Tags

, , , ,

நாங்க நாலு பேரு :-)

நாங்க நாலு பேரு 🙂

எங்களின் பாதைகள்

கிளைபிரிந்திருக்கலாம் …

எங்களுக்கான பயணங்கள்

வெவ்வேறு திசைகளில்

பணிக்கப்பட்டிருக்கலாம் …

இருந்தும்

நாட்கள் கழித்து மீண்டும்

சந்திக்கையிலெல்லாம்

கணநேர மௌனங்கள் சொல்லிடும்

நாங்கள் யார் என்பதை ….

நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் உங்கள் நெருக்கமானவர்களை நாங்கள் நினைவுபடுத்தப் போவது மட்டும் உறுதி .

நேற்றைப் போல் இருக்கிறது அவர்கள் மூவருடனான என் தனித்தனியான சந்திப்பு . விஜய் , சுந்தர் , நவீன் …. விஜயை ராகிங்கின் போது .. சுந்தரை ஊருக்குச் செல்கையில் பேருந்து கடைசி சீட்டில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட்டுடன் .. உறக்கம் கலையாத ஒரு மாலையில் கம்ப்யூட்டர் லாபில் நவீனை … அந்தச் சந்திப்புகளில் எல்லாம் மழை , இசை , மின்னல் குறிப்புகள் இருந்தனவா என நினைவில்லை . ஆனால் நட்பு இருந்திருக்கிறது .

எனக்கே நம்புவதற்குக் கடினமாகத் தான் இருக்கிறது . கல்லூரி முதல் வருடங்களில் இவர்களைப் பற்றிய அறிமுகங்கள் மட்டுமே என்னிடம் இருந்திருந்தன . ஆனால் அடுத்த வருடத்திலேயே எங்கள் எல்லாருக்குமே முகவரி ஒன்றாகிப் போனது . சங்கம் என்ற பெயரை யார் எங்களுக்கு வைத்தார்கள் என்று தெரியாது . ஆனால் அதுவே எங்கள் அடையாளமாகிப் போனது . எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது .. “ஆஹா சங்கத்தைக் கூட்டீடானுங்களா !” என்று சொல்ல வைப்பது . நட்பு கொள்வதற்கும் காரணம் நட்பாக மட்டுமே இருத்தல் போதும் போல .

எனது chemical engg dept ஐ எனக்கு மிகவும் பிடிக்கும் . யோசித்துப் பார்கையில் நான் விரும்பியது அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அல்ல .. இவர்களைத் தான் என்பது , கல்லூரி முடிந்து விட்ட பிறகு , மீண்டும் அங்கு தனியாகச் சென்றிருந்த தருணங்களில் புரிந்தது . இவர்களல்லாது அங்கிருந்த கட்டிடங்கள் வெறுமையை மட்டுமே என்னுள் நிரப்பின .

விஜய் .. என்ன சொல்ல .. கூடவே தான் இருக்கிறான் .. கூடவே என்றால் , கல்லூரி முடிந்து , வேலை பார்க்கும் இடத்திலும் . ஐந்து வருடமாக ஒன்றாகவே தான் இருக்கிறோம் .. இருந்தும் ஒருமுறை கூட நாங்கள் சண்டையிட்டதில்லை என்றால் நம்பமுடிகிறதா .. ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததில்லை . நிச்சயம் இதற்கு நான் காரணமில்லை .. என்னைப் போல ஒரு முன்கோபிக்கு அது சாத்தியமுமில்லை . ..

ஒவ்வொரு முறையும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்கிறான் … ( ” டேய் திருவனந்த புறம் நியாபகம் இருக்காடா ?? 🙂 .. அந்த பீச் .. அந்த பொண்ணு பவ்யா … !!! உள்ளி வடா .. பீமாபள்ளி … ” ) என்ன பயலிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் . நாம் ஏதாவது பீல் பண்ணிப் பேசும் பொழுது , தலையாட்டிக் கொண்டு இருப்பான் ஃபோனில் 😉

காதல் குறித்தான ஆர்வங்களும் , தேடல்களும் என்னுள் இருந்தாலும் , திருமணம் பற்றி ஏனோ யோசித்ததில்லை . என் சுதந்திரத்தின் மேலுள்ள ஆசை , எனக்கும் என் அறை சுவற்றிற்குமான இடைவெளி குறித்த அளவீடுகள் காரணமாக இருக்கக்கூடும்… ஒரு வேளை விஜயின் திருமணத்தின் பின் நான் மறுபரிசீலனை செய்யக் கூடும் இதை .. என்னுடன் அவனில்லாத ஒரு பத்து நாட்களில் அந்த வெறுமையை என்னால் உணர முடிந்தது .

மூன்று cycle test , Finals என்று ஒரு செமெஸ்டருக்கு சில பல தேர்வுகள் வரும் .. என்று அதெற்கெல்லாம் நாம் கவலைப்பட்டது ? .. ஆனால் இவர்கள் மூவரும் படிப்பது பார்பதற்கே பயங்கரமாக இருக்கும் . சுற்றிலும் நான்கைந்து புத்தகங்கள் , Xerox papers என்று … அறை முழுவதும் இறைந்து கிடக்கும் .. புத்தகங்களின் மேலுள்ள காதலால் எல்லா புத்தகங்களையும் வாங்கி மட்டும் வைத்து விடுவேன் .. படிப்பது ?? இவங்க கூட இருந்திட்டு நீ மட்டும் எப்டிடா .. உனக்கு படிக்கணும் னு தோணவே தோணாதா .. நிறைய பேர் கேட்டதுண்டு ..

இப்போ தான நாலு மணி ஆகுது .. படிப்போம் படிப்போம் .. எதாவது கதைப் புத்தகம் படித்து விட்டு எட்டு மணிக்கு நவீன் அறைக்கு செல்வேன் . எங்களுக்கான அறை அது . இன்னமும் கண் மூடினால் அந்த அறையின் வாசனையை என்னால் உணர முடிகிறது . தூசிகளுக்கிடையே அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் , காரை பெயர்ந்திருந்த சுண்ணாம்பு தோற்றுவித்த பிம்பங்கள் , “Bridge The gap ” poster, எங்கள் அரட்டைகளால் வலை பின்னி வாழ்ந்திருந்த சிலந்திகள் , அவ்வப்பொழுது வந்து போகும் அணிலொன்று , மின்விளக்கின் பின்னாலிருந்து எட்டி எட்டிப் பாத்து , தூங்கித் தொலையுங்களேன் என அகாலத்தில் ‘உச்’சிட்டுப் போகும் பல்லி எல்லாமே கண்முன்னே விரிகின்றன புகைப் படங்களென . எங்களுக்கென ஒரு அறை இருந்தது …

எட்டு மணிக்கு சென்று .. அப்பறம் படிக்கலாமா என்பேன் . நவீன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்து விடுவான் . சுந்தர் பார்ப்பதே டெர்ரர் ஆக இருக்கும் .. கையில் scale வேறு வைத்திருப்பான் . ரெண்டு அடி போட்டு “படிக்க வர நேரமா இது .. சரி இதெல்லாம் important questions .. இதையாவது படி ..” என்பான் .

எங்களுக்கு மட்டுமல்ல , எங்கள் வகுப்பிற்கே notes supply சுந்தர் தான் . கொஞ்ச நேரம் அப்படி இப்படி பார்த்து விட்டு “சரி அப்போ சாப்பிட போலாமா “ என்பேன் .

சாப்பிட்டு வந்தது உண்ட மயக்கம் . மீண்டும் பத்து மணிக்கு “ஒரு break எடுத்துக்கலாமா .. ஒரு சூப் சாப்ட்டா freah ஆ படிக்கலாம் ”

பின் அதற்கும் போய் விட்டு வந்து ,…………………. மீண்டும் . அதற்குள் சுந்தரும் நவீனும் தூங்க போயிருப்பார்கள் .

பின் நானும் எனது அறையும் . எனது அறையின் தனிமைகள் எனக்கு வேறெதையும் கற்றுத் தந்ததில்லை , எனக்கான கற்பனை உலகத்தை நிர்மாணிக்கச் சொல்லித்தந்ததைத் தவிர. அந்த இருளின் நிழல் என் இயலாமைகளுடன் நான் பதுங்கிக் கொள்ளும் இடமாய் இருந்திருக்கிறது . என்னை அழ வைத்திருக்கிறது . வாழ்வின் சவால்களைக் காட்டி பயமுறுத்தி இருக்கிறது . இருந்தும் நெருப்பில் மேல் எழும் விட்டிலின் கவர்ச்சியுடன் எனக்கு என் அறை பிடித்திருந்தது .

எவ்வளவு படிக்க வேண்டும் என்று பாப்பேன் . கொஞ்சம் பயம் வரும் . விஜய் வருவான் . இரண்டாவது மூன்றாவது revision களில் இருப்பான் .. சரி நான் சொல்றதையாவது கேளு என்று கதை சொல்லுவான் . அதை மட்டும் கேட்டு விட்டு நான்கைந்து வார்த்தைகளையும் , சூத்திரங்களையும் மட்டும் படித்து , இடையிடையில் மானே தேனே எல்லாம் போட்டும் கொஞ்சம் நன்றாகவே தேர்வையும் எழுதிவுவேன் …

மறு படியும் அடுத்த நாள் இரவு எட்டு மணி … ” அப்பறம் படிக்கலாமா ……….. “

அந்த நவம்பர் மாத மழை நாட்களை என்னால் மறக்கவே முடியாது . வாழ்வு குறித்தான உண்மையான பயம் எனக்குள் எழுந்தது அப்பொழுது தான் .. என்ன செய்திருக்கிறேன் .. என்ன செய்கிறேன் …என்ன செய்யப் போகிறேன் … ?? என்னைச் சுற்றிலும் கேள்வி குறிகள் மட்டுமே .. இவர்களல்லாது அந்நாட்களைக் கடந்து வந்திருப்பேனா என்பது சந்தேகமே .. மொத்த விடுமுறையும் வீடு செல்லாமல் என்னுடனேயே இருந்தார்கள் .. மறக்க முடியாத நாட்கள் … பின் ஸ்ரீரங்கமே வெள்ளத்தில் அல்லவா இருந்தது 😉

நவீன் .. எனக்கும் இவனுக்குமான புரிந்துணர்வு ஆச்சர்யமானது .. எனக்கே அது புரியாததும் கூட .. ஏனென்று தெரியாது .. எப்பொழுதுமே நவீன் மேல் எனக்கு ஒரு special affection உண்டு .. எங்களின் Database .. எந்தப் பெண்ணைப் பற்றி எந்த தகவல் கேட்டாலும் அடுத்த நொடியில் பதில் வரும் .. பெண்கள் ஜாக்கிரதை 😉

கல்லூரி இரண்டாம் ஆண்டில் , தேர்வுக்கு night out என்கிற பேரில் பால்ய கதைகள் மொத்தமும் பேசி , சிறு வயது புகைப்படங்களைப் பார்த்தும் நேரம் போக்கி விடிகையில் தூங்கிப் போன இரவு அழகான ஒன்று ..

மறக்க முடியாத நாட்கள் Nittfest .. துறைகளுக்கிடையேயான culturals .. அந்த நாட்கள் எங்களை யாரும் கைகளில் பிடிக்க முடியாது .. திட்டமிடுதல்களும் , ஆயத்தங்களும் , கனவுகளுமாகக் கழிந்த நாட்கள் .. என்னை நான் கண்டுகொண்ட நாட்கள் .. என் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த நாட்கள் ..

கூத்துப் பட்டறைக்கான பொருட்கள் வாங்க ஒரு பகல் முழுவதும் நானும் நவீனும் மலைகோட்டை தெருக்கள் மொத்தமும் சுற்றியலைந்திருக்கிறோம்.. கள்வனின் காதலி poster பார்த்தால் இன்னமும் எனக்கு அந்நினைவுகள் வருகிறது .. இன்னமும் அந்தத் தெருக்களிலேயே எங்கள் கால் தடங்கள் அலைந்து கொண்டிருப்பதாய் கனவு .

அந்நாட்களில் பார்த்திருந்த ஒவ்வொரு படங்களும் மீண்டும் இப்பொழுது பார்கையில் வேறொரு கதை சொல்கின்றன .. உள்ளம் கேட்குமே , அந்நியன் , பட்டியல் , அறிந்தும் அறியாமலும் , கஜினி .. இப்படி பல .. எத்தனை தடவை டா இந்தப் படத்த பார்ப்ப என்னும் அம்மாவிடம் எப்படிச் சொல்லுவேன் நான் பார்த்துக் கொண்டிருப்பது வேறொன்றை என்று …

நவீனும் சுந்தரும் வேறென்று நினைக்கவே முடியாது என்னால் .. பார்க்கையில் சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும் .. கர்வமும் சேர்த்தி . சுந்தர் அப்படியே என்னைப் போல .. emotional idiot 🙂 .. ஒரு தாயின் அக்கறையுடன் எனக்காக எப்பொழுதும் கவலைப் படுபவன் …

ப்ரியமானவர்களுக்குக் கவிதை எழுதுவது சுகமான ஒன்று . அதை அவர்கள் வாசிக்கப் பார்ப்பது போல் ஆனந்தம் தருவது வேறெதுவுமில்லை . அப்படித் தான் நினைத்துக்கொண்டிருந்தேன் . நமக்காக எழுதப்படும் கவிதைகள் எல்லாவற்றையும் விட அழகானவைகள் என்று சமீபத்தில் தான் உணர்ந்து கொண்டேன். எனக்கான கவிதையொன்றை சுந்தரிடமிருந்து பரிசாகப் பெறும்வரை 🙂

இவர்களுடன் இருக்கும் பொழுதே நான் முழுமையாக உணர்கிறேன் . நான் நானாக இருக்க முடிகிறது . எப்பொழுதும் இவர்களுடனேயே இருக்க விரும்புகிறேன் .. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நவீன் சென்னை வரும் நாட்களுக்காகக் காத்திருக்கிறேன் . காத்திருக்கிறோம் . எல்லாமே மறந்து போய் அந்த வினாடிகளில் அதே துள்ளல் வந்து விடுகிறது … மீண்டும் அந்த நாட்களுக்காக எப்பொழுதுமே காத்திருப்பேன் …

Miss u guys .. Life is so empty without u guys .. Be with me .. Love u All !!!

அன்பு மடலே ,

காலம் கடந்து

பழைய பாதைகளில்

பயணிக்கிற போது

பழைய ஞாபகங்கள்

அந்த அறைகள்

எங்களின் சொர்கங்கள்

அந்த மைதானங்கள் தான்

எங்கள் நட்பு வளர்த்த ஊடகங்கள் ….

காக்கைகளாய் தான் !

இல்லை இல்லை

காக்கைகளாய் மட்டுமே

வாழ்ந்தோம் …

காரணமில்லாமல்

இறுகிப் போனோம்

உயிரோடு உயிராய்

உருகிப் போனோம்

எதன் பொருட்டும் எங்கள் நட்பில்லை

அமைந்து போனது அப்படித்தான் ..

இன்று சொல் அவனிடம்

“பிரிக்க காலம் முயன்றாலும்

காலத்தை வென்று நிற்கும்

என் நட்பு உன்னிடம் ! ”

அழுகைகளில் அரவணைத்த

நட்பிற்கு என் மனமார்ந்த

பிறந்த நாள் வாழ்த்துகள் !

என்றும் சிரிப்புடன் ,

சுந்தர்.

இன்னொருவன் :

இருபத்தோரு வருடங்களாக என்னுடனேயே இருந்து வரும் என் முதல் தோழன் , என் பிரிய தம்பி பாபுவிற்கு நாளை பிறந்த நாள் … வாழ்த்துகள் தம்பி !!! 🙂

———————————————————————————————————————————————————————-