Tags

, , , , ,

 

 
 

தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்

முண்டங்களென  தொங்கவிடப் பட்டிருக்கின்றன

குருதி சொட்ட

நகரத்தின் நுழைவாயிலில் …

 

வாலறுந்த நாய்கள் சிலவும்

முகம் சிதைந்த பலரும்

சண்டையிட்டபடி யிருக்கின்றனர்

சிவந்த ப்ரேதங்களுக்காக    

 

கைவிடப்பட்ட ரகசிய பிரதேசமொன்றில்

முனங்கியபடி  பறந்து திரிகின்றது

சர்பங்கள் உண்டு கொண்டிருக்கும் கடைசி பெண்ணின்

வியர்வை யேறிப்போன   உள்ளாடை …

 

ரத்தமூற்றப்பட்ட கோப்பைகள்

யாருக்காகவோ காத்திருக்கின்றன

அனேகமாக எல்லாத் தேநீர் கடைகளிலும் …

 

அருகிலேயே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது

புகைந்து கொண்டிருக்கும் ஆட்காட்டி விரலொன்று …

 

நிறமழிந்து போன குருட்டு வண்ணத்துப்பூச்சிகள்

ஒன்றையொன்று முட்டிக்கொண்டு

ஜன்னல்களின் வெளி வந்து விழும் 

சிதைந்த கருக்கள் கண்டு

அலறியபடி அலைகின்றன …

 

யாருமறியாத வெளியில் இருந்து

நகர் முழுவதும் பெய்து கொண்டிருக்கிறன

துர் நாற்றம் கொண்ட சிறகுகள் …

 

புகையும் நகர் பற்றிக்

கேட்கச் சுவாரசியமான கதைகள்

யாருமில்லாத தெருக்களில்

நிர்வாணமாய் அலைந்திருக்கின்றன..

 

யாவற்றையும் பார்த்தபடி கேட்டபடி

தெருமுனைக் கட்டணக் கழிப்பறையில்

சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் .