Tags

,

வெயிலுக்கு முன்பே பனி பெய்திருந்த அந்நாளில் அவளைச் சந்தித்தேன் ..

தெருவினைத் தெளித்து வரைந்து கொண்டிருந்தாள் . கொஞ்ச நேரம் நின்று நனைத்து கொண்டிருந்தேன் .

பனியின் படலம் திரையிட்டு இருந்தும் , அவள் மட்டும் தெரிந்தாள் ஓவியம் போலவே .

மின்னல் அவள் பெயரா ? கண்கள் பார்த்தேன் .ஆமாம் என்றன .

குளிரில் நடுங்கும் உதடுகள் பார்த்தேன் .அதிலிருந்த வரிகளில் உதிர்ந்து கொண்டிருந்தன எனக்கான கவிதைகள் .

அணிந்திருந்தது அவளுக்கான பிரத்யேக ஆடையா இல்லை ஆடைக்கான பிரத்யேக அவளா ??

நெற்றி முன் விழுந்த முடி , தேடி வந்து கை தள்ள ; மீண்டும் என்றேன் .

ஒருமுறை பார்த்தாள் . திரும்பியே சிரித்தாள் .நொடியினில் மறைந்தாள்

தனியே நின்றேன் .

ஐயோ இதன் பேர் என்ன வென்றேன் ?

காதல் காதல் காதல் ..காதோரம் சொல்லிப் போனது காற்று .

பெயர் வைக்க ஆளின்றி ..மீண்டும் பிறந்தேன்

காற்றில் தவழ்ந்தேன் .

அறிமுகமில்லா தெருக்களில் தேடித் திரிகிறேன் .

அதிகாலைப் பனியினை அவளென்று அணைக்கிறேன் .

அவள் நினைவினில் புரள்கையில் இரவினில் கேட்டிடும் இசை மட்டும்

அழைத்துச் செல்கிறது அவளிடம் என்னை .

ஒருமுறை படித்து விட்டு ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன் . அது பிரசுரமான அடுத்த வாரத்தில் அவளிடமிருந்து எனக்கு அந்த மின்னஞ்சல் வந்தது . மின்னஞ்சலைப் பற்றிச் சொல்லும் முன் என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது .

ஒரு தனியார் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் ராமநாதன் என்கிற நான் , ரியான் என்கிற பெயரில் பத்திரிக்கைகளில் கதை கவிதை எழுதும் நான் இரண்டுமே ஒரே ஆள் என்றாலும் , ரியானைத் தெரிந்திருக்கின்ற எல்லார்க்கும் ராமனாதனைத் தெரிந்திருக்க துளியும் வாய்ப்பில்லை .ஏனெனில் ரியானின் எழுத்துக்கள் அவனுக்குக் கொடுத்திருக்கும் பிம்பத்திற்கு துளியும் சம்பந்தமில்லாதவன் ராமநாதன் .

இப்போதைக்கு இது மட்டும் போதும் . என்னைப் பற்றிய தன்னிரக்கக் கதையல்ல இது என்பதால் என் தோற்றம் அவ்வளவு முக்கியம்மல்ல . கதையின் போக்கில் தேவை என்றால் பார்த்துக் கொள்ளலாம் .

மீண்டும் மின்னஞ்சல் .

அன்புள்ள ரியான் ….

நான் உங்கள் வாசகி .. நீங்கள் சமீபத்தில் எழுதிய கதையின் நாயகி பெயர் தான் என்னுடையதும் . நான் நேரடியாக விசயத்திற்கு வருகிறேன் .அந்த பனியில் நனைந்திருந்த ஓவியம் நானாக இருக்க விருப்பப் படுகிறேன் .என்னை எந்த அறிமுகமில்லாத தெருவிலும் தேட வேண்டாம் . பிரியமிருந்தால் பதிலனுப்புங்கள் . சந்திக்கலாம் .

இப்படிக்கு ,

உங்கள் ….

முதலில் படித்த பொழுது உங்களைப் போலத்தான் எனக்கும் சிரிப்பு வந்தது . இதற்கு முன்பு நிறைய முறை பட்டாகி விட்டது . என் மேல அதிக அன்பு கொண்ட , என் நண்பனென சொல்லித் தெரியும் எவனாவது ஒருவனின் வேலையாக இருக்கும் எனத் தான் தோன்றியது . அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று தான் நினைத்தேன் .ஆனால் அடுத்த வந்த ஒரு மாதத்தில் நடந்த கதையே வேறு ..

சிட்டி சென்டரில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் . வினோதமான உலகம் இது . ஆண்களும் பெண்களும் அடுத்தவர் துணையின்றி நடக்க முடியாது என்பதைப் போல ஒட்டிக் கொண்டிருந்தனர் . எத்தனையோ முறை வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன் . உள்ளே வரத் தோன்றியதில்லை .

என் கதைகளில் எத்தனையோ பேர் காத்திருக்கையில் அவர்கள் அவஸ்த்தையை வர்ணித்திருக்கிறேன் . எல்லாமே மிகையன்று தோன்றுகிறது . நான் இன்று உடுத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் .. ஷூ .. எல்லாமுமே ..இங்கே வர இதையெல்லாம் போட்டுக் கொண்டாகவேண்டும் .

“சார் பதினொண்ணாம் நம்பர் ஷூ எல்லாம் வரதில்ல .. இது ஒண்ணு தான் இருக்கிறது ”

“இது தான் எனக்கு சரியா இருக்குங்கறதுக்காக எனக்கு பிடிக்காததை எப்படி எடுக்க முடியுங்க “

கடைசியில் அதைத் தான் எடுத்தேன் . சொல்ல வேண்டாம் என்று தான் பார்த்தேன் . ஆமாங்க நான் எல்லாத்திலும் , எல்லாவற்றிற்கும் பொருத்தமில்லாதவன் தான் . அன் ஃபிட் . எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் . ஆரம்பத்திலே சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று தான் பார்த்தேன் . என்ன செய்ய ?? சுய எள்ளல் கூட ஒரு மாதிரி பிடித்துப் போய் விட்டது .

இந்த ஒருமாதம் தான் என் வாழ்க்கையின் வசந்த காலம் .என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . எதுவுமே சரியாக அமையாத , அல்லது எதற்குமே சரியாக அமையாத எனக்கு செண்பா என்கிற பெண்ணின் வார்த்தைகளிலான உறவு பிடித்திருந்தது . நிச்சயம் அவள் உண்மை என்றே பட்டது . அவளிடம் பேசிய பின்பு இருந்த எல்லா சந்தேகமும் போய் , அவளைப் பார்க்கும் ஆவலில் தான் எனக்கு சம்பந்தமில்லாத இடத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன் .

என் கதைகள் எல்லாம் படித்திருக்கிறாள் . சில கவிதையின் வரிகளைக் கூட மனப்பாடமாகச் சொன்னாள் . எனக்கே நினைவில் இல்லாதவைகள் . என் மேல் , என் எழுத்துகளின் மேல் நிறைய ஆர்வம் இருந்தது ,இல்லை இருந்தது போல் காட்டிக் கொண்டாள் . அவள் பொய் சொல்வதாக இருந்தால் கூட எனக்கு பிடித்து தான் இருந்தது . எல்லாமுமே பொய்யின் மேல் கட்டப் பட்டவைகள் தானே .

“நான் எப்படி இருப்பேன்னு ஒரு தடவை கூட கேட்கலையே .. என்னைப் பாக்கணும்னு உங்களுக்குத் தோணவே இல்லையா ??? ” மின்னஞ்சல் பரிமாற்றம் குறுகிய காலத்திலேயே முடிந்து , அலைபேசியில் அடிக்கடி பேசிக் கொள்ளும் கட்டத்தில் அவளிடமிருந்து வந்த கேள்வி . அந்தக் குரலைக் கேட்டு விட்டு அந்த இரவு மூன்று கவிதைகள் எழுதினேன் . பதில் கூட பேச விடாமல் அடிக்கும் குரல் அது .

காத்திருந்து பார்த்து விட்டு அவளே சொன்னாள் . “உங்கள் தேவதைக் கதை ஒன்றில் வரும் ஓவியா போல இல்லாவிட்டாலும் பரவா இல்லாமல் இருப்பேன் ” என் கதாப்பாத்திரம் ஒன்று எழுத்து வந்து பேசுவதைப் போலவே இருந்தது .

பேசிக் கொண்டே இருப்பதில் என்ன தான் இருக்கிறது என பலமுறை யோசித்திருக்கிறேன் . எல்லாமுமே அதில் தான் இருக்கிறது என்று தோன்றுகிறது . எத்தனை நாள் தான் பார்க்காமல் பேசிக் கொண்டே இருப்பது .. இந்த ஞாயிறு நிச்சயம் சந்திக்கிறோம் என இடத்தையும் , நேரத்தையும் கூட அவள் தான் முடிவு செய்தாள் .என்னிடம் ஏதோ சொல்லப் போகிறாளாம் .. அது ஏற்கனவே எனக்கு தெரியவும் செய்யுமாம் . எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தெரிந்து கொள்வதற்காகக் காத்திருக்கிறேன் .

ஒரு எழுத்தாளனின் கதையைப் படித்து விட்டு , அவன் மேல் ஒருத்தி காதல் கொள்வதாய் எழுதி வைத்த கதையை பாதி எழுதி விட்டு , பிடிக்காமல் வைத்திருக்கிறேன் . எனக்கே பைத்தியக்காரத்தனமாய் பட்டதால்.அதைப் போய் எழுதி முடிக்க வேண்டும் .

நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்குப் பக்கத்தில் அவளும் அவள் தோழியும் வந்து நின்று பத்து நிமிடங்கள் ஆகிறது . கீழே நுழைவாயிலையே அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டிருந்தாள் . என்னைக் கண்டு கொள்ளவேயில்லை .காரணம் நான் தான் .

அடையாளத்திற்கு நீல நிற ஜீன்சும் , நீல நிற சட்டையும் அணிந்து வரச் சொல்லியிருந்தாள் . என்னிடம் இருக்கும் ஒரே ஜீன்ஸ் கருப்பு நிறத்தில் .. அது தான் அமைந்தது . எனது உயரத்திற்கும் , இடுப்பளவிற்கும் பொருத்தமான ஜீன்ஸ் இல்லையாம் . நீல நிற சட்டையும் கிடைக்காததால் வெள்ளையில் வந்திருந்தேன் .

பத்து நிமிடமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் . இந்த ஊதா நிற சுரிதார் எவ்வளவு அழகு ..அணிந்திருந்தது அவளுக்கான பிரத்யேக ஆடையா இல்லை ஆடைக்கான .. ஒரு முறை மெல்ல நானே சிரித்துக் கொண்டேன் .

அவளாக என்னை எப்பொழுது கண்டு பிடிக்கிறாள் பார்க்கலாம் என உட்கார்ந்திருந்தேன் . மேலும் அவர்கள் என்னைப் பற்றி ஏதாவது பேசுகிறார்களா எனக் கேட்பதில் ஒரு ஆர்வம் இருந்தது .

“நெஜமாவே சொல்லப் போறியாடி ??”

“இன்னமும் முடிவு பண்ணல “

“முடிவு பண்ணலியா ?? அப்பறம் ஏன் அவன வர சொன்ன “

“ஆள் எப்படி இருக்கான்னு பார்க்காம , எப்படி சொல்றதாம் “

எனக்கு என்னவோ செய்யத் துவங்கியது .

“எப்படி இருப்பான்னு  நெனைக்கற ??”

“அவன் எழுத்துகளை எல்லாம் வச்சு பாக்கும் போது ரொம்ப ரசனையானவன்னு தோணுது .. கண்டிப்பா ரொம்ப அழகா இருப்பான் .. கம்பீரமாவும் .. அவன் எழுதின போலீஸ் கதை படிச்சிருக்கியா நீ ?? எனக்கு கொஞ்சம் உயரம் அதிகமா இருக்கணும் .. இருப்பான்

இன்னமும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள் . ஏன் கதையில் வரும் ‘ நான் ‘ வேறு , உண்மையான நான் வேறு .. எழுத்திற்கும் உருவத்திகும் சம்பந்தம் இல்லை எனக் கத்த வேண்டும் போல் இருந்தது .

“சரி ஒரு வேளை , நீ எதிர் பாக்கற மாதிரி இல்ல , ” குரலைத் தாழ்த்திக் கொண்டு “இது மாதிரி இருந்தான்னா ” என்னைக் காட்டினாள் . நான் வேறெங்கோ பார்ப்பது போல் பாசாங்கு செய்தேன் . காது மட்டும் அங்கேயே இருந்தது .

“வந்ததுக்கு ஆட்டோக்ராப் வாங்கிட்டு போக வேண்டியது தான் ” சொல்லி விட்டு இருவரும் சத்தமாகச் சிரித்தார்கள் .சிரிக்கும் எல்லா பெண்களையும் அறைய வேண்டும் போல இருந்தது . கிடைத்த ஒரு வினாடியில் உலகத்தில் உள்ள அத்தனை தகாத வார்த்தையையும் போட்டு மொத்தப் பெண்களையும் திட்டினேன் .எனக்கு மட்டும் ஏன் இப்படி ?? ஆசைப்பட்ட உடை கூட பொருத்தமில்லாமல் போகும் போது .. மீண்டும் அந்த கழிவிரக்கம் ஒட்டிக் கொண்டது ..

நேராக ஒரு வந்தனம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று நினைத்து எழுந்தேன் .

“இதிலென்னடி தப்பு .. அவன் எழுதரக் கதைகள்லையே அழகான தேவதை மாதிரி இருக்கற பொண்ணுக்கும் , ராஜ குமாரனுக்கும் தான் காதல் வருது .. எல்லாருக்கும் அது தான பிடிக்குது .. காதல் சாதாரணமானவங்களுக்கு இல்ல .. அது தானே அதுக்கு அர்த்தம் .. சரி நீயே சொல்லு .. நான் அழகா இல்லாம இருந்தான்னா அவன் ஒத்துப்பானா முதல்ல … “

கொஞ்ச நேரம் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தேன் . பின் எழுந்து அவர்களிடம் சென்றேன் .

“மிஸ் செண்பா ??”

“எஸ் .” திரும்பினாள் .

“என் பேர் ராமநாதன் .. ரியான் கூட வேலை பாக்கறேன் .. அவரால இன்னைக்கு வர முடியாதுன்னு சொல்ல சொன்னார் “

“ஏன் .. ” அவள் முகத்தில் சின்ன தடுமாற்றம் தெரிந்தது .காட்டிக் கொள்ள விரும்ப வில்லை .

“அவருக்கு விருப்பம் இல்லையாம் .. ” தலையைக் குனிந்து கொண்டே சொன்னேன் .

“வேற என்ன சொன்னார் உங்க ரியான் ??” அவள் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது .

“அவர் எழுதப் போற அடுத்த சிறுகதைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னார் ” .

—————————————————————————————————————————————————————————