Tags

,

 

இதெல்லாம் ஒரு வேலையா என்று கூட பல முறைகள் நினைத்ததுண்டு. டெஸ்டிங் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை சரி தான் .. டெவெலப்பர்ஸ் என்ன நமக்கு மாமனா மச்சானா.. நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகவேண்டியது தான் .  என்ன இரவு கொஞ்ச நேரம் அதிகமாக விழித்திருக்க வேண்டும்.  இல்லை இதை இப்படியும் சொல்லலாம். அவர்களின் பகலில் விழித்திருக்க வேண்டும்.  அதிகமுறை யோசித்ததுண்டு . இவ்வளவு பயந்தவர்கள் எப்படி இத்தனை நாடுகளைத் தங்களின் கீழ் வைத்து வேலை வாங்குகிறார்கள் என்று.

 

இன்றைக்கு இது போதும் . வேலை முடிந்தாயிற்று . லிஃப்டில் இறங்கும் போதே வேலைகள் பற்றிய எண்ணங்களை இறக்கிவைத்திட வேண்டும் என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒப்பந்தம். ஒரு மணி கேபிற்கு என்னைத் தவிர யாரும் ஒரு மணிக்கே வரப்போவதில்லை . எல்லாரும் வந்து , செக்யூரிட்டி ரூட் போட்டுக் கொடுத்து வண்டி கிளம்ப எப்படியும் ஒன்னரை ஆகிவிடும்.

 

டைடலின் பின்புறத்திலிருந்து ஒரு அழகான வியு பாய்ண்ட் இருக்கிறது . இடது புறத்தில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் . அதன் உச்சிக்கும் எல்நெட் கட்டிடத்திற்கும் இடையில் அவ்வப்பொழுது அரிதாக நிலா எட்டிப் பார்க்கும். இன்றைக்கும் வானம் மொத்தமும் மேகமூட்டம். நட்சத்திரங்கள் பார்க்கும் வேலை கூட இல்லை. எனது வண்டி எண்ணை மட்டும் கேட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து ஐபாடை மாட்டிக் கொண்டேன்.  When you have everything .. What could you possibly desire ?The one you loved the most …  ஏகான் மொத்த சோகத்தையும் கண்களில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்.  பாடல் கேட்கும் எண்ணமும் இல்லாமலிருந்தது . ஏனோ சில சமயங்களில் எதுவுமே பிடிக்காமல் எரிச்சலாக இருக்கும். எல்லாரிடமிருந்தும் , எல்லாவற்றிலிருந்தும் தனிமைப்பட்டுவிடத் தோன்றும். ஒருவேளை எனக்கு அந்தப் பாடல் வரிகள் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம் .வெறுமனே கண்ணாடியை வெறித்துப் பார்த்தே அடுத்த சில நிமிடங்கள் கழிந்தன.

 

****

 

சரியாக இருபது நிமிடங்கள் தாமதமாக ஒரு பெண் வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டோ, இல்லை பாடல் கேட்டுக் கொண்டோ இருந்தாள். இல்லை பாடல் தான் கேட்கிறாள். இவ்வளவு நேரம் எதிர் முனையில் தனியாக ஒருவன் பேசியபடி இருக்க முடியாது , இவளது ம்ம் .. தலையாட்டல்கள் கூட இல்லாமல். என் பிரதானக் கவலைகள் அதுவாக இல்லை . அவள் வேளச்சேரியாக இருந்தாள் பரவாயில்லை. போகிற வழியில் இறக்கி விட்டுப் போய்விடலாம். மேடவாக்கம் தாண்டி என்றால் கஷ்டம் தான்.  முதலில் அவளை இறக்கி விட்டு மீண்டும் திரும்பி வந்தாக வேண்டும் . அலுவலக விதிமுறைகள்.

 

“தம்பி போலாமா?”  கேப் டிரைவர் வந்து  ஏறிக் கொண்டார். “நீங்க எங்கம்மா இறங்கனும் ??” ரிவ்யு கண்ணாடியைப் பார்த்தபடி கேட்டார்.

“கேம்ப் ரோடு” என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. தாமதமாக வந்ததற்கு ஒரு சின்ன மன்னிப்பு கூடக் கேட்காத அவள் குரல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் அதற்குக் கவலைப் படவா போகிறாள். எப்படியும் நான் கேம்ப் ரோடு வரை போகத் தான் போகிறேன்.

 

எஸ்.ஆர்.பி டூல்ஸ் வரை வண்டி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எதிரில் வந்த வண்டி ஒன்றின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் கொஞ்சம் தடுமாறி சாலையை விட்டு இறங்கி நிறுத்தினார். எதிரில் வந்த வண்டிக்காரன் , எங்களின் பிறப்பு குறித்துத் திட்டிவிட்டுச் சென்றான் .

 

“அண்ணே என்னாச்சு ? ” என்றேன். “ரெண்டு நாளா தூங்கல தம்பி.. பகல்லயும் ட்ரிப் அடிச்சிட்டு இருக்கேன் .. இன்னைக்கு வேணாம்னு தான் சொன்னேன் .. செக்யூரிட்டி தான் கேக்கல ..” அவரின் கண்கள் சிவந்திருந்தன. இன்னும்  நிறைய தூரம் போக வேண்டும். இப்படியே போனால் .. ம்ம்ஹ்ம்ம்ம் .. இது சரி வராது .

 

” அண்ணே டீ கடையா பார்த்து வண்டிய ஓரமா நிறுத்துங்க . ஒரு டீ அடிச்சிட்டுப் போலாம்”

 

“இல்லங்க தம்பி .. கூட லேடிஸ் வேற இருக்காங்க .. வண்டிய நடுவுல வேறெங்கயும் நிறுத்தக் கூடாதுன்னு சொல்லிருகாங்க .. வேணாம்பா ” அவருக்கு ஒரு டீ அவசரமாய் தேவையாய் இருந்தும் மறுத்துக் கொண்டிருந்தார்.

 

திரும்பினேன். அந்தப் பெண்ணும் எங்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் . எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் இருந்தாள். ஓரிரு வினாடிகள் அவள் கண்களைப் பார்த்துவிட்டுத் தவிர்த்தேன். கண்களில் கொஞ்சம் பயமிருந்தது . காரணம் நானாக இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்.  லென்ஸ் வைத்திருகிறாளா என்ன ?

 

“உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா ..”

 

இல்லை எனத் தலை அசைத்தாள். லென்ஸ் இல்லை ,கண்மை தான் இட்டிருக்கிறாள்.

 

தரமணி அருகில் ஒரு டீ கடையில் நிறுத்தினோம். நானும் டிரைவரும் மட்டும் இறங்கினோம் . திரும்பிப் பார்த்தேன். சட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். டீ சொல்லிவிட்டு , டிரைவர் பூர்வீகம் பற்றிக் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு. வண்டியைப் பார்த்தேன். என்னையே .. எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் வேறெங்கோ பார்ப்பது போல் பாசாங்கு செய்தாள் .

 

அருகே சென்றேன். “எக்ஸ் க்யுஸ் மீ” .  திடுக்கிட்டுப் பார்த்தாள். இதை அவள் எதிர் பார்த்திருந்திருக்க மாட்டாள் . “டீ , ?? ” அவள் இமைகள் படபடப்பது இன்னமும் அழகாக இருந்தது. இம்முறை கண்களின் மிரட்சிக்குக் காரணம் நான் தான் என்பது எனக்கே தெரிந்தது. ம்ம் என்று தலை அசைத்தாள். சரி தான் பேசாமடந்தையின் பூர்வகுடியைச் சேர்ந்தவள் போல.

 

“அண்ணே இன்னொரு டீ ”

மகாராணி வாங்கிக் கொண்டு போய் காரில் கொடுக்க வேண்டும். ஆச்சரியமாய் அதற்கு வேலை வைக்காமல் அவளே இறங்கி எங்கள் கூட வந்து நின்று கொண்டாள்.

 

“தேங்க்ஸ்” என்றாள்.

 

ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச அனுமதி உண்டு போல அவளுக்கு . லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் செர்வீஸ் போல இருக்குமோ. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். நானும் டிரைவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

 

பட்டாம்பூச்சியொன்றை  பிடித்து வைத்திருப்பது போல , டீ கோப்பையை இரண்டு கைகளுக்குள்ளும் அடைத்து வைத்திருந்தாள். ஒரு குழந்தையின் கவனத்துடன் டீ குடிப்பது கூட அழகாகத் தான் இருந்தது. சின்னக் கண்கள் .. போனி டெயில் .. கட்டுகளை விடுவித்துக் கொண்டு நெற்றியில் புரண்டிருந்த கற்றை முடி கொஞ்சம் . டீ நன்றாகவே இருந்தது.

 

உயரம் ஐந்தரை அடி இருக்கலாம் . அவளின் பக்கத்திலிருந்த தூணில் அவள் உயரத்தைக் குறித்துக் கொண்டேன். அப்படியே அருகிலிருந்த டிரைவரோடு ஒப்பிட்டேன், பின் அந்த உயரத்தை  என்னுடன். ஒன்றும் பாதகமில்லை. முத்தமிட முடிகின்ற உயரம் தான். சிரித்தேன். எதற்கென்றே தெரியாமல் டிரைவரும் சிரித்தார்.அவள் மட்டும் உள்ளங்கைகளுகுள்ளேயே கண்களை வைத்திருந்தாள்.

வேளச்சேரியைத் தாண்டிக் கொண்டிருந்தோம் .

“எக்ஸ் கியுஸ் மீ”

என்னையா ? அவளா ??

திரும்பி “ஏதாவது சொன்னீங்க ” என்றேன்.  வேகமாக மறுத்துத் தலை அசைத்தாள். என் தலைக்குமேலே சிறிய விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

நான் இருக்கும் மேடவாக்கம் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. எனது தெருவைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுடன் சென்றேன்.

 

“எக்ஸ் கியுஸ் மீ”

 

இப்பொழுதும் என்னைக் கூப்பிட்டாள் என்று தெரியும் . கேட்டாள் இல்லையென்று தான் சொல்லப் போகிறாள். திரும்பவில்லை.

 

இன்னொரு எக்ஸ் கியுஸ் மீ.

 

இன்னுமொரு எக்ஸ் கியுஸ் மீ.

 

திரும்பினேன்.   ” அந்த நாலு எக்ஸ் கியுஸ் மீ யும் நீங்க இல்லைல .. ”

 

“நான் தான்” 

 

அந்த முகபாவனைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. வெட்கமாயிருக்காது. கோபமாய்  இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

 

“ம்ம் .. சொல்லுங்க ”

 

“சாரி ..கிளைன்ட் கால் இருந்தது .. ஒரு மணிக்கு ..  முடிய வேண்டியது .. முடியல .. அதான் லேட் ..  நாளைல இருந்து .. சீக்கிரம் .. வந்திடறேன் “நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிறுத்ததோடும் , இமைகளின் படபடப்பு ஒத்துப் போனது. இன்னமும் ஏதாவது பேசியிருக்கலாம் அவள். அந்தக் குரல் அவ்வளவு மிகவும் பிடித்திருந்தது.

 

“பரவா இல்லீங்க ..”

 

“தேங்க்ஸ் ”

 

“வேற ஏதாவது ?”

 

தலையசைத்தாள். முட்டாள். ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லை. இப்படியா முடிப்பது. எனக்கு அவள் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.  எனக்கும் , டிரைவருக்கும் இடையே டிரிப் சீட் இருந்து. வண்டி கிளம்பும் முன் எங்களின் விபரங்களை அதில் நிரப்ப வேண்டும்.  சாதரணாமாக எடுப்பது போல அதை மடியில் வைத்துக் கொண்டேன். நிறைய பேர் கிறுக்கியிருந்தார்கள். என் கிறுகலுக்குக் கீழே அவளுடையது. அவள் என்பதால் கையெழுத்து அழகாகத் தெரிந்ததா என்று தெரியவில்லை.

 

கேம்ப் ரோடின் ஏதோ ஒரு தெருவிற்குள் அவளின் வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு வீட்டின் … அழகான வீட்டின் முன் வண்டி நின்றது . அழகான என்பதை அவள் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடைமொழியாக இடத் தோன்றியது. இறங்கி டிரைவருக்கும் நன்றி சொல்லியவள் , என்னிடம் திரும்பினாள்.

ஜன்னல் அளவுக்கு குனிந்திருந்தாள் . கொஞ்சம் முயன்றிருந்தால் அவள் லிப் க்ளாஸ் என்ன ப்ளேவர் என்று தெரிந்துகொண்டிருக்க முடியும்.

“தேங்க்ஸ்.” நியாயமாக இந்த இரவிற்காக நான் தான் நன்றி சொல்லியிருக்க வேண்டும்.  என்ன வகையான வாசனைத் திரவியம் இது என்று போனதும் கூகிள் செய்ய வேண்டும்.

 

“இட்ஸ் ஓகே ஹரிணி .. குட் நைட் ”

 

அந்த பாவனைக்குப் பெயர் ஆச்சர்யம் என்பது நன்றாகத் தெரிந்தது. நிச்சயம் நான் பெயர் சொல்லி அழைத்ததிற்காய் இருக்காது. பெயர் எப்படித் தெரிந்தது என்பதற்காய் தான் இருக்க வேண்டும். ஒரு வினாடி ஆச்சர்யத்திற்குப் பிறகு அவள் கண்கள் ட்ரிப் சீட்டின் மேல் வந்து நின்றது. அதற்குப் பிறகான அவள் முக பாவனைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக கோபத்துடன் சின்ன வெட்கத்திற்கும் வாய்ப்பிருக்கிறது இம்முறை.

 

***

 

காலை உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலே மதியத்திற்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது தண்ணீரைத் தவிர . அதுவும் தனியாகச் சாப்பிடுவது அதை விட மோசம். அந்த அறையில் மொத்தம் 100 மேஜைகளாவது இருக்கும். யாரும் தனியாக இல்லை . நான்கு பேர் அமர முடிகிற எனது மேசையில் நான் மட்டும். கல்லூரி விட்டு வந்த பிறகு நான் இழந்ததாகக் கருதுபவைகளில் மிக மோசமானது இது .

அருகில் நிழலாடியது . தலையைக் கூடத் தூக்கிப் பார்த்திருக்க மாட்டேன் அந்த எக்ஸ் கியூஸ் மீ யைக் கேட்டிருக்காவிட்டால் .. ஆங்கிலத்திலேயே மிக இனிமையான வாக்கியம்  இதுவாகத்தான் இருக்கக் கூடும்.

 

 

 

 


சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு என்னைப் பார்த்தாள். அதற்கு வேறெங்கும் இடமில்லை , இல்லையென்றால் உன்னுடன் உட்கார்ந்து உணவுண்ண நான் என்ன பைத்தியமா என்று பொருள். ஒரே இரவில் அவள் எந்தெந்த அபிநயங்களில் எப்படி இருப்பாள் என ஹோம் வொர்க் செய்தாகிவிட்டது . எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை என நானும் பதிலுக்கு தலையசைத்து தோள்களைக் குலுக்கினேன்.மென்று கொண்டிருக்கும் காய்ந்த சப்பாத்தி கொஞ்சமாய் இனிப்பது போல் இருந்தது.

எதிரே  உட்கார்ந்திருக்கும் ஒரு அழகான பெண்ணிடம் , அதுவும் ஏற்கனவே அறிமுகமான ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் காய்ந்த சப்பாத்தியை அசை போட்டுக் கொண்டிருக்கும் ஒரே ஆண் உயிரினம் நானாக மட்டும் இருக்கக் கூடும்.

நேற்றிரவு பெயர் மட்டுமே தெரிந்திருந்தது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக அவளது எம்ப்ளாயீ நம்பரை வைத்து சகல இன்ன பிற தகவல்களையும் தெரிந்தாகிவிட்டது, ஜாதகத்தைத் தவிர. லவ் கால்குலேட்டரில்  இரண்டு பெயருக்கும் பொருத்தம்  பார்த்ததில் அதிகபட்சமாக 0% காட்டியது. கொஞ்சம் வருத்தம் தான். ஏதாவது பஃக் ஆக இருக்கக்கூடும் என்று மனதைத் தேற்றி வைத்திருக்கிறேன்.

 

ஏதாவது பேசு .. உள்ளுக்குள் இருந்து குரல் மிரட்டியது.

 

        “தோசை நல்லா இருக்கா ?? ” போச்சுடா .. அது எப்படி இருந்தால் என்ன ?? கேட்க வேறெதுவும் கிடைக்க வில்லையா . நான் வேஸ்ட் .

என்னையா கேட்கிறாய் பதரே என்பது போலப் பார்த்தாள் . பின் “பரவா இல்ல ” என்றாள் . வெட்கமேயில்லாமல் சிரித்தேன் .

பதிலுக்கு அவளும் ஏதாவது கேட்பது தானே முறை . கேட்டாள் . “சப்பாத்தி நல்லா இருக்கா ?”  

 

 

அடக் கடவுளே .. நானே பரவா இல்லை இவளுக்கு . உலகத்திலேயே தோசையையும் சப்பாத்தியையும் நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் .

 

” இல்லைங்க .. ஹை ஃபிவர்னு  நெனைக்கிறேன். பாருங்க இங்க கொஞ்சம் கருகிப் போயிருக்கு .. நான் தான் மொக்கையா கேக்கறேன்னா நீங்களுமா ? வேற ஏதாவதுபேசலாமே “


சிரித்தாள் . “ம்ம் வேறென்ன பேசலாம் ” யோசிப்பது போல பாசாங்கு செய்தாள்.

அவளின் மஞ்சள் நிற சுரிதாருக்கு , மெழுகுவர்த்தி தீபம் போன்ற அந்த ஸ்டிக்கர் பொட்டு பொருத்தமாயிருந்தது.

தம்பி நல்ல ஆரம்பம் விட்டு விடாதே .

“என்ன வேணும்னாலும் பேசலாம் .. சட்னி சாம்பார்  பத்தி விசாரிக்கலாம் .. இந்த சப்பாத்தி செஞ்சது கோதுமைலையா இல்ல மைதாலையான்னு கேக்கலாம் .. இல்ல என் பேர் என்னன்னு கூட கேட்கலாம் “

முதலில் ஒரு மாதிரி பார்த்தவள் , ” ஹய்யோ சாரி , உங்க பேர் கேட்கவே மறந்திட்டேனே ”  டிஷ்யு  பேப்பரால் தலையில் முட்டிக் கொண்டாள் .

லேசாகப் புன்னகைத்துக் கொண்டே அவளைப் பார்த்தேன் .

 

என்ன என்பது போல் தலையசைத்தாள். இவள் பேசுவதற்கு மொழியே தேவை இல்லை . கண்களே போதுமென்று தோன்றியது. அதுவும் அந்த கண் மையிலேயே ஆயிரம் கதைகளாவது எழுதலாம்.

“இன்னும் நீங்க கேக்கல “

“ஹய்யோ சாரி , உங்க பேர் என்ன ?”

 

“ஹப்பாடா இப்போவாவது கேட்டீங்களே .. ஹாய், ஐ அம் கார்த்திக்  “

“ஹலோ ஐ அம் ஹரிணி “

இருவரும் காற்றில் கை குலுக்கிக் கொண்டோம் . கோல்டன் கோல் . எனக்கு நானே கை கொடுத்துக் கொண்டேன் .


“தேங்க்ஸ் “

“இப்போ எதுக்குங்க ?? “

“இல்ல என்னை  கேம்ப் ரோடு வரைக்கும் விட்டு மறுபடியும் மேடவாக்கம் போக லேட் ஆக்பியிருக்கும் ல .. என்னை  மாதிரி தான உங்களுக்கும் தூக்கம் வந்திருக்கும் ” .. 

 

“நேத்திக்கு மட்டுமே 108 தடவ தேங்க்ஸ் சொல்லியிருப்பீங்க .. இப்போ எல்லாம் ஸ்ரீ ராம ஜெயத்துக்குப் பதிலா இதை ட்ரை பண்ண ஆரம்பிச்சிடீங்களா ?? ” அவள் சிரித்தாள் .

“இன்னைக்கு எந்தக் காலும் இல்ல .. அதனால சரியா டைம் கு வந்திடறேன் “

“அதனால என்ன .. மெதுவா வாங்க .. இன்னைக்கும் நாம ரெண்டு பேரையும்  ஒரே கேப் ல போடுவாங்கன்னு சொல்ல முடியாது ” சொன்ன பிறகே ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் என்று பதறியது.

“ஆமா இல்ல .. “

“ஆமா” அசடு வழிவது என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் எழுத விரும்புபவர்கள் என்னைப் பார்த்து பாகம் குறிக்க.

நீண்ட நாட்கள் கழித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், இருவரையும் ஒரே ‘கேபி’ல் போட வேண்டும் என்று. இரவு 1 மணிக்கு கேபில் செல்கிறவர்கள் குறைவு . மேலும் அந்த ரூட்டில் வேறு யாரும் இல்லை. நிகழ்தகவின் படி எனக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இருந்தும் கடவுள் மேல் கொஞ்சம் சந்தேகமிருந்தது. சந்தேகத்தின் பலன் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்று பயம் வேறு .

 

கொஞ்சம் தாமதம் வேறு ஆகிவிட்டது . ஓட்டமாகச் சென்று கேப் கதவைத் திறந்தேன் .

“நீங்கள் இன்று சரியாக பத்து நிமிடங்கள் முப்பத்தி எட்டு வினாடிகள் தாமதமாக வந்துள்ளீர்கள் மிஸ்டர் கார்த்திக் ” உள்ளே சிரித்த படி ஹரிணி உட்கார்ந்திருந்தாள் .

 

***

சென்ற பத்தியின் கடைசி வரியிலுள்ள ‘நீங்கள்’ , ‘நீ ‘ ஆக வெகு நாட்கள் ஆகவில்லை எங்களுக்கு.  முதல் கொஞ்ச நாட்களுக்கு “குட் நைட் ” “குட் மார்னிங் “  குறுஞ் செய்திகள் . மதிய உணவிற்காக ஒருவருக்கொருவர் காத்திருக்கத் துவங்கினோம் . ஒரு முறை என் நண்பன் வராமல் போனதால் , அவனுக்காக வைத்திருந்த டிக்கெட்டிற்கு படம் பார்க்க வர முடியுமா என்றேன் . பின் இருவருக்கும் சேர்ந்தே முன்பதிவு செய்ய ஆரம்பித்தேன் . இரவு நேர தொலைபேசி உரையாடல்கள் நீளத் துவங்கின. நான் ஆரம்பத்தில் நினைத்து போல் அவள் ஒன்றும் அவ்வளவு குறைவாகப் பேசுபவள் அல்ல.

“ஹே நான் பிங்க் கலர் நைட் டிரஸ் போட்ருக்கேன் .. நீ ??”

“வாட் அ கோ இன்சிடென்ஸ் .. நானும் பிங்க் கலர் நைட் டிரஸ் தான் போட்டிருக்கேன் ” வெறும் லுங்கி மட்டும் தான் கட்டியிருந்தேன். அதன் நிறமென்ன என்பதை அதை நெய்தவன் கூட இப்பொழுது சொல்ல முடியாது.

“பசங்க பிங்க் கலர்ல எல்லாமா டிரஸ் எடுப்பாங்க .. அதுவும் நைட் டிரஸ் ?”

“நம்புப்பா .. நெஜமா ..”

 

நான் சொல்லுவதெல்லாமே கொஞ்சம் கூட லாஜிக்குகளே  இல்லாத பொய்கள் என்பது அவளுக்கும் தெரியும் இருந்தும் அவளுக்கு அது பிடித்திருந்தது . அர்த்தமற்ற உரையாடல்கள் தான் எங்களின் இரவுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருந்ததன. எங்கள் இருவருக்கும் எல்லாவற்றிலும் பொருத்தம் என்று சொல்லிவிட முடியாது. எல்லா ரசனைகளும் ஒத்துப்போகின்றன என்றும் சொல்ல முடியாது . இருந்தும் எனக்கு அவளையும் , அவளுக்கு என்னையும் மிகவும் பிடித்திருந்தது. சொல்லிக்கொள்ளவேயில்லை இருவரும் . அதற்கும் ஒரு நாள் முடிவு செய்தேன் .

 

 

***

அன்று அவள் பிறந்த நாள் .

லேசான பிங்க் நிறத்தில் கொடிகள் போட்ட சுரிதார் அணிந்திருந்தாள். எனக்கு எல்லாமே சுரிதார் தான். அதன் பெயர் பட்டியாலாவாம் . காலெல்லாம் பொஃப் என்று காற்றடித்தது போல் இருந்தது.

அவளே ஒரு பூச்செடி போல தான் இருந்தாள். கொஞ்சம் கூடுதல் அழகாய் இருந்தாள் . நாளுக்கு நாள் அவள் அழகு கூடிகொண்டே போவது போல் இருந்தது  , அவள் மீதான என் காதல் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் போல . தேய்பிறை இல்லாத நிலா என்று கவிதை எல்லாம் கூட கிறுக்க ஆரம்பித்துவிட்டேன் இப்பொழுதெல்லாம் .

கிழக்குக் கடற்கரை சாலையின் , கண்களால் பிடிக்க முடிகிற தூரத்தில் கடல் இருக்கிற ஒரு ரிசார்ட்டில் இருந்தோம். மதிய நேரமாயினும் மேக மூட்டமாயிருந்த அந்த வானிலை , எங்கள் இருவருக்கும் இடையில் வைக்கப்பட்டிருத ரோஜாக்கள் , ஹரிணிக்காக பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடிய அந்த நேபாளிப் பெண் , எதிரே ஹரிணி .. சூழலே ரம்மியமாய் இருந்தது.

இருவருக்கும் இடையில் சற்று முன்பு அணைக்கப் பட்டிருந்த மெழுகுவர்த்தியும் ‘கேக்’கும் இருந்தது . இரண்டு கைகளிலும் கன்னத்தை வைத்துக் கொண்டு கேக்கிற்குப் பதில் அவளைச் சாப்பிடலாமா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன் . இத்தனை கர்வமான கண் மையை நான் இதுவரைப் பார்த்ததில்லை. நான் தான் காரணம் என்பது போலப் பார்க்கும் அவளின் கண்களை விட்டுப் பார்வையை நகர்த்தவே எனக்கு மனமில்லை .

என் முன்னாள் விரல்களைச் சொடுக்கி “என்ன பாக்கற ?” என்றாள் .

“ஒண்ணுமில்ல “

 

மனது கொஞ்சம் படபடப்பாக இருந்தது.

 

“கொஞ்ச நேரம் நடக்கலாமா ?” 


“தங்கள் கட்டளை இளவரசே !” 

 

 அவள் மிகச் சாதரணமாக இருந்தாள். கடலைப் போலவேயிருந்தது அவளின் மௌனம். நானும் அலைகளும் மட்டுமே அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம்.

 

கடலுக்கு மட்டும் தான் எல்லோரையும் குழந்தைகளாக்கிவிட முடிகின்ற வித்தை வசப்பட்டிருக்கிறது. மணலில் இறங்கியதுமே , காலணிகளை வீசி விட்டு , புது ஆடை பற்றிய எந்தக்  கவலையுமின்றி என் கைகளைப் பிடித்தபடி வந்து கொண்டிருக்கும் இவளைக் குழந்தை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. எங்கள் இருவரின் கால் தடங்களைப் பார்த்து எனக்கே கர்வமாக இருந்தது.

 

இதற்குமேல் தாங்காது .

“ஹரிணி !”

நின்றாள். கொஞ்ச நேரம் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் ரிசார்ட் ஆர்கெஸ்ட்ராவின்  இசையைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. அலைகள் கூட மௌனமாகத் தான் இருந்தன.

“கொஞ்சம் பேசணும் ” இதயம் எந்நேரமும் வெளியே வந்து விழுந்துவிடுவேன் என்கிற கதியில் அடித்துக் கிடந்தது.

“பேசலாமே” சிரித்தாள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கிறதைப் போலவே தெரியவில்லை.

ஒருமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டேன்.

” ம்ம்ம் … நான் உன்ன காதலிக்கிறேன் ..  இந்த நாள் மாதிரியே எப்பவும் உன் கூடவே இருக்கணும் னு நினைக்கிறேன் .. என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா ? “

வெகுநேரமாக என் சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த ரோஜாவை எடுத்து நீட்டினேன். என் வாழ்விலேயே மிக நீளமான நொடிகள் இந்தக் கணங்கள் தான். மெலிதாக என் கை நடுங்குவதை என்னாலேயே உணர முடிந்தது.

மெலிதாகப் புன்னகைத்தாள். இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த குழந்தையைக் காணவில்லை.

“இதைச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா ” ரோஜாவை எடுத்துக் கொண்டாள். எனக்கு ஆடவேண்டும் போல் இருந்தது. ஆடவில்லை. ஒரு பெரிய அலை வந்து எங்கள் இருவரின் கால்களையும் நனைத்துவிட்டு போனது .

அவளின் முகத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டேன். கண்களையே பார்த்தேன்.

“நான் ஒரு 23 வருஷம் முன்னாடி பிறந்திருக்கலாம் ”  அவள் எதுவும் பேசவில்லை. கண்கள் மட்டும் ஏன் என்று கேட்டன. அவள் கன்னங்கள் சில்லென்று இருந்தன. கொஞ்சம் நடுங்கிக் கொண்டும் .

“அப்போ உனக்கு ஒரு வயசா இருந்திருக்கும் .. உன்ன ரெண்டு கைலயும் தூக்கி ஆச தீர முத்தம் குடுத்திருப்பேன் ” அவள் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரியவில்லை.

அவளது குரல் மிகவும் பலஹீனமாக வந்தது.

“இப்போவும் தரலாமே “

என் வாழ்விலேயே மிக வேகமான நொடிகள் இவைகள் தான். எத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின்பான முதல் முத்தம்.

“ஸ்ட்ராபெர்ரி “

“என்ன ??”

“உன் லிப் க்ளாஸ் ப்ளேவர் “

சிரித்தவள் மீண்டும் ஒரு முடிவிலா முத்தத்திற்காய் எனை அணைத்தாள். என் முடிவை நான் மாற்றிக் கொள்ளத் தான்  வேண்டும் . ஸ்ட்ராபெர்ரி இல்லை ..  இம்முறை பைன் கேக் . தூரத்தில் ஆர்கெஸ்ட்ராவின்  இசை உச்சத்தை அடைந்தது.

 

 

 

 

 

      தொடரும்

***