Tags

, ,

 

 

 

 

 

 

 

“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.

 

“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”

 

இது எங்கள் மறைவிடம்.  எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.

 

சுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.

 

 

என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.

 

 

அவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.

 

ஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

சூரியன் மலைகளுக்குப் பின்னே எழும் இடம் இது. கிழக்கிலிருந்து நீளும் மலைகள் தெற்கையும் மூடியிருக்கும். வடக்கு வடிந்து , சரிந்து ஒரு பள்ளத்தாக்காய் இருக்கிறது எப்பொழுதும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெரிய நீர் வீழ்ச்சியோடு. மேற்கு வாசலை அடைத்து வைத்திருக்கிறது திரி கோட்டை மதில் . அதன் உயரம் முடியும் இடத்தில் தான் வானம் அலைந்து கொண்டிருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். எப்படி இந்த மலைகளையோ , நீர்வீழ்ச்சியையோ தாண்டி எங்களால் செல்ல முடியவில்லையோ அதே போல் அந்தக் கோட்டைக்குப் பின்புறம் இருப்பதையும் பார்க்க முடிந்ததில்லை.

 

உலகத்தின் கடைசி இதுதானா ? இந்த அடைக்கப் பட்ட இடத்தில் இருக்கும் நாங்கள் யார்? எங்களைப் போலவே யாராவது இந்த மலைகளுக்கு அப்பால் இருக்கிறார்களா ? எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. ஓவியம் வரைவது , இசைப்பது , பாடல் எழுதுவது போல் .. இதெல்லாம் எப்படி எங்கே நாங்கள் கற்றுக் கொண்டோம் ?  விதைகளை முளைத்தால் செடி வருவது போல் , நாங்கள் எந்த மரத்தில் முளைத்தோம் … முளைக்கிறோம் …

 

இப்படி ஏகப்பட்ட விடை தெரியா கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன. இதற்கான விடைகள் ஒருவேளை அந்தத் திண்ணைவாசிகளுக்குத் தெரிந்திருக்கக் கூடும். சொல்வதற்குத் தான் மொழியில்லை அவர்களிடம். மொழியிருப்பவர்கள் , இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் இருந்து எங்களைப் புறந்தள்ளி வைத்திருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாய் ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும் .. அவர்களுக்கும் இதற்கான விடைகள் தெரியாது.

 

எல்லா கேள்விகளையும் விட நாங்கள் எப்படி முளைக்கிறோம் என்பது பற்றிய ஆர்வம் எங்களுக்கு எப்பொழுதுமே அதிகம். விதைகளில் இருந்து முளைக்கிறோம் என்பதில் ஏனோ எங்களுக்கு உடன்பாடு இல்லை.  சுருளான் வீட்டுப் பரணில் கிடைத்த ஒரு புத்தகம் தான் அதற்கு மூலமே. அது வெறும் கோட்டோவியங்கள் மட்டுமே நிறைந்த புத்தகம். குழந்தைகள் விதைப்பது குறித்தான வழிமுறைகள் கொண்டது. அதிலிருந்த ஓவியங்களில் எங்களுடன் இருப்பது எது இல்லை யார் ?? எங்கேயிருக்கிறது அது இல்லை அவர்கள் ??

 

அது ஒரு விசித்திர விலங்கு என்று மட்டும் இலைமறை காயாக எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். தெருவில் இருந்த எங்களை அவசரமாக வீட்டிற்குள் அடைத்து வைத்தார்கள். தெருமுழுவதும் அந்த வினோத விலங்கு பற்றிய சப்தம் கேட்டபடியிருந்தது. திண்ணைவாசிகள் எல்லாம் அதைத் துரத்திச் சென்றார்கள். என் அப்பாவை அதற்கு முன்பு நான் அப்படிப் பார்த்ததே இல்லை. மார்பெல்லாம் கீறி வைத்துக் கொண்டார்.

 

ஒரு முறையல்ல பலமுறை இதுபோல் அந்த விலங்கு வந்து போயிருக்கிறதாம் . அது போகின்ற வழியில் எழும் நறுமணம் ஆளைக் கிறங்கடிக்கக் கூடியதாக இருக்குமாம். அதைச் சுற்றிலும் வானவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருக்குமாம். இன்னமும் கை முளைத்த கால் முளைத்த கதைகள் ஏராளம் .. இன்னும் ஏராளம் எங்கள் ஆர்வங்களைக் கிளறியவைகள் . ஊமையன் கூட அந்த விலங்கை மறைந்திருந்து பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான் . எங்களுக்குத் தான் நம்பிக்கை இல்லை.

 

எங்கள் வீட்டுப் பரணிலும் அது போல் ஏதேனும் விளக்கக் குறிப்பு புத்தகம் இருக்கிறதா எனத் தேடிய போது தான்அப்பாவின் நாட்குறிப்பேடு கிடைத்தது.

 

“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”

 

மருது இன்னொருமுறை கேட்டான்.

 

“பெண் .. அந்த விலங்கின் பெயர் பெண் ” ஆழ்ந்த பெருமூச்சொன்று வந்தது.

 

அது மட்டுமல்லாமல் .. அது திரி கோட்டை அல்ல .. ஸ்திரீ கோட்டை .. ஸ்திரீ என்றாலும் பெண்.  அந்த கோட்டைக்குப் பின் தான் அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் .

 

எல்லாரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள். எனக்கு ஏதோ சாதித்தது போல் இருந்தது . அப்பாவின் நாட்குறிப்பேட்டில் இருந்த குறியீடுகளையும் , ஓவியங்களையும் விளக்கத் துவங்கினேன் . மீண்டுமொருமுறை குழந்தைகள் விதைக்கும் குறிப்பேட்டை இதனுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்பா   சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது.  அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது. இதுவரை வாழ்வில் இல்லாத சுவாரசியம் ஒன்று தொற்றிக் கொண்டது.

 

அந்த விலங்கு …. பெண் , வந்து சென்றிருந்த நாளில் தெருவெங்கும் வீசிய அந்த நறுமணம் இரவு முழுவதும் என்னைச் சுற்றியபடி இருந்தது. அப்பாவின் குறிப்புகள் பெண்ணைப் பற்றிய தகவல்களோடு , கோட்டைக்குச் செல்லும்  வழி முறையோடு முடிந்து போயிருந்தது. எனக்கு கோட்டைக்குப் பின்புறமிருப்பவர்களைப் பார்க்க ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போனது. 

 

“நான் கோட்டைக்குப் பின்னாடி போலாம்னு இருக்கேன்”

 

“எலேய் வேணாம்டா  அது நமக்கு .. அங்கன எப்படிப் போறதுனும் தெரியாது ..  பெரிய காட்டக் கடக்கணும் முதல்ல .. வேணாம் அமுதா ”

 

எல்லாரும் அதையே சொன்னார்கள். ஆனால் என் ஆர்வம் எதையும் கேட்கவில்லை. கடைசியில் எனக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டார்கள் .

 

ஒரு பெரிய ஒளிப் பிழம்பு பட்டு இன்னொரு சிறிய ஒளி மூலத்தின் இரவு நேரத்தைய நிழல் கோட்டை மதிலின்  ஒரு ஓவியத்துடன் பொருந்துவது போல் ஒரு படம் இருந்தது அப்பாவின் குறிப்புகளில் . அதைத் தொடர்ந்து வந்த படத்தில் சுவற்றில் ஒரு தடம் தெரிந்தது . அதற்கு நேரே உள்நோக்கி அம்புக்குறி போடப்பட்டிருந்தது ..

 

இரவில் எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒளி மூலம் நிலா மட்டும் தான் .  பௌர்ணமியைத் தெரிந்தெடுத்தோம்.

 

இரண்டு நாட்கள் முன்பாகவே அடர்ந்த காட்டித் தாண்டி கோட்டை மதிலுக்கு வந்துவிட்டோம் . ஓவியங்கள் வரையப்பட்டிருந்த அந்தச் சுவற்றைக் கண்டு பிடிக்கத் தான் அரை நாளுக்கு மேலாகிப் போனது .  உண்மையில் அவைகள் ஓவியங்கள் அல்ல . சுவற்றோடு செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள். பெண் சிற்பங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்த சிற்பங்கள்… சேர்ந்திருந்த சிற்பங்கள்.

 

அந்தப் பகுதியை மட்டும் சுத்தம்  செய்து வைத்தோம். காட்டுக் கொடிகளை எல்லாம் வெட்டி வைத்தோம் .சிற்பங்களைத் துடைத்து வைத்தோம் .

 

மதிலும் மேற்கு . நிலவும் மேற்கிலிருந்து தான் வரும் . நிலவின் ஒளியைக் குவித்துப்  பிரதிபலிக்கும் சுருளானின் யோசனை எவ்வளவு தூரத்திற்குச் சரிப்பட்டு வரும் என்று தெரிய வில்லை . ஒரு குவியப் புள்ளியைக் குறி வைத்து நான்கைந்து இடங்களில் கண்ணாடி வைத்தோம் .  பௌர்ணமிக்காகக் காத்திருக்கத் துவங்கினோம் .

 

பௌர்ணமி வந்தது .

 

எங்களுக்குள் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீ அதை செய் , நீ இதை செய் என மாற்றி மாற்றி கட்டளைகள் இட்டுக் கொண்டோம். நிலா உச்சிக்கு வந்தது. அன்று மட்டும் அது எரிவது போல் இருந்தது. ஒருவேளை சூரியனை நேரடியாகப் பார்க்க முடிந்தால் இப்படியும் இருக்கக் கூடும் எனத் தோன்றியது. கண்ணாடிகளைச் சரி செய்தோம் . ஒரு புள்ளியில் முழு நிலவும் கண்ணாடிகளுக்குள் அடங்கியது. மதிலில் இருந்த சிற்பங்கள் பகலில் குளிப்பது போல் ஒளிர்ந்தன. நடுவே ஒரு தூணில் உருகுவர்த்தி ஒன்றைக் கொளுத்தி வைத்தேன் . திரியில் தீபத்துடன் அதன் நிழல் மதில் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது .

 

நேரம் தான் ஆகிக் கொண்டிருந்தது. எந்தச் சிற்பத்துடனும் அதன் நிழல் பொருந்தவில்லை. எந்தக் கதவும் திறக்கவில்லை. ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

 

” நான் அப்பவே சொன்னேன்ல ” எல்லாரும் முணுமுணுக்கத் துவங்கினார்கள்.

 

நான் மட்டும் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் . நிலா நகர நகர, நிழலும் நகர்ந்து கொண்டிருந்தது .உருகுவர்த்தியின் நிழல் ஒரு பெண் ஆடிக் கொண்டிருப்பதைப் போல் இருந்தது. உருகிய மெழுகு வடிந்து ,அதன் மேலேயே படிந்து பெண் போல் ஆகியிருந்தது . ஒரு வினாடி , ஒரே ஒரு வினாடி தான் அந்த நிழல் சுவற்றில் ஆடிக் கொண்டிருந்த சிற்பத்தில் பொருந்தியது.

 

சுவர் மெல்ல கரையத் துவங்கியது ஒரு கானல் பிம்பம் போல் எதிரே நின்றது. அருவி ஒன்று கீழிருந்து மேலே பாய்வது போல் இருந்தது. ஏதோ ஒரு உணர்வு என்னைத் தொடச் சொன்னது. அடுத்த கணம் உள்ளே இழுக்கப் பட்டிருந்தேன்.

 

மெல்லிய பயம் உள்ளே பரவத் தொடங்கியது. பின்னால் வெறும் சுவர் தான் இருந்தது. கத்திப் பார்த்தேன். சுவற்றில் குத்திக் கைகள் தான் வலித்தது.நிலா மட்டுமே இந்தப் பக்கமும் கூட இருந்தது.

 

திரும்பிய பக்கமெல்லாம் வெறும் கொடிகளும் மரங்களும் தான் . காய்ந்த இலைகள் தரை முழுவது சிதறியிருந்தன. எதிரே இருந்த மாளிகை ஒன்று இடிந்திருந்தது. கைகளைத் தட்டி யாராவது இருக்கிறீர்களா எனக் கத்தினேன். பெண் .. பெண் .. என்று கத்தினேன். வண்டுகளின் சப்தங்கள் மட்டுமே பதிலாக வந்தது.

 

இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடந்தேன். கீழே இலைகளுக்கு அடியில் வெள்ளையாக பட்டையாக தெரிந்தது. அவசரமாக சருகுகளை விலக்கினேன். அது ஒரு கோடு. எங்கே முடிகிறது என இன்னமும் கொஞ்ச தூரம் பார்த்தேன். அது கோடு இல்லை .. வட்டமாக சென்று கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட எல்லைக் கோட்டைப் போல் இருந்தது.

 

ஒரு நிமிடம் யோசித்து விட்டு கோட்டைத் தாண்டி காலை வைத்தேன்.

 

என் முன்னால் இருந்த சருகுகள் மேலெழும்பிப் பறக்கத் துவங்கின. சுழன்று சுழன்று சுற்றியிருந்த எல்லாவற்றையும் இழுக்கத் துவங்கியது அந்தச் சுழல். அருகிலிருந்த மரத்தைப் பற்றிக் கொண்டேன். கண்களை இருக்க மூடிக் கொண்டேன். சுழல் அடங்கியது போல் இருந்தது. அந்த அழகிய நறுமணம் சுற்றி வந்தது. கண்களை மெதுவாகத் திறந்தேன்.

 

ஆச்சர்யமாக இருந்தது. அந்த இடம் தானா இந்த இடம் என்று தோன்றியது. சுற்றிலும் பளிங்கு வெண்மையாக இருந்தது.  பூக்கள் நிரம்பிய சோலைகள் , கண்ணாடிச் சாலைகள் , வண்ண வண்ணப் பறவைகள் , வானவில் பூச்சிகள் என வெகு நாட்களாக நான் கற்பனை செய்து வந்த இடம் போலவே இருந்தது. மனதை மயக்கும் இன்னிசை ஒன்று கேட்டுக் கொண்டே இருந்தது. எங்கும் ரம்மியமாக இருந்தன. மனம் முழுக்க ஒரு வித துள்ளல் புகுந்து கொண்டது. அங்கங்கே புத்தகத்தில் பார்த்திருந்த கோட்டோவியங்கள் சிற்பங்களாக நின்றிருந்தன. ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன்.  

 

அங்கிருந்ததிலேயே அழகான சிற்பம் ஒன்று மாளிகையில் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தது. நீட்டியிருந்த கைகளில் முப்பட்டகம் ஒன்று இருந்தது. அந்தப் புன்னகையில் எனக்கான செய்தி ஒன்று இருந்தது. மெல்ல சிலையைத் தொட்டேன். கையிலிருந்த முப்பட்டகம் ஒளிர்ந்து அரை அங்குலம் மிதக்கத் துவங்கியது. பயத்தில் பின்வாங்கினேன்.

 

என் கண்முன்னாலேயே அந்தச் சிலை உயிர் பெற்றுக் கொண்டிருந்தது. அவளைத் தழுவியிருந்த ஒற்றை மேலாடை காற்றில் எழும்பிப் பறந்து எங்கோ காணாமல் போனது. அவள் நிலவின் நிர்வாணத்தில் இருந்தாள்.

அந்த வார்த்தையை இதுவரை நான் பிரயோகித்திருக்கிறேனா எனத் தெரியாது . இப்படி ஒரு வார்த்திதை தெரியுமா எனக்கூட நினைவில்லை . ஆனால் அவளைப் பார்த்த வினாடியில் சொல்லத் தோன்றியது . அவள் ‘அழகாய்’ இருந்தாள்.

 

“ஆடைகள் அடிமைகளின் அடையாளங்கள் .. அதைத் துறந்து விட்டு வாருங்கள் அன்பரே! ஆதாம் காலத்துக் கதைகள் பேசலாம் ”

 

அந்தக் குரலுக்கு அடிமை ஆனேன். உடுக்கை இழக்க உதவி செய்தன கைகள்.

 

அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது . கன்னங்களில் இருந்து ஆரம்பித்தேன்.என்றோ பறித்த காட்டுப் பூ ஒன்றின் ஸ்பரிசத்தை ஞாபகப் படுத்தினாள். அந்தக் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது . முகத்தை ஏந்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன் . யார் சொல்லித் தந்தது எனத் தெரியவில்லை. ஒரு அனிச்சையில் சட்டெனப் பற்றி இதழ்களில் முத்தம் தந்தேன். ஏதோ ஒன்று உறுத்த அவள் கைகளில் இருந்த முப்பட்டகத்தை வெறித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை எனச் சொல்லி தூக்கி எறிந்தவள் மறுபடியும் என்னை இழுத்து முத்தமிட்டாள் .

 

எங்களுக்கென மட்டும் ஒரு புதிய உலகம் பிறந்தது. இத்தனை வருடங்கள் காத்திருந்தது இதற்காகத் தானா எனத் தோன்றியது . நான் விரும்பியது போலவே மாறின அங்கிருந்த அத்தனையும். பௌர்ணமியாகவே இருந்தது நிலா. மழையோடு  விண்மீன்கள் பார்த்தேன். வானவில் பூச்சிகள் விரும்பிய போதெல்லாம் கைகளில் வந்து அமர்ந்தன. அவள் கைகள் என்னுடன் கோர்த்துக் கொண்டே இருந்தன . எல்லாவற்றையும் ,எல்லாரையும் மறந்து போனேன் மொத்தமாய் .

 

அந்த மாலையும் வந்தது . மஞ்சள் பூக்களுக்குள் மறைந்து போயிருந்தாள் அவள் . தேடுவதற்கு இறங்கினேன் . நானும் தொலைந்தேன் . கண்டுபிடித்த வினாடியில்  சடுதியில் ஒட்டிப்  பிரிந்தோம் . மீண்டும் முடிவிலியின் முதல் புள்ளியில் சந்தித்தோம் . சுற்றிலும் எரிந்தன தழல்கள் . எரிந்தோம் . சட்டெனக் கொட்டியது மழை . நனைந்தோம் . நான் என்பதும் , அவள் என்பதும் மறைந்து போய் ஆதாம் ஏவாளின்  ஆதிப் பிழையில் ஒன்றாகிப் போனோம் .

 

அதற்குப் பின்பு வந்த நாட்கள் நம்ப முடியாதவை. அவள் கண்களில் இருந்த பரிவு காணாமல் போயிருந்தது மஞ்சள் பூக்களுக்குள்ளேயே. கண்களில் ஒரு குரூரமும் இதழ்களில் ஒரு இகழ்ச்சியும் சேர்ந்திருந்தன. எனக்கு ஆடைகள் கொடுத்து , அணி என்றாள்.

 

“ஆடைகள் என்பது அடிமைகளின் அடையாளம் அல்லவா “  என்றேன் இன்னும் அந்த போதை கலையாமல். 

 

“நீ அடிமை தானே இனிமேல் ” அருகிலிருந்த சாட்டையை எடுத்து என் மேல் சொடுக்கினாள். அன்றிலிருந்து தான் நான் கழுதையானேன் .

 

இருந்தும் அவளுக்கு சேவை செய்வது பிடித்திருந்தது. கால்கள் தொடுவது , கைகள் பிடிப்பது போன்ற குறைந்த பட்ச ஸ்பரிசங்கள் என் இச்சைகளுக்கு வடிகாலாக இருந்தன. ஆனால் எனக்குப் புரியாதது ஒன்று மட்டும் தான் . எத்தனை முறை தூக்கி எறிந்தாலும் அடுத்தமுறை அவளைப் பார்க்கையில் கைகளில் அந்த முப்பட்டகதோடே அவள் காட்சியளித்தாள். வெகு நாட்கள் கழித்து கேள்வி கேட்கும் குரங்கொன்று கனவு கலைந்து விழிக்கத் துவங்கியது எனக்குள்.

 

நாளாக நாளாக அவளின் போக்கு சுத்தமாக மாறிக் கொண்டிருந்தது . அவளின் இருப்பு எனக்கு எப்படி கசக்கும் ஒன்றாக மாறத் துவங்கியது என்று புரியவில்லை. அன்று அழகாய் தெரிந்தவள் இன்று ‘அகோரமாய்’. இந்த வார்த்தையையும் கற்றுத் தந்தது அவளே தான். தேயத் துவங்கியது நிலா.

 

குளித்துக் கொண்டிருந்த அவளிடம் வரம்பு மீறியதற்காக கன்னத்தில் அறைந்து துரத்தியிருந்தாள். படித்துறையில் வந்து அமர்ந்திருந்தேன். எங்கிருந்து இந்தக் கதை ஆரம்பித்தது என யோசித்தபடி இருந்தேன் . அந்த மாலை எங்களுக்குள் நிழந்தது ஒரு கனவைப் போலவே இருந்தது . முதலில் எனக்கு அது உறுத்தவே இல்லை . என் முன்னாள் தரையிலிருந்து அரை அங்குலத்தில் மிதந்து கொண்டிருந்தது அவள் தூக்கியெறிந்த முப்பட்டகம்.

 

என் முகத்திற்கு நேர் எதிரே எழும்பி ஒளிரத் துவங்கியது . உற்றுப் பார்த்தேன் . உள்ளே புகை புகையாய் நிறைய உருவங்கள் . உருகுவர்த்தி  அணைந்த பின்  வரும் புகை போல உள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. மெல்ல திரும்பிக் குளத்தைப்  பார்த்தேன் . நீருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்கு முன்பிருக்கும் தூண் நிச்சயம் இதை மறைத்திருக்கும். மீண்டும் முப்பட்டகத்தில் பார்க்கையில் அந்தப் புகை எனக்கு மிகவும் பரிட்சையமான முகத்தில் இருந்தது . அது .. அது என தந்தையினுடையது .

 

“மகனே .. மகனே .. ஓடி விடு .. அவளை நம்பாதே .. ஓடி விடு ”

 

எனக்கு எதுவுமே புரியவில்லை . மறுபடியும் மறுபடியும் அந்தக் குரல் அதையே சொல்லிக் கொண்டிருந்தது .என் தந்தையின் குரலை நான் ஒரு முறை கூடக் கேட்டதில்லை . அந்த ஓடி விடு மட்டும் காதிற்குள்ளேயே எதிரொலிக்கத் துவங்கியது . நேரமாக ஆக ஒலிக்கும் சப்தங்கள் அதிகரிக்கத் துவங்கின . குரல்கள் அதிகரிக்கத் துவங்கின .எனக்கு வியர்க்கத் துவங்கியது .

 

அதற்குள் குளித்து முடித்தவள் தண்ணீர் சொட்டச் சொட்ட கையில் சாட்டையோடு படித்துறையில் ஏறி வந்துகொண்டிருந்தாள் .

 

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் ” கத்தியபடி வந்தாள். இந்தக் குரலா எனக்குப் பிடித்திருந்தது .

 

” ஓடி விடு மகனே .. எப்படி வந்தாயோ அப்படியே ஓடி விடு .. ஓடி விடு ” மறுபடியும் குரல் கேட்டது .

 

நான் முப்பட்டகத்தைப் பார்த்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். கையில் சாட்டையைச் சுழற்றியபடி வந்தாள் . நான் வாயிலை நோக்கி ஓடத் துவங்கினேன் .

 

ஆண்கள் எல்லாருமே வஞ்சகர்கள் .. ஆசை தீர்ந்ததும் ஓடிப் போகிறவர்கள் ..” பின்னாலேயே குரல் துரத்தி வந்தது . 

 

எனக்கு சில அடிகள் முன்பு அந்த வெள்ளை வளையம் புலப்பட்டது .

 

பின்னாலிருந்து குரல் கேட்டது .

 

“அன்பரே நில்லுங்கள் .. என்னை விட்டு விட்டு செல்ல எப்படி மனது வந்தது ” . ஆஹா என்ன இனிமையான குரல் . என்ன இனிமையான மணம் . நின்று திரும்பிப் பார்த்தேன் .

 

அழகான அவள் நின்று கொண்டிருந்தாள் .செய்வதறியாது நான் மயங்கத் துவங்கினேன் . எனக்கு முன்பே கைகளை நீட்டினாள் . கை மேல் வந்து மிதந்தது அந்த முப்பட்டகம் . அதை என்னை நோக்கிக் காட்டினாள் . ஒளிக்கற்றைகள் பாய்ந்து வரத் துவங்கின .

 

மீண்டும் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன் . கோட்டைத்  தாண்டினேன் . மறுபடியும் ஒரு சுழல் தோன்றியது . சுழலுக்குள்  எல்லாமே மறையத் துவங்கின . கோட்டைக்குள் நுழைந்த இடத்தில் நின்று  பலம் கொண்ட மட்டும் கத்தினேன் . கதவு ஏதாவது இருக்கிறதா எனத் தடவினேன் . பின்னாலேயே துரத்தி வந்து கொண்டிருந்தன முப்பட்டகக் கதிர்கள் . 

 

ஆச்சரியமாய் எனக்கு முன்னால் இருந்த சுவர் கானலாகிக் கொண்டிருந்தது . வேகமாக அருகே சென்று தொடுவதற்கும் ஒளிக் கற்றைகள் என் மேல் படுவதற்கும் சரியாய் இருந்தது . வெளியே வந்து விழுந்தேன் .

 

“இத்தன நாளா எங்கடா காணாம போய்ட்ட .. எங்களுக்கு கவலையாயிடுச்சு .. அதான் அன்னைய போலவே பண்ணி , வழி கெடைக்குதான்னு பாத்தோம்  .. கதவு தொறந்தா நீயே வெளிய வந்து விழற ”  சுருளான் சொன்னது எதுவும் காதில் விழவில்லை .

 

அவள் சப்தம் போட்டுச் சிரிப்பது காதில் கேட்டுக் கொண்டே இருந்தது .மேலே பார்த்தேன் . பௌர்ணமிச் சந்திரன் இந்தப் புறமும் இருந்தது .

 

எனக்கு சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வந்தது . எல்லாரையும் மாற்றி மாற்றி கட்டியணைத்துக் கொண்டேன் . நான் தப்பிவிட்டேன் .. நான் தப்பிவிட்டேன் .. ஆனந்தத் தாண்டவம் ஆடினேன் .

 

“என்ன ஆச்சு உள்ள .. அந்த விலங்கப்  பாத்தியா  ” எல்லாரும் ஆர்வமாகக் கேள்வி கேட்டார்கள் . சொல்வதற்கு என்னிடம் நிறைய கதைகள் இருந்தன . ஒவ்வொன்றாக சொல்லத் துவங்கினேன் . நான் பேசப் பேச அவர்கள் முகம் கோணலாகிக் கொண்டே வந்தது .

 

“அமுதா என்னாச்சு .. ஏன் அந்தத் திண்ணைக் காரங்க மாதிரியே பேசற .. நீ சொல்றது எதுவுமே வெளங்கல  ” .

 

எனக்கே நான் பேசுவது விசித்திரமாகப் பட்டது . என்ன ஆனது என் குரலிற்கு . எனக்கு அழுகையாக வந்தது . எனது குரலும் முப்பட்டகத்திற்குள் அடைந்து போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை . எப்படிச் சொல்லியும் அவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியவில்லை . எரிச்சலாக வந்தது .

 

என் மொழி புரியாத யாருடனும் பேசப் பிடிக்காமல் காலியாயிருந்த  அப்பாவின் திண்ணையை நான் எடுத்துக் கொண்டேன் .

 

நான்கைந்து வருடங்களில் எனக்கு நிறைய வயதாகிப் போனது போல் இருந்தது . ஒரு காலையில் தட்டப் பட்ட என் கதவுக்குப் பின்னே கையில் புல்லாங்குழலுடன் ஒரு பாலகன் ஒருவன் நின்று கொண்டிருந்தான் . என் சாயல் அவனிடம் . அதே வாசம் மீண்டும் . எனக்குப் புரிந்து போனது . அவள் தான் வந்து விட்டுப் போயிருக்கிறாள் . தடியெடுத்துக் கொண்டு வாசம் வந்த திசையை துரத்தத் துவங்கினேன் .   எனக்கு நடந்தது என்னவென்று தெரியாத சுருளான் , செவலை , மருது ஊர் சிறுவர்களை அந்த விலங்கிடம் இருந்து காப்பாற்ற வீட்டிற்குள் அடைத்து வைத்தனர் .

 

ஊரில் பேச முடிகின்ற யாரும் கடைசி வரை அந்த விசித்திர விலங்கைப் பார்கவே இல்லை . பார்த்த யாருக்கும் நடந்ததைச் சொல்ல குரல்கள் இல்லை .கால் முளைத்த கதைகளும் முடியவே இல்லை . என் பங்கிற்கு நானும் எனது நாட்குறிப்பேட்டில் கதை ஆரம்பித்த இடத்தில் இருந்து ஆரம்பித்த படியே  எழுதத் துவங்கினேன் .

 

 

“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.

  

******

 

 

 

 

 

 

 

 

(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)