Tags

,

“எனிதிங் எல்ஸ் விவேக் ??”

தினமும் இந்திய நேரப்படி மாலை 5.30 ற்கு நடக்கும் ஸ்டேடஸ் காலில் முடியும் தருவாயில் தோரணையாகக் கேட்டது மணிகண்டன் . ஆன் சைட் கோ-ஆர்டினேட்டர் .லண்டனில் இருந்துகொண்டு , இங்கே சென்னையில் அவருக்கு கீழே இருப்பவர்களைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார் . வயது சுமார் 30.மூக்குக் கண்ணாடியையும் தொப்பையையும் பார்க்கையில் அதிகமாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் திருமணமாகி மனைவியை ஊரில் விட்டு விட்டு தனியே ஹனி மூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் . இந்த கூடுதல் தகவல் அவரது கடமை உணர்வையும் , போங்கடா நீங்களும் உங்கள் வேலையையும் என விட்டு விட்டு வர முடியாத கையலாகாதனத்தையும் சொல்வதற்காக நிச்சயம் அல்ல .

“ஒன்னும் பிரச்சனை இல்ல மணி . அடுத்த வாரத்துக்குள்ள டெஸ்டிங் முடிச்சு யு.ஏ.டி அனுப்பிடலாம் .. அப்பறம் மணி இந்த ஃபிரைடே லீவ் வீணும்

குரலில் மட்டும் மரியாதையைக் குழைத்து , தூரத்திலிருப்பவனுக்கு முகமா தெரியப் போகிறது என்ற மகா தைரியத்தில் முகத்துள் முறுக்கையும் காட்டி , விடுமுறைக்கு கெஞ்சிக் கொண்டிருப்பது விவேக் . வயது 23 . முன்னந்தலையில் இன்னும் கொஞ்ச நாளில் மணியை முந்தி விடுவேன் என்பவன் .இந்த மென்பொருள் துறையில் பரிணாம வளர்ச்சியே இப்படித்தான் . முன்னந் தலையிலும் முட்டிக் கொண்டு வரும் தொப்பையிலும் வெகு சீக்கிரம் வந்து முடிந்து விடும் . குழந்தை பிறந்த உடனேயே அப்பா என்று சொல்லி சொல்லி வளர்த்து விட்டு விட வேண்டும் . இல்லை வாயைத் திறந்த உடனேயே அழகாக அங்கிள் என்று சொல்லி விடும் .

“லீவா அதான் போன வாரம் வேற போட்டீங்களே ..”

“மணி , அது போன மாசம் .. வேளச்சேரில ரொம்ப மழை வந்து ..”

“சும்மா கதை சொல்லாதீங்க .. பிளைட்ல போற யாராவது போகும் போது எச்சி துப்பிட்டு போனாலே அங்க வெள்ளம் வந்திடுமே ” பெரிதாக சிரித்தார்

கூடவே சிரித்துக் கொண்டு “ஆமாம் மணி போட்டிங் எல்லாம் கூட விட்டாங்க .. இன்னும் 6 காஷுவல் லீவ் அப்டியே இருக்கு ..”

“இருக்கட்டும் விவேக் .. வேலை தான் முக்கியம் .. இப்போ நான் இங்க இல்லியா என் மிஸ்ஸஸ ஊர்ல விட்டு வந்து இங்க தனியா .. மொதல்ல வேலைய முடிங்க .. அப்பறம் ஒரு நாள் என்ன , ஓரு வாரம் கூட லீவ் எடுத்துக்கோங்க “

இதைத்தான போன ப்ரஜெக்ட்கும் சொன்ன . முடிஞ்ச அடுத்த நாளே இந்த ப்ராஜெக்டக் குடுத்து அனாலிசிஸ் ஆரம்பிக்கச் சொல்லிட்டீட்ட..

“இல்லைங்க மணி சார் , பெரியப்பா பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்றாங்க .. கண்டிப்பா போயாகணும் ” தயாராக ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்திருந்த பொய்யை எடுத்து விட்டான் . பொய் சொல்லுவது எப்படி என அவனிடம் தான் கேட்க வேண்டும் .

“பெரியப்பா பொண்ணுக்குத் தான .. உங்களுக்கு இல்லேல .. வேலை தான் முக்கியம் ..ஏன்னா இப்போ நான் இல்லியா …. ” மறுபடியும் அதே பல்லவியைப் பாடினார் .ஷில்பாவிடம் சொல்லி விட்டு அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான் .

“என்னடா சீக்கிரம் வந்திட்ட.. லீவ் கெடச்சிட்டதா .. நான் சொல்லிக் குடுத்த பொய்ய கரெக்ட்டா சொன்னியா .. ஏன்னா பொய் சொல்றது முக்கியம் இல்ல .. அதை சரியான இடத்தில சரியா சொல்றமா அப்டிங்கறது தான் முக்கியம் ”

என்கிற ஸ்ரீதருக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் அவனைப் பற்றிய எந்த வருணனைகளும் வேண்டாம் . உங்களுக்கு தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் என்றால் இந்த ஒன்று போதும் . அவனிடம் இருப்பது எல்லாமே கொஞ்சம் ஃபான்சி ரகப் பொய்கள் .. கூடவே பொய்மையும் வாய்மையிடத்து என்ற வள்ளுவர் குறளும் . மீதி 1329 குள்களும் வள்ளுவர் தான் எழுதினாரா எனக் கேட்பான் .

“எங்கடா நீ வேற .. அவன் பொண்டாட்டி இல்லாம அங்க குளிருல தனியா கஷ்டப் படறானாம் .. எனக்கு லீவ் தரலைன்னா சரிஞ்ச அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் நட்டுக்குமாம் .. “

“என்னடா சொல்ற ??”

“அடப் போடா லீவ் தர மாட்டேனுட்டான் “

“சரி விடு அன்னைக்கு காத்தால ஷில்பாக்கு கால் பண்ணி உனக்கு எப்பவும் வருமே வயித்த வலி அதை சொல்லி லீவ் போட்ரு .. “

“அது முடியாது டா .. நான் ரேகாவ தான் பார்க்கப் போறேன்னு அவளுக்குத் தெரியும் .. என்கிட்டே சரின்னு சொல்லிட்டு , ரேட்டிங் காக என்னைப் போட்டுக் குடுத்திடுவா “

சொல்லிக் கொண்டே தன் அலைபேசியை எடுத்து ஒற்றத் தொடங்கினான் .

ஓடிச் சென்று அதைப் பிடுங்கி “ஹே ஹே இரு .. யாருக்கு ரேகாவுக்கா ??” ஸ்ரீதர் .

“ஆமா “

“பார்க்க வர முடியாதுன்னு சொல்லப் போறியா ??”

“ஆமா”

“ஏன்டா பைத்தியமா உனக்கு .. இன்னைக்கு திங்கள் கிழமை .. இன்னும் நாலு நாள் இருக்கு .. அவகிட்ட அது வரைக்கும் சண்ட போடணும் னு ஆசையா உனக்கு .. நாலு நாள்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம் .. “

“கண்டிப்பா லீவ் கிடைக்காது டா .. எனக்கே கூட நெறைய வேலை இருக்கப் போகுதுன்னு தான் தோணுது “

” பரவா இல்ல .. இதை எதுக்கு அவகிட்ட சொல்ல போற “

“இப்போ என்ன தான் சொல்லச் சொல்ற ..”

“புதுசா வேற என்ன சொல்லப் போறேன் .. பொய் “

“நாலு நாளா .. என்னால ஏமாத்த முடியாது “

“டேய் அரிச்சந்திரன் அக்கா பைய்யா .. இப்போ நீ உண்மைய சொல்ற .. அவ என்ன பண்ணுவா ?? திட்டிட்டு ஃபோன கட் பண்ணுவா .. நீ என்ன பண்ணுவ .. மறுபடியும் பண்ணுவ .. சண்ட வரும் .. நாலு நாள் அடிச்சுபீங்க .. உன்னால வேலையும் பண்ண முடியாது .. இதுக்கு மூணு நாள் பொய் சொல்லிட்டு , சந்தோஷமா இருந்திட்டு நாலாவது நாள் மட்டும் சண்டை போடுங்க .”

விவேக்கிற்கும் அது சரி என்றே பட்டது .

“அப்போ பொய் சொல்றது தப்பில்லைங்கரியா “

“தப்பே இல்ல .. திருவள்ளுவர் என்ன சொல்லிருக்கார்னா

“எனக்கு வேலை இருக்கு “

விவேக் ஃபோன் பேசச் சென்று விட்டான் .வெள்ளிக் கிழமை கண்டிப்பா பார்க்கலாம் என்றான் அவளிடம் . ஒரு நாள் முழுவதும் என்னென்ன செய்யலாம் , எங்கே போகலாம் எனத் திட்டமிட்டார்கள் .பொய் சொல்வதற்கு நன்றாக இருந்தது . வைப்பதற்கு முன்னாள் மிஸ் யு என்றான் . சங்கர் வாங்கி வந்த தோசை சாப்பிட்டான் . கொஞ்ச நேரம் கம்ப்யூடர் கேம்ஸ் ஆடினான் . பிறகு தூங்கிப் போனான் .

மூன்று நாட்கள் திட்டமிடுதலும் , மிஸ் யு வும் , பக் ஃபிக்ஸ்சிங்கும் , வீஸா ப்ராசசிங் பற்றிய பேச்சுமாகச் சென்றது .

நான்காவது நாள் ரேகாவிடம் என்னால் வர முடியாது என ஃ போன் பண்ணிச் சொன்னான் . முன்பே சொல்வதற்க்கென்ன என்றாள் . பொய் சொன்னேன் என உண்மையச் சொன்னான் . இனிமேல் பேசாதே என வைத்து விட்டாள் . மறுபடியும் அழைப்பதற்கு முன் , மணியிடமிருந்து அழைப்பு வந்தது . என்ன விவேக் பண்ணிருக்கீங்க , எல்லாம் ஒரே பஃகு .. ரன் பண்ணா எர்ரரா அடிக்குது .. இன்னைக்கு போறதுக்குள்ள முடிச்சு குடுத்திட்டு போங்க என்றார் . வேலையில் ரேகாவுடன் சண்டையிட்டதையே மறந்து போனான் .

மாலை ஒரு மாதிரியாக எல்லாவற்றையும் முடித்து வைத்திருக்கையில் , ரேகாவிடமிருந்து குறுந் செய்தி வந்திருந்தது . இனிமேல் என்னோடு பேசாதே . உன்னைப் பார்க்கவே பிடிக்க வில்லை . என்னை ஏமாற்றி விட்டாய் என்கிற ரீதியில் .

ஸ்ரீதருக்கு ஃபோன் செய்தான் .

“ஃபூல் , உண்மைய சொல்றானா , பொய் சொன்னேன்னா சொல்வாங்க.. ஒரு பொய் சொல்லத் தெரியல .. சரி நான் சஞ்சனா கூட காஃப்பி ஷாப் ல இருக்கேன் .. அப்பறம் பேசறேன் ” என வைத்து விட்டான் .

விவேக்கிற்கு தலை வலித்தது . சஞ்சனாவாம் .. அப்படி ஒரு பெண் இருக்கவே போவதில்லை .. கேட்டால் அதற்கும் ஒரு கதை சொல்லுவான் . யாரையும் பிடிக்கவில்லை . பார்க்கும் எல்லாரையும் குறைந்த பட்சம் ஒரு கெட்ட வார்த்தை சொல்லியாவது திட்ட வேண்டும் போல் இருந்தது .

“ரொம்ப எரிச்சலா இருக்கா .. எதுவுமே பிடிக்கலியா .. நேர பக்கத்திலிருக்கற ரயில்வே ஸ்டேஷேன் போ . நேரா கடைசி ஸ்டாப்புக்கு டிக்கெட் வாங்கு .. அங்க இருந்து திரும்ப இங்க வா .. எல்லாம் சரி ஆய்டும் .. சாயங்காலம் எலெக்ட்ரிக் ட்ரைன்ல , கம்பியப் பிடிச்சிட்டு தலைய காத்துக்கு குடுத்திட்டே வந்து பாரு .. ஹெவன் ” ஸ்ரீதர் அடிக்கடி சொல்வான் .

நேராக திருவான்மியூர் நிலையத்திற்கு போய் பீச்சிற்கு எடுத்துக் கொண்டான் . மேலே நடை மேடை இருக்கையில் வண்டிக்காக காத்திருந்தான் .இன்னமும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது . யாருமே புரிந்து கொள்ளாதவர்கள் . இந்த வெள்ளிக் கிழமை பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும் . எல்லாம் ஸ்ரீதரால் . பொய்யாம் பொய் . கோபம் மணி மேல் திரும்பியது . ஒரு நாள் விடுப்பு கொடுத்தால் என்ன . என்னுடைய விடுப்பு நான் எடுக்கிறேன் . தர முடியாது எனச் சொல்ல இவன் யார் . தலையைக் கையில் பிடித்துக் கொண்டு வண்டி வருகிறதா எனப் பார்த்தான் . நிலையம் கொஞ்சம் காலியாக தான் இருந்தது . இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குச் செல்பவர்கள் கூட்டம் அதிகரித்து விடும் .

நான்கைந்து பள்ளிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் . ஓட்டப் பந்தயம் வைப்பது போல் நின்றார்கள் . ஒன் .. டூ . த்ரீ .. என அவர்களாகவே சொல்லிக் கொண்டு ஓடத் துவங்கினார்கள் .என்ன இனிமையான வாழக்கை .

என் இருக்கை தான் முடிவிடம் போல . ஒரு சிறுமியும் சிறுவனும் மிக அருகில் வந்தார்கள் . கடைசியில் சிறுமி கோட்டைத் தொட்டு விட்டாள் . யே என எல்லாரும் கத்தினார்கள் . நான் தான் முதலில் வந்தேன் என்றான் சிறுவன் . எல்லாரும் இல்லை என்றார்கள் .

ஒரு ஆர்வத்தில் விவேக் , பாப்பா தான் முதல்ல வந்தது எனவும் அழத் துவங்கிவிட்டான் சிறுவன் . விவேக்கிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது . என்னென்னமோ சொல்லி சமாதானப் படுத்தியும் அவன் அழுகையை விடுவதாகத் தெரியவில்லை .

“நீ தாண்டா முதல்ல வந்த , இந்த அங்கிள் பொய் சொல்றாரு ” என்றாள். கொஞ்சம் அழுகையை நிறுத்தினான் .

விவேக்கும் சேர்ந்து கொண்டு “ஆமாம் நான் தான் பொய் சொன்னேன் . அங்கிள அடிச்சிடலாமா ” , எனத் தன்னைத் தானே அடிப்பது போல பாசாங்கு செய்து கொண்டான் .அந்த சிறுவனுக்கு சிரிப்பு வந்து விட்டது . எல்லாரும் சிரித்தார்கள் .விவேக்கும் கொஞ்ச நேரம் சிரித்தான் ,

பின் இரண்டு பொய்கள் சொன்னான் .

பொய் -1 ரேகாவிற்கு .

” நான் கண்டிப்பா நாளைக்கு உன்ன பாக்க கோவை வரேன் .. சும்மா ஒரு சர்ப்ரைசுக்கு தான் வரலைன்னு பொய் சொன்னேன் .. நீ கோவிச்சுகிட்ட .. மிஸ் யு 😦 “ என்ற குறுஞ் செய்தி .

பொய் -2 ஷில்பாவிற்கு .

“நாளைக்கு எனக்கு வயித்த வலி .. என்னால வரமுடியாது “

—————————————————————————————————————–