Tags

,

 

இன்னொரு காதல் கதை # 1

இன்னொரு காதல் கதை # 2

 

ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டாள் , ஹ்ம்ம் .. உங்களைப் போலத் தான் நானும் நினைத்தேன். உங்களுக்கு ஹரிணியைப் பற்றித் தெரியாது. அவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் . மூன்று மணி நேரம் அவளின் கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அவள் அப்பா அம்மா யார் சொல்லியும் கூட வெளியே வரவில்லை.  ஒரு வார்த்தை  கூட அதன் பின் பேசவும் இல்லை.

உங்க சந்தோசம் தான் எங்க சந்தோசம் .. அதுக்காகத் தான் நாங்க உங்க காதலுக்கு ஒத்துகிட்டோம் . பிரச்சனைய மொதல்ல சரி பண்ணிகோங்க .. எப்போ வேணும்னாலும் கல்யாணத்த வச்சிக்கலாம் .. ”  இருவரின் பெற்றோர்களும் சொல்லி வைத்தார் போல். 

உண்மையில் நான் தான் டீச்சரின் பிள்ளை போல். எல்லோரிடமும் போய் முறையிட்டுக் கொண்டிருந்தேன். நியாயமாகப் பார்த்தால் , இந்நேரம் அடுத்த மாதத்தின் , ஒரு அழகான தேதியில் எங்களின் திருமணத் தேதி குறிக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தத் தேதி எப்படியும் அடுத்த மாதத்தில் வரத்தான் போகிறது . ஆனால் எனக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை.

ஆரம்பத்தில் அவளிடம் பேச முயற்சித்தேன் . ஒரு நாள் அவள் தோழி என்னிடம் வந்தாள் .

“சொல்லு  அனிதா ..  “

“ஒண்ணு சொல்லணும் கார்த்திக்  .. கோபப்படமாடியே  .. “

” நீ  சொல்ல வரத சொல்றியா மொதல்ல  ? ” எரிச்சல் . எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்.

“பாரு  .. நீ இப்போவே கோபப்படற .. ஹரிணி சொல்லி தான் வந்தேன் .. நான் போறேன் ..  “

“ஹே .. ப்ளீஸ் போகாத .. நில்லு .. நான் கோபப்படல ” அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன் .

“கைய விடு கார்த்திக் ..  எல்லாரும் பாக்கறாங்க .. “

“ஸாரி .. ஸாரி   ..  ப்ளீஸ் சொல்லு “


“நீ அவகிட்ட பேச முயற்சி பண்ணாத இனிமே .. அவ பேச மாட்டா .. “

“நீ யாரு இத சொல்ல .. “

“எனக்கெந்த ஆசையும் இல்ல .. இத சொல்லணும் ன்னு .. அவ சொல்ல சொன்னா ..  மீட்டிங் ரூம் முன்னால நிக்கறது .. அவள ஃபாலோ  பண்றது .. இனிமே எதுவும் வேணான்னு சொல்ல சொன்னா  “

“இல்ல .. இருக்காது .. என் ஹரிணி அப்படி சொல்லியிருக்க மாட்டா .. “

“கார்த்திக் .. புரிஞ்சுகோ .. இட்ஸ் ஓவர் ..  அதையும் நீ மீறி .. “

என் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

“… நீ அவளை ஆபீஸ் ல தொல்ல பண்றன்னு .. எச். ஆர் கிட்ட கம்ப்ளைன்ட் .. “

“போதும் அனிதா .. போதும் .. ” கை கூப்பினேன். “உன் ஃபிரண்ட் கிட்ட போய் சொல்லு .. என்னால இனிமே எந்த தொல்லையும் இருக்காது அவளுக்கு .. ” அனிதா போய்விட்டாள் . ஹரிணியும் போய்விட்டாள். எல்லாமும் போய்விட்டது.

பின் ஹரிணியிடம் பேச முயற்சிப்பதை .. அவளைத் தொல்லை செய்வதை நிறுத்திவிட்டேன். அவளது பழைய ப்ரொஜெக்டில் இருந்து அவள் மாறியிருந்தாள். மார்னிங் ஷிப்ட் . மூன்று மணிக்கு கிளம்பி விடுவாள். எனக்கு நான்கிலிருந்து தான்  வேலை தொடங்கும். எதேச்சையாக எங்கேனும் அவளைப் பார்க்க நேர்ந்தாலும் , அவள் முன்னால் செல்வதைத் தவிர்க்கத் துவங்கினேன்.

அவளின் ஆர்குட் , ஜி டாக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் மின்னஞ்சல் வந்தது.  தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டாள் . எண் எப்படியும் எனக்குக் கிடைத்துவிடும் என்று அவளுக்கே தெரியும். அதுவல்ல நோக்கம். எவனோ ஒருனிடம் அவளின் தொலைபேசி எண் தந்திருப்பது தெரியவருகையில் , அந்த எவனோ ஒருவன் அளவுக்கு கூட நீ முக்கியமில்லை என்பதே அதன் பொருள்.

மெளனமாக தண்டனைகளை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டிருக்கிறேன். எதிர்படும் எல்லோரையும் பார்க்கையில் தன்னிரக்கம் ஒன்று தானகத் தொற்றிக் கொள்கிறது , கால் முடமான ஒருவன் , இருக்கையில் அமர்ந்திருப்பவனைப் பார்வையிலேயே நான் பாவப்பட்டவன் இடம் கொடேன் என்று கேட்பதைப் போல. தோற்றுப்போனவன் என்கிற தொனி கண்களில் நிரந்தரமாக அப்பிக் கொண்டுவிட்டது.

இப்பொழுதெல்லாம் சட்டென்று அழுகை வந்து விடுகிறது.  தனியாக வீட்டிலிருக்க பயந்து கொண்டு வார இறுதிகளிலும் கூட அலுவலகம் வரத் துவங்கியிருந்தேன். சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அந்த மாதத்தின் நட்சத்திர விருது கொடுத்தார்கள்.

பிரிந்து போன காதலியை  எவையெல்லாம் நினைவுபடுத்தக்கூடும் . கண்விழித்ததும் எதிரே இருக்கும் அவளின் புகைப் படம் , அலாரமாகப் பாடும் அவளின் குரல் , அலைபேசியில் இருக்கும் அவளின் அர்த்தமில்லாத கொஞ்சல் குறுஞ்செய்திகள் , எப்பொழுதும் ஓயாமல் பேசியிருக்கும் அவள் எதுவுமே பேசாமல் என் தோளில் சாய்ந்து வந்திருந்த ஒரு பேருந்துப்  பயணத்தின் மடிப்பு விழுந்த சீட்டு, சோழிங்க நல்லூர் வளைவில் இருக்கும் அவள் பெயர் கொண்ட ஆப்டிகல்ஸ், சுள்ளென்று அவள் கோபம் போலவே சுடும் வெயில் நாள் ,   சட்டென மழை வந்து அணைக்கும் அதே நாள் , லிப்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் டாம் பாய் வாசம் , எதிர் வீட்டுக் குழந்தையின் முத்தம் , ” வீட்டுக்காரம்மாவுக்கு   பூ வாங்கிட்டு போங்க ” என்று எப்பொழுதும் கெஞ்சும் கிழவியின் கைகளின் குவிந்திருக்கும் பிச்சிப் பூ , ” கேம்ப் ரோடு , கேம்ப் ரோடு ” என்று உறுமும் ஆட்டோ  , வேண்டுமென்றே அவள் என்னிடம் விட்டுப் போன அவள் கைக்குட்டை , எதிர்படும் எல்லாமே அவள் பெயரையே சொல்லிப் போகின்றன .

நினைவில் நிறுத்தி வைக்க முடிகிற , அல்லது நிறுத்தி வைக்க விரும்புகிற கனவுகளைக் காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அதே கனவுகளால் தூக்கம் பறித்துக் கொள்ளவும் காதலால் மட்டுமே முடியும். என் உலகத்தில் வார்த்தைகள் இல்லாமல்  போய் நினைவுகளால் சூழப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. அவளைப் பற்றிய ஒவ்வொரு நினைவுகளும் என் தசைகளையே தீனியாகக் கேட்டு மொய்த்துத் தின்கின்றன. இருந்தும் எதையும் மாற்றிக் கொள்ளவோ இல்லை மறந்து போகவோ  துளியும் விருப்பமில்லை எனக்கு. மறந்து போக நினைக்கிற வினாடிகளில் தான் ஆயிரம் முறை அதிகமாக நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

மின்சார ரயில்களிலும் , புறநகர் பேருந்துகளிலும் அதிகாலை வேளைகளில் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கிட்டத்தட்ட சவ ஊர்வலங்களில் செல்லும் சவங்களைப் போல அநேகம் பேரைப் பார்த்திருக்கிறேன். ஒரு புன்னகை கிடையாது , ஒரு வந்தனம் கிடையாது . எதையோ பறிகொடுத்தவர்கள் போல , தங்களின் ஜீவன்களை யாருக்கோ விற்றுவிட்டவர்கள் போல , இதயங்களை எங்கோ தவறவிட்டவர்கள் போல நகர்ந்து போகிறவர்கள். பல சமயங்களில் யோசித்ததுண்டு இவர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்ககூடும் என்று. இன்றுவரைக்கும் என்னால் கண்டுபிடிக்க முடிந்ததேயில்லை. ஆனா ஒன்று மட்டும் தெரியும். மெல்ல இந்தச் சவ ஊர்வலங்களின் ஒரு சவமாக நானும் மாறிக் கொண்டிருக்கிறேன்.

எனக்குள் மெல்ல அவ்வப்பொழுது சொல்லிக் கொள்கிறேன். “நகரம் உன்னை அன்புடன் வரவேற்கிறது”.

———–

மிகவும் பிடித்த ஒரு திரைப்படத்தை நிறுத்தச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டும் விடாமல் மீண்டும் மீண்டும் திரையிட்டுக் கொண்டிருந்தது கண்ணாடி என்னை ,எனக்கே .

கண்ணாடிகள் மட்டுமே நாம்  வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல உயிர் வாங்கும் கதைகளைச் சொல்லுகின்றன, நமக்கு முன் நம்மையே குற்றவாளிகளாக நிற்க வைத்து .  இந்த ஏழு மாதத்தில் என்னென்ன நடந்துவிட்டது. அழுகிறேனா என்ன ? கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“தம்பி போலாமா .. நீங்க மட்டும் தான் இன்னைக்கு .. சீக்கிரம் போய்டலாம் .. ”  டிரைவர் வண்டியைக் கிளப்பினார்.  அன்றும்  இதே போல் தனியாகவே சென்றிருக்கலாம் . அன்றைக்கும் இன்றைக்கும் தான் எவ்வளவு மாற்றங்கள். இன்று  அவள் இல்லை. அவள் மட்டுமா இல்லை.

அவள் இல்லையா என்ன ? நான் பார்க்கும் ஒவ்வொன்றாகவும் அவள் தானே இருக்கிறாள்.

 

“தம்பி ஒரு டீ அடிச்சிட்டுப் போகலாமா ? ” எனக்குள் சுருக்கென்று மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

இவ்வளவு நாள் எப்படி இது எனக்குத் தோன்றாமல் போனது. நீண்ட நாள் காணாமல் போன புன்னகை மெல்ல என்னிடம் ஒட்டிக் கொண்டது. கொஞ்சம் உற்சாகமும் கூட.

இன்பத்தில் பார்த்தால் நூறு  மடங்கு இன்பத்தையும் , துன்பத்தில் பார்த்தால் கோடி மடங்கு துன்பத்தையும் அள்ளித் தரும் இந்த நிலா அவள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தாலும் தெரியுமல்லவா ? அவளும் பார்த்திருக்கலாமில்லையா .. என் முகம் கவனிக்காமலா போய்விடுவாள்.

இந்தப் பண்பலை மீட்டிக் கொண்டிருக்கும் பாடல் , தொலைதூரத்தில் இருந்து அவளுக்கும் கேட்காமலா இருக்கும். கூடச் சேர்ந்து பாடுகையில் தவறுதலாய் என் பெயர் சொல்லாமலா போவாள்.

அலைபேசியின் முகப்புப் படத்தை மாற்றியிருப்பாளா என்ன அதற்குள் ? எனக்கு வைத்திருந்த செல்லப் பெயரை அதிலிருந்து?? நான் அழைக்கையில் பாடுவதற்காக பொருத்தியிருக்கும் பாட்டை மாற்றியிருப்பாளா என்ன ?

இன்னமும் அவளுக்கு நீல நிறம் தானே பிடித்திருக்கிறது. தரமணி பிள்ளையார் கோவிலைப் பார்த்தால் கன்னத்தில் இட்டுக் கொண்டு தானே இருக்கிறாள். அடையார் ஆனந்த பவன் ரசமலாய் இனித்துக்கொண்டு தானே இருக்கிறது . அந்த தெத்துப் பல் அனிதாவுடன் தானே இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறாள். என்னை மட்டும் எப்படி அதற்குள் பிடிக்காமல் போயிருக்கும். 

அவள் தொல்லை செய்யாதே என்றால் விட்டுவிடுவாதா ? நான் மறுபடியும் முயற்சித்திருக்க வேண்டாமா ?.. இல்லை .. இல்லை .. இப்படித் தான் இருக்க வேண்டும். ஓ முட்டாள் பெண்ணே ! இதற்காகவா இவ்வளவும் செய்தாய் .. உன்னை அட்டைப் பூச்சி என்றதற்காகவா .. நான் மட்டும் இல்லை நீயும் தான் என்று எனக்குப் புரியவைப்பதற்காகவா ! முட்டாள் நீ இல்லை .. நான் தான் . புரிந்து கொள்ள இவ்வளவு தாமதமானதற்கு ..


“தம்பி ,அந்தக் கேம்ப் ரோடு பொண்ணு இப்போ எல்லாம் வரதில்லையா என்ன ? ” என்னிடம் கேட்டாலும் கவனம் மொத்தமும் டீயிலேயே இருந்தது.

“நாளைல இருந்து திரும்பவும் வருவாங்கண்ணா  ..  வண்டிய மட்டும் கொஞ்சம் சீக்கிரமா கொண்டுபோங்க .. ”  முடிக்க முடியா புன்னகை ஒன்று தொடர்ந்து என்னிடம் .

“கண்டிப்பா தம்பி .. நான்  பாஸ்ட்டா  வண்டி ஒட்டி நீங்க பார்த்ததில்லேல .. ” எனக்கு அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. கொடுக்க வில்லை .

இது இரண்டாவது பயணம் . இரண்டிற்கும் தான் எவ்வளவு வித்யாசம். அன்று மனது முழுக்க குற்ற உணர்ச்சியும் , தன்னிரக்கமும் தான் இருந்தது . இன்று மனது முழுக்க பட்டாம் பூச்சிகளும் , நம்பிக்கையும் . காதலை இப்படித்தானே எதிர்கொள்ள வேண்டும். முதலில் நாம் நம்ப வேண்டும் .

 ”  அண்ணா இன்னும் கொஞ்சம் சத்தமா பாட்டு வைங்க ”  . நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை …. நானும் , டிரைவர் அண்ணாவும் சேர்ந்து பாடுவது போல் நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. அவரும் சிரித்தார். நிச்சயமாக அவருக்கும் இது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. 

காதல் தனது ஆட்டத்தின் கடைசி நகர்த்தலில் இருந்தது . எனது முறை இப்பொழுது . மேடவக்கத்திற்கு கொஞ்சம் முன்பு சரியாக ஒரு பெட்ரோல் பல்க் முன்பு டீசல் இல்லாமல் வண்டி நின்று போனது. “ராத்திரி ரெண்டு மணிக்கு ஏன்யா உயிரை வாங்கறீங்க” என்று கத்திக்கொண்டிருந்த வேலையாளிடம் என்னைக் காட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார் டிரைவர்.

இங்கிருந்து ஜங்கசனுக்கு அரை கிலோ மீட்டர் . அங்கிருந்து வீட்டிற்கு ஒன்னரை ? மொத்தமாக இரண்டு கிலோமீட்டர் இருக்குமா ..  தனக்கு கையசைத்துவிட்டு ஓடத் துவங்கியிருந்த என்னைப் பற்றி அவர் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளட்டும்.

கொஞ்சம் அதிகமாகவே மூச்சுவாங்கியது. “இப்போவே ஒடமாட்டேங்கறியே .. நீயெல்லாம் ஒரு பொண்ண இழுத்துட்டு எங்கடா ஓடப் போற ..  ” பள்ளி பி.இ.டி யின் சாபம் இவ்வளவு காலதாமதமாகவா வேலை செய்யும்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மொத்தக் காற்றையும் உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் “என்னடா ஆச்சு ” என்றான் விஜய் .

” சொல்றேன், சொல்றேன் ” என்று சைகை செய்தேன் .

“பிங்க் கலர் நைட் டிரஸ் போட்ருகேன்னு பொய்யா சொல்ற .. உனக்காகவே தேடி வாங்கிட்டு வந்திருக்கேன் .. இந்தா ” 

“ஐயோ .. இது பொண்ணுங்க போடறா மாதிரியே இருக்கு .. “

“பொய் சொன்னேல உனக்கு வேணும் .. ” அவளின் அந்தச் சிரிப்பை நினைத்துக் கொண்டே அதைத் தேடினேன் . பெட்டியின் அடியில் ஒளித்து வைத்திருந்தேன். போட்டுக் கொண்டு விஜய் முன்பு நின்றேன் .

“எப்படி இருக்கு ? “

“டாம் செக்ஸி மேன் .. இப்படியே யு.எஸ் பக்கம் போய்டாத .. வேற அர்த்தமாயிடும் .. இங்கயே 377 இல்ல .. பார்த்து .. “

என் பைக் கீ எங்க ? “

“ஆல் தி பெஸ்ட் .. “

கேம்ப் ரோடிற்கு செல்லும் சாலையில் ஏறிய பொழுது எனக்கு நேர் எதிரே ஒரு பெரிய மின்னல் வெட்டியது .

—–

 

சாலையின் எதிர்புறத்தில் இருந்த அவளது பால்கனி அறைக்கதவு எதிர்பார்த்திருந்தது போலவே பூட்டியிருந்தது. வரும்பொழுது இருந்த தைரியம் இப்பொழுது இல்லை . ஒருவேளை நான் நினைப்பது எல்லாமே தவறாக இருந்துவிட்டாள். ஒரு நிமிடத்தில் என் மகழ்ச்சி மொத்தமும் வற்றிப் போனது. அதுவரைக்கும் போதும் . இன்னொருமுறை அழைக்கலாமா. ஜன்னலைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

அலை பேசியை எடுத்தேன்.  எ .. பி .. பட்டர்பிளை … அவள் எண்ணைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அழைப்பதற்கு ஏனோ தயக்கமாக இருந்தது. அழைத்து தானே ஆகவேண்டும். பேசுவதற்குத் தானே இவ்வளவு தூரம் வந்தது. அழைத்தேன் . மூன்றாவது ரிங்கிலேயே தொடர்பு துண்டிக்கப் பட்டது. நல்லவேளை முதல் ரிங்கிலேயே இல்லை. இவனா அழைக்கிறான் என்ற ஆச்சர்யத்திற்கான ஆயுட்காலம் முதல் இரண்டு .இன்னும் உறங்கவில்லை,

செய் .. வேண்டாம் .. என்று மனதிற்குள் மாறி மாறி கட்டளைகள். டாஸ் போட்டுப் பார்க்கலாமா ? பத்து பைசா கூட பையில் இல்லை . ஒரு பெரிய நாணயம் மேலே சிரித்து கொண்டிருந்தது. அதை நோக்கிப் பறவை போன்ற மேகம் ஊர்ந்து கொண்டிருந்தது. அது கடக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரியாக மேகம் அதைக் கடக்கையில் ஊருக்கே கேட்கும் படி என் காத்திருப்பைச் சொல்லி பெரிய இடி ஒன்றை இறக்கிவிட்டுப் போனது. இந்நேரம் நான் அவளருகே இருந்திருக்கவேண்டும். எனது பெருமூச்சை குளிர்காற்று ஒன்று களவாடிப் போனது.


அவளது படுக்கை அறையில் விளக்கு எரிந்தது. ஏன் தான் கரப்பான்பூச்சிக்கும் , இடிக்கும் ஒரு சேர பெண்கள் பயப்படுகிறார்களோ. யாருக்கென்ன கவலை ? அந்த பயம் வாழ்க. பால்கனி கதவைத் திறந்தாள். கையை நீட்டி மழை வருகிறதா என்று பார்த்தாள். நான் தான் வந்திருக்கிறேன் என்று சாலையின் மறுபுறத்தில் இருந்து கையை ஆட்டினேன் .

முதலில் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவள் , நானென்று தெரிந்ததும் வழக்கம் போல கதவைச் சாத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். அந்தகாலத்திலும் உப்பரிகையில் நின்று கொண்டு இப்படித்தான் பாராமுகம் காட்டுவார்களா இளவரசிகள் ?


கதவைப் பூட்டி விட்டு ஒரு கணமாவது என் ஆடையை நினைத்து அவள் புன்னகைத்திருந்தால் , அது தான் எனக்கான நுழைவுச் சீட்டு .

மறுபடியும் அலைபேசியில் அழைத்தேன். இந்த முறை அழைப்பு துண்டிக்கப் படவில்லை. ரிங் மட்டும் போய் கொண்டே இருந்தது .முடியும் தருவாயில் எடுக்கப்பட்டது.

“ஹலோ ஹரிணி .. கேக்கறியா … ஹலோ ”  எதுவும் பதிலில்லை . ஆனால் அவளின் மூச்சுக்காற்றின் சப்தம் நான் கேட்கிறேன் என்றது .

“நான் உன்கிட்ட மறுபடியும் மன்னிப்புக் கேட்கவோ இல்ல நான் பண்ணதெல்லாம் தப்பு, இனிமே பண்ண மாட்டேன்னேல்லாம் சொல்ல வரல .. ” என் ஆரம்பம் எனக்கே ஆச்சர்யம் அளித்தது. ” நான் கோபப்படுவேன் .. நெறைய .. இன்னும் நெறைய சண்ட போடுவேன் .. அழக் கூடவைப்பேன் .. அது தான் நான் ..  அதே மாதிரி நான் உன்ன பைத்தியமா காதலிக்கிறேன் அப்படிங்கறதும் உண்மை .. ஹரிணி கேக்கறியா …  ” எதுவும் பேசவில்லை அவள்.

“அதே மாதிரிதான் நீயும் .. நீ என்னவா இருக்கியோ அது எனக்கு பிடிச்சிருக்கு ..முதல் தடவை உன்கிட்ட சொன்னப்போ உன்ன நான் சரியா புரிஞ்சிருந்தேனான்னு தெரியல .. ஆனா இப்போ நல்லா புரிஞ்சிகிட்டு சொல்றேன் .. நான் உன்ன காதலிக்கிறேன்.. என் வாழ்க்கைல கடைசி வரைக்கும் நீ கூட இருக்கணும்னு ஆசைப் படறேன் .. இதே மாதிரி நெறைய சண்டை போட்டுக்கிட்டு .. ”   

பேசிக் கொண்டிருக்கையிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது . எனக்கான முதல் துளி கண்ணீரை மேகம் சிந்தியது . சில வினாடிகளிலேயே பெரும் ஓலமாக மாறியது. மொத்தமாக நனைந்து போனேன்.

அங்கேயே நின்றுகொண்டிருந்தேன் வேறெதுவும் செய்யத் தோன்றாமல். குடையோடு சாலையின் எதிர்புறத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

 “யு டிட் இட் மேன் ” மெதுவாகச் சொல்லிக் கொண்டேன்.

நான் அருகே செல்வேன் என்று எதிர்பார்த்திருந்தாள். மழையிலே நின்றிருந்தேன். சாலையைக் கடந்து அவளே வந்தாள்.

“உள்ள வா .. “

“மாட்டேன் .. “

“ப்ளீஸ் .. படுத்தாத டா .. வா உள்ள .. “

கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். அந்தக் குடை எங்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடினாள்.

“ஹரிணி .. நான் வந்து .. “

திரும்பியவள் “இதுக்கு மேல எதுவும் சொல்லாத ” என்னைக் கட்டியணைத்து அழத்துவங்கினாள். 

“லவ் யு ஹரிணி .. “

“உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா .. இதைப் புரிஞ்சிக்க இவ்ளோ நாளா உனக்கு .. இப்போ மட்டும் எதுக்கு வந்த ?”

“அட்டப்பூச்சி குளிர்ல நடுங்கறதா பிபிசி ல சொன்னாங்க .. கொஞ்சம் தொல்ல பண்ணலாமேன்னு வந்தேன் ..”

“போடா” செல்லமாக மார்பில் குத்தினாள்.

“உட்கார் .. ” 

உட்கார்ந்தேன் அதே சோஃபாவில் .

“எப்படி நனைஞ்சிட்ட பாரு .. ஏதாவது ஆக போகுது  “

“மழை என்னை எதுவும் பண்ணாது ஹரிணி .. “

“நீ பண்ணது மட்டும் சரியா ? ” தலை துவட்டி விட்டுக் கொண்டே கேட்டாள். “அன்னைக்கு ஏதாவது ஆகியிருந்தா .. “

நான் எதுவும் சொல்லவில்லை.

“ஹே .. உனக்குத் தெரியுமா , அந்தாளுக்கு நேத்து காலைல ஆச்சிடண்டாம் .. கை பிராக்ச்சர் .. நல்லா வேணும் ” அவளே அதைப் பற்றி பேச விரும்பாதது தெரிந்தது.

“மயிலாப்பூர் பக்கத்துல தான .. “

“ஓ தெரியுமா உனக்கு .. “

“அது ஆக்சிடென்ட் இல்ல ..  ஜாம்பேட்டை ஜக்கு நம்ம தோஸ்து தான் ..நான் தான் ரெண்டு தட்டு தட்ட சொன்னேன் .  “

” அடப்பாவி  நீயா பண்ண ! ” ஒரு வினாடி ஆச்சர்யப்பட்டவள் என் முகம் மாறுவதைப் பார்த்து “அடப் பாவி அதுக்குள்ள மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா ? ”  தலையில் குட்ட வந்தாள். அணைத்துக் கொண்டேன் . உச்சந்த்தலையில் முததமிட்டாள்.

“டாம் பாய் ..?”

தலை அசைத்தாள் . சிரித்தேன்.

“ஏன்டா சிரிக்கிற .. “

” வெளிய நீ கொடயோட நிக்கிறப்போ ஒரு சின்ன கவிதை தோணுச்சு ”  

“அதுக்கு ஏன் இப்போ சிரிக்கற ? “

“அப்போ பாதி தான் தோணுச்சு .. இப்போ தான் மீதி .. “

ஒரு மாதிரியாகப் பார்த்தவள் “சரி சொல்லு .. ” என்றாள்.

“நான் சொல்றேன்னே சொல்லலியே .. “

“ஓவரா சீன் போடாத .. சொல்லு டா “

“உன் குடையும் உடையும் எதிரிகள் , முடிவுசெய்தோம் வெளியே மழையும் , உள்ளே நானும் .. “

ஒரு வினாடி புன்னகைத்தவள் , சோஃபாவில் தள்ளினாள். 

“இந்த டிரெஸ்ஸையா போட்டு வந்த .. எதுவும் தொரத்தல ” இன்னொரு ஆடைபோல என் மேலே சரிந்தாள்.


இந்த சோஃபாவை மட்டுமாவது இவள் அப்பாவிடம் வரதட்சணையாகக் கேட்டு வாங்கிவிட வேண்டும்.

“இதுவரைக்கும் எதுவும் ஆகல .. இனிமே .. “

“இனிமே என்ன ஆகும் .. ” ரகசியம் பேசுபவள் போல் அடிக்குரலில் கேட்டாள்.

நானும் அதே குரலில் “இன்னைக்கும் கரண்ட் போகுமா ? “

“ஏன் புதுசா இன்னொரு கதை சொல்லப் போறியா ..? “

“சொல்லட்டா .. “

கண்கள் சரி என்றன. அவள் இமைகள் என் கண்களை மூடி விட முடிகிற தொலைவில் இருந்தன.

“ஒரு ஊர்ல , கார்த்திக் , ஹரிணின்னு .. “

“உஷ் ” என் அடுத்த வார்த்தைக்கு விரலால் தடை போட்டாள்.

மெல்ல உதட்டில் முத்தமிட்டாள்.

“என்ன ப்ளேவர் இப்போ .. ? “

“ஹரிணி. “

—————–

– முற்றும்.