Tags

,

1:

 

எனக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத் தெரியாது . ஆனால் இந்தக் கதையின் அவனைப் பற்றி எனக்கு ஓரளவேனும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் . குறைந்த பட்சம் அவனது ஒரு இரவின் பாதியாவது .

 

இரவு . ஆமாம் .. இரவே தான் . என்னை நானே முதலீடு செய்து கொள்ளும் நேரம் அதுதான் .  இதைச் சொல்வதற்காக எனக்கு எந்த வருத்தமோ பச்சாதாபமோ கிடையாது . நான் அப்படித்தான். அதில் எனக்கு ஒரு கர்வம் கூட உண்டு. உங்களுக்காக பாரம் சுமந்து ஓவ்வொரு நாள் காலையும் உயித்தெழ என்னால் மட்டுமே முடியும். நிற்க . இந்தக் கதை என்னைப் பற்றி அல்லவே. கொஞ்சம் கவிதைகள் படித்தாலே நான் யார் என்பதைத் தேடச் சொல்லி , தேடித் தேடி இறுதியில் நான் என்பதே எஞ்சி நிற்கிறது. அவனுக்கு வருகிறேன் .

 

என் பெயர் .. ஓ .. கதையின் ஆரம்பம் என்றால் பெயர் சொல்ல வேண்டுமல்லவா. இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாமல் அநேகம் பேர் விரலைக் கூடத் தொடுவதில்லை. நான் சந்தித்திருக்கும் அநேகம் பேரிடம் முதலில் சந்திக்கும் கேள்வி என் பெயர் பற்றியதாகத் தான் இருக்கிறது . அந்த நமைச்சல் உங்களுக்கும் இருப்பின் தெரிந்து கொள்ளுங்கள் அந்த இரவில் என் பெயர் வைஷ்ணவி.

 

இந்தப் பெயரும் அவன் வைத்தது தான்.

 

முதலில் மாணிக்கம் வந்து சொன்ன பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அவன் விரல் கூட உன் மேல் படாது என்று சொல்லித் தான் அழைத்துச் சென்றான். எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஒவ்வொரு ஆணுமே ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு வித வக்கிரங்கள் . எந்த வயதில் இருந்து இந்த வக்கிரங்கள் அவர்களிடம் வளர ஆரம்பிக்கின்றன எனத் தெரியவில்லை. மனைவியிடமோ , இல்லை காதலியிடமோ கட்டமைத்திருக்கும் புனித பிம்பம் உடைந்து விடாமலிருக்க அடங்கிக் கிடக்கையில் தான் , அவர்கள் அதிகாரத்தை கட்டவிழ்த்து விட என் போன்றவர்கள் தேவைப் படுகிறோம். ஒரு விதத்தில் என் போன்றவர்கள் வடிகால்கள் தான் .

 

அவர்களுக்கும் ‘அதை’யும் தாண்டி , வேறு சில விஷயங்களுக்காக நாங்கள் தேவைப் படுகிறோம் . ஆடையில்லாமல் ஆடிக் காட்டுவதற்கு , விரும்பிய இடத்தில் நெருப்பால் சுட்டுப் பார்ப்பதற்கு , பற்கள் எவ்வளவு தூரத்திற்கு பலம் என்று பார்ப்பதற்கு , தலை நிறைய பூவும் புது புடவையுமாக தினம் தினம் முதல் இரவு பார்ப்பதற்கு .. சொன்னால் நம்பப் போவதில்லை . என் பகல் பொழுதுகள் இரவுகளின் அபத்தங்களை நினைத்தே கழிந்திருந்தன , புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும் வரை.

 

அது போல ஒருவன் தான் அவனும் என நினைத்திருந்தேன். விரல் கூட தொடாமால் என்ன தான் செய்யப் போகிறான் என எனக்கும் ஆர்வமாகத் தான் இருந்தது. வக்கிரங்களை ஆர்வமாக எதிர்கொள்வதுதான் எங்களுக்குக் கற்றுத் தரப் பட்டிருந்த முதல் பாடம்.

 

கடற்கரை ஓரமாக அவனது வீடு மிகவும் அழகானதாக இருந்தது. இதை விட பெரிய வீடுகளை  எல்லாம் பார்த்திருக்கிறேன். இருந்தும் அந்த அறையின் அலங்கரிப்புகளும் , அமைதியும் புதிதாக இருந்தது .

 

ஒரு பத்து நிமிடத்திற்கு எதுவுமே பேசவில்லை . எப்படியும் பெயர் தான் கேட்கப் போகிறான் . என் பெயர் என ஆரம்பித்தேன் .

 

“வைஷ்ணவி .. வைஷ்ணவி ..” அவன் குரலில் ஒரு வித பதட்டம் இருந்தது . நிறைய இரவுகளின் உறக்கம் மீதமிருந்தது அவன் கண்களில் . அறை முழுவதும் இருந்த சிகிரெட்  வாசம் அவன் உதடுகளில் கருமையாய் படிந்திருந்தது .

 

“ஆமாம் .. வைஷ்ணவி”  என்றேன் .

 

“இல்லை .. இல்லை .. நீ இன்னும் வைஷ்ணவி ஆகவில்லை .. ” . எழுந்து ஓடிச் சென்று பெட்டியைத் திறந்து புடவை நகைகளை எல்லாம் வாரி இறைத்தான் கட்டிலில் .

 

“இதையெல்லாம் போட்டுக் கொள் ..  சீக்கிரம் ” என்றான் .

 

“சரி தான் .. இவன் ஒரு ரகம் போல ” என நினைத்துக் கொண்டேன் .

 

பக்கத்து அறையைக் காட்டினான் . நான் சிரித்துக் கொண்டே அவன் முன்னாலேயே  ஆடை மாற்றத் துவங்கினேன். கண்களை மூடிக் கொண்டான். கடைசி வரை விரல் இடுக்குகளில் கூடப் பார்க்கவில்லை . எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு வளையல்களில் சப்தம் வருவித்தேன் .

 

“வைஷ்ணவி .. வைஷ்ணவி ..” வேகமாகக் கண்கள் திறந்து பார்த்தான்.  அதற்கு முன்பு நான் பார்த்திருந்த அவன் முகம் இப்பொழுது வேறு ஒன்றைப் போல் இருந்தது .

 

 ” உட்கார் வைஷ்ணவி ” என்றான் . ” கண்களுக்கு மை பத்தவில்லை ” எடுத்து வந்து கொடுத்தான் . ஏதோ ஒன்றை யோசித்தவன் போல , வேகமாக ஓடிச் சென்று ‘நெக்லஸ்’ ஒன்றை எடுத்து வந்தான்.  அணிந்து கொண்டேன் . “இதை நினைவிருக்கிறதா வைஷ்ணவி  ” .

 

வைஷ்ணவி .. வைஷ்ணவி .. வைஷ்ணவி . அவனது சொற்களில் , பார்வைகளில் எங்கும் அவள் தான் நிறைந்திருந்தாள் . எனக்கே நான் அவள் தானோ என்று தோன்றியது.

 

கொஞ்ச நேரத்திற்கு அவன் எதுவும் பேசவில்லை . பார்த்துக் கொண்டே இருந்தான். விளைக்கை அணைக்க வேண்டுமா இல்லை இருக்கட்டுமா என்றான் .

 

நேராகக் காலில் விழுந்துவிட்டான்.

 

காலைப் பிடிக்கும் எத்தனையோ ஆண்களைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் அவன் வேறு ரகம் .

 

“என்னை மன்னித்து விடு .. மன்னித்து விடு ..”  அவன் வேறு எதுவும் பேசியிருக்கவில்லை . எனக்குப் புரிந்து போனது .

 

வெகு நாட்கள் கழித்து ஒரு ஆணின் வியர்வை படாமல் நான் உறங்கியது அன்று . வயாதாகி உடல் தளர்ந்து நான் உறங்கப் போகும் இரவொன்றை முன்னமே எனக்கு அளித்தவனே , உனக்கு நன்றி .

 

இன்னமும் என்னில் முழுவதுமாக வைஷ்ணவி தான் இருக்கிறாள். யார் அவள் ? எங்கிருக்கிறாள் ? என்ன ஆனது அவளுக்கு ? ஏன் அவள் சென்றுவிட்டாள் ? எனக்கு முன்பாக அவளைப் பற்றிய கேள்விகளே இருக்கின்றன.

 

இரண்டாவது நாளாக இன்று இரவும் நான் மட்டும் தனித்துறங்கப் போகிறேன் . ஒரு வேளை இனி வரும் எல்லா இரவுகளும் இப்படியே இருக்கக் கூடும் .

 

அவனிடம் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது . இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான்  அவன் ?

 

 

 

————————————————————————

 

2 :

 

ஒரு நிமிசங்க . கருமம் இது இல்லாம எனக்கு ஒரு கத கூட சொல்ல வர மாட்டேங்குது . ஒரே ஒரு மடக்கு மட்டும் .. ஸ்ஸ்ஸ்ஸ் … க்கக்  .. அப்ப்பாஆ .

 

மொத கதைல அந்தப் பாப்பா சொல்லிச்சுல மாணிக்கம் . அது நான் தான் . நமக்கு எல்லாமே பாப்பா தாங்க . கிராக்கி அது இதுன்னு எல்லாம் பேசினா கெட்ட கோவம் வரும் . ஏதோ நம்ம தொழிலு இதுன்னு ஆகிப் போச்சு . இப்போ இன்னா தப்பா பண்ணிட்டோம் .

 

நீங்க எல்லாம் மட்டும் யோக்கியமா . ஒவ்வொருத்தனுகுள்ளையும் அவ்ளோ அழுக்கு .. சொன்னா நாறிடும் .

 

சார் .. உங்களுக்கெல்லாம் .. இந்த வரி இல்ல .. வரி .. டாக்ஸு .. அத கட்டாம  ஏமாத்துறதுக்கு அதுல போடலாம் இதுக போடலாமான்னு யோசிக்கத் தோணும் .. நீங்க கட்ற காச மட்டும்  சம்பாதிக்கவே எங்களுக்கு மூச்சு வாங்குது . நான் தப்பு சொல்லல . உங்க கிட்ட காசு கொட்டி கெடக்குது .. என்ன பண்றதுன்னு தெரியல . என்னென்னமோ பண்றீங்க . அதுக்கு நாங்க ஹெல்ப்பு பண்றோம் . ஒரு வகைல பார்த்தா நாங்க பண்றதும் சோசியல் சர்வீசு தான் .

 

இப்போ அவன் இல்ல .. அவன் .. என்னங்க மரியாத அவனுக்கெல்லாம் .. அவன் பண்றதா கேட்டேங்கன்னா உங்களுக்கே சிரிப்பு வரும் . என்ன பண்ண அவன் முன்னாடி மட்டும் சார் ன்னு எல்லாம் கூழக் கும்புடு போட வேண்டிருக்கு .. அந்த மரியாத அவனுகில்ல .. காந்தி தாத்தாவுக்கு .. ஹி .. ஹி ..

 

ஆங் .. அவன் என்ன பண்ணினான்னு கேளுங்க .. சார் ..கடலு பக்கத்துல சூப்பர் வீடு .. சாங்கால நேரம் .. செமையா ஒரு பொண்ணு உங்க கூட தனியா ரூம் ல இருக்கு .. என்ன சார் தோணும் உங்களுக்கு .. மூடு வருமா வராதா … அவன் என்ன பண்றான் தெரியுமா ..

 

பொடவைய  குடுக்கறான் .. நகைய போடுங்கறான் .. கால்ல விழுந்து அழுவறானாம் .. நான் கேக்கறேன் .. அப்போ என்ன மசித்துக்கு இவனுக்கெல்லாம் பொண்ணு .. அதுவும் ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொன்னு வேணுமாம் ..

 

நாங்க கூட்டிப் போய் விடுவோமாம். இவரு நல்லா அழுது முடிச்சிட்டு , வெளிய வந்து மிஸ்டர் மாணிக்கம் , நீங்க  வேணும்ன்னா போங்கன்னு  சொல்லிட்டு போயிடுவாராம் ..

 

சொன்னா நம்ப மாட்டீங்க சார் .. என் பொண்டாட்டி தவற ஒரு பொண்ண நான் தொட்டதில்ல .. நான் கூட்டியார பொண்ணுங்க எல்லாமே நம்ம பொண்ணுங்க மாதிரி தான் ..  நான் பார்த்தேன் .. எதுக்கு இவனுக்கு தொழில்காரிங்க தேவை இல்லாமன்னு , அப்பப்போ எனக்கு தெரிஞ்ச ஏரியா பொண்ணுங்கள கூட கூட்டிட்டு வரது .. அவங்க எல்லாம் லைன் கு வரது கிடையாது .. இருந்தாலும் ஒரு செட் அப்பு .. பேசி வச்சிட்டு வரது .. அவன் போனதும் அவங்களுக்கு ஒரு கமிஷனக் குடுத்திட்டு மீதி எனக்கு .. காசு விசயத்துல கரெக்டா இருக்கணும் .. யாரையும் ஏமாத்தக் கூடாது இல்ல ..

 

அடப்பாவி லைனுக்கு வராத பொண்ணுங்களா .. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டான்னு கேக்கறீங்களா .. அதெல்லாம் எதுவும் ஆகாது சார் .. அவன் எதுவும் பண்ண மாட்டான் .. லைஃப்புன்னா  கொஞ்சம் ரிஸ்க்கு எடுக்கணும் ல …

 

இப்படி தான் நேத்தும் ஒரு சூப்பர் பாப்பாவ கூட்டியாந்து விட்டேன் . லூசுப் பய அவ கால்லயும் விழுந்திருக்கான் . அந்தப் பொண்ணு எல்லா காசையும் என் கைல குடுத்திட்டு போய்டுச்சு ..

 

இன்னைக்கும் ஒரு பொண்ணு வேணுமாம் .. எப்பவும் மாசம் ஒன்னு தான் கேப்பான் .. நானும் ரெடி பண்ணி வச்சிடுவேன் .. இப்போ அவசரமா கேட்டா நான் என்ன பண்ணுவேன் .. முடியாதுன்னு சொல்லச் சொல்ல பணத்த ஏத்திட்டே போறான். பத்தாயிரமாம் .. எனக்கு பல்பு எறிஞ்சிருச்சு .. தேடித் பாத்தான் ஒரு பொண்ணும் கிடைகல .. அதான் என் பொண்ணையே ..

 

என்னா சார் இவ்ளோ ரியாக்ஷன் குடுக்கற .. என் பொண்ணு தான் .. இல்லன்னா  சொன்னேன் .. எப்படியும் உள்ள கூட்டிப் போய் அழத் தான் போறான் .. உள்ள நடக்கப் போறது ஒரு நாடகம் .. அது  இன்னது .. டிராமா .. ஆ .. டிராமா .  அதுக்கே கற்பு போச்சுன்னு கத்துனா , இந்த ஊர் ஷேர் ஆட்டோல எல்லாம் நீங்க சொல்ற கந்தாயம் தான் சுத்தினு இருக்கும் ..

 

பத்தாயிரம் ரூவா .. நீ தருவியா .. டேய் பேமானி .. சொல்றா நீ தருவியா .. என்ன பாக்கற ..

 

பாரேன் .. இன்னும் கொஞ்ச நேரத்துல அழுது முடிச்சிட்டு மிஸ்டர் மாணிக்கம் நீங்க வேணான்னு சொல்லுவான் பாரேன் .. ஹி ஹி .. மிஸ்டர் மாணிக்கம் .

 

 

———————————————————-

 

3 :

 

நியாயமாகப் பார்த்தால் இந்தக் கதை இங்கு தான் துவங்கியிருக்க வேண்டும் . முன்னிரு கதைகளில் கதைக்கப்பட்ட அவன் இருக்கும் வீடு இது தான் . அழகாயிருக்கிறது இல்லை . வைஷ்ணவி வந்து போன அடுத்த நாள் இது . அவனுக்கு எல்லாமே வைஷ்ணவி தான் . வேண்டுமானால் நேற்று வந்தவளை கடைசி வைஷ்ணவி என்று வைத்துக் கொள்வோமா .

 

அவன் வைஷ்ணவியை நிறையக் காதலித்திருந்தான் . அவன் அப்படிச் செய்வானென்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை . பதிலுக்கு அவளும் அவனை விட்டுச் சென்று விடுவாள் என்றும் எதிர்பார்க்கவில்லை . என் வைஷ்ணவி என்ற இறுமாப்பு . அவளிடம் கேட்டுப் பெற  நிறைய மன்னிப்புகள் இருந்தன . மன்னிப்புக் கேட்க வைஷ்ணவி வேண்டுமே . வைஷ்ணவிக்கு எங்கே போக ?

 

வைஷ்ணவிகளை அழைத்து வரத்தான் மாணிக்கம் இருக்கிறாரே. இதற்கு முன் வந்த வைஷ்ணவிகள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு செல்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள் . ஆனால் நேற்று வந்தவள் …

 

“காதலியா ??” 

 

“இல்லை .. மனைவி ”

 

“நிறையப் பிடிக்குமா அவளை ?? ”

 

“ஆமாம் ”

 

“அவளிடமும் இப்படித் தான் எதுவும் செய்யாமல் காலைப் பிடித்து அழுது  கொண்டிருந்தாயா  ??”

 

நேற்றைய இரவிலிருந்து இந்த வார்த்தைகள் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன . இப்பொழு வைஷ்ணவியிடம்  கேட்பதற்கு வேறு கேள்விகள் இருந்தன அவனிடம் .

 

மாணிக்கத்திடம்  வைஷ்ணவியை அழைத்து வரச் சொன்னான் . இந்த முறை பணம் கொஞ்சம் அதிகம் தான் . இருந்தாலும் பணமா முக்கியம் . அது தான் கொட்டிக் கிடக்கிறதே . வைஷ்ணவி வர வேண்டும் . இப்பொழுதே . 

 

மாணிக்கம் வைஷ்ணவியைக் கூட்டி வந்திருந்தான். வெளியிலேயே உட்கார்ந்திருக்கிறேன் . என்னைக் கூப்பிடுங்கள் என்று இளித்துக் கொண்டு அவனாகவே சொன்னது அவனுக்கு வித்யாசமாகப் படவில்லை . அவனது எல்லாமுமாக வந்திருந்த வைஷ்ணவியாகவே இருந்தாள் .

 

அந்தப் பெண் திரும்பித் திரும்பி மாணிக்கத்தையே பார்த்துக் கொண்டு சென்றாள் . பயப்படாத நான் இங்கயே தான் இருக்கேன் என்று சைகை செய்தான் மாணிக்கம் .

 

மாணிக்கம் குடித்திருந்தான் . அவனே பேசிக் கொண்டிருந்தான் . வாசலிலேயே காது வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன் . நேரம் ஆகிக் கொண்டே இருந்தது . உள்ளே அழுகைச் சத்தம் எதுவும் கேட்கவில்லை . மாணிக்கத்திற்கு நெஞ்சு அடித்துக் கொண்டது .

 

கதவைத் தட்ட நினைத்துத்  தடுமாறி விழுந்தான் . மொதலாளி .. மொதலாளி என்று கத்தினான் . எந்த பதிலும் இல்லை.  கண்களில்  கசியத் துவங்கியது . ஏதோ ஒன்றைக்  கற்பனை செய்து கொண்டு  டேய் விட்றா அவள .. விட்றா .. அது என் பொண்ணுடா என அரற்றிக் கொண்டே இருந்தான் .. கதவை பலம் கொண்ட மட்டும் உடைத்துப் பார்த்தான் . முடியவில்லை . உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை . தலையிலும் மார்பிலும் அடித்துக் கொள்ளத் துவங்கினான்.

 

கொஞ்ச நேரம் கழித்துக் கதவு திறந்தது. வைஷ்ணவியின் கைகளில் கசங்கியிருந்த சில நோட்டுகள் இருந்தன .

 

—————————————————

 

 

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக