Tags

, ,

யுத்தம் நிகழும் கணங்கள் நாவறுக்கப்பட்டவைகள்

அதன் பிறகு வருகின்ற நாட்களே

பைத்தியம் பிடித்து உன்மத்தமாய்

இறந்துபோகும் வரை பிதற்றியபடியிருக்கின்றன

– யாரோ

இன்னமும் மூன்றே பேர்கள் .. இருவர் என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆடைகளைப் பற்றியிருக்கிறவன் தான் முக்கியம் இப்பொழுது . அவளில் மேல் விழுந்திருக்கின்றன அத்தனை நகக்கீறல்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் .

என் கையில் இருந்த தடியால் அவன் பின் மண்டையில் பலமாக அடித்தேன் . இன்னமும் கொஞ்சம் ரத்தக்கறையானது . மீதமிருந்த இருவரும் என்னைப் பார்த்து ஒடத்துவங்கினார்கள் .

கீழே கிடந்த கீர்த்தியை அள்ளி எடுத்து மடியில் போட்டுக் கொண்டேன் . அவள் பலகீனமாக முனங்கினாள்.

” ஒன்றுமில்லை , ஒன்றுமில்லை , கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள் , நாம் வீட்டுக்குப் போகப்போகிறோம் ” .

கைத்தாங்கலாக அவளைத் தூக்கி நிறுத்திக் கொண்டேன் . எதையும் கேட்கின்ற மனநிலையில் இல்லை அவள் . கதவுக்குப் பின்பு ஒளித்து வைத்திருந்த என் இரண்டு வயது மகளையும் தூக்கிக்கொண்டு ஓடத்துவங்கினேன் .

நேற்றைய இரவின் எஞ்சிய மகிழ்ச்சியோடு விடிந்திருந்த இன்று அதே போல் தொடர்ந்திருக்கவில்லை . கண் இமைக்கும் நேரத்தில் என்னை அடித்துப் போட்டு கீர்த்தியை இழுத்துக் கொண்டு போய்விட்டிருந்தார்கள் . என் ஊர் , எனக்குப் பழகிய அங்காடித்தெரு எதுவும் பிடிபடவில்லை . புதிதாகக் கிளை திறக்கப்பட்ட நரகத்தின் ரத்தம் தோய்ந்த ராஜபாட்டையில் ஓடுவது போல் இருந்தது .

யாருக்கும் யாருக்கும் இப்பொழுது பிரச்சனையை என்று தெரியவில்லை . யாருக்கும் யாருக்குமோ இருந்துவிட்டுப் போகட்டும் . நான் என்ன செய்தேன் . எதற்காக இந்தக் காயங்கள் . வெட்கமாக இருந்தது . என் கண் எதிரே கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் யாரையும் காப்பாற்ற எனக்குத் தோன்றவில்லை. நான் தனியன் . என் ஒருவனால் என்ன செய்ய முடியும் இந்த மூர்க்கம் பிடித்த கும்பலை . என் மூளை கட்டளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் ” ஓடு ..ஓடு .. உன் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்று “ என்பதை மட்டும் தான் .

என் குடியிருப்புப் பகுதிக்கு வரும் வரை என்னால் எதையுமே யோசித்திருக்க முடியவில்லை. வாசலில் காவலாளி கடைவாயில் ரத்தம் வழிந்தபடி சரிந்து கிடந்தான் . அருகில் சென்று அவனைத் தட்டினேன் . “அவர்கள் .. அவர்கள்” என்று குடியிருப்புப் பகுதியை நோக்கிக் கையைக் காட்டியபடி கண்ணை மூடிக் கொண்டான் . ஐயோ கடவுளே ! இங்கேயும் வந்துவிட்டார்களா ?? கடவுளே .. ச்சே .. கடவுளாம் கடவுள் . அவனால் தானே இவ்வளவு பிரச்சனையும் .

ஒரு கும்பல் எனது குடியிருப்புப் பகுதியைச் சூறையாடிக் கொண்டிருந்தது . ஆம் .. நான் பார்த்தேன் அதை , மோட்டார் ரூமில் ஒளிந்திருந்து .. என் பக்கத்து வீட்டுப் பெண் ரேஷ்மியைத் துரத்திக் கொண்டிருந்தார்கள் . அடுத்த வாரம் ஐ ஐ டி இல் கெமிக்கல் இன்ஜினியரிங் சேரப்போவதாக காலையில் தான் இனிப்புக் கொடுத்தாள் .

நான் பார்த்துக்கொண்டிருந்தேன் . என்னால் பார்க்க மட்டும் தான் முடிந்தது . அழுகையாக வந்தது . கீர்த்தி இன்னமும் பாதி மயக்கத்தில் தான் இருக்கிறாள் . நல்லவேளை இதைப் பார்க்கவில்லை அவள் .

இரண்டாவது மாடியில் என் வீடு . இருவரையும் தூக்கிக் கொண்டு ஓடத்துவங்கினேன் . பாப்பா அம்மா அம்மா என்று அழுது கொண்டே வந்தது . இன்னமும் கொஞ்ச தூரம் தான் . டி 1 , டி2 , டி3 … டி3 ஐக் கடக்கையில் கவனித்தேன், உள்ளே இருந்து புகைந்து கொண்டிருந்தது . கிரிதர் குடும்பத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை .

டி 6 இல் நின்றேன் . நல்ல வேலை சாவி தொலையவில்லை . கதவை இறுக்கமாகப் பூட்டினேன் . கொஞ்சம் பாதுகாப்பாக உணரப்பட்டேன் . கீர்த்தியை படுக்கையில் கிடத்தினேன் . அவளின் ஆடைகளைச் சரி செய்தேன். இனி கவலையில்லை . என் வீட்டிற்குள் யாரும் வரமுடியாது .

ஓடிச் சென்று தொலைபேசியை எடுத்து கிரிதருக்குச் சுற்றினேன் . தொலைபேசி உபயோகத்தில் இல்லை என பதில் வந்தது . மீண்டும் அழைத்தேன் . மீண்டும் அதே பதில் வந்தது . கடவுளே ! அழுவதைத் தவிர நான் என்ன செய்துவிட முடியும். என் காதுகளில் இன்னமும் தெருவின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. நான் கதவைப் பூட்டிக் கொண்டதானால் எதுவும் நடக்கவில்லை என்று ஆகிவிடுமா .

பாப்பா என் காலையே சுற்றி வந்தது . இழுத்து வைத்துக் கொண்டேன் . கண்ணீர் வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை . டாக்டருக்குச் சொல்ல வேண்டும் . யாரும் வருவார்களா என்று தெரியவில்லை . கீர்த்தி .. கீர்த்தி .. ஒன்றுமில்லை அவளுக்கு . ஒன்றும் நடக்கவில்லை அவளுக்கு . சின்ன விபத்து .. அன்று ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தாளே .. வாசலருகில் இடித்துக் கொண்டாளே .. அது போல .. ஒரு சின்ன விபத்து ..

ஐயோ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழவேண்டும் போல் இருந்தது . பாப்பா என்னையே பார்த்துக் கொண்டிருந்தது . என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. வாயை கைகளால் மூடிக் கொண்டு அழுதேன் .

படுக்கையறைக்குள் சப்தம் கேட்டது . நான் எழுந்து செல்வதற்குள் கதவு பூட்டப் பட்டது .ஓடிச் சென்று கதவைத் தட்டினேன் . எந்த பதிலுமில்லை .

“ஏய் , எதுவும் பைத்தியக்காரத்தனமாகச் செய்துவிடாதே … கதவைத் திற ..” கதவு திறக்கப்படவில்லை . எனக்கு பயமாக இருக்கிறது . தட்டிக் கொண்டே இருந்தேன். “நானும் பின்பு செத்துவிடுவேன் .. கதவைத் திற ..” பாப்பா ஓவென்று அழத்துவங்கியது .

கதவைத் திறந்து ஓடிவந்து பாப்பாவை அணைத்துக் கொண்டாள் . ” ஏன் இப்படிச் செய்யப் போனாய் ? ” அவளை அணைத்துக் கொள்ளப் போனேன் .

“தொடாதே … ” பின்னாலேயே விலகிச் சென்றாள் . அவள் முகத்தில் பயம் தெரிந்தது . மூலையில் உட்கார்ந்து கொண்டு சுவற்றில் முட்டிக் கொண்டேன் . கொஞ்ச நேரத்திற்கு யாரும் பேசவில்லை .கண்களை மூடினேன் . ரேஷ்மி அலறிக்கொண்டிருந்தாள். திடிக்கிட்டுக் கண்களைத் திறந்து கொண்டேன் . எங்களைச் சுற்றிலும் எல்லாவற்றையும் பயம் போர்த்தியிருந்தது . நிலவியிருந்த அமைதி, ஓலங்களை விட பயங்கரமாக இருந்தது . எந்நேரமும் யாரும் கதவைத் தட்டவோ உடைக்கவோ கூடும் என்று தோன்றியது.

வெறும் சில மணி நேரங்களில் மாறிப்போன வாழ்கை எனக்கு முன்னாள் மெளனமாக உட்கார்ந்திருந்தது . ஜன்னலைத் திறந்து பார்த்தேன் . சாத்திக் கொண்டேன் . மறந்து விடவேண்டும் . சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் . முதலில் இந்த இடத்தை விட்டு தொலை தேசத்திற்குப் போய்விட வேண்டும் . மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எந்த மிருகங்களும் இல்லாத இடம் ஒன்றிற்கு.

கதவு தட்டப்பட்டது. அவர்களே தான் . மறுபடியும் வந்துவிட்டார்கள் . கையில் கிடைத்த கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டேன் . கீர்த்தி பாப்பாவை இறுகப் பிடித்துக் கொண்டு சோஃபாவில் ஒட்டிக் கொண்டிருந்தாள்.

எழுந்து கதவின் அருகே நின்று “யார் ? ” என்றேன் . எந்த பதிலும் வரவில்லை. அவர்களே தான் . யாரோடு யாருக்குப் பிரச்சனையை என்றாலும் இந்தக் கும்பலின் நோக்கமே வேறு . நான் கதவைத் திறக்கப் போவதில்லை .

தட்டலில் வேகமும் மூர்கமும் அதிகரிப்பது போல் இருந்தது . அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருக்கவில்லை . உடைத்துக் கொண்டிருந்தார்கள் . கொஞ்சம் கொஞ்சமாக கதவு விட்டுக் கொண்டிருந்தது .

பட்டென்று கதவு பெயர்த்துக் கொண்டு விழுந்தது. “வாங்கடா வாங்க .. எத்தனை பேரா இருந்தாலும் ” கத்தியை இரு கைகளிலும் இறுகப் பிடித்துக் கொண்டு எத்தனை பேர் என்று பார்த்தேன் . நாலைந்து பேர் இருந்தார்கள். அதில் ஒருவனைத் தவிர எல்லாரும் காக்கிச் சட்டை அணிந்திருந்தார்கள்.

கத்தியைக் கீழே போடும்படி எச்சரித்தார்கள் . என் அருகில் வந்த அவனின் கையைக் கிழித்தேன் . கீர்த்தி வீல் என்று கத்தினாள். நான் சுடப்பட்டிருந்தேன். என் மங்கிக் கொண்டிருந்த பார்வையில் புகைக்குள் தெரிவது போல் தெரிந்தது. அவள் என் மனைவியையும் மகளையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் …..

படித்து முடித்துவிட்டு காகிதங்களை மேஜை மேல் வைத்தார் இன்ஸ்பெக்டர் கௌதம் .

“சங்கரன் ! ” . எஃப் ஐ ஆர எழுதிக் கொண்டிருந்த சங்கரன் ஓடி வந்தார். அந்த ஸ்டேஷனின் ரைட்டர்.

“சார் கூப்டீங்களா ?”

“ஸ்ரீனிவாசன் கேஸ் ல இவ்ளோ தான் பேப்பர்ஸ் ஆ ?”

“இல்லைங்க சார் .. அது டாக்டர் மித்ரன் , ஸ்ரீனியை ஹிப்னாடைஸ் பண்ணி அனுப்பிருந்த கேசட்ல இருந்தது .. சாருக்குப் படிக்க வசதியா இருக்குமேன்னு நான் தான் எழுதி வச்சிருந்தேன் .. இன்னும் அனிதா மேடம் சைட் குடுத்த ஸ்டேட்மென்ட் இருக்கு ” அவர் முகத்தில் எதையோ எதிர்பார்த்த புன்னகை ஒன்று இருந்தது.

“பரவா இல்ல .. நல்லா தான் எழுதிருக்கீங்க .. கொஞ்சம் கண்டின்யூட்டி தான் மிஸ் ஆகுது .. எப்படி, ஸ்டேஷன்ல மட்டும் தான ரைட்டர்? இல்ல பத்திரிகைல எல்லாம் எழுதற பழக்கம் உண்டா ??

“இல்லைங்க சார் .. இங்க மட்டும் தான் .. அவன் பேசியிருந்ததே தொடர்ச்சி இல்லாம தான் சார் இருந்தது. ” தலை சொரிந்தார் சங்கரன். கொஞ்சம் கர்வமாக இருந்தது.

“ஸ்ரீனி எங்க ?? ”

“அவன இன்னமும் ஹாஸ்பிடல்ல தான் வச்சிருக்காங்க சார் ..”

” சரி .. மத்த பேப்பர்சையும் குடுங்க , பாக்கலாம் “. அனிதாவின் எழுத்துக்கள் கொஞ்சம் சாய்ந்து அழகாக இருந்தது.

காவல் துறைக்கு ,

என் பெயர் அனிதா சுப்பிரமணியன். எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன . இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது . பெயர் பூரணி . சம்பவ தினத்தன்று என் கணவர் வெளியே அலுவல் விஷயமாகச் சென்றிருந்தார். நானும் பூரணியும் மட்டும் தான் வீட்டிலிருந்தோம் . சுமார் காலை பதினோரு மணி அளவில் கதவை யாரோ தட்டினார்கள் . ஏ.சி சரி செய்ய ஆள் வந்திருப்பதாக நினைத்துக் கதவைத் திறந்தேன். சட்டென்று என்னை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். பூரணியைக் கையில் தூக்கிக் கொண்டு என்னையும் தர தரவென்று படுக்கை அறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான். என்னை படுக்கையில் கிடத்தினான். படுக்கை விளிம்பில் முட்டிக் கொண்டதில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது . என் ஆடைகளை சரி செய்வதாகச் சொன்னான் . கீர்த்தி கீர்த்தி என்று சொல்லிக் கொண்டே இருந்தான் . ஹாலுக்குச் சென்று ஜன்னலைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் .

அந்த சமயத்தில் தான் கதவைப் பூட்டிக் கொண்டு என் கணவர் வாசுதேவனுக்கு ஃபோன் செய்தேன். போலீசைக் கூட்டிக் கொண்டு கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் , கதவைத் திறக்கவேண்டாம் என்று சொன்னார். ஆனால் குழந்தையை வைத்து அவன் வெளியிலிருந்து மிரட்டத் தொடங்கியதால் கதவைத் திறக்க வேண்டியதாயிற்று. பூரணியை அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு தனியே உட்கார்ந்து கொண்டேன் . அவன் அழுது கொண்டே இருந்தான் . அவன் செய்கைகள் வினோதமாக இருந்தன. திருட வந்தவன் போலத் …………………………………………..

…………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………………..

…………………………………………………. . மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விபரங்களும் எந்த வற்புறுத்தல்களும் இன்றி நானே என் சுயநினைவோடு எழுதிக் கொள்வது.

அனிதா சுப்பிரமணியன்.

மேலோட்டமாக மீதத்தையும் படித்துவிட்டு காகிதங்களைக் கோப்பிற்குள் அடுக்கி வைத்தார். மீண்டும் சங்கரனைக் கூப்பிட்டார்.

“ஸ்ரீனி யாரு என்னன்னு ஏதாவது தகவல் தெரிஞ்சதா , சங்கரன் ? ”

“தெரிஞ்சது வரைக்கும் எழுதி வச்சிருக்கேன் சார் … இந்தாங்க ..” எப்படியும் அடுத்து அதைத் தான் கேட்பார் என்று முதலிலேயே எடுத்து வைத்திருந்தார்.

” இல்ல .. நீங்களே சொல்லுங்க .. ” இன்ஸ்பெக்டர் முகத்தில் ஆயாசம் தெரிந்தது.

சங்கரனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை . நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டார் .

“சார் , ஸ்ரீனி ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் .. அனிதா மேடம், அவன் கீர்த்தி கீர்த்தினு சொல்லிட்டே இருந்தான்னு சொல்லிருகாங்கள்ள .. அது வேற யாரும் இல்ல .. அவன் மனைவி தான் .. 2006 மே மாசம் கீர்த்திக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆச்சு .. மூணு வருஷம் சந்தோசமா தான் போய்கிட்டு இருந்தது … ஒரு பொண் கொழந்தை கூட இருந்தது .. ஒரு நாளு , அவன் பொண்டாடியையும் கொழந்தையும் கடத்தெருவுக்கு கூட்டிட்டு போயிருந்தப்போ ………… ” .

———————————————————————————————————–