தீண்டுமின்பம்
உன்னிடம் காதலைச் சொல்லப் போகின்ற தருணத்தில் ,அதிகாலைக் கனவொன்றிலிருந்து , வழக்கம் போல மீட்கப்பட்டிருந்தேன் .
இன்னும் நான் பார்க்காத அந்த அழகிய கனவு இறங்கியிருந்தது , என் அறை மூலையிலிருந்த விட்டில் பூச்சியுள் . அதன் உறக்கம் கலைக்காமல் கிளம்பிச் சென்றேன் என்னறைக்கு வெளியே , மீண்டுமொரு வழக்கமான நாளுக்குள்ளே.
மேகங்கள் இருண்டிருந்த ஏதோ ஒரு பொழுதில் , அறை திரும்பியிருந்தேன்.
சாளரங்கள் எல்லாம் திறந்திருந்தும் , வெளிச் சென்றிருக்கவில்லை அந்த விட்டில். முடியவில்லையா , இல்லை முயற்சிக்க வில்லையா என்பதைத் தாண்டி என் கேள்வி , அந்த மீதமிருந்த கனவைப் பற்றியிருந்தது.
நேற்றைய இரவு தனக்குள்ளே இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் , நீண்டிருந்த பகல் ஒரே நேரத்தில் பெருங்குளிராகவும் , தகித்துச் சுட்டதாகவும் சொன்னது . என் சிறிய அறைக்குள் ஏதேதோ காட்சிகள் சிதறுண்டு கிடப்பதாகச் சொன்னது. நடக்க மறந்த முடவானாய் , எங்கு ஊர்ந்தும் ஒரே இடத்தைச் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் ,தான் சிக்கியிருக்கும் முடிவில்லா பெரு சூன்ய வெளியிலிருந்து மீட்கச் சொல்லிக் கேட்டது. கனவு பற்றி எதுவும் பேசவேயில்லை.
மீண்டும் கனவு என்றேன் .
தினமும் இதே கனவைத் தான் காண்கிறாயா என்றது.
ஆம் என்று தலையசைத்த என்னைப் பார்த்து ஏதோ தனக்குள் முனங்கிக் கொண்டது .
கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தது .
மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கும் என்னிடம் , ஒன்று சொல்லட்டுமா என்றது.
சொல் எனச் சொல்லி முடிக்கும் முன் , திரியில் ஆடிக் கொண்டிருக்கும் தீயினுள் பாய்ந்திருந்தது .
நந்தலாலா.
—————————————————————————————————————–
‘ நந்தலாலா’ – நச்! ((‘பட்டாம்பூச்சி விற்பவனுக்கு’ ஏதாவது, எங்காவது விளக்கம் உள்ளதா?)
LikeLike
நன்றி பூபேஷ் அண்ணா 🙂
நா.முத்துக்குமார் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் , எப்பொழுதிருந்து எனத் தெரியவில்லை . நண்பர்களுக்கு வாழ்த்தட்டைகள் தரும் பொழுது பட்டாம்பூச்சி விற்பவனிடம் இருந்து என எழுதிப் பின் அதுவே பழக்கமாகிவிட்டது .
LikeLike