Tags

, ,

 

 

“பூமார்க் பீடி ஒரு கட்டு “

 

“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “

 

“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “

 

“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்தேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “

 

” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”

 

“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..?”

 

“ஒண்ணும் இல்ல பாய் .. நேத்து சத்திரபட்டில ஆட்டே போட போயிருந்தப்போ அம்புட்டுகிட்டேன் .. கூட வந்தவைங்க எல்லாம் எஸ் ஆயட்டாங்க்ய .. எழவு சரக்கடிசிருந்தனா .. கவுத்துட்டாங்க்ய .. இல்லன்னா .. எங்களையாவது பிடிக்கறதாவது .. யாரு நாங்கெல்லாம் … “

 

“அய்யியே.. இதெல்லாம் பாத்து சூதானமா பண்ணக் கூடாது .. எடே கருப்பு எப்பவும் அலர்ட்டா இருப்பியேடா  .. நீ எப்படி மாட்டுன ..”

 

“என்னமோ பாய் .. நேரஞ் சரியில்ல .. தேவன்குறிச்சி ஜோசியன் சொன்னாம் இன்னும் பத்து நாளைய்க்கு எதுவும் செய்யாத .. சனியன் தல மேல ஏறி ஆடுதான்னு .. நான் தான் மயிராப்போச்சுனு மதிக்காமப் போயிட்டேன் “

 

“சரி சரி .. மாப்பிள்ளைக்கு இதெல்லாம் புதுசா என்ன .. மணி அடிச்சா சோறு .. மயிறு மொளச்ச மொட்டைனு மாமியாரு வீடுகணக்கா உன்ன கவனிக்கராய்ங்கள்ல .. அடிக்கடி வரத்தான் தோணும் .. எஸ் ஐ எப்போ வருவாக ? “

 

“நம்ம சங்கர பாண்டி தான .. சனியன் சட்டுபுட்டுனு வந்து கேசை எழுதிட்டு விட்டான்னா அடுத்த சோலிய பக்கப் போலாம்னு பாத்தா , அந்தா இந்தானு வரமாட்டேங்கரானே “

 

“இந்தா அய்யவையே மரியாதை இல்லாம அவன் இவனு பேசறியா .. வரட்டும்டி லாடம் கட்டச் சொல்றேன் “

 

“இந்தா ஏட்டு .. யாருக்கு ஜெர்க்கு குடுக்கற .. அதான் ஓசி டீ வாங்கி குடுத்திருக்கோம்ல மூடிட்டு குடிகறது ..”

 

“எலேய் .. எல்லாரையும் இப்படி திமிரா பேசாதடே .. செரி , அப்படி என்னத்ததாண்டே ஆட்டே போடப் போன ..”

 

“பெருசா ஒண்ணும் இல்ல பாயி .. வழக்கம் போல நம்ம குண்டு பிள்ளையாரத்தேன்.. ஐட்டம் சேப்பு .. நான் தான் மாட்டிகிட்டேன் .”

பெரிய கருப்பு என்கிற கருப்புக்கும் , நெடுநாளைக்கு முன்பே நாகர்கோவிலிலிருந்து டீ கடையோடு புலம் பெயர்ந்துவிட்ட  மொகைதீன் கான் என்கிற பாய்கும் , மணிகுட்டி என்கிற ஏட்டின் பாதுகாப்பில் நடந்த உரையாடல்களே நீங்கள் மேலே படித்தவை .

 

இடம் கல்லுபட்டி பேரூராட்சி காவல் நிலையத்தின் முன்னாலுள்ள டீ கடையில் .

 

கருப்பு எங்கும் ஓடிப்போகப் போவதில்லை என்று அவன் தூக்கி வந்த பிள்ளையாருக்கே தெரியும் . எனினும் ஓசி டீக்கு ஆசைப்பட்டு உடன் வந்திருந்தார் மணிகுட்டி . 

 

தேசிய நெடுஞ்சாலைக்குப் போனால் போகிறதென்று சில அடிகள் ஒதுங்கி புளியமரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருக்கும் காவல் நிலையம் அது . மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் . அவ்வப்போது விற்ற வெள்ளரிக்கு காசு வாங்க பேருந்தின் பின்னே ஓடும் கிழவிகளையும் , அவர்கள் அயர்ந்த நேரம் வெள்ளரிகள் தூக்கிக் கொண்டு மரத்தின் மேல் போய் பல்லைக் காட்டும் குரங்குகளையும் அடிக்கடி காண நேரலாம் . இந்த ஊரில் பாட்டி வடை சுட்ட கதையை விட , பாட்டியிடம் வெள்ளரி சுடும் குரங்குகளின் கதை பிரபலம் .

 

இரண்டு ஊர் பெரியவர்களும் , சில விடலைகளும் முறுக்கிக் கொண்டு காவல் நிலையத்தின் முன் எந்தநேரமும் ஒரு யுத்தம் வெடிக்ககூடும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தனர் . ஒரு வழியாக எஸ் ஐ பதினொரு மணி அளவில் வந்து சேர்ந்தார் .

 

“தண்ணியில்லாத காடா , இந்த கயவாளிப் பயலுவ ஊரானு கேட்டா தண்ணி கொடத்தோட சனியன் சகவாசம் தீந்ததுன்னு ஓடியே போயிரனும்டியே ” சத்தமே வராமல் முணுமுணுத்துக் கொண்டே புதிதாய் தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டில் ஓட்டிக் கொண்டு வந்திருந்த மொபட்டை ஓரங்கட்டினார் சங்கர பாண்டி .

 

தலையைப் பார்த்ததுமே குடித்துக் கொண்டிருந்த டீயை ஓரங்கட்டி விட்டு , கருப்பையும் இழுத்துக் கொண்டு ஸ்டேஷனை நோக்கி கிட்டத் தட்ட ஓடிவந்தார் மணிக்குட்டி .

 

“செத்த டீயை குடிக்க விடுரீகளா .. ஓங்கையா எங்கன ஓடிப் போயிரப் போறாக” கருப்பு சலித்துக் கொண்டே கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு கொண்டே கூட வந்தான் .

 

“என்ன மாப்புள்ள , ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோமேன்னு பாத்தேன் .. எவ தாலிய அறுத்த இந்த வாட்டி ” மேஜை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு லட்டியை எடுத்து அவர் கையிலேயே தட்டிப் பதம் பார்த்தார் .

 

“தாலிய அருக்கற அளவுக்கு ச்சீப்பாயா நம்மெல்லாம் ..”

 

“என்ன நம்மனு என்னையும் உங்கூடச் சேக்குறவன்.. பள்ளப் பேத்துரவன்டியே.. இங்குலீசெல்லாம் பலமா இருக்கு .. சட்டைய மடிச்சு தான் விடுவீகளோ .. “

 

“மொழங்கை கிட்ட ஓட்டை ” முகத்தை சலித்துக் கொண்டே சட்டை மடிப்பை சரி செய்தான் . மடிப்பில் சிக்கிய பீடியை காது மடலில் பத்திரப் படுத்தினான் .

 

“என்னடி , சலிச்சுக்கற ..” காலிலேயே இரண்டு போடு போட்டார் .

 

“இந்தா அடிக்கற வேலை எல்லாம் வச்ச்சுக்காத .. சொந்த பிரச்சனையை இல்ல .. ஊரு பிரச்சன .. எதுன்னாலும் எல்லாரையும் கூட்டி வச்சு பேசு “

 

“அய்யயய்ய்யே .. இவந் தொல்ல தாங்கலியே ” இன்னும் இரண்டு அடி அடித்து விட்டு “போடா அந்த மூலையில போய் உக்காரு .. லுங்கியக் கழட்டிட்டு .. உள்ள லங்கோடு எதாச்சும் போட்டிருக்கேல ” பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போல் சிரித்தார் .மணிக்குட்டியும் உடன் .

 

“ஏட்டு சிரிச்சது போதும் .. என்ன கேஸு “

 

“ஒண்ணும் இல்லீங்கய்யா .. வழக்கம் போலத்தேன் . சத்தரபட்டில போயி புள்ளையார ஆடடே போட்ருக்காய்ங்க்ய ..”

 

“எங்க புள்ளையாரத்தேன் மீட்டுட்டு வந்தோம் .. அதச் சொல்லு ஏட்டு ”

 

“கருக்கல்ல வெளிக்கி போறவன் மாதிரி உட்காந்துட்டு பேச்ச பாரு .. மூட்றா வாய “  லத்தி குச்சியை மேலே எறிந்தார் .

 

“எத்தன பேரு வந்திருக்காய்ங்க “

 

“அது இருக்கும் ஒரு முப்பது நாப்பது “

 

“பெருசுங்க ஏதாவாது ??”

 

“நீங்க வந்ததும் தகவல் சொல்ல சொல்லிருந்தாங்க .. இந்நேரம் போயிருக்கணும் .. கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க “

 

“அது வரைக்கும் எவனையும் உள்ள விடாத ”

 

சங்கரபாண்டி நாற்காலியில் அமர்ந்து கோப்புகளை புரட்டத் தொடங்கினார் . சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சல சலப்பு கேட்டது . சில வாழ்க வாழ்க போட்டி போட்டுக் கொண்டு ஒலிக்கத் தொடங்கியது .

 

“வந்துட்டாய்ங்க ” சலித்துக் கொண்டே நாற்காலியில் இருந்து எழுந்து

 

“வணக்கம் பெரியவங்க வரணும் .. எலேய் பெரியவங்களுக்கு உட்காரதுக்கு எடுத்துப் போடு “

 

இரண்டு ஊர் பெரிசுகளும் ஒரே மாதிரியிருந்தார்கள் . பொங்கலுக்கு வாங்கிய வேஸ்டி சட்டை பளபளத்தது. யார் மோதிரம் நிறைய போட்டிருக்கிறார்கள் என்ற போட்டி வைத்தால் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பது கடினம் .

 

“வணக்கமெல்லாம் இருக்கட்டும் .. நம்மாளுகல உள்ள விட மாட்டேன்னு சொன்னியாம் ” சத்திரபட்டி பெருசு வந்ததும் அதகளம் பண்ணியது .

 

“நான் கூப்டேங்கய்யா .. நீங்க இல்லாம உள்ள வரமாட்டோம்னுட்டாங்க்ய்ய .. பாசக் காரப் பயலுவ ” ஏட்டு கஷ்டப் பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார் .

 

“க்கும் ” கனைத்து தன் இருப்பை அறிவித்தார் கல்லுப்பட்டி பெருசு .

 

“அய்யா வணக்கம் ” திரும்பி இந்தப் பக்கமும் ஊளை கும்பிடு போட்டார் எஸ் ஐ

 

“என்னடா .. பழசெல்லாம் மறந்து போச்சா .. என்னதிது டவுசரோட ஒக்காத்தி வச்சிருக்க .. ஸ்டேஷன் எந்த ஏரியாக்குள்ள இருக்குன்னு ஞாபகம் இருக்கா .. .க்காலி ஆறு மாசத்துக்கு ஒருக்கயாவது டேஷனக் கொளுத்தலன்னா பயம் இருக்காது போல ”

 

கருப்பை அருகில் வருமாறு சைகை செய்தார் .

 

“கழுத , காரியத்த முடிச்சிட்டு வான்னா லங்கோடோட நிக்கிதான் பாரு “

 

லுங்கியக் கட்டிக் கொண்டு பவ்யமாக பெருசின் அருகில் வந்து நின்றான் . எஸ் ஐ யைப் பார்த்து மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே நமட்டுச் சிரிப்பு சிரித்தான் .

 

“யோவ் போலீசு , என்னதாஞ் சொல்ற இப்போ “

 

“பெரியவங்களுக்குத் தெரியாததில்ல .. உங்களுக்குள்ளையே பேசி தீத்துகிட்டா “

 

“இதுல பேசறதுக்கு என்ன இருக்கு .. போன மாசம் எங்க புள்ளையார அவங்க்ய களவாண்டுட்டு போனாய்ங்க .. அத மீட்டெடுக்கச் சொல்லி நாந்தேன் கருப்ப அனுப்பினேன் .. அவன விட்ரு .. புள்ளையாரும் எங்களுக்குத் தான் “

 

“அதெப்படி … என்ன தான் உங்க ஊரு புள்ளையாரு நாங்க திருடினாலும் . கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ண பின்னாடி அது எங்க சாமி இல்ல “

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது .. புள்ளையார நாங்க கொண்டு போகாம விட போறதில்ல “

 

“அதுவரைக்கும் நாங்க செரசிட்டு இருப்போம் னு நெனைக்கீகளோ”

 

“இன்னைக்கு பண்ணியாச்சு .. நாளைக்குச் சொல்லியனுப்புதேன் .. வா “

 

அந்த கும்பலை பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது சங்கர பாண்டிக்கு .ஒருவழியாக அடங்கி மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது .யார் ஆரம்பிப்பது எனக் காத்திருந்து சத்திரபட்டி பெருசு ஆரம்பித்தது .

 

“திருட்டுப் பிள்ளையார் தான் ராசின்னு உங்க ஊர்ல இருந்து தூக்கியாந்தது தப்புத்தேன் .. கும்பாபிஷேகம் முடிஞ்ச பின்னாடி திரும்ப கேக்கறது பெரிய மனுஷதனமானு நீங்களே யோசிச்சுக் கோங்க”

 

சத்திரபட்டியார் சமாதானமாக பேசத்துவங்கியதும் கல்லுப்பட்டி பெருசு பிறவி வியாதியாக மீசையைத் தடவிக் கொண்டு யோசித்தது .

 

“சத்திரபட்டிக்காரக என்னதேன் சொல்ல வரீங்க .. நாங்க எங்க போறது புள்ளையாருக்கு “

 

“அதுக்கும் யோசனை வச்சிருக்கேன்ல . நாளைக்கே ஊருக்குள்ள வசூலைப் போட்டு ஒரு புள்ளையார நாங்களே வாங்கிக் கொடுத்திடறோம் “

 

“அதெப்படி .. எங்க வீரம் என்னத்துக்காகறது ??”

 

“சரி அப்போ ஒரு நல்ல நாளா பாத்து நீங்களே எடுத்துட்டு போயிடுங்க “

 

“எங்களுக்காக காவல எல்லாம் கொறச்சிட வேண்டாம் .. எங்க பயலுவ கெட்டிக்காரணுவ”

 

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அடித்துக் கொண்டவர்களா இவர்கள் என்று தோன்றியது . சத்திர பட்டிக்காரர் வருடம் தவறாமல் கோழி கடா வெட்டவும் ,பத்து பேருக்கு மொட்டை அடிப்பதாகவும் வாக்குறுதி தந்ததும் கல்லுப்பட்டியார் பிள்ளையாரை அவர்களுடன் அனுப்பி வைக்க சம்மதித்தார் .

 

“அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம் ” சங்கரபாண்டிக்கு விட்டால் போதுமென்றிருந்தது .

 

“இருங்கய்யா காப்பி வாங்கியாரச் சொல்லுறேன் “

 

“யோவ் சங்கரு .. புதுசா கல்யாணம் ஆனவன் நீயி .. பகல்லையே ஆயிரத்தெட்டு சோலி இருக்கும் .. புள்ளையார குடுத்திட்டு நீ உன் ஜோலியப் பாக்கப் போ .. ”

 

“அய்யா புள்ளையாரு உங்க ஆளுங்ககிட்ட தான் இருக்கு “

 

“எலேய் கருப்பு சாமிய எங்க வச்சிருக்கீங்க “

 

“அய்யா எங்கிட்ட இல்லீங்கய்யா .. நான்தான் அம்புட்டுகிட்டனே .. நம்ம பசங்க கிட்ட தான் இருக்கும் .. இருங்கய்யா கேட்டுப்புடறேன் … எலேய் ராசு …”

 

தன் கூட்டளிகளிடம் தனியாக சென்று கிசு கிசுத்து விட்டு வந்தான் . தலையை சொரிந்து கொண்டே “அய்யா பொருளு நம்ம கிட்டயும் இல்ல .. நான் அம்புட்டதுமே சாமிய போட்டு வந்துட்டாங்க்ய அங்கனையே “

 

இதென்னடா புது வம்பாக , பிள்ளையாரை தொலைத்து குரங்காய் திரும்புகிறதே , சங்கர பாண்டிக்கு ஒருமுறை ஸ்டேஷன் எரிவது போல் நினைவில் வந்தது . காபியை தூக்கிக் கொண்டு மணிக்குட்டி உள்ளே வந்தார் .

 

“ஏட்டு .. பசங்க சாமிய மறச்சுவச்சிட்டு புளுகுராங்க்ய .. என்னனு கேளு “

 

“சார் புள்ளையாரு தான .. அது என்கிட்டே தான் இருக்கு .. நேத்து அங்கனையே போட்டு ஓடிட்டாங்க்யளா .. நாந்தேன் பத்திரமா இருக்கட்டும்னு செல்லுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்கேன் ..இந்தா எடுத்தாந்திடறேன் “

 

கொஞ்ச நேரத்திற்கு மரத்தின் மேலிருந்த குரங்குகள் எதுவும் பேசவே இல்லை .

 

சுபம் .

 

—————————————————————————————————————————————————————