Tags
அய்யாமாரே அம்மாமாரே
எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே
கொஞ்ச நேரம் நில்லுங்க …
எம்முன்னால இல்லாத
என்னாச அவரோட
கடைசியா நாம்பேசும்
இந்தப் புழுதி மேட்டுக் காதலோட
மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு
எந்தப்பு இதில் என்னன்னு
எதாச்சும் தெரிஞ்சதுன்னா
எங்கிட்ட சொல்லுங்க ….
எல்லாப் பெண்டுக போலவே நானும்
எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்
தாயமாடக் கோடு போட்டும்
ஒத்தக் காலில் நொண்டி ஆடி
கண்ணக் கட்டிப் பாண்டி பாடி
சந்தோசமாத் தான இருந்தேன் ..
எப்ப ஒன்னப் பாத்தேனோ
அப்பவே நான் தொலைஞ்சு போனேன்
உள்ளுக்குள்ள செவந்து போனேன் …
எங்கப்பனோட அழுக்குத் துணிக்கு
எஞ்சாமி உந்துணிய
புத்தி கெட்டுப் போன வண்ணான்
மாத்தி வந்து தந்து போனான் …
உடுப்ப நானும் கொடுக்கயில
உசிர சேத்துக் கொடுத்தேனே …
பசி மறந்தேன் பந்தியிலும்
தூக்கமில்லே ராசந்தியிலும்
நீர் மழிச்சுப் போட்ட மீசை
மறைச்சு வச்சேன் முந்தியில …
நீர் தொட்ட கத்தாலைக்கு
செம்பகப்பூ வாசமின்னேன்
என் வீட்டு எருமைச் சத்தம்
எசபோலத் தோண நின்னேன் …
உம்பாதம் பட்ட கரடுக்கெல்லாம்
கண்ணில் ஒத்தி முத்தம் தந்தேன்
நெரிஞ்சி முள்ளுப் பாத கூட
சொர்க்கம் போகும் பாதயின்னேன்
நீ போன பூக்குமின்னேன் …
ஒன்னப் போலத் தானடி நானும்
துளித் துளியா மாறுறேன் நாளும்
ஒடம்புக்கும் முடியல தலகாலு புரியல
ஒம்மொகந் தாண்டி வேறேதும் கண்ணுக்குத் தெரியல …
தண்ணியில நடக்க நெனைக்கறேன்
தரையில நான் மெதந்து கெடக்கறேன்
இடுப்புக் கச்சம் அவுந்ததறியாம
கடகண்ணியில் நடந்து திரியறேன்
கதிரருவா கையிலெடுத்து
வெரலறுத்து சிரிச்சு நிக்கறேன் …
ஒங்கழுத்துத் தாலி செய்ய
என்னுயிரு கயிராகும்
ஒன்நெத்திப் பொட்டு வைக்க
எங்கடைசி சொட்டு ரத்தமும் சாகும் …
கரும்புக் காட்டில் வச்சு
கண்ணப் பாத்துச் சொன்னீகளே
வெட்டிபோட்டக் கரும்போட
செத்துப்போச்சே ஒம்ம வார்த்தைகளும் …
வெதநெல்லு வாங்கியார
சந்தைக்கு நாம போகயில
விம்மீன்கள வெலைக்கு வாங்கி
வெளையாடத் தருவேன்னீக
வெதநெல்லும் வெளஞ்சிருச்சு
விம்மீனுக்கும் விடிஞ்சிருச்சு
என்னாசக் காட்டில் மட்டும்
புல்லு மொளச்சுப் போனதென்ன
வெளக்கு அணைஞ்சு போன பின்னும்
எண்ண மிதக்கும் பூச்சி இங்க …
சிங்கம் போல ஒரு புள்ள
தோள் மேல வருவாண்டி
பட்டுப் போல ஒரு பாப்பா
இடுப்போரம் இருப்பாடி
சொமந்த சொம போதுமடி
அதுக்கு மேல நா சொமப்பேன்
அடிநெஞ்சில் உன்னையும் சேத்து…
நம்ம பத்திக் காத்து கேட்டா
வரப்போர புல்லு எல்லாம்
வசனத்தோட கத சொல்லுமே
சொன்ன கத முடியுமுன்னே
கள எடுத்தது யார் குத்தம் …
ஆத்தங்கரைப் பிள்ளையாரே
அசையாம இருக்கீரே
பாற கூடக் கரஞ்சிருக்கும்
பாவி ஊத்தின தண்ணிக்கு
கம்மாத்தண்ணி வத்திப் போயும்
கருண காட்ட மனசில்லையே…
ஒன்னப் போல ஆக்கிடாத அவர …
எங்க அந்தி நேர முத்தத்துக்கெல்லாம்
நீர்மட்டும் தானே சாட்சி
பொய் சாட்சி சொல்லியாச்சும்
அத்த பொண்ணு அம்பிகையோ
அக்கா மக அஞ்சுகமோ
அவருக்கு கட்டி வச்சா
ஒங்கோயில் பாதையில
காலத்துக்கும் கல்லாயிருப்பேன்
அரளி வெத அரைக்கனுமின்னா
எனக்கடுத்தவளும் அதில் பங்கு கேப்பா..
அப்பனாத்தா தொங்கின கயத்துல
எந்தாலி தொங்கனுமா…
மக்க சனம் என்னடி சொல்லும்
கத கட்டி நம்மளக் கொல்லும் …
மொத்தக் குடும்பம் அழுகயில
தொலைஞ்சு போச்சு என்னழுகச் சத்தம்
புரிஞ்சுக்குவ நீ மட்டும் – நம்புது
என் புது மெட்டிச் சத்தம்
எத்தனையோ கியாபகங்கள
நெஞ்சுக் குழியில் பொதச்சுப்புட்டு
எல்ல தாண்டிப் போகப் போறேன்
என் நெனப்ப எல்லாம் விட்டுப்புட்டு …
மாசம் ஏழோ அது தாண்டி எட்டோ
திரும்பத் தானே போறேன் நானும்
மனசில் ஒன்ன சொமந்து போறேன்
வயத்தில் ஒன்ன சொமந்து நிப்பேன்
என்னோட முடியட்டும்
உனக்காச்சும் விடியட்டுமின்னு
பொட்டப்புள்ள பொறந்துச்சுன்னா
புத்தி சொல்லிப் பொத்தி வைப்பேன்
அடிநெஞ்சில் ஒன் நெனைப்பெரிக்க
ஆம்பிள்ளையா பொறந்துப்புட்டா
கொஞ்ச நேரம் அழுதுப் புட்டு
அய்யனாரே ஒம்பேர வப்பேன் …
தம்பி….
மனசு, வலிக்குது !
இப்படி எல்லாம் எழுதாதய்யா
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா …
LikeLike
enna seeni enna aachu??happabba evlo perusu??inthavatti oorukku pona appo ezhuthinaiyo??? rompa nalla irukku aana konjam varuthama iruku 😦 😉 gud one seeni.ezhuthirukarathu i meant words pottrukarathu nalla iruku.
LikeLike