Tags

, , , , , ,

பயம்

 

 

 

நடுநிசியின்

தொலைதூரச் சத்தத்தில்

திடுக்கிட்டு விழிக்கையில் எல்லாம்

ஜன்னலின் வெளி

கசியும் நிழலாய்

காட்சியளிக்கத் தவறுவதே இல்லை 

நினைவடுக்கின் புறப்பரப்பில்

அலைவுற்றிருக்கும்  

சமீபத்தில் பார்த்திருந்த 

சவத்தின் முகம் …

 

——————————————-

 

முணுமுணுத்தல்

 

 

” இந்தா ! நில்லுடி ”

என் மாங்காய் கடித்தோடும் பள்ளிச் சிறுமி

கிழப்பிய புழுதியில் கலந்துபோயோ 

வளைந்து மடிந்து ஷேர் ஆட்டோவில்

உட்புகுந்தோ

இருசக்கர வாகன ஓட்டியின்

தலைக்கவசத்தில் புகுந்து கொண்டோ

துளியு மிடமில்லாத மாநகரப் பேருந்துப் படிக்கட்டுகளில்

நொடியில் மரணத்தைப் பற்றிய பயமின்றி

தொற்றிக் கொண்டோ

சில மில்லி மீட்டர்களாவது பயணித்தே விடுகிறது

ஒலிப்பெருக்கியிலிருந்து அடர்ந்து கசியும் 

அந்தப் பாடல் …

 

—————————————————————————-

 

ஒட்டல் பழக்கம்  

 

 

 

 

எப்படியோ வீடுவரை

ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது

பேருந்துப் பயணத்தில்

பின்பக்கம் நின்று

உராய்ந்து கொண்டிருந்தவனின் நாற்றம்

குளித்துவிட்டு

வாசனைத் திரவம் அப்பும் வரை

போகவேயில்லையது …

என்ன தேய்த்துக் குளித்துக் கொண்டிருப்பான்

என் நாற்றத்துடன்

வீடு போய் சேர்ந்திருக்கும் அவன் …

 

——————————————————————————

  

பிள்ளைக் கனா..!

 

 

 

 

 

 

எல்லாரும் உறங்கிப் போன இரவுகளின்

ஏதோ ஒரு பாகத்தில் விழித்தெழுந்து

குழந்தைகளை வைத்து

விளையாடிக் களைக்கின்றன பொம்மைகள்

அதனதன் கனவுகளில் …

 

——————————————————————————