Tags

,

 

எங்கள் முன் கோலாவை வைத்து விட்டு ,அந்த இயந்திரப் பெண் அச்சு அசலாக , உயிர்ப்   பெண்ணைப் போலவே கண்ணடித்து , வேறு ஏதேனும் வேண்டுமா கனவான்களே என்று கேட்டு , புன்னகையுடன் எங்கள் பதிலுக்காகக் காத்திருந்தது.

 

லட்டு மாதிரி இருக்க .. உன்ன தான் கேக்கணும் .. என்ன மாடல்டா குட்டி நீ !” ஹரி சில்மிஷமாகக் கேட்டான்.

 

எஃப் எஸ் த்ரீ சார் .. அப்புறம் குட்டி என்றெல்லாம் கூப்பிடக் கூடாது. இது அத்து மீறல் .. இன்னும் இரண்டு முறை தான் மீறலாம் என் பெயர் ஷிவானி … ” அதே புன்னகையுடன் நடந்து சென்றாள்.

 

விட்டா, ஈவ் டீசிங் கேஸ் போடும் போல என் கைகளில் தட்டினான். நானும் சிரித்தேன். நாங்கள் இருவரும் சிரித்து முடிக்கும் முன் எங்களைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன்.

 

நான் கிருஷ் ,, இந்த குறுந்தாடி ஹரி .. உங்கள் எல்லாரையும் போல நாங்களும் ஒரு மென்பொருள் துறையில் , கட்டமைப்பாளர்களாக இருக்கிறோம். இந்த வாழ்கை , வசதிகள் எல்லாமே பிடித்திருக்கிறது.இந்த கோலா கூட நன்றாகத் தான் இருக்கிறது. இடையை வெட்டி வெட்டி செல்லும் ஷிவானி கூட ஆனால் ஒன்றே ஒன்று தான் குறை. இந்த வாழ்கை நிஜம் அல்ல . நிழல் போல .. பாலைவனத்துக் கானல் போல .. வெர்ச்சுவல் .

 

என்னடா கிருஷ் .. ஏன் டல்லா இருக்க நீட் சம் மோர் ட்ரிங்க் ?? .. இல்ல   மறுபடியும் சோஃபியா வா ..? ”

 

எஸ் டா .. என்னால அவளை மறக்க முடியலை .. ஸ்டில் லவ் ஹெர் … இத்தனை வயதுக்குப் பிறகும் கண்ணீர் வந்தது.

 

என்னடா இது .. சீக்கிரம் தொடச்சுக்கோ சென்சார் கிட்ட மாட்டினேனா , கூட்டிப்போய் மருந்து குடுத்திடுவாங்க .. விசாரணைல லவ் பத்தி எல்லாம் தெரிஞ்சதுனா என்ன தண்டனைன்னு தெரியும்ல .. ” ஹரியிடம் நிஜமான கவலை இருந்தது .

 

மாட்டினா மாட்டீட்டு போறேன் டா .. என்னடா வாழ்கை இது .. மனசு விட்டு அழக்கூட முடியாம .. நான் அப்படி என்ன கேட்டுட்டேன் .. நோக்கினால் நோக்கி இறைஞ்சினாள் .. அந்த பார்வை எப்படி இருக்கும் , அனிச்சப்பூ தொடுகை , செங்காந்தள் விரல்கள் , ஸ்பரிசம் எப்படி இருக்கும் ….. “

 

ஓகே ஓகே ச்சில் நிறைய தடவை சொல்லிட்ட .. லைப்ரரி ஓல்ட் செக்ஷணை உனக்கு ஹேக் பண்ணித் தந்தது தப்பாப் போச்சு நீ சொன்ன பார்த்தல் , ஊடல் , உணர்தல் , புணர்தல் எல்லாம் வழகொழிஞ்சு போச்சுடா .. பெண்களுக்கு நாம தேவை இல்லாம போய் சில நூறு வருஷங்கள் ஆகிடுச்சு ரிலாக்ஸ் மேன் உன்கிட்ட அந்த நம்பர் இருக்குல்ல ரொம்ப தேவைன்ன்னா கூப்பிட வேண்டியது தான .. “

 

ஷட் அப் .. யாருக்கு வேணும் உங்க இயந்திரத் தொடுகை .. வெர்ச்சுவல் ஸெடுயூஷன் .. நான் சொல்றது காதல் டா .. “

 

ஓகே ஓகே .. கூல் டவுன் .. சரி .. இப்போ உனக்கு என்ன வேணும் சொல்லு .. அந்த சோஃபி உனக்கு வேணும் .. அவ்ளோ தான சிம்பிள் ..”

 

ஏதோ அவ உன் வீட்டு நாய்குட்டி மாதிரி இவ்ளோ சாதரணமா சொல்ற ..? “

 

நான் நினைச்சா நாய் குட்டி மாதிரி தான்.. அவ்ளோ படிச்சியே .. பேந்தம்ஸ்   பத்திப் படிச்சியா .. மாயாவிகள் .. மாந்த்ரீகம் .. “

 

ஹேய் ஹேய் .. நிறுத்து .. என்ன பேசிட்டு இருக்க .. நாம பேசிட்டு இருக்கறது அரசுக்குப் புறம்பானது .. மரண தண்டனை .. நாம பேசறத எல்லாம் கேட்டுத் தான் இருப்பாங்க ..” எனக்குப் பதறியது ..

 

ஆஹா .. நாம இப்போ பேசுறது தான் தப்பான விஷயமா .. ?நீ பேசின காதல் எல்லாம் ரொம்பப் புனிதமானதோ …! அதுக்கே இந்நேரம் ரெண்டு பேரையும் உள்ள போட்டிருக்கணும் .. “

 

அப்புறமா எப்படி ??”

 

மேலிரண்டு சட்டைப் பொத்தான்களைக் கழற்றிக் காட்டினான் . கழுத்தில் போட்டிருந்த லாகெட்டில் ஒரு முனையில் ப்ளு நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது . வாய்ஸ் பிரேக்கர் அண்ட் இன்டெர்பிரேட்டார் .. நாங்கள் பேசுவதை வேறுவிதமாக மொழிபெயர்த்து அனுப்பும் கருவி . இந்த ஹரி ஆச்சர்யகரமானவன் .

 

மனிதனால் வெல்லமுடியாத இயந்திரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை கிருஷ்

 

இருவரும் சிரித்தோம் . கை நீட்டினான் . பற்றிக் குலுக்கினேன். உள்ளங்கையில் திணித்த காகிதத்தை பையில் திணித்துக் கொண்டேன்.

 

நான் நினைத்தது போல் பேந்தம்களின் இடம் ஒன்றும் அவ்வளவு ரகசியமானதாக இல்லை. ஜன நெருக்கடி மிகுந்த நகரின் பிரதான அங்காடித் தெரு தியான் நகரில்இருந்தது . இந்த ஒரு இடம் மட்டும் தான் பழைய சென்னையில் இன்னும் மாறாமல் ஜன நெருக்கடியுடன் இருக்கிறது என்று படித்திருக்கிறேன் . கண்காணிப்பு ஊர்தி ஒன்று வானில் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது . ஒவ்வொரு கடைகளின் முன்பும் இயந்திர மாடல்கள் வந்தனம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

 

ஒரு கடையின் நிர்வாண பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் , சட்டென்று கடைக்கு உள்ளிழுக்கப் பட்டேன் . இன்னொரு வெள்ளைக் குறுந்தாடிக்காரன் .

 

நீ தானே கிருஷ் .. எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது .. ஸ்கானர் இப்பொழுது தான் உன் புகைப்படத்தையும் உன்னையும் உறுதிப் படுத்தியது.. வருக .. என் பெயர் வைபவ்..” கை குலுக்கினான் .”

 

ஸ்கானர் .. எங்கிருக்கிறது என்றேன் .

 

நீ பார்த்துக் கொண்டிருந்த பொம்மையின் கண்களில் இருக்கிறது .. நிச்சயமாய் நீ அங்கே பார்த்திருக்கமாட்டாய் என்று நம்புகிறேன் .” அந்தப் பெட்டியின் திரையில் பொம்மையின் மார்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது அப்பட்டமாக ஓடிக் கொண்டிருந்தது .அசிங்கமாக இருந்தது .

 

சரி சரி .. வெட்கப்பட்டது போதும் .. எங்கே அந்த ஸ்வைப் கார்ட் .. உனக்கான அனுமதிச் சீட்டு ..”

 

அனுமதிச்சீட்டா .. என்ன அது? என்னிடம் எதுவுமில்லையே ..”

 

ஹரி எதுவும் கொடுத்தனுப்பவில்லையா …? ” வைபவ் யோசனையாய் நெற்றியைத் தடவிக் கொண்டான் .

 

என்னிடம் அந்த கசங்கிய காகிதம் மட்டும் தான் இருந்தது . நீட்டினேன் .

 

ஹரி கெட்டிக் காரன் தான் .. ஆனால் இதை நீ மிகவும் கசக்கிவிட்டாய் பையா நெற்றியைத் தடவிக் கொள்வது இவன் மேனரிசமாக இருக்கவேண்டும் . அந்த காகிதத்தை ஒரு கருவியில் திணித்தான். ஒரு நொடியில் அது சுருக்கங்கள் நீக்கித் தந்தது .

 

இரண்டு மூன்று பாலிமர் பொம்மைகள் இருந்தன . “இதெல்லாம் எதற்கென்று தெரியும் தானே சிரித்தான் வைபவ் . கொஞ்சம் தலைக்கணம் பிடித்தவன் தான் . அந்த பொம்மைகளை விலக்கிவிட்டு , தெரிந்த சின்ன இடைவெளியில் காகிதத்தைச் செருகினான் . எந்தக் கதவும் திறக்கவில்லை நான் நினைத்தது போல் .

 

என் கேள்வி புரிந்தவர் போல் , “கதவையும் இதே இடத்தில் முட்டாள் தான் வைப்பான் .. நாம் இப்பொழுது மாடிக்குப் போகிறோம் என்றார்.

 

இன்னொரு அறைக்குப் போய் ஒரு சதுரப் பலகையின் மேல் நின்றார் . என்னைக் கொஞ்சம் அருகில் வரச் சொன்னார் . பின் ஒரு பொத்தானை அழுத்தினார் . நாங்கள் கீழ் நோக்கி நகரத் துவங்கினோம் .

 

மாடிக்குப் போகிறோம் என்றாயே!

 

ஹோ ! அப்படியா சொன்னேன் .. இதுவும் மாடிதான் .. இதற்கு கீழே இன்னும் இரண்டு தளங்கள் இருக்கின்றன அவனது ஹாஸ்யம் எனக்குப் பிடிக்கவில்லை.

 

சரி சொல் உனக்கு என்ன வேண்டும் …? ” ஒருவழியாக இப்பொழுதாவது கேட்டானே . நான் எல்லாவற்றையும் சொன்னேன். அவன் சுருக்கமாக , ” அதாவது உனக்கு ஒரு பெண் அடங்கி நடக்க வேண்டும் .. நீ சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் திருப்பிச் சொன்னான் . “அதே தான்என்றேன்.

 

ஒரு பெட்டியை என் பைகளுக்குள் திணித்து விட்டு , இன்னொரு கதவைத் திறந்து பை பை மிஸ்டர் கிருஷ் என்னைத் தள்ளிவிட்டு கதவைச் சாத்தினான் . மீண்டும் அந்த நிர்வாண பொம்மையின் முன்னிருந்தேன் . இந்த முறை கண்களைப் பார்த்தேன் . அது சிமிட்டியது .

 

இந்த ஐந்து மணி நேரங்கள் சாகச நிமிடங்களாக இருந்தன.லிட்டர் லிட்டராக அட்ரீனல் சுரந்திருந்தாலும் , அதுவும் நன்றாகவே இருந்தது. முட்டாள் இயந்திரங்களே எல்லா இடங்களிலும் எங்களைக் கண்காணித்து விட முடியாது எனக் கத்தவேண்டும் போல் இருந்தது.

 

எனது குடியிருப்புக்கு வந்து சேர்ந்த பொழுது மணி பதினொன்று. எனது அறைக்கதவின் வாசல் முன் வந்து நின்று கடவுச் சொல்லை அழுத்தினேன். கதவு திறந்து கொண்டது. விளக்குகள் எரிந்தன.

 

வரவேண்டும் கிருஷ் ..” ஸ்பைக்கின் இயந்திரக் குரல் கேட்டது .

 

யாரைக் கேட்டு விளக்குகளைப் போட்டாய் ஸ்பைக் கத்தினேன்.

 

மன்னிக்கவும் .. கதவு திறக்கப் பட்டதும் விளக்குகளை எரியச் செய்ய வேண்டும் என்று நான் ப்ரோகிராம் செய்யப் பட்டிருக்கிறேன் . “

 

மண்ணாங்கட்டி ப்ரோகிராம் .. எல்லாவற்றையும் அனைத்துத் தொலை எத்தனை முறை சொல்வது இன்று தேவைக்கு அதிகமாகக் கோபப்படுவதாகத் தோன்றியது . இத்தனை நாளாய் இந்த இயந்திரங்கள் எல்லாம் சௌகரியங்கள் என்று நினைத்திருந்தேன் . இல்லை . நாங்கள் அடிமைகளாய் இருக்கிறோம் என்கிற எண்ணமே எரிச்சலுறச் செய்தது .

 

வெந்நீர் போடட்டுமா கிருஷ் .. இன்று புதன் கிழமை .. ஸ்வேதா காத்துக் கொண்டிருக்கிறாள். “

 

வேண்டாம் ஸ்பைக் .. இனி யாரும் வேண்டாம் .. ” என்றேன் .

 

இல்லை கிருஷ் .. நீ மறுக்க முடியாது .. இது அரசின் ஏற்பாடு .. வாரம் ஒருமுறை நீ போயே ஆக வேண்டும் .. உன் நல்லதற்குத் தான் .. உன் புலன்களை அடக்கிக் கொள்ளத் தான் .. குற்றங்கள் தடுக்கப் படவேண்டுமல்லவா .?”

 

கொஞ்சம் எரிச்சலாக வந்தது . இருந்தாலும் மிகவும் முரண்டு பிடித்தால் சந்தேகப் படக் கூடும் என்பதால் குளித்துவிட்டு கடமைக்குப் போய்வந்தேன் . இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என மனம் விரும்பியது . இதற்குப் பதில் , பேசாமல் ஏதாவது மாத்திரைகள் போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றியது .

 

ஸ்வேதாவை அனுப்பி வைத்தாகிவிட்டது .. அதன் சேவை பற்றி எனது மதிப்பீடுகளையும் பதிந்து விட்டாயிற்று. கெட்டிக்கார அரசு , எங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தையும் எங்கள் வாயாலேயே பிடித்திருக்கிறது என்று பதிவு செய்ய வைத்து விடுகிறது .

 

ஸ்பைகின் தொல்லை பொறுக்காமல் அதை ஸ்லீப் மோடில் போட்டிருந்தேன் . என் படுக்கை அறை.. என் இருள் .. என் தனிமை .. என்னைப் பார்க்கவோ கண்காணிக்கவோ இனி யாரும் இல்லை. இன்னும் அரை மணி நேரத்தில் என்னைத் தூங்க வைத்து விடுவார்கள் . அதற்குள் என் காரியத்தை நிறைவேற்றியாக வேண்டும் .

 

என் பையைத் திறந்தேன் . கலர் காகிதத்தால் சுற்றப்பட்ட அந்த சிறிய பெட்டி இருந்தது . பிறந்தநாள் வாழ்த்துகள் என அதன் மேலே எழுதப்பட்டிருந்தது. சிரித்தேன் . முட்டாள் இயந்திரங்கள்.

 

பொறுமையின்றி வேகமாகப் பிரித்தேன் . சின்னதாக உருட்டப்பட்டிருந்த உருளையான வஸ்து ஒன்றின் இரு முனைகளிலும் கறுப்புக் கயிறு இணைக்கப் பட்டிருந்தது. கூடவே அதைப் பற்றிய விவரணைகளும் , அணிந்து கொள்வது எப்படி என செயல் முறை விளக்கப்படங்களும் கொண்ட காகிதமொன்றும் இருந்தது .

 

இருபதாம் நூற்றாண்டில் தாயத்து என அழைக்கப்பட்டு வந்த இந்தக் கயிறு விசேஷ ஷக்திகளை உடையது .. துர்தேவதைகளை நினைத்து பூஜிக்கப்பட்டது …. இதைக் கையில் கட்டிக் கொள்பவர்களின் எண்ணம் கைகூடும் .. இதனுள்ளே சுயம்பு வேரும் , புலிப்பல்லும் ….” அதற்கு மேல் படிக்க அவகாசமில்லை . புலி என்றால் என்னவென நாளை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் .

 

காகிதத்தில் வரையப் பட்டிருந்த படங்களைப் பார்த்து என் புஜத்தில் கட்ட முயன்றேன். ஒரு கையால் கட்டிக் கொள்வது கடினமாக இருந்தது . ஸ்பைக்கை அழைத்தால் மாட்டிக்கொள்வேன் . ஒரு வழியாக முடிச்சுப் போட்டாயிற்று .

மறுநாளுக்கான ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் உறங்கிப் போனேன் . உறங்கவைக்கப் பட்டேன் .

 

கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ.. ..சோஃபி என் உதட்டிற்கு மிக அருகில் இருக்கையில் , கனவு கலைக்கப் பட்டது . அருகில் காஃபி இருந்தது . “காலை வணக்கம் கிருஷ் .. இன்று நீ உற்சாகமாகக் காணப் படுகிறாய் ஸ்பைக் கரகரத்தது . அந்த முடிவு பெறாத முத்தம் என்னைப் புன்னகைக்கச் செய்தது . மனதின் எதோ ஒரு மூலை தாயத்தாம்எனக் கிண்டல் செய்தாலும் , ஒரு வேளை இது வேலை செய்துவிட்டால் , அதே மனது ஆசையும் பட்டது.

 

ஆச்சர்யமாக இருந்தது . டிடெக்டரால்   என் கையில் இருந்த வஸ்துவை உணர முடியவில்லை . எனக்கு படபடப்பாக இருந்தது . எனது காபினில் சென்று அமர்ந்தேன் . காலை வணக்கம் என திரையில் பேசியது அலுவலக தலைமைக் கணிப்பொறி ஹவ்ரத்‘ . இங்கிருக்கும் எல்லா கணிப்பொறிகளையும் , ஷிவானி போன்ற இயந்திரப் பெண்களையும் கட்டுப்படுத்துவது. பதில் வணக்கம் சொல்லிவிட்டு வேலை பார்க்கத் துவங்கினேன்.மனது மட்டும் படபடப்பாகவே இருந்தது.

 

நீ மனதில் என்ன நினைத்தாலும் நடக்கும் . தாயத்தின் மகிமை அப்படி வைபவ் சொன்னது நியாபகம் வந்தது . முதலில் சிறியதாக ஆரம்பிப்போம் என முடிவு செய்தேன். அப்பொழுது தான் அலுவலகத்தில் நுழைந்திருந்தாள் சோஃபி . அந்த பிங்க் நிற டி ஷர்ட் மிகவும் பொறாமைப்பட வைத்தது . சமயம் கிடைக்கும் போது அதைக் கிள்ள முடிவு செய்தேன். மனதுக்குள் மெதுவாக அவள் என்னைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என முணுமுணுத்தேன் . இத்தனை நாளாய் என்னைத் திரும்பியே பாராதவள் ஐயோ , புன்னகை செய்து தொலைத்தாள்.

 

பதிலுக்குப் புன்னகைத்தேன். அவள் இடத்தில் அமர்ந்து வேலை செய்யத் துவங்கினாள். ஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நம்பமுடியவில்லை . தாயத்து வேலை செய்கிறதா ?? இந்த காலத்திலும் மந்திர தந்திரங்கள் பலிக்கின்றனவா என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது . காதலென்றால் இப்படித் தான் இருக்குமோ .இப்பொழுதே ஹரியிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது . காலையிலிருந்தே காணவில்லை அவனை .

 

நிஜமாகவே அவள் என்னைப் பார்த்து தான் புன்னைகைத்தாளா ?? ஓரத்தில் சந்தேகம் வந்தது . மகிழ்ச்சி சட்டென்று வற்றிப் போனது . ஒரு வேளை இது தற்செயலாக இருந்தால் …. வேகமாக முணுமுணுத்தேன் . அவள் என்னுடன் கோலா அருந்த வரவேண்டும். லாவெண்டர் பூ வாசம் வீசியது . தலை தூக்கிப் பார்த்தேன் .

 

என்னுடன் கோலா அருந்த வர முடியுமா ??” சோஃபியா தலையை சாய்த்துக் கண்ணடித்தாள். ஷிவானி கிட்டே கூட வரமுடியாது . அலுவலக ஆண்கள் அத்தனை பேரும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, எந்நேரமும் வெளியே குதித்துத் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற அபாயத்தில் அலுவலகத்தை விட்டு விட்டு சோஃபியுடன் கோலா அருந்தச் சென்றேன் .

 

அடுத்த சில மணித்துளிகள் அழகானவை. ஒரு கோலாவிற்கு இவ்வளவு சுவையா என்று தோன்றியது . ஐன்ஸ்டீனின் உவமைக்கு ஆஹா சொல்லத் தோன்றியது . அவள் பேசிக் கொண்டே இருந்தாள் . நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் . அகத்துப்பா எழுதத் தோன்றியது . இலக்கணம் படிக்க முடிவு செய்தேன் . எந்த இயந்திரத் பெண்ணாலும் தந்து விடமுடியாத இன்பத்தை இந்த அணங்குகொல் ஆய்மயில் பார்வையால் மட்டுமே வழங்கிக் கொண்டிருந்தாள். இந்த வினாடியில் , இந்த உலகத்தில் காதலித்துக்கொண்டிருப்பவன் நான் ஒருவனே எனக் கத்தத் தோன்றியது . கோலா வைத்துச் சென்ற ஷிவானியுடன் கைகோர்த்து ஆட வேண்டும் போல் இருந்தது . ச்சே என்ன மடையன் நான் . சோஃபி இருக்கும் போது எதற்கு எந்த இயந்திர முட்டாளும்.

 

ஆனால் கேட்க வாய் தான் வரவில்லை. எல்லாம் ஈந்து விட்ட போகளத்துக் கர்ணன் போல அவளைப் பார்த்திருந்தேன்.”என்னுடன் ஆட வருகிறாயா ?   டி ஷர்ட்ஐக் கொஞ்சம் கிள்ளலாம்என்றாள் .

 

அருகிலிருந்த ஓய்வறைக்குச் சென்றோம் . மெல்லிய இசை ஒன்று பரவியது . செங்காந்தள் விரல்கள் , கார் முகில் கூந்தல் , வெண்பட்டுச் சருமம் , ஐயோ என்னிடம் காகிதமில்லையே ! . வைபவ் வாழ்க ! ஹரி வாழ்க ! மனதுக்குள் கூவிக் கொண்டேன். முத்தமிடமாட்டாளா என்று எண்ணினேன் . தைரியம் கூடிவிட்டதே !

 

சட்டென்று ஆட்டத்தை நிறுத்தி விட்டு என்னைச் சுவற்றோடு சாய்த்தாள் . சுவாசத்தில் கோலா கலந்திருந்தது . உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் பாய்வது போல் இருந்தது . கொஞ்சம் கொஞ்சமாக என்னை இறுக அணைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு கரங்களிலும் தழுவினாள் . இதன் பெயர் ஆலிங்கனம் தானே !.

 

யார் அந்த பேந்தம்ஸ் ..” ஒரு நொடியில் கையிலிருந்த தாயத்தை அறுத்து விட்டு என்னை இன்னமும் இறுக்கமாக அணைத்தாள். காணாமல் போய்விட்டாள் . காணாமல் என்றால் காணாமலேயே  போய்விட்டாள்.  நெருக்கி  நெருக்கி எனக்கு உள்ளேயே போய்விட்டாள் . அந்த அறைக்குள் நான் மட்டும் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தேன் . குழப்பம் நீங்கவே கொஞ்ச நேரம் ஆனது . ‘ஹவ்ரத்என்று கத்தினேன் . இன்னொரு இயந்திரத் பெண் . ஹோலோக்ராம் பிரஜை . மோசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால், அவளை என்னால் தொட முடிந்ததே . அவளை உணர முடிந்ததே .. அந்த லாவெண்டர் மணம் ?? அந்த முத்தம் ???  ஐயோ தாயத்து .

மொத்தமாக முடிந்து போனேன் என்று தோன்றியது .. ஹரியால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும் . 

வேகமாக ஹரி கேபினுக்கு ஓடினேன் . அவனைக் காணவில்லை. அவனது கேபினையும் தாண்டி , என்னுடைய கேபினையும் தாண்டி , என் இச்சையின்றி சோஃபியாவின் கேபினுக்குள் சென்று கணிப்பொறியை உயிர்ப்பித்தேன் .

 

ஷிவானி ரக மடல் ஒன்று , குட் மார்னிங் மேடம் என்றது . நானும் பதிலுக்கு பெண் குரலில் வணக்கம் என்றேன் .

 

வெயிட் .. ஐயோ .. எனக்குள்ளே சோஃபியா இல்லை .. அவளுக்குள்ளே தான் நானிருக்கிறேன் .. காணாமல் போனது அவளில்லை .. நான் . சோஃபியாவின் பெயரைக் கத்தி என் கை முன் தட்டுப் பட்ட ஏதோ ஒன்றில் குத்தினேன் . ஆங்கிலத்தில் எஃப்பில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சொல்லித் திட்டிவிட்டு , மத்திய பகுத்தறிவு இலாக்காவுக்குத் தகவல் அனுப்பத் துவங்கினாள் . மந்திரம் மாயாவி என அரசுக்கு எதிராக தடை செய்யப்பட விஷயங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதால்   மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளோம் என செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள் .

 

மேலும் ஒருவரா ?? இந்தக் கடன்காரன் ஹரி எங்கே போனான் .. ?

 

உன் கைக்கிளைக் காதலி சோஃபியா .. பெண்ணில்லை .. மூன்று பரிமாண ஹோலோக்ரம் முறையில் தயாரிக்கப் பட்டவள் .. இன்னும் சந்தைக்கு வரவில்லை .. சோதனையில் இருக்கிறது .. சீக்கிரம் வந்துவிடும் .. சி எல் 15 ரக மாடல் .. நீ தான் முதலில் வாசம் பார்த்திருக்கிறாய் .. எப்படியிருந்தாள் ?

 

குரல் கேட்டு இடது புறம் திரும்பினேன் . ” வாடா மச்சான் ஹரி உட்கார்ந்திருந்தான் .

 

 ——————————————————————————————————-