Tags

,

இந்தத் தெருவின் பெண்

இந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.

இங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.

உன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.

நெற்றி வகிடும் , பொட்டின் அளவும் கூட உனதே. திரும்பிச் சிரிக்கையில் நீ என்றே நூறு சதம் எண்ணக் கூடும் .ஒரு நாள் அவள் பேசிக் கேட்கையில், என்றோ கேட்ட உன் குரலை நினைவு படுத்துவதாய் இருந்தது அது .

கருப்பும், அடர் நீலமும் அவளுக்கும் பிடித்திருக்கிறது.என்ன கண்கள் மட்டும் கொஞ்சம் வேறு நிறம் .காதணி கூட உனது போல் இல்லை.இருந்தும் உங்கள் இருவரின் நிழல்களையும் கனவில் காண்கையில் அடையாளம் பிரிப்பதெனக்குக் கடினமே.

இந்தத் தெருவிலுள்ள அந்தப் பெண் ஏறக்குறைய உன் போலவே தான் இருக்கிறாள்.

ஆனால் அவள் நீ இல்லை.

——————————————————————————–

ஓவியம் : http://www.lyonsart.com