக இருக்கலாம் என்று விசாரணையை முடித்து விட்டிருந்தோம் . ஆனால் ஒருநாள் அவன் பட்டம் செய்து டீல் விட்டுக் காட்டிய பொழுது தான் விசாரணையின் முடிவு தவறானது என்ற முடிவுக்கு வரும்படி ஆனது . என் தம்பிக்கு மட்டும் கலர் கலராக பட்டம் செய்து தருவான் .தம்பியும் புதிது கிடைத்ததும் போனால் போகிறதென்று பழையதை எனக்குத் தருவான் .
மாஞ்சா கொஞ்சம் நட்டு கழன்ற கேஸ் என்று தான் நினைத்திருந்தேன் , என் தம்பிக்கு ரெக்கார்டு புத்தகத்தில் அவன் படம் வரைந்து தருவதைப் பார்க்கும் வரை .என் டிராயிங் சார் கூட அப்படி வரைந்து நான் பார்த்ததில்லை . சில சமயங்களில் என்னுடயதைக் கூட தம்பியிடம் கொடுத்து வரைந்து வாங்கியிருக்கிறேன் . அவனுக்கும் இது தெரியும் .
இருந்தும் தம்பிக்காக வரைந்து கொடுத்து விட்டுப் போவான் . இப்படியே இந்த இரண்டரை வருடத்தில் அவனுக்கும் எங்களுக்குமான உறவு கொஞ்சம் கூடிப் போயிருந்தது அவனையும் கிரிகெட்டில் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு .
அது ஒரு இரண்டாவது சனிக்கிழமை .
வழக்கம் போல் நான் அடித்த பந்து , பழக்கம் போல் வேலி தாண்டிச் சென்றது .மாஞ்சா , ராஜாம்மா அனுப்பியதின் பேரில் கடைக்குச் சென்றிருந்ததால் ராஜாவே பந்தை எடுத்து வருவது என்று ஏக மனதாக முடிவு செய்யப் பட்டிருந்தது . இப்பொழுதெல்லாம் ராஜா அடம் பிடிப்பதில்லை .அவன் பேட் உடைந்திருந்தது . நான் புதிதாக பேட் வாங்கியிருந்தேன் . குடுமி என் கையில் இப்பொழுது .
உள்ளே சென்று பந்தைக் கையில் எடுத்தவன் , ஏதோ யோசித்தவனாய் மாஞ்சாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தான் . பிற்பாடு அந்த அறையை அவன் விவரித்தது இப்படித்தான் . “ஒரே ஒட்டடை .. ஓரத்தில் மட்டும் கூட்டி
வச்சிருக்கான் .. கோணிச் சாக்குல மெத்த வேற .. தலைமாட்டுல ஒரு வெளக்கு திருட்டுத் தனமா வயர்ல சொருகிருக்கான் .. பூட்டாத ஒரு டிரங்குப் பெட்டி ” .
பூட்டாதது தான் அவன் கவனத்தைக் கலைத்திருக்கிறது . கொஞ்ச நேரத்தில் ராஜா அலறிக் கொண்டே ஓடி வந்தான் .கன்னம் பழுத்திருந்தது . பின்னாலேயே “பெட்டியத் தொடுவியா பெட்டியத் தொடுவியா ” என்று துரத்திக் கொண்டு மாஞ்சா . தெரு மொத்தமும் மாஞ்சாவுக்கே துணை நின்றது .ராஜாம்மாவுக்கு கோபம் தீரவேயில்லை மளிகை சாமான் தீர்ந்து போகும் நாள் வரை . ராஜா மட்டும் அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் விடுவதாயில்லை என்று இல்லாத கூந்தலை அவிழ்த்து விட்டுக் கொண்டான் .
——————————————————————————————————————
சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது எங்கள் விடுமுறை கொண்டாட்டங்கள் , எஞ்சினியர் பாட்டியின் புது மருமகள் வரும் வரை . நிறைய நகை போட்டுக் கொண்டு , பூ போட்ட நைட்டியில் மதிய வேளைகளில் கூட தலை நிறைய பூ வைத்துக் கொண்டு , மஞ்சள் பூசி நிறைய கண்மையிட்டு …. மாஞ்சாவை ஏக வசனத்தில் அவள் அழைப்பது அவள் புதுக் கணவனைத் தவிர யாருக்குமே பிடிக்கவில்லை .
ஒரு நாள் வாசலில் உட்கார்ந்து ராணி முத்து படித்துக் கொண்டிருந்த தீபாக்கா மேல் பந்து விழுந்து விட்டது . சாட்சாத் அடித்தது நானே தான் . போய் கேட்க பயந்து கொண்டு தம்பியை அனுப்பி வைத்தேன் . அவன் தான் சென்றாக வேண்டும் . அது அவன் காசு சேர்த்து வைத்து வாங்கிய ப்ளம்பர் பந்து . தீபாக்கா பந்தைத் தராமல் தம்பியின் கன்னத்தை நன்றாக கிள்ளி வைத்து விட்டாள் . அவன் அழுது கொண்டே வருவதைப் பார்த்ததும் என்னதான் ஆனதோ மாஞ்சாவுக்கு , கிட்டத் தட்ட அடிக்காத குறையாக
பந்தை அவளிடமிருந்து பிடுங்கி , போதாக்குறைக்கு கன்னத்தை வேறு கிள்ளி வைத்து விட்டான் .
இந்த முறை பிரச்சனையை கொஞ்சம் பெரிதாகத் தான் போனது , மாஞ்சாவைத் தெருவை விட்டுத் துரத்தும் அளவிற்கு . தன் கடமையை செவ்வனே செய்தார் புது மாப்பிள்ளை . கண்ணிப்போன கன்னத்தில் தான் முத்தம் தந்து சரிபடுத்துவதாக ரகசியமாக சொன்னது விவஸ்தையில்லாமல் எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது . கடைசியில் அப்பா தலையிட்டு இனிமேல் இப்படி நடக்காது என உறுதி தந்ததும் , பிரச்சனையை விட்டு ஒழித்தார்கள் . ஆனால் தீபாக்கா மட்டும் கருவிக் கொண்டே இருக்கின்ற கூந்தலை மானசீகமாக அவிழ்த்து விட்டுக் கொண்டாள் .
——————————————————————————————————————
ஆனாலும் இந்த மாஞ்சா சுத்த மோசம் . தம்பிக்கென்றால் மட்டும் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறான் . அம்பயராக நிற்க வைத்தால் அவனுக்கு அவுட் கூடத் தருவதில்லை .ஆனால் கொஞ்ச நாளாகவே அவன் போக்கு சரியில்லை . எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டோ இல்ல சுவரைப் பார்த்து பேசிக் கொண்டோ இருக்கிறான் . தம்பியைத் தவிர வேறு யார் பேசினாலும் பதில் பேசுவதில்லை .இதற்கும் நான் இப்பொழுது சொல்லப் போகும் செய்திக்கும் எதாவது தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை . ஏனெனில் அதைக் கேள்விப் பட்டதிலிருந்து தான் அவனது இந்த விசித்திரமான போக்கு தொடர்கிறது . இன்னமும் இரண்டு வாரத்தில் ரயில் பாதை கட்டுமானப் பணிகள் முடிந்து முதல் கூட்ஸ் வண்டி பரிசோதனை முயற்சியாக விடப்படப் போவது தான் அது .
இப்பொழுதெல்லாம் பந்து எடுத்துப் போட வருவதில்லை அவன் . ஒருமுறை நாங்கள் விளையாடிக்கொண்டு இருந்த பொழுது மாஞ்சாவின் ஷெட்டில் இருந்து நாய் ஊளையிடும் சத்தம் போல் விசித்திரமான சத்தம் கேட்டது . கொஞ்ச நேரத்தில் பயங்கர அழுகை சத்தமாக மாறியிருந்தது அது , ஒரு சிறு குழந்தை விசித்து அழுவது போல் . எல்லாருக்கும் பெரிய பையன் என்கிற முறையில் நான் சென்று பார்க்க வேண்டியதாகிவிட்டது . சபதம் முடிக்க ராஜாவும் சேர்ந்து கொண்டான் .
ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தோம் . ராஜா சத்தம் வராமல் இருக்க செருப்பை கூட கழற்றி வைத்துக் கொண்டான் . உள்ளே … வேறு யாருமில்லை .சத்தத்தையும் காணவில்லை . அவன் டிரங்கு பெட்டி திறந்திருந்தது .
அதன் உட்பக்கத்தில் ஏதோ புகைப்படம் ஒட்டியிருந்தது . மங்கிய வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை . உள்ளே சென்று பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே எங்கிருந்து தான் வந்தானோ … முகத்தில் கொலைவெறி
.
கிட்டத் தட்ட ஒரு .. ஒரு .. கூட்ஸ் வண்டியின் வேகத்தில் . கூ கூ கூ குச் குச் குச் என்ற சத்தத்துடன் . அவ்வளவுதான் . தவறி விழுந்த செருப்பைக் கூட எடுத்துக் கொள்ளாமல் ஓடி விட்டான் ராஜா .என்ன செய்வதென்றே தெரியாமல் நான் உறைந்து போய் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் . மெல்ல என் அருகில் வந்து வாயில் விரல் வைத்துக் கொண்டு ரகசியம் போல் சொன்னான் ., “இங்க எல்லாம் இனிமே வரக்கூடாது .. பாபு தூங்கிட்டு இருக்கான் ல .. எழுந்திட்டா அழுவான் .சத்தம் போடாம போ பாப்போம்”
——————————————————————————————————————
கொஞ்ச நாள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டிருந்தோம் . ராஜாவுக்கு இன்னமும் காய்ச்சல் விட்ட பாடில்லை .வர வர மாஞ்சாவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை . அழுவதை நிறுத்தி விட்டு புதிதாக கர்ண கொடூர குரலில் பாடத் துவங்கியிருந்தான் .
தண்டவாளம் தரை மேலே .. கூட்ஸ் வண்டி யார் மேல .. தண்டவாளம் தரை மேல .. கூட்ஸ் வண்டி என் தலை மேல .. இன்னும் ஏதேதோ . ஓப்பாரி கலந்த தாலாட்டு போல் .
மளிகை சாமான் வாங்கி வரச் சொன்ன ராஜாம்மாவை நான் அறைந்தால் எப்படி இருக்குமென உன் மகனிடம் கேட்டுப் பார் என்று சொல்லி இருக்கிறான் .
தெரியாமல் அவன் வீட்டுச் சுவற்றில் சூச் சூ போன நாயை விடாமல் துரத்திச் சென்று , கல்லால் அடித்து .. வாலை அறுத்து .. அதன் … வேண்டாம் . சாப்பிடும் போது புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இருந்து தொலைத்தால் பழி என்னைச் சேர்ந்துவிடும் .
எல்லாவற்றுக்கும் உச்ச கட்டமாய் இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்த ஆடையையும் கிழித்துக் கொண்டு தெருவெல்லாம் “பாபு .. பாபு ..” என்று கத்திக் கொண்டு …
——————————————————————————————————————
“பாபு .. பாபு ..” மாஞ்சா தான் கீழே நின்று கத்திக் கொண்டு இருந்தான் .ஒரே ஒரு முறை அவனைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் . அன்று நடந்ததை நான் அம்மாவிடம் சொன்னதில் இருந்தே அம்மா பாபுவைத்
தனியாக எங்கும் விடுவதில்லை . இப்பொழுது கூட கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள் . கிட்டத் தட்ட கீழே அழுது கொண்டிருந்தான் . நான் மெல்ல ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன் . அப்பாவின் மிலிட்டரி உடையை அணிந்திருந்தான் .
முகம் மிகத் தெளிவாக இருந்தது . தெளிவாகப் பேசினான் . கீழிருந்தக் கூட்டம் அவனை விரட்டிக் கொண்டிருந்தது .
பயங்கர கோபத்தில் அப்பா கிழிறங்கிச் சென்று “இப்போ உனக்கு என்ன தான் வேணும் .. போகப் போறியா இல்லியா ” கத்தினார் .
அவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “பார்த்து ஒரு வாரம் ஆகுது .. ஒரே ஒரு தடவ என் பாபுவ பார்த்துட்டு போயிடறேன் …” படாரென்று காலில் விழுந்து விட்டான் .
அப்பா என்ன நினைத்தாரோ ,விறுவிறு என்று மேலே வந்தார் . அம்மாவிடம் இருந்து பாபுவைப் பிடுங்கி பால்கனிக்கு இழுத்துப் போனார் . “பார்த்துட்டேலே .. போ “என்றார் .
எதுவுமே பேசாமல் அப்பாவுக்கு ஒரு சலாம் வைத்து விட்டு பாடிக் கொண்டே சென்று விட்டான் .
“தண்டவாளம் தரை மேல …”
——————————————————————————————————————
இன்னும் சில மணி நேரத்தில் கூட்ஸ் வண்டி வந்துவிடும் . கூட படிக்கும் பாண்டியின் அப்பா கேட் கீப்பர் என்பதால் , அவன் சிபாரிசில் நானும் பாபுவும் முன்னால் நின்று கொண்டிருந்தோம் . கண் எட்டும் தூரம் வரை தண்டவாளம் சேராமல் இருப்பது தான் தெரிந்தது . ஒரு கருப்பு புள்ளி அதன் மேலே . கொஞ்சம் வினாடிகள் சேர சேர , அது வளர்ந்து கொண்டே வந்து தண்டவாளத்தின் மேல் ஓடி வந்து கொண்டிருப்பது போல் இருந்தது . இன்னும் நெருங்கி வர வர … மாஞ்சா .
சட்டை கிழிந்திருந்தது . உதடு கூட .அங்கங்கே ரத்தம் . விந்தி விந்தி தான் வந்து கொண்டிருந்தான் . கூட்டத்தில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தவன் கண்டுகொண்டான் எங்களை . நேராக பாபுவிடம் வந்து மண்டியிட்டு அவன் உயரத்திற்கு குறைத்துக் கொண்டான் .
அவன் இரண்டு கைகளையும் கன்னத்தில் எடுத்து வைத்துக் கொண்டு “பாபு .. பாபு .. நான் பைத்தியமா .. இல்லேல .. இல்லன்னு சொல்லு … நீ சொல்லு .. “
பரிதாபமாகத் தலையாட்டினான் பாபு . எனக்கு பயமாக இருந்தது அருகில் செல்லவே .
“என்ன மறந்துட மாட்டியே ….மட்டேல ” கேட்டுக் கொண்டே மாறி மாறி கன்னத்தில் முத்தமிட்டான் . பின் தண்டவாளத்தில் இறங்கி ரயில் வரும் திசையை நோக்கி ஓடத் துவங்கினான் கால்களைத் தேய்த்து தேய்த்து ..
அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் பாபு கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடத் துவங்கினேன் .
——————————————————————————————————————
மாஞ்சாவின் ஷெட் முன் பெரிய கூட்டம் கூடியிருந்தது . எங்களைப் பார்த்ததுமே
ராஜா ஓடி வந்தான் .
“கோண்டு என்ன பண்ணிருக்குது தெரியுமா ..? தீபாக்கா குளிக்கும் போது எட்டிப் பார்த்திருக்கான் ..அடி பின்னிட்டாங்க .. எங்கயோ ஓடிட்டான் .எல்லாரும் சேர்ந்து அவன் பெட்டிய ஒடைக்கப் போறாங்க ”
மெல்ல கூட்டத்தில் புகுந்தோம் . நான் ஓடிச் சென்று அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன் . எல்லாம் அப்பாவால் வந்தது என்று திட்டிக் கொண்டிருந்தார் எஞ்சினியர் மாமா .அப்பா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார் .பூட்டு உடைக்கப் பட்டிருந்தது .
புகைப்படம் இப்பொழுது தெளிவாகத் தெரிந்தது . அதில் மாஞ்சா கோர்ட்டு போட்டு சிரித்துக் கொண்டிருந்தான் . கிராப்பு வைத்திருந்தான் . அடர்த்தியான மீசை . மிகவும் கம்பீரமாக இருந்தான் . அருகில் அவன் கைகளுக்குள் அடங்கி மிக அழகாக ஒரு பெண் கையில் குழந்தையோடு . அந்தக் குழந்தை பார்ப்பதற்கு அப்படியே பாபுவின் சாயலில் இருந்தது .
எல்லாரும் வாய் பிளந்து போனார்கள் . மேலேயே ஒரு கல்யாணப் பத்திரிக்கை . உள்ளே திருநிறைச் செல்வன் வாசுதேவனும் , திருநிறைச் செல்வி வசந்தியும் நிகழும் மங்களகரமான …. வாசுதேவனுக்குக் கீழ் எஞ்சினியர் என்று போட்டு அடைப்புக் குறிக்குள் சிவில் என்று போட்டிருந்தனர் . இன்னமும் தோண்டத் தோண்ட வைரமுத்து , பாரதி , ஷேக்ஸ்பியர் , ஷெல்லி , பைரோன் கீட்ஸ் யார் யாரோ வந்து கொண்டிருந்தார்கள் . கடைசியாக கலர் பேப்பர் சுற்றப்பட்ட ஒரு பரிசுப்பெட்டியும் சில நமத்துப் போன செய்தித்தாள் கட்டிங்குகளும் கிடைத்தன .
எல்லார் ஆர்வமும் பரிசுப் பெட்டியின் மேலேயே இருந்தது . மேலே சிறிய அட்டையில் “டு மை லவிங் சன் பாபு “என்றிருந்தது . அப்பா வேகமாகப் பிரித்தார் . உள்ளே ஒரு அழகிய பட்டம் வானவில்லின் நிறத்தோடு .
இவனா பாத்ரூமில் எட்டிப் பார்த்தான் .. கும்பலிலேயே சல சலப்பு ஏற்பட்டிருந்தது .அப்பா சந்தேகமாக பாத் ரூம் இருந்த பகுதியை நோக்கிப் பார்த்தார் . அதன் கூரையின் மேல் சிக்கி வாலைப் பட படத்துக் கொண்டிருந்தது பட்டம் .
” அது என் பட்டம்பா .. நேத்து காத்துல அறுந்து கூர மேல விழுந்திடுச்சு ” பாபு அழுதே விட்டிருந்தான் .
பளார் என்று ஓங்கி ஒரு அறைவிட்டார் தீபாக்கா கன்னத்தில் மாமா .
எனக்கும் அழுகையாக வந்தது . தேம்பிக் கொண்டே ஸ்டேஷனில் நடந்ததைச் சொன்னேன் . அப்பா கையில் இருந்த செய்தித் தாள்களின் துண்டுகளைப் பார்த்தார் . எல்லாவற்றிலும் ஒரே செய்திக் குறிப்பு தான் இருந்தது .
“இளம்பெண் குழந்தையுடன் கூட்ஸ் வண்டியில் பாய்ந்து தற்கொலை “
மறுநாள் நாங்கள் யாருமே செய்த்தித் தாள் படிக்கவேயில்லை .
– – – – – – – – – – – – – – – – – –
[பேச்சே வரல..]
LikeLike
மனிதனின் உணர்வுகளையும், சமூகத்தின் சாயங்களையும் அழகா சொல்லிருக்கற நடை, கதை, பாத்திரங்கள் எல்லாம் அருமை.. படிச்சு முடிக்கறப்ப மனசு கனக்குது!
சே, முன்பனி-ல போட்டிருக்கலாமோ..? ரெஜோ, நீ எதுக்கும் இனிமே, இங்க போடறதுக்கு முன்னாடி முன்பனி ஆசிரியர் கிட்ட கேட்டுட்டு வேணான்னு சொன்னா இங்கப் போடுக்கோ!! 😉
LikeLike
நன்றி தோகை 🙂
ஆனா இது புதுசு இல்ல ..என்கிட்டே நானே சுட்டது 😉
LikeLike
Super rejo. Kannil anantha kaneer 🙂
LikeLike
வாடா கம்ப்யூட்டர் புலி 🙂
மிக்க நன்றி .. எப்டி இருக்கு HBD ??/
LikeLike
good
LikeLike
Thanks da 🙂
LikeLike
வழக்கம் போல் வார்த்தைகள் அருமை….. மனதை தொட்ட பதிவு வாழ்த்துக்கள் தோழர்
LikeLike
நன்றி தோழரே 🙂
LikeLike
மாஞ்சா பத்தி நினைக்கும் போது , நீ சொல்ற மாதிரி ,ஏதாவது ஒரு தருணத்தில் உடைந்து அழப்போகிறேன் என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது ,
“பின் தண்டவாளத்தில் இறங்கி ரயில் வரும் திசையை நோக்கி ஓடத் துவங்கினான் கால்களைத் தேய்த்து தேய்த்து ..”
அங்க இருந்த கூட்டத்தில யாருமே காப்பாற்ற முயற்சிகலையா ? அப்படி எந்த ஊர் அது ?
LikeLike
ஒரு கதையில் நூறு சதம் உண்மை நிச்சயம் சுவாரசியமான ஒன்றாக இருக்காது.எவ்வளவு சதம் உண்மை எவ்வளவு சதம் கற்பனை என்பது படைப்பின் ரகசியம் – சுஜாதா
இக்கதையின் களம் திருமங்கலத்தில் நாங்கள் இருந்த தெருவே தான் . ஏறக்குறைய எல்லாக் கதாப் பாத்திரங்களும் உண்மையே . எவ்வளவு தூரம் என்று சொல்லி கதையின் உயிரோட்டத்தைக் குறைக்க விரும்பவில்லை .
LikeLike
// அங்க இருந்த கூட்டத்தில யாருமே காப்பாற்ற முயற்சிகலையா ? //
பைத்தியாமாக இருப்பதின் அனுகூலமே பொதுப் பார்வையில் இருந்து கிடைக்கும் அதீத சுதந்திரம் தான் . சுற்றி நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் மட்டுமே எப்பொழுதும் .
LikeLike
gud one man…
LikeLike
Super.. romba touching’a irukku…!
LikeLike
nandri vikram 🙂
LikeLike