Tags

தோழன் கூற்று   

 

 

 

எங்கும் தெரிந்திருக்கும் நிலா போல்

இசை யெங்கும் நிறைந்திருக்கும் இவ்வூரில்

முடிவிலாப் பிரிவொன்றின் லயத்திலமைத்து

காற்றைப் பாடியிருக்கும் மௌனத்தின் மொழியாளே

அவன் காணாக் கண்களால் ஆவது யென்னவென

இமைகள் பூட்டாதே  ! 

 

சற்றே வெளி வந்து பார் .

பௌர்ணமி யாகாது இரண்டாம் பிறை போலாவது

ஆழிலைக்கண் திறந்து சிறு பார்வை பாராயோ வென

சாரளத்துத் துளைகள் நோக்கி வதங்கி

முல்லைக் கொடிக ளெலாம் பூக்களாய்ப் புலம்பியிருக்கின்றன

உன் வீட்டு முற்றமெங்கும் .

 வருந்தாய் !

இடர் உருகிக் கசியும் கருநீல விடியலொன்றில்

வெளிர் பனிப் புகை புணர்ந்து காதற் செய்யும் நேரமொன்றில்

வில்லொன்று விரலிலே யேயிருக்க

சொல்லொன்றே போதும் தரணி தாழ் பணிந்திருக்க

யாவர்க்கும் பிரியமான  பெருங்கோ விற் நாடன்

செம்புரவி யேறி வந்து வானிற் இச்சை படிப் பறந்திருக்கும்

பறவையெலாம் பார்த்துக்  களித்திருக்க

தேவியுன்  காந்தற் கரம் பற்றிக் கவர்ந்து

காற்றோடு கலந்து போனதாய்க்

கனாக் கண்டேனடி தோழி !