Tags

, ,

 

 

 

நன்றி : உயிரோசை.உயிர்மை.காம்

              சற்றுமுன்பு துரத்தப் பட்டுக் கொண்டிருந்ததற்கான எந்தச் சலனமும் இன்றி இரயில் நிலையத்திலிருந்து சாலையைக் கடக்கப் போடப்பட்டிருந்த ஃப்ளை ஓவரின் மேல் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறேன் . திரும்பிப் பார்த்தேன் . அவளைக் காணவில்லை . நிச்சயமாக அவள் என்னை விடப் போவதில்லை என்று தெரிந்தும் தற்காலிகமாகத் தப்பித்த நிம்மதி.பாலத்தின் மேலேயே நின்று கொண்டேன் .எந்த அரவமும் இல்லாதது நிம்மதியாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது .இந்தத் தனிமை தானே இத்தனை வருடங்களாய் என்னுடன் இருந்து வருகிறது . அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் .எந்த நேரத்திலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் அவள் வரக்கூடும் .

 

          ஒரு சிகிரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே  பாலத்தின் அடியில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் மேற்கூரையை வெறித்துப்பார்கிறேன். யாராவது பின்னாலிருந்து  தள்ளிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் .. தானாகக் குதிக்கத்தான் தைரியம் இல்லையே .சிகிரெட் கரையக் கரைய அவளும் அந்தப் புகை போலவே காற்றில் கரைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது .

 

எனக்கும் அவளுக்கும் என்ன உறவு . அவள் பெயர் அவந்திகா என்பது வரை மட்டுமே அவளைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மை .  ஆண் பிள்ளை போல சட்டை போட்டுக் கொண்டு , முடியைக் கத்தரித்து வைத்துக் கொண்டு பெண்களுக்கான பிரத்யேகங்கள் எதுவும் போதிய அளவு இல்லாதவள். ஆண்கள் கூட்டத்தில் கலந்துவிட்டால் அவளைச் சுலபமாக அடையாளம் காண்பது கடினம் . ஆண்கள் தங்களுக்கான அடையாளங்களை மாற்ற வேண்டிய தருணம் இது என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள் . ஆண்மை கலந்த அழகு . ஆனாலும் அழகு தான் .

 

அவளை மிகவும் வெறுக்கிறேன் . ஆனால் அவளில்லாமல் என்னால் இருக்கமுடியுமா எனக்கேட்டால் நிச்சயம் பதில் சொல்ல யோசிப்பேன் . நண்பர்களின் அன்யோன்யமும் அருகாமையும் கூட சப்ஜெக்ட் டு சேஞ் ஆகிப் போன பின்பு அவளுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதை நானே கூட கேள்வி கேட்க முடியாது . தெரியாமல் ஓரிருமுறை சுட்டுக் கொண்ட பின் , அதுவே பழகிப்,அந்த போதைக்காகவே தானே சுட்டுக் கொள்ள நெருப்பை நோக்கி விரல் நீட்ட பழகி விட்டிருக்கிறேன் .

 

               தொலைவில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு நடுவே படுக்கையை விரித்துக்கொண்டிருக்கிறது சூரியன்.படிகளில் மெல்ல இறங்கும் என்னிடம் வீட்டிற்குச் செல்லும் எண்ணம் துளியும் இல்லை .

 

 

                         நகரத்தின் எதோ ஒரு இருண்ட தெருவில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன் . வெளிச்சம் படுவதை முற்றிலும் தவிர்க்க முயல்கிறேன்.  “சற்று முன்பு நீ படுக்கையில் போட்டுப் புரட்டியவளின் உடலில் இருந்து உயிரை எடுத்துவிட்டு வந்திருப்பவள் ஆண்மையில்லாதவனே ” இந்த வரிகளில் தான் நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு . நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள் .

 

மோகனவிற்குப் பிறகு முதன் முறையாக என் படுக்கையறையில் வேறொரு பெண் இருந்தாள். என் வீடு , என் படுக்கை இருந்தும் ஒரு அந்நிய இருப்பிட உணர்வு . அவள் இயல்பாகத் தான் இருந்தாள் .அவள் புன்னகையை மட்டுமே ஆடையாக அணிந்திருந்தாள் என்ற சுஜாதாவின் வரிகளை அவள் இருக்கும் வரை நினைவு படுத்திக் கொண்டே இருந்தாள் .எப்படி இவளால் எவனோ ஒருவனின் படுக்கை அறையில் , ஆடை பற்றிய கூச்சம் துளியுமில்லாமல் ஏதோ பிறந்த குழந்தையின் மனநிலையில் இருக்க முடிகிறது .கேட்டதற்கு பெண்கள் ரகசியமென்று கூறிப் பெரிதாகச் சிரித்தாள் .அன்று நிச்சயம் என் கைகள் கட்டிப் போடப்படவில்லை ,இருந்தும் சும்மாவே இருந்தேன் . எல்லாம் அவளே தான் பார்த்துக் கொண்டாள் .அந்த இருளின் ஒவ்வொரு அசைவுகளும் ஸ்பரிசங்களும் இன்னும் என் நினைவில் உள்ளன .

 

         உனக்கு நிறைய வேர்க்கிறது. பெண்களுக்குப் பிடிக்காது என்றாள். ஏன் கைகளை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறாய் .நிறைய ஆண்களைப் பார்த்திருக்கிறேன் . விளக்கணைக்கும் வரை தான் சாதுக்கள் . நீ என்ன இருட்டிலும் பிடித்து வைத்தது போல் இருக்கிறாய் .மருத்துவரைப் போய்ப் பார் ஆண்மையில்லாதவனே . போய்விட்டிருந்தாள் . அவர்கள் சொல்வதெல்லாம் பொய்  என்று நிரூபிக்கவே இந்த எட்டு மாதங்களில் நிறைய பேரை வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறேன் .ஆனால் வியர்ப்பது மட்டும் நிற்பதேயில்லை .

 

       சரியாக அவள் சென்று விட்ட சில நிமிடங்களுக்குப் பின் அவந்திகா வந்தாள். வெளியே சென்றவள் கதவைப் பூட்டவில்லை போலும் . நேராக அவந்திகா  என் படுக்கை அறைக்குள்ளேயே வந்து விட்டிருந்தாள். வாசலில் நிழலாடியதைப் பார்த்து மீண்டும் அவள் தான் வந்து விட்டாள் என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தேன்.மிகத் திருத்தமாக உச்சரித்தாள். “உன்னோடு பேச வேண்டும் .ஆடைகளைப் போட்டுக் கொண்டு வா ஆண்மையில்லாதவனே”

 

 

ஆண்மையில்லாதவன் … ஆண்மையில்லாதவன் … ஒரு குதிரையின் லகானைச் சுண்டுவது போல இந்த வார்த்தையைச் சரியான சாட்டைப் பிரயோகமாகப் பயன்படுத்துகிறாள் என்மேல் .ஒவ்வொருமுறை இதை அவள் உச்சரிக்கையில் எல்லாம் விர்ரென்று கோபம் வருகிறது .நன்றாக வியர்த்துவிடுகிறது .முதுகில் யாரோ சுளீர் என் சாட்டையால் அடிப்பது போன்ற வலி .ஆனால் அவளை எனக்குப் பிடிக்கவே செய்கிறது.

 

  பாலத்தின் அடியில் ஜாஸ்மினின் பிணத்தை அவள் காட்டுவதாச் சொன்ன அன்று அவள் பின்னால் சென்றிருக்காவிட்டால் இருவரும் அவரவர் வழியில் சென்றிருந்திருப்போம் . இப்பொழுது ஒன்றும் செய்வதற்கில்லை.மிகத் துல்லியமாக ஒரு தேர்ந்த மருத்துவரின் நேர்த்தியில் அவள் கழுத்தை அறுத்திருந்தாள்.சற்று முன்பு என் படுக்கையில் என்ன்டுடன் தொட்டுக் கொண்டிருந்த உடல் இருண்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது .ஒரு மணி நேரத்தில் அவள் அதுவாகிப் போயிருந்தது ..

 

“இருளில் என்ன தேடுகிறாய் ?? அவள் பெயரையா ??”

 

எனக்கு நடுங்கத் துவங்கியது .வியர்த்து வழிந்தது .இந்த வாக்கியங்கள் ஜாஸ்மின் என்னிடம் சொன்னது . இவளுக்குத் தெரிந்தது எப்படி ??

 

படுக்கையில் உட்கார்ந்ததுமே சாவகாசமாக ஆடைகளைக் களைந்து பக்கத்தில் மடித்து வைத்துக் கொண்டாள்.

 

” இன்னமும் உன் பெயர் கூடக் கேட்கவில்லை .. அதற்குள் எப்படி ? “ 

 

“இருட்டில் என்ன என் பெயரையா தேடப் போகிறாய் ?? பெயர் சொன்னால் தான் உனால் முடியும் என்றால் ஜாஸ்மின் என்று வைத்துக் கொள் . நான் கூட மணம் வீசுபவள் தான்”

 

கடவுளே நான் கவனிக்கப் பட்டிருந்திருக்கிறேன் .என் படுக்கை அறையில் கூட . என் அந்தரங்கங்கள் குறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.திரும்பிப் பார்க்காமல் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன் .சொல்லச் சொல்லக் கேக்காமல் கூடவே வந்தாள். ” எல்லாமும் பார்த்துக் கொண்டுதானிருந்தேன் “இனிமேல் எறும்புகள் தான் அவள் உதட்டைக் கடிக்க முடியும் .ஆனால் அவளால் அறையத்தான் முடியாது ”

 

சத்தம் போட்டுச் சிரித்தாள் . நல்லவேளையாக வீதிகளில் யாரும் இல்லை.

 

எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள் .பேசிய எல்லாவற்றையும் கேட்டிருக்கிறாள். இருட்டில் கிறக்கத்தில் நான் உளறியதை அது போலவே பேசிக்காட்டியபடி வந்து கொண்டிருந்தாள் .

 

“நீ யார் ?? என் மனைவியின் வீட்டுக்காரர்கள் வேவு பார்க்க அனுப்பினார்களா ?? நான் தான் விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டேனே .. இன்னமும் ஆறுமாதம் தானே ” வீடும் வந்துவிட்டது .

 

“நீ பேசத் தான் லாயக்கு ஆண்மையில்லாதவனே ” குரலில் ஜாஸ்மினைக் கலந்து பேசிக் காட்டினாள் .

 

“ஆல் ரைட் , என்ன வேண்டும் இப்பொழுது உனக்கு”

 

“இது நல்ல பிள்ளைக்கு அழகு .. எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன .. மறுத்தால் மோகனாவிடம் பேச வேண்டியிருக்கும் .தேவைப் படாது என நினைக்கிறேன் .. வா  உள்ளே போய் பேசுவோம் .. இனி நாமிருவரும் நண்பர்கள் “  என்னிடம் சாவியை வாங்கிக் கொண்டு உரிமையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

காலில் கல் போன்ற ஏதோ ஒன்று இடறியது .இப்பொழுது எந்தத் தெருவில் இருக்கிறேன் என்று தெரியவில்லை . ஆனால் மொத்தமும் இருட்டாயிருப்பது மட்டும் பிடித்திருந்தது . ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை . தூரத்தில் ஒரே ஒரு விளக்குக் கம்பம் மட்டும் கடமைக்கு எரிந்து கொண்டிருந்தது .தூரத்தில் ஒரே ஒரு பெண் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தாள் .

 

” நலமா நண்பா ?? 

 

குரல் கேட்டுத் திரும்பினேன் .எனக்கு வெகு அருகில் அவந்திகா . குரூரச் சிரிப்புடன் அவந்திகா . ” என்னிடமிருந்து நீ தப்பவே முடியாது இன்று “  கையில் கத்தி வைத்திருந்தாள். ஓடத் துவங்கினேன்.எதிரே வந்து கொண்டிருந்த பெண் எங்களை பயந்து போய் பார்த்து ஓரமாய் ஒதுங்கி நின்றாள். இரவில் ஒரு பெண்ணால் துரத்தப் பட்டுக் கொண்டிருக்கும் ஆண் பார்க்க வினோதமாக இருந்திருக்கக் கூடும் .அந்தப் பெண்ணைக் கடக்கையில் ஓடிவிடு எனக் கத்திக் கொண்டே ஓடினேன். பின்னாலிருந்து அவள் குரல் துரத்திக் கொண்டே வந்தது . ஒரே ஒரு முறை நின்று திரும்பிப் பார்த்தேன் . பின் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன் .

 

 

இன்னமும் படபடப்புக் குறையவில்லை .வீட்டிற்கு வந்து கதவைப் பூட்டிக் கொண்டு அதன் மேலேயே சாய்ந்து கொண்டேன் .இரண்டு கைகளாலும் மாறி மாறி வியர்வையைத் துடைத்துக் கொண்டேன் .முதலில் குளிக்க வேண்டும் . படுக்கை அறைக்குச் சென்றேன் .

 

“இவ்வளவு நேரம் எங்கே சுற்றிக் கொண்டிருந்தாய் ??”  கைகளில் மாற்றுச் சாவியைச் சுற்றிக் கொண்டே கேட்டாள்.

 

ரொம்ப முன்னமே வந்துவிட்டாள் போல .ஆடை முழுவதும் ரத்தம் . இது ஒன்றும் புதிதில்லை . நான் எதுவும் பேச வில்லை . நடப்பது நடக்கட்டும் என குளியலறைக்குச் சென்று ஷவரைத் திறந்து விட்டு நின்று கொண்டேன் .

 

கதவைத் தட்டினாள். என்ன வேண்டும் என்றேன் .

 

“சொன்னால் மட்டும் என்னை கட்டி அணைத்து முத்தமா தரப் போகிறாய் ? ஆளைப் பார்த்தால் அதற்கெல்லாம் முடிந்தவனாகத் தெரியவில்லை  ” சொல்லி விட்டுச் சிரிக்கத் துவங்கினாள். முதுகில் சுளீர் என்று அடித்ததைப் போல் இருந்தது .

 

எப்பொழுதும் போல் வேலை முடிந்தபின் , மாலை மின்சார ரயிலில் ஏறினேன் .அவசரத்தில் பெண்கள் வகுப்பில் ஏறிவிட்டேன் . ஒரு மூலையில் அவந்திகாவும் உட்கார்ந்திருந்தாள் . வெளியிடங்களில் இருவரும் சந்தித்தால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தாள்.

 

இன்னொரு பக்கத்தில் ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தாள் .சிநேகமாகச் சிரித்தாள் .நான் மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி மாறிக் கொள்வதாய்ச் சொன்னேன் .இங்கேயே இருக்கலாமே .. நான் உங்களை ஒன்றும் கெடுத்து விட மாட்டேன் எனச் சொல்லி விகல்பமாய்ச் சிரித்தாள் .

 

நான் எதுவும் பேசாமல் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டேன் .இங்கே வந்து உட்காரலாமே என்றாள்.இருக்கட்டும் மிஸ் என சொல்லி விட்டு அவள் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் பார்த்தபடி வந்தேன் . எதேச்சையாக ஒரு முறை அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தேன் .எழுந்து சேலையச் சரி செய்து கொண்டிருந்தாள். அல்லது கலைத்துக் கொண்டிருந்தாள். என்னருகே வந்து நின்று கொண்டாள்.அடுத்த ஸ்டேஷன் என்று சொல்லி விட்டு தேவை இல்லாமல் சிரித்தாள்.

 

நிலையம் வந்ததும் இறங்காமல் , இன்னமும் இரண்டு தாண்ட வேண்டும் என்றாள் . பிறகு வசதியாய் மேலே தொங்கிக் கொண்டிருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு வெளியே பார்ப்பது போல் பாசாங்கு செய்தாள்.அவள் அணிந்திருந்த மெல்லிய சேலை அதற்கான பணியைச் சரியாக செய்திருக்கவில்லை . அல்லது அவள் செய்ய விட்டிருக்கவில்லை . கழுத்திலிருந்த செயின் முடியுமிடத்தைப் பார்க்கச் சொல்லி உறுத்திக் கொண்டிருந்தது .

 

அவளும் ஓரக் கண்ணால் நான் பார்ப்பதை கவனித்துக் கொண்டுதானிருந்தாள் . ஆனால் கண்டு கொள்வதாய் காட்டிக் கொள்ளவில்லை . வண்டி கிளம்பிய ஆட்டத்தில் தவறி அல்லது தவறியதாய் என் மேல் விழுந்தாள். அவந்திகா என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள் .

 

“ஸாரி” என்றேன் . 

 

அவந்திகா பக்கம் ஒருமுறை திரும்பிவிட்டு அவள் பார்க்காததை உறுதி செய்து கொண்டு என்னிடம், எதற்கு ஸாரி , நானாகத்தானே மேலே வந்து விழுந்தேன் .. அப்படி என்ன கட்டிப் பிடித்து முத்தமா கொடுத்து விட்டீர்கள் . ஆளைப் பார்த்தாலும் அதற்கெல்லாம் முடிகிறவராகத் தெரியவில்லையே என்றாள் .

 

அவந்திகா நேரே எங்களிடம் வந்தாள். எஸ் க்யுஸ் மீ என்றாள் அவளிடம் . எஸ் என்றாள் அவள் . உங்களை இந்தப் பாலத்தின் கீழ் தள்ளி விடலாமா எனக் கேட்டுவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருக்காமல் தள்ளியும் விட்டாள். பின் எதுவுமே நடக்காத படி தன்னிருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

 

குளித்து விட்டு வெளியே வந்த பொழுது எனது ஆடைகளை எடுத்துவுடுத்திக் கொண்டு எனது படுக்கையில் சாய்ந்து படுத்தபடி வா என அழைத்தாள் . இனி என்ன செய்யப் போகிறாள் எனத் தெரியும் எனக்கு .  ரத்தம் தோய்த்த ஆடைகள் கட்டிலோரமாக இருந்தன. எடுத்துக் கொண்டு போய் பாத்ரூமில் எரித்துவிட்டு சாம்பலை ஃபிளஷில்  போட்டு தண்ணீர் விட்டு விட்டு வந்தேன் .

 

திரும்பி வந்த பொழுது சிகிரெட் புகைத்த படியே , விஸ்கி குடித்துக் கொண்டிருந்தாள் . மீண்டும் என்னை வா எனக் கூப்பிட்டாள் . நான் எதுவும் பேசாமல் எனது கணிப்பொறியை இயக்கினேன்.  கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பாவம் போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் வேலை இருக்கிறது என்றேன் . என் மேல் கோபமில்லையே என்றாள். எத்தனை முறை தான் கோபப்படுவது . இல்லை எனத் தலை அசைத்தேன் . 

 

கணிப்பொறியில் இன்று அவந்திகா ரயிலில் தள்ளி விட்ட பெண்ணைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்தேன் . எத்தனை வாளிப்பான பெண் . . இத்தோடு இந்த எட்டு மாதத்தில் பதிமூன்று ஆகிவிட்டது .

 

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் ?” பின்னல் வந்து நின்று கொண்டாள்

 

“இதுவரை நீ பதிமூன்று பேரைக் கொலை செய்திருக்கிறாய் ..”

 

“பதிமூன்றா .. நீ கணக்கில் தவறுகிறாய் .. தெருவில் பார்த்த பெண்ணோடு மொத்தம் பதினான்கு .. நீ ஓடிவிடச் சொன்னாயே அவளை .. நான் ஓட விடவில்லை  .. ஹிக் ஹிக் ” கழுத்தை ஒடித்துத் தேய்த்துக் கொண்டாள் . எந்த விதச் சலனமும் இல்லாமல் பதினான்காவது எண்ணிக்கையைப் பதிவு செய்தேன் . நாளை காலை செய்தித் தாள் பார்த்து தான் அவள் பற்றிய குறிப்புகளை எடுக்க வேண்டும் .

 

“நல்ல குட்டி கழுத்தை அறுக்கும் பொது கத்தவே இல்லை .. ஆனால் சட்டையைத் தான் நனைத்துவிட்டாள் ”

 

பொறுமையிழந்து கத்தினேன் .”என் இப்படிச் செய்கிறாய் ?? எத்தனை சட்டைகளைத் தான் கரையாக்குவாய் ?”

 

“உன் சட்டை ஒன்று வேண்டாம் ” நிமிடத்தில் அதைக் கழற்றி என் மேல் எறிந்து விட்டு ஆடை இல்லாமல் நின்றாள். “நான் அழகாக இருக்கிறேனா ” எனக் கேட்டாள் .

 

“நான் என்ன கேட்கிறேன் எனப் புரியவில்லையா உனக்கு ???”

 

“நீ முதலில் சொல் , நான் அழகாக இருக்கிறேனா இல்லையா ??”

 

ம்ம்ம் .. என்றேன் .

 

“பிறகு ஏண்டா மற்ற பெண்களைப் பற்றிக் கவலைப் படுகிறாய் ??? “

 

“மோகனா” என்றேன் .

 

“அவள் தான் உன்னைவிட்டு விட்டுப் போய் விட்டாளே .. “

 

“நீ பேச்சை மாற்றாதே .. நீ ஏன் அந்தப் பெண்ணை ரயிலிலிருந்து தள்ளிவிட்டாய் .. நான் நாளை போலீசில் போய் சொல்லத் தான் போகிறேன் ”

 

கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் பேசவே இல்லை . “விளக்கை அணைக்கட்டுமா” எனக் கேட்டாள் . நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் . “என்னை அவ்வளவு பிடிக்கவில்லையா? “ எனக் கேட்டாள் . “ஆமாம் , எங்கேயாவது போய்த் தொலை” என்றேன் .

 

கட்டிலில் போய் உட்கார்ந்தவள் நீண்ட நேரம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் . பின் தலையணைக்கு அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். 

 

“நிஜமாகவே  என்னைப் பிடிக்கவில்லையா ??”

 

“நீ சுட்டாலும் சரி .. ஆமாம் பிடிக்கவில்லை .. போய் விடு என்னைவிட்டு ” கத்தினேன் .

 

நான் ஏன் இவ்வளவும் செய்தேன் என உனக்கே தெரியும்” .  சுடாமல் துப்பாக்கியை என்னிடம் தந்துவிட்டு எனக்கு எதிரே படுக்கையில் உட்கார்ந்தாள் .

 

இருவரும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தோம் . அவளிடமே துப்பாக்கியைத் தூக்கி எறிந்தேன் .

 

“நீ  குழந்தை பெற்றுக் கொள்ளத் தகுதி இல்லாதவன் என உன்னை விவாகரத்தில் விட்டுப் போனவள் என்னைவிட முக்கியமாகப் போய்விட்டாளா ? ”

 

” ஆமாம் “

 

வலியோடு என்னைப் பார்த்தவள் துப்பாக்கியைத் தன் மார்பில் வைத்தாள் .

 

என்னைப் பார்த்தாள் .

 

இறந்து போ ! என்றேன்.

 

துப்பாக்கியின் விசையை அழுத்தினாள்  . என் மார்பிலிருந்து  ரத்தம் பீறிட்டுக் கண்ணாடி  முழுவதும் தெறித்தது .

 

————————————————————————————————