Tags

, ,

 

 

       அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள்

       இழப்பை நான் உணரும் போது

       துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் 

                                              

       – பாப்லோ நெருடா

                                                                                                                                                       

சந்தியா கொஞ்ச கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறாள் . என் உயிர் நீ .. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என போராடுவதற்கு எதுவுமில்லை . எல்லாம் முடிந்து விட்டது என்ற நிதர்சனம் மனம் பூராவும் பரவிக் கிடக்கிறது . துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலைப் பார்க்கும் போது உயிர் போவதே பரவா இல்லை என எல்லாருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் .

 

மணி மூன்றடித்தது . இன்னமும் அவள் நினைவு திரும்பவில்லை .போவதற்கு முன் ஒரு முறையாவது கண்ணைத் திறந்து பார்க்க மாட்டாளா என தான் அவள் அருகிலேயே உட்கார்ந்திருக்கிறேன்.

 

நேற்று தான் இவளைப் பெண் பார்க்கச் சென்றது போல் இருக்கிறது .

 

பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது . யார் தான் வேண்டாம் என்பார்கள் இவளைப் போன்ற ஒருத்தியை . மிகவும் அமைதியாகவே என்னருகில் நின்றிருந்தாள் . கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் பால்கனியில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்திலிருந்த கோவிலொன்றில்  மணியடித்தது .

 

“என்னங்க எதுவுமே பேச மாட்டீங்களா நீங்க ??”

 

அவள் எவ்வளவு பேசுவாள் என்பது அப்பொழுது தெரியாமல் நான் கேட்டது . பைத்தியக்காரி . விட்டால் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டேயிருப்பாள் . விரும்பிய இசை கூட சலித்துப்போகும் ஒரு காலத்திற்கு பிறகு . கொஞ்சம் கூட பொருள் , நோக்கம் எதுவுமில்லாமல் அவள் பேசுவது இன்றும் கூட சலித்ததே இல்லை .

 

 ” ஹேய்  பைத்தியக்காரி , ஒரே ஒரு முறை என்னைப் பார்த்து பேசேன் இப்பொழுது “

 

எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் மெதுவாக . நிச்சயம் அவளுக்கு இது கேட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்திறந்து என்னைப் பார்க்கத் தான் போகிறாள்.அவள் முகத்தைப் பார்த்தேன் . கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருக்கிறாள் . அன்றும் கூட இதே போல் தான் இருந்தாள்.

 

“ஏதாவது பேசலாமே .. அதுக்கு தான பெரியவங்க தனியா அனுப்பிருக்காங்க . “

 

மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.மீண்டும் கொஞ்ச நேரம் மௌனம் .

 

“சரிங்க , நாம நெறைய பேசிட்டோம்ன்னு நெனைக்கறேன் .. அப்போ கீழ போகலாமா ” என இரண்டடி எடுத்து வைத்தேன் .

 

ம்ம்ஹீம் .. என வேகமாக மறுத்து தலையசைத்தாள். அந்த வெட்கம் கலந்த முகம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது . நின்று அவளையே பார்த்தேன் .

 

“உங்க கவிதை …” பாதியிலேயே வார்த்தைகளை விழுங்கி விட்டாள் .

 

“ஹான் .. ஏதாவது சொன்னீங்களா .. நீங்க பேசினா மாதிரி எனக்கு எதோ கேட்டுச்சு ..இல்ல தான .. ” சிரித்துக் கொண்டே பார்த்தேன் .

 

மறுபடியும் தலையை அசைத்தாள் .”ஏதாவது சொன்னீங்களா  இல்லையா .. எனக்கெதுவும் புரியல ”

 

ஒருமுறை நிமிர்ந்து என்னைக் கோபமாகப் பார்த்துவிட்டு ,”உங்க கவிதை எல்லாம் படிச்சிருக்கேன் ..” என்றாள்.

 

“ஹப்பா .. முழுசா ஒருவரி நீங்க பேசி கேக்கறதுக்கு இவ்ளோ நேரம் ஆகிருக்கு..நீங்க எப்பவுமே இப்படித்தானா 

 

“உங்க கவிதை எல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னேன் .. ”

 

“சரிங்க..”

 

“இந்த ஒரு வாரமா நீங்க எழுதினதெல்லாம் தேடித் தேடிப் படிச்சிருக்கேன் “

 

“சரிங்க அப்பறம் ??”

 

“எல்லாத்தையும் படிச்சிருக்கேன்னு சொல்றேன் .. வேற அதுவுமே கேக்க மாட்டீங்களா ? “

 

“வேற என்ன கேட்கணும்ன்னு நெனைக்கறீங்க?? “

 

“எனக்குப் பிடிச்சிருக்கான்னு ” நிமிடத்திற்கு நிமிடம் அவளின் மூக்கு நுனி சிவந்து கொண்டே போனது .

 

“நீங்க மொதல்ல சொன்னதுமே கேட்ருப்பேன் .. நீங்க ஆமாம்  இல்லன்னு தலையசச்சு பதில் சொல்லிருப்பீங்க .. இவ்ளோ பேசிருக்க மாட்டீங்களே .. சரி இப்போ கேக்கறேன் .. பிடிச்சிருக்கா ?? “

 

மெல்ல தலை அசைத்தாள்.

 

“பாருங்க மறுபடியும் தலையசைக்கறீங்க ..”

 

சிரித்தாள். அதன் பிறகு என்னிடம் பேசுவதற்கு அவளிடம் எந்த தயக்கமும் இருக்கவில்லை . நிறைய பேசினோம் .. நிறைய உங்களுக்குப் பிடித்த ——– என்பது போன்றவைகள் , கொஞ்சம் அசட்டுத்தனமான நகைச்சுவைகள் , சட்டென்ற மௌனம் , கொஞ்ச நேரம் முகம் பார்த்து விட்டு மறுபடியும் சிரிப்பு . அன்றைய ஒவ்வொரு வார்த்தைகளும் , மௌனங்களும் அதன்பிற்கு பலமுறை நாங்கள் நடித்துப் பார்த்தும் சலிக்காதவை .

 

“உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு .. என்னைப் பிடிச்சிருக்கா ?”

 

“அதான் அப்பவே சொன்னேன்ல “

 

“அது நான் எழுதினதுக்கு தான “

 

“உங்களுக்கும் அதே தான் “

 

“அதை தெளிவா ஒரு தடவை சொல்லலாமே ”

 

ம்ம்ஹ்ம்ம் எனத் தலையாட்டிவிட்டு சிரித்துக் கொண்டே படிகளில் இறங்கி ஓடிவிட்டாள்.

 

கொஞ்சம் இடைவெளி விட்டு நானும் கீழிறங்கிச் சென்றேன் .

 

“என்ன தம்பி .. ரெண்டு பெரும் பேசினீங்களா ..பொண்ணு பிடிச்சிருக்கா ?”

 

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தேன் . “சும்மா சொல்லுப்பா ” என்றார் மீண்டும் . எல்லாரும் என்னையே பார்ப்பது போல் இருந்தது .

 

“எனக்கு பிடிச்சிருக்குப் பா .. ஆனா பொண்ணுக்கு தான் என்னைப் பிடிக்கலையாம் “

 

சந்தியாவின் அப்பாவிற்கு முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது . என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை . படுக்கை அறைக்குள்ளிருந்து வேகமாக ஓடிவந்தவள்

“நான் எப்போ பிடிக்கலைன்னு சொன்னேன் .. பிடிச்சிருக்குன்னு தான சொன்னேன்”   கோபமாக என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்தவள் எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தவுடன் உள்ளே ஓடியது இன்னமும் நினைவிருக்கிறது .

 

அங்கிருந்தவர்களில் பாலாவைத் தவிர யாரும் இப்பொழுது இங்கில்லை .  அறை முழுதும் அப்பிக் கொண்டிருந்தது கரும் இருட்டும் பயமுறுத்தும் மௌனமும் .எனக்கு அவள் கைகளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது .எங்களைச் சுற்றிலும் இருப்பவர்களை நினைத்து அடக்கிக் கொண்டேன்.

 

சந்தியா.. சந்தியா.. நான் பேசுவது கேட்கிறதா ?? இப்படி பேசாமல் இருக்காதே.

சட்டென்று உறைந்து உயிரே போகும்படி அடிக்கடி கேட்பாயே .. இப்பொழுது  கேளேன் அப்படி எதாவது ..    என்னென்னமோ திட்டங்கள் தீட்டி , மனதுக்குள் பலமுறை காட்சிகளை ஓட்டிப் பார்த்து உன்னிடம் வந்தால் எத்தனை முறை நீ எனக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறாய் உனது கேள்விகளாலும் , எதிபார்த்திருக்கவே முடியாத செய்கைககளாலும் .

 

திருமணத்திற்கு பின் வந்த உன் முதல் பிறந்தநாள் தானே அன்று . இரவு விளக்கில் , எழுதிக் கொண்டிருந்த எனக்காக காத்திருந்து தூங்கிவிட்டிருந்தாய் .அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் . பனிரெண்டு மணியடிக்க இரண்டு நிமிடங்கள் இருந்த பொழுது உன்னருகில் வந்தேன் . இதோ , இதே போலத் தான் அறையின் குறைந்த வெளிச்சத்தில் ஒரு நிழற்படம் போல படுத்திருந்தாய் எந்த ஒரு சலனமும் இல்லாமல் .  அளவிட முடியாத அளவு கர்வம் எனக்கு உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததில் . நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு , காதோரமாய் பிறந்தநாள்  வாழ்த்துகள் என்றேன் . மெதுவாகப் புன்னகைக்கத் துவங்கினாய் . நான் தூங்கவில்லை என்றாய் .

 

இப்பொழுதும் நான் முத்தமிடட்டுமா . சாபம் கலைந்த தூங்கும் தேவதை போல் மீண்டு வருவாயா ? நீ இல்லாமல் என்ன செய்ய போகிறேன் .. அதைச் சொல்லவாவது எழுந்து பாரேன் .

 

“எழுதி முடிச்சாச்சா ?”

 

“இன்னும் கொஞ்சம் இருக்கு .. அத நாளைக்கு எழுதிக்கலாம் .. இந்த ஒரு நாள் முழுசும் உனக்குத்தான் .. ஒவ்வொரு நிமிஷமும் நீ சிரிச்சிட்டே இருக்கணும் “

 

சொன்னதுமே சிரித்தாய் .அறையின் அந்த சின்ன விளக்கை கூட அணைத்துவிடலாமா என்று தோன்றியது .

 

“என்ன வேணும்னாலும் கேள் .. இன்னைக்கு நான் உன்கிட்ட மாட்டேன்னே சொல்லப் போறதில்ல ”

 

“என்ன வேணும்னாலுமா ? ” ஆச்சர்யம் கலந்த கேள்விகளின் புரிதல்களை உன் கண்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன் . ஒரே ஒரு பார்வை ..

 

“நீங்க எழுதினதிலேயே அழகான கவிதைய நான் படிக்கணும் ”

 

“என்ன கவிதையா ??”

 

“ஆமாம் ” என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாய் .

 

” நீ கேள்வி பட்டிருப்பியான்னு தெரியாது .. இது வரைக்கும் எழுதப் படாத கவிதைகளே அழகானவைகள்ன்னு சொல்வாங்க .. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் உனக்காக எழுதின எல்லா கவிதைகளுமே அழகானவைகள் தான் “

 

 ” ஆன்ன்  .. ஹா .. இந்த ஃபான்ஸி பதில் எல்லாம் வேணாம் .. நீங்க எழுதிருக்கீங்க .. எனக்கு படிச்சாகணும் “

 

“எனக்குத் தெரிஞ்சு இல்ல .. இனிமே எழுதினா அது உனக்காக  எழுதறதா தான் இருக்கும் .. “

 

“மறுபடியும் அதே மாதிரியான பதில் .. ஹ்ம்ம் எனக்கு அந்தக் கவிதை தான் வேணும் ” சிணுங்கல் என்பது பெண்களுக்கான பிள்ளைக் காதல் மொழி எனக் கற்றுத் தந்தவள் நீ தான் .

 

“நீ ஏதோ மனசில வச்சிட்டு கேக்கறேன்னு நெனைக்கறேன் .. நீயே சொல்லிடேன் .. அப்டி ஏதாவது என்கிட்டே இருந்தா உனக்கில்லாம யாருகிட்ட காட்டப் போறேன் “

 

“நீங்க எழுதின முதல் கவிதை ”

 

எனக்கு ஏனோ தேவை இல்லாமல் கோபம் வந்தது . கோபப் பட்டேன் .அவ்வளவு நேரம் உன்னிடம் நான் காட்டியது போலியான காதலா என எனக்கே சந்தேகம் வந்தது . எழுந்து போய் ஏனென்று தெரியாமல் நாற்காலியில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன் . பிறந்த நாள் அன்று உன்னை அழ வைத்தேன் . மன்னிப்புக் கேட்க வைத்தேன் .அதே போல இந்த முறையும் அழ வைத்து விடுவேனோ என்றா கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய் . உன்னைத் திட்ட மாட்டேன் . கோபப் படமாட்டேன் .

 

“நான் அவங்களப் பார்த்தேன் .. கோவிலுக்கு அவங்க வீட்டுக் காரரோட வந்திருந்தாங்க .. ரொம்ப அழகுங்க அவங்க …………….. ”

 

“………………………………………… , அவங்கள முதல்ல எப்போ பார்த்தீங்க .. ?”

 

“… இந்தக் கதைல வர பொண்ணு நீலா தான .. ஹை எனக்குத் தெரியும் ..”

 

“ஏங்க , ஒரு தடவ நீலா உங்க வீட்டுக்கு பாத்திரம் குடுக்க வந்தப்போ , பிடிக்காம கீழ போட்டுட்டு அம்மா அம்மா ன்னு கத்திகிட்டே கிச்சன்ல  , போய் ஒளிஞ்சுகிட்டீங்களாமே “

 

பலமுறை நீலாவைப் பற்றி என்னிடம் பேசமாட்டேன் என சொல்லி இருக்கிறாய்.ஆனால் அடுத்த முறையே ” என்னங்க தெரியுமா நீலா பொண்ணும் நம்ம பொண்ணும் ஒரே கிளாஸ் ல தான் படிக்கறாங்கலாம் ” இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு வந்ந்து நிற்பாய் . எனக்கு பிடித்திருந்தது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கும் அவளைப் பிடித்துப் போயிருந்தது . எல்லாவற்றையும் விட நான் அவளுக்கு எழுதிய கவிதைகள் .. அதை விட நீ படிக்கக் ஆசைப்பட்ட   எல்லாவற்றுக்கும் காரணமான என் முதல் கவிதை .

 

என் ஒவ்வொரு வினாடிகளையும் விரும்பித் தெரிந்து வைத்துக் கொண்டாய். என் பால்ய பருவத்துக் கதைகள் . நான் பழகிய நண்பர்கள் . சைக்கிள் ஒட்டிக் கீழே விழுந்து நான் வாங்கிய தழும்புகள் ..நான் உட்கார்ந்து படித்த மாமரத்துக் கிளைகள் .. என் முதல் வகுப்பு டீச்சரின் பெயர் .. என் முதல் காதல் .. என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல உனக்குத் தெரியும் என்னும் அளவிற்கு தெரிந்து வைத்திருந்தாய் . உன் இத்தனை அன்புக்கும் காதலுக்கும் நான் தகுத்கியானவன் தானா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். இன்னமும் கூட கொஞ்சம்  உன் மேல் அன்பு காட்டியிருக்கலாமோ என நினைத்துப் பார்க்கையில் இப்பொழுது தோன்றுகிறது. மீண்டும் ஒரு வாய்ப்புத் தர மாட்டாயா ?? சந்தியா .. நான் பேசுவது கேட்கிறதா இல்லையா ??? ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய் ???? எனக்கு அழ வேண்டும் போல் இருக்கிறது .

 

உனக்கு என்ன அந்தக் கவிதை தானே வேண்டும் . இந்த இருபத்தேழு வருடங்களாக உன் எல்லா பிறந்த நாட்களின் அன்றும் அதாவது ஒரு வகையில் என் முதல் கவிதையை படிக்கும் ஆசையை நீ தெரிவிக்காமல் இருந்ததில்லை. இந்த முறை உன்னை ஏமாற்றப் போவதில்லை . நானே விரும்பி மறந்து போன அந்தக் கவிதையைத் தேடி எடுக்கத் தான் போகிறேன் . அதைக் கொண்டு வந்தாலாவது எழுந்திரிப்பாய் தானே .

 

மெல்ல எழுந்தேன் .. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன . முட்டி வலித்தது . ஜனனியும் , ஹரிதாவும் எங்கே செல்கிறேன் என்பது போல் பார்த்தார்கள் . ஜனனியின் மடியில் ப்ரீத்தி குட்டி தூங்கிக் கொண்டிருந்தது .

 

படுக்கை அறையைக் கடந்து வெளியே வந்தேன் . வாசலில் கொஞ்சம் பேர் உட்கார்ந்திருந்தார்கள் .என்னைப் பார்த்ததும் மாப்பிளை எழுந்து வந்தார் .

 

  மாப்பிள்ள … வசந்த் எங்கன்னு .. “

 

“வசந்த்தும் பாலா அங்கிளும் இப்போ தான் பசங்கள தூங்க வைக்க மாடிக்கு போயிருக்காங்க .. ப்ரீத்தி தான் ஜனனி கூடவே இருக்கறேன்னு சொல்லிட்டா “

 

ஹ்ம்ம் .. என்று சொல்லி விட்டு வீட்டை ஒட்டியிருந்த மாடிப்படிகளை நோக்கி நடக்கத் துவங்கினேன் .

 

“மாமா ..”   தயங்கி என்னருகில் வந்தார் மாப்பிள்ளை .

 

“சொல்லுங்க மாப்பிள்ளே..”

 

“என்னால முடிஞ்ச அளவு நானும் முயற்சி பண்ணி தான் பார்த்தேன் மாமா . .. என் ஃபிரண்டு டாக்டர் தனபால் நேத்து நைட் தான் பிரான்ஸ் ல இருந்து திரும்ப வந்திருக்காரு . அவர வேணும்ன்னா   இன்னும் ஒரு தடவ … “

 

விரக்தியாய் இருந்தது . இன்னும் எத்தனை பேர் . “பரவா இல்ல மாப்பிள்ள .. நீங்க பார்த்து சொன்னதே போதும் .. அவ்ளோ தான்னா நாம என்ன பண்ண முடியும் ” வார்த்தைகள் உடைந்து உடைந்து வந்தன .

 

“அப்பறம் மாப்பிள்ள .. அவ பக்கத்திலேயே இருக்கறதால வந்தவங்கள கவனிக்க முடியல .. நீங்களும் வசந்தும் கொஞ்சம் பார்த்துகோங்க “

 

“சரிங்க மாமா”

 

இந்த இரவைப் போலவே என் மொத்தமும் திடீரென்று இருண்டு விட்டது போல்  தோன்றுகிறது .எத்தனையோ முறை ஏறிய மாடிப்படிகள். எனக்கு  வயதாவதை அவ்வப்போது உணர்த்திய படிகள் . மூச்சு வாங்கியது . மாப்பிள்ளையை அனுப்பி வசந்த்தை கீழே வரச் சொல்லியிருக்கலாம் .

 

எத்தனை முறை எங்கள் கால் தடங்களை வாங்கியிருக்கும் இந்த மாடி. துணி காயப் போட்டுக் கொண்டே நானும் அவளும் பேசிய வார்த்தைகள் இங்கே தானே எங்கேயாவது சுற்றிக் கொண்டிருக்கும் .வெறுங் கொடி மட்டும் தான் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது . மாடியில் சந்த்ருவும் , கவினும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மூலையில் நின்று பேசிக் கொண்டிருந்த வசந்த்தும் பாலாவும் என்னைப் பார்த்து வந்தார்கள்.

 

அவர்கள் முகத்தில் பதற்றம் . அவள் இன்னும் கண் விழிக்கவில்லை என்றேன் .

 

“என்னடா ஆச்சு ?? கீழ சந்தியா கூடவே இருக்க வேண்டியது தான”  பாலா .

 

“எனக்கு அந்த கவிதை வேணும்” . வசந்த்தின் முகத்தைப் பார்க்கவில்லை . அவன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் .பாலா எதுவும் பேசவில்லை .

 

“நீலாவுக்கு எழுதின அந்த கவிதையும் அந்த டைரியும் வேணும் 

 

வசந்த்தைக் கீழே போகச் சொன்னான் பாலா .

 

“இல்ல வேணாம் அவனும் இருக்கட்டும் ” என்றேன் .

 

” நீ சொன்னா மாதிரியே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன் டா ”

 

“இல்ல பாலா , அது இன்னும் உன்கிட்ட தான் இருக்குன்னு எனக்குத் தெரியும் “

 

கொஞ்ச நேரம் என்னையே பார்த்தான். வசந்த்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது பார்க்காமலேயே தெரிந்தது.

 

“சரி நீ கீழ போய் சந்தியா கூட இரு ..   நானும் வசந்தும் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறோம் .” 

 

நேராக சந்தியாவிடம் செல்லாமல் , எங்களது படுக்கை அறையிலும் , சமையலறையிலும் ஒவ்வொரு சுவராக , ஒவ்வொரு மூலையாக பார்த்துக் கொண்டிருந்தேன். இனி இந்த சமையலறை சுவற்றில் கரி படியாது . கதவின் பின்னால் ஒளிந்து , கத்தி ஆர்பாட்டம் செய்ய யாரும் இருக்கப் போவதில்லை. இந்தப் படுக்கைக்கு இனி ஒரு தலையணை தான்.

 

எனது எழுது மேஜையில் உட்கார்ந்தேன் .அறையின் விளக்கை அணைத்து விட்டு எப்பொழுதும் போல் இரவு விளக்கை மட்டும் போட்டுக் கொண்டேன்.

 

“சந்தியா .. சந்தியா .. எழுதறதுக்கு வச்சிருந்த பேப்பரப் பார்த்தியா ?ஒன்னைக் கூடக் காணோம் 

 

எங்க இருக்குன்னு தெரியும் .. ஆனா சொல்ல மாட்டேன்  ” இந்தக் கொஞ்சலான மொழிக்காகத் தானே எனது வாழ்க்கையையே உன்னிடம் தொலைத்தேன்.

 

“விளையாடாதம்மா .. சொல்லு .. நாளைக்கு காலைல எழுதி அனுப்பியாகணும் “

 

“யாரு யாரோ கேக்கறதெல்லாம் உடனே எழுதி அனுப்பறீங்க .. நான் எவ்ளோ நாளா கேக்கறேன் .. ” படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அந்த அறையிலேயே இரவு விளக்கு இருக்கும் இடமும் , கட்டிலின் மேலும் மட்டும் மஞ்சள் ஒளி இருந்தது.

 

“எத்தனை தடவை சொல்லுறது . எல்லாத்தையும் கிழிச்சுபோட்டேன் ..”

 

“பரவா இல்ல .. மறுபடியும் எழுதலாம் ல .. எல்லா கவிதையுமா கேக்கறேன் ”

 

“அதான் மறந்து போச்சுன்னு சொல்றேன்ல .. இப்போ எங்க இருக்குன்னு சொல்லப் போறியா இல்லியா ??”  

 

“இப்போ ஏன் திட்டறீங்க .. உங்க டிராயர்ல தான் வச்சிருக்கேன் .. அப்படி என்ன கேட்டுட்டேன் .. ” திரும்பிப் படுத்துக் கொண்டு அவள் முனகியது தெளிவாகக் கேட்டது. “மறந்திடுச்சாம் ..மறந்து .. எப்படி மறக்கும் முதல்ல எழுதின கவிதை ” .

 

நிஜமாகவே மறந்துவிட்டேனா? அதைப்பற்றி நினைக்க விரும்பவில்லை என்பது தான் உண்மையோ? சந்தியா  .. உன்னோடு சேந்து எனக்கும் அந்தக் கவிதை படிக்க ஆவலாயிருக்கிறது. எப்படி எழுதியிருந்தேன் அந்தக் கவிதையை? என்னென்ன  வார்த்தைகளிருந்தன அதில் .. பட்டாம்பூச்சியும்  மழையும்  என் எல்லாக்  கவிதைகளைப்  போல் அதிலும் இருந்ததா ?

 

“மறந்திடுச்சாம் ..மறந்து .. எப்படி மறக்கும் முதல்ல எழுதின கவிதை ”

 

பேனாவைத் திறந்தேன். கவிதைக்கு வைத்த பெயர் மட்டும் ஞாகபகம் இருக்கிறது. ” உன் ஒவ்வொரு துளியிலும் நான் ” . எவ்வளவு யோசித்தும் முதல் வரி கூட நினைவில் இல்லை. அடி பெண்ணே ! சொன்னால் நம்புவாயா உன்னைச் சந்திக்கும் முன்பு  நான் பார்த்தவைகள் எதுவும் என் நினைவில் இல்லை என்பதை .

 

“அப்பா, அம்மா எழுந்துட்டா .. உங்க கூட பேசணுமாம் ..சீக்கிரம் வாங்க  ” ஜனனி ஓடிவந்து சொன்னாள்.

 

கடவுளே நன்றி. இந்த நொடி அப்படியே உறைந்து போகட்டும். எழுந்திருக்கையில் மேஜையில் இடித்துக் கொண்டேன் .முடிந்த அளவு ஓடினேன்.

 

எல்லாரும் அறைக்கு வெளியே நின்றிருந்தார்கள். உள்ளே நுழைந்தேன்.கண்களில் நீராக வழிந்தது. அருகில் நின்று பார்த்தேன். பக்கத்தில் வரச் சொல்லி சைகை செய்தாள்.மண்டியிட்டு அவள் முகம், அருகில் புதைந்து கொண்டேன்.

 

“என்ன யாரு பாத்துப்பா .. விட்டுட்டு போய்டலாம்னு நெனச்சியோ ..”

 

என் கைகளைத் தேடி எடுத்துக் கொண்டாள்.

 

“இன்னைக்கு என் பிறந்த நாள் .. ஞாபகம் இருக்கா ..” கன்னங்களில் விழுந்த நீர் சூடாக இருந்தது .

 

“ஹ்ம்ம் ..பிறந்த நாள் வாழ்த்துகள் .. அந்தக்  கவ்….”

 

“இந்த தடவையும் அந்தக் கவிதையைக் கேட்டா திட்டுவீங்களா ?” சிரிக்க முயன்றாள்.எனக்கு அழுகையாக வந்தது. இல்லை என்று தலையசைத்தேன்.எதுவும் பேச முடியவில்லை.

 

“எனக்கு எழுதி தந்த கவிதைகள விட  அது நல்லா இருக்குமா ??” அழுதே விட்டேன் . அடி பைத்தியக்காரி இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு நாளாக கேட்டுக்கொண்டிருந்தாய்.

 

“இல்ல தான ..எனக்குத் தெரியுங்க .. உலகத்துலேயே அழகான கவிதைகள் நீங்க எனக்கு எழுதினது தான் ..ஆமா தான ”  

 

அவள் முகத்தில் மெல்ல முட்டினேன்.

 

“எனக்கு அந்தக் கவிதை வேணாங்க .. இந்தப் பிறந்த நாள் பரிசா எனக்கொரு கவிதை தருவீங்களா .. அந்தக் கவிதை இதுவரைக்கும் நீங்க எழுதினதை விட அழகானதா இருக்கணும் ..”

 

அவள் காதோரமாய் சென்றேன் . மெல்லிய குரலில் சொன்னேன் . ” நான் உன்னைக் காதலிக்கிறேன் ”

 

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை . எனக்கு பயமாக இருந்தது . தலையைத் தூக்கிப் பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீரும் , உதட்டில் புன்னகையும் நிரந்தரமாக உறைந்து போயிருந்தது. என் கைகள் இன்னமும் அவள் கைகளுக்குள்ளேயே இருந்தது. எப்பொழுதும் இருக்கும்.

 

எழுந்து அறைக்கு வெளியே வந்தேன். எல்லாரும் உள்ளே சென்றார்கள். ஆறுதல் சொன்னார்கள்.நிறைய அழுதார்கள். அழுகைச் சத்தம் பிடிக்காமல் வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தேன்.இடி இடித்தது.வானில் ஒரு நட்சத்திரமும் இல்லை . என் ஒரே நட்சத்திரமும் இல்லை.

 

பாலா என் தோளைத் தொட்டான்.

 

” எதுவும் சொல்லாத ” என்றேன் .

 

பழுப்பேறிப் போன காகிதங்கள் கொண்ட டைரி ஒன்றைத் தந்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டான். என் கைகள் நடுங்கின. மெல்ல அட்டையைப் பிரித்தேன். உன் ஒவ்வொரு துளியிலும் நான் ..

 

ஹார்மோன்களின் சதி …. முட்டாள்களின்……

 

“எனக்கு அந்தக் கவிதை வேணாங்க..” 

 

“எனக்குத் தெரியுங்க .. உலகத்துலேயே அழகான கவிதைகள் நீங்க எனக்கு எழுதினது தான் ..ஆமா தான “

 

ஆமாம். எனக்கும் இந்தக் கவிதைகள் வேண்டாம். பக்கங்களை பலம் கொண்ட மட்டும் கிழித்துத் தெருவில் எறிந்தேன் .

 

மழையோடு சேர்ந்து அழத் துவங்கினேன்.

 

———————————————————————————————————–