Tags

ஆம் ! .. நான் மீண்டும் ….

 

அதே போன்ற நாட்களின் சுழலில் சிக்கிக் கொண்டிருப்பதாய் தோன்றுகிறது.

 

நேற்றுவரை எனக்கும் என் அறைச் சுவர்களுக்கும் இடையில் இருந்து வந்த எதுவுமில்லா வெற்றிடத்தில், எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் பெயர் தெரியா பூ ஒன்றின் மணமும் அடர்வும் அறை முழுவதும் , மனம் முழுவதும் .

 

என் ஜன்னலுக்கு வெளியே விடாது மழை பெய்யும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மழைவாசமும் ,மேகம் மொத்தமும் பதியமிட்டிருக்கின்றன மேற்கூரைகளில் .

 

வெயிலோடு மழை பெய்த நாட்கள் கொண்ட குறிப்பேட்டைத் தூசு தட்டிக் கொண்டிருக்கிறேன் , இன்னாட்களுடனான ஒப்பீட்டிற்காக .

 

மீண்டும் காண முடிகிறது எனக்குப் பிடித்த பெயரை நட்சத்திரக் குவியல்களுக்கிடையில் . நிலவிருப்பதாய் நினைத்தே வெறும் வானம் ரசிக்க முடிகின்றது

 

எந்த மொழியும் பேசப் பிடிக்காமல் மௌனத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன் .

 

வார்த்தைகளில்லா இசையொன்று சுற்றிக்கொண்டேயிருக்கிறது என்னை . அதற்கான  வார்த்தைகள் எல்லாம் மின்விசிறியுடன் அறைக்குள்ளேயே சுழன்று மீண்டு வருகின்றன என்னிடமே .

 

தூக்கம் கலைந்த வினாடிகளில் உடனே ஓடி எழுதுகோல் தொடுகிறது விரல்கள் . ஒன்றை மட்டுமே எழுதிப் பக்கங்கள் நிறைகின்றன வரிகள் தொட்டுக் கொண்டு .

 

ஏதாவது ஒரு தருணத்தில் உடைந்து அழப்போகிறேன்  என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது , மெல்லிய புன்னகைக்கு இடையில் .

 

எங்கோ பறந்து செல்லும் பறவைகள் வழியிறங்கி சிறகுகள் தந்து செல்கின்றன . பட்டாம்பூச்சிகளுக்கு என்னிடம் வருவதில் எந்தவொரு தயக்கமும் இல்லை இப்பொழுது . எங்கு திரும்பினும் ஏராளமாய் எதிர்படுகின்றன தேவதைகள்.

 

வேறெப்படிச் சொல்வதாயினும் , வேறெந்தப் பொருள் கொண்டு சொல்வதாயினும் எல்லாவற்றிற்கும் ஒரே பொருள் தான் .

 

ஆம் ! .. நான் மீண்டும் ….

 

———————————————————————————————————–