கடவுளான பின்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
சும்மாயிருக்க முடியுமா ..?
என்னென்ன கடமைகள்
என்னென்ன கவலைகள்
என்னென்ன சலுகைகள்
பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …
நான் வாங்கும் சம்பளம் போல
உடனே தீர்ந்து போனது
ஒட்டு மொத்தக் காகிதமும் …
மிட்டாய் வாங்கித் தருவதாக
வாக்குறுதி தந்து
என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து
கிழித்த காகிதங்கள்
கணத்தில் காணாமல் போயின …
இன்றைக்கு இது போதும்
கடவுள் வேலை கடினமானதோ
களைத்துப்போனதே பட்டியலுக்கே…
கண்கள் கெஞ்ச
துவங்கலாம் வேலை நாளையிலிருந்து
தூங்கிப்போனேன் …
—————————————
கனவில் ஆசி வழங்கிக் கொண்டிருந்தேன்
வரிசையில் நின்ற எல்லாருக்கும் …
ஜன்னல் கம்பிகளில்
வௌவால் போலத் தொங்கி
உள்ளாடைகள் வரவேற்கும்
என் அடுக்குமாடிக் குடியிருப்பின் சொந்தக்காரர்
விசிறிக் கொண்டிருந்தார் எனக்கு …
சிரித்துக் கொண்டே நின்ற
என் முன்
முறைத்துக் கொண்டு
நின்றிருந்தார் அவர் …
வாடகை பாக்கி
அவகாசம் ஒருவாரம்
அளித்து விட்டு
என் மனைவி தந்த
தேநீர் போன்ற ஒன்றைக்
குடித்துச் சென்றார் ….
இரண்டாவது நாளாய்
இன்றும் வரவில்லை செய்தித்தாள் …
அடுத்த முறையாவது
என்னை மாற்றித்தொலை
கன்னத்தில் ரத்தம் சுவைத்தது சவரக்கத்தி …
குளிக்க வெந்நீர் கேட்டேன்
விறகு வெட்டி வரச் சொன்னாள்
கதவோரம் தூங்கிக் கொண்டிருந்தது
காலியான எரிவாயு உருளை …
பழுதடைந்த என் வண்டியை
நானே சரிசெய்ய முயன்று
கறை தான் கண்டது என் கால்சட்டை …
பேருந்தில் சில்லறை தராததால்
விசிலடித்து நடக்கவிட்டார்
நடத்துனர் ..
நியாயவிலைக் கடையில்
சரியாக வரிசையில்
எனக்கு முன் நின்றவருடன்
தீர்ந்து போனது மண்ணெண்ணெய் …
என்னது இது
கடவுளென்ற மரியாதை
கடுகளவாவது இருக்கிறதா
யாருக்காவது …..
எரிச்சலாய் வந்தது …
——————————–
தேநீர் கடையில்
காணாமல் போன கணேசன் படம்
வெளியாகி இருந்தது
பார்த்தது பகீரென்றது ..
மாலை காவல் நிலையம் சென்று
பாதுகாப்பு கோரி மனு
செய்ய வேண்டும் …
———————————
அலுவலகத்தை அடைந்த பொழுது
‘கடவுளே‘
யாரோ அழைத்தார்கள் என்னை …
தாடி சொரிந்து கொண்டு
என் முன்னே தட்டு நீட்டினான்
என் பக்தன் …
மொத்தப் பையையும் துழாவியதில்
ஐந்து ரூபாய் சிங்கமே
குறைத்தது என் கையிலிருந்து …
கடவுளே ஆனாலும்
மாத சம்பளம் வாங்குபவனுக்கு
அதிகமல்லவா இந்தத் தொகை
சில்லறை மாற்றிப் பிறகு தரலாம் …
சில்லறை இல்லை
என்ற என்னைக்
கேவலமாக முறைத்து விட்டு
ஐம்பது பைசா போட்ட
வேறொருவனைக் கடவுளே
என் கை கூப்பினான்..
அப்பொழுது தான்
புரிந்தது ஒன்றெனக்கு…
சில கடவுள்கள் சீக்கிரம் செத்துப்போவர் …!
—————————————–
“ஹைதரபாத்தில் ஒரு ஏரிக்கரையோரம் உட்கார்ந்திருந்த
என்னைப் பார்த்து இரண்டு ரூபாய் போட்டதற்காக
கடவுள் என்று தெலுங்கில் வாழ்த்திச் சென்ற பாட்டிக்கு “
முதலில், இரண்டாம் பகுதி கவிதையைதான் படித்தேன்.
//கடவுளான பின்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
சும்மாயிருக்க முடியுமா ..?///
என்ற ஆரம்ப வரிகள் மிகவும் பிடித்து இருந்தது. கடவுளாக மாறியவன் பற்றிய கவிதை என்று நினைத்தேன், முழுவதும் படித்த பிறகுதான், தன்னை கடவுளாக நினைத்துக்கொண்டு இருப்பவன் பற்றிய கவிதை என்று புரிந்தது.
முதல் பகுதியை படித்த பின்தான், முழுவதும் புரிந்தது,
அருமையான கவிதை.
இந்த கவிதையை ஒரே பகுதியாய் எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே. 🙂
LikeLike
நன்றி சரவணா 🙂 ஒரே கவிதையாக எழுதியது தான் .. நீளம் கருதி தான் இரண்டாக வெளியிட்டேன் .. இதில் இப்படி ஒரு பிரச்சனையை வருகிறதா ..;-)
LikeLike