Tags

, , ,

 

 

Baa Baa Black Sheep சொன்ன காலங்கள் நினைவிலில்லை . ஆனால் அம்மாவின் விரலைப் பிடித்து அழுதுகொண்டே , போகமாட்டேன் என மணலில் விழுந்து புரண்ட என் முதல் வகுப்பறை முன்னால் கொட்டப்பட்டிருந்த மணலின் சூடு நன்றாக நினைவிலுள்ளது . இன்னமும் பச்சை நிறம் பூசப்பட்ட அந்த மரச்சட்டக் கதவு காற்றிலாடியபடியே இருக்கிறது . எவ்வளவு தேற்றியும் அடங்காத என் அழுகை , கௌசல்யா டீச்சர் தந்த ஒரு mahalacto king இல் அடங்கிப் போனது . ஒரு வேளை தேவதைகளுக்கும் எனக்குமான உறவு பூத்தது கூட அப்பொழுது தானா . அந்த மிட்டாய் உறையில் அழகான பெண் செய்து கொடுத்த அந்த நண்பன் யாரென இன்னமும் நினைவு படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

 

யோசித்துப் பார்கையில் பால்யத்தைக் கடந்து வெகுதூரம் வந்து விட்டது போல் இருக்கிறது . பால்யம் ஒரு பெருங்கனவைப் போல அவ்வப்பொழுது வந்து போய்க்கொண்டிருக்கிறது .

 

எப்பொழுது தொலைக்கத் துவங்குகிறோம் பால்யத்தை ?? பால்யத்தை எங்கேனும் எப்பொழுதேனும் நாம் தேட முற்பட்டதுண்டா ?? எதேச்சையாக ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் காண நேரும் பால்ய கால நண்பனுடன் முதலில் சென்று அறிமுகம் செய்து கொள்வதை எது தடுக்கிறது ???

 

மூன்றாம் வகுப்பில் நம்மை விட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று தூக்கம் தொலையச் செய்தவளை , ஏதோ ஒரு தெருவில் கணவனின் அதட்டல்களுக்குப் பின் தலை குனிந்து செல்வதைப் பார்க்க நேர்கையில் சட்டென்று ஏன் ஒரு வன்மம் தோன்றுகிறது .

 

அடித்துக் கொண்டும் , கைகள் கோர்த்தும் திரிந்த சிறு வயதுத் தோழி ஒருத்தியை இப்பொழுது காண்கையில், எட்ட நின்று பேசும் இடைவெளியினுள்ளா ஒளிந்து கிடக்கிறது பால்யம் ?? சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகையில் நாமறியாமல் ஒரே ஒரு பந்து மட்டுமாவது நின்று பார்த்து விட்டுச் செல்லத் தோன்றுகிறதே , அந்த உணர்வுக்குப் பெயர் என்ன ???

பால்யமும் , அது குறித்தான கேள்விகளும் எழுப்பும் அலைகள் புதிரானவை . அவைகளை விளக்கும் வயது தொட்டிருக்கும் பொழுதே பால்யம் நம்மை விட்டு விலகத் துவங்கியிருக்கிறது . ஒரு மாய வலையாகவே பால்யம் நம்மை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

 

தோழன் பாலாவைத் தொடர்ந்து , புத்தகத்தில் நா. முத்துக்குமாரின் பாலகாண்டம் குறித்த எனது பார்வை இங்கே ….

 

பால்யத்தின் மாயச் சுழலில் சிக்கும் இலையாகி நதியின் போக்கில் சென்றிருப்போம் சில மைக்ரோ யுகங்களாவது …

  

நன்றி ,

சேரல் ,

ஞானசேகர் .