Tags

, ,

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

 

மனம் மட்டும்

இரு கைகள் நீட்டித் தீராப்பசியுடன்

மழையைத் தின்னவே

மயக்கம் கொண்டிருந்தது

 

முழுக்க நனைந்திருந்த பேருந்தொன்று

மேலும் சில மழைத்துளிகளோடு

ஏற்றிக் கொண்டது எங்களை ..

 

பயணத்தின் ஏதோ ஒரு புள்ளியில்

சாலையின் நடுவே சம்மணமிட்டு

ஏகாந்தமாய்  நனைந்து

மழையை அருந்திக் கொண்டிருந்தவனைக் கண்டோம்

 

கைகளை வீசி வீசி

தப்பிச் செல்லும் துளிகளை

தன்னிடம் மீண்டும்

இழுத்துக் கொண்டிருந்தான்

 

கொஞ்சமே கிழியாத உடை அவனது

மேலும் எந்தப் பைகளும் காலணிகளும்

இல்லையவனிடம்

 

பேருந்தில் ஒரு சிலரைத் தவிர

எல்லாரும் சொல்லினர்

அவன் பைத்தியக்காரனென்று .